அழுக்குப் புடவை - Page 18
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6474
மங்கல் எழுந்து இருட்டில் அங்குமிங்கும் பார்த்தான். பிறகு மனநிலை பாதிக்கப்பட்டவனைப் போல தன்னுடைய உடலிலிருந்த சட்டையை இழுத்துக் கிழித்தான்,
“அய்யோ! என்ன இது?” - ராணு அழுதுகொண்டே மங்கலின் அருகில் வந்தாள்.
“ச்சீ... விலகி நில்லுங்க” - மங்கல் கத்தினான்.
ராணு மங்கலின் பக்கத்தில் விழுந்துகொண்டு சொன்னாள்: “இந்த விஷயத்துல என் தப்பு எதுவும் இல்லைன்னு தெரியாதா, மங்கல்?”
“தெரியும்” - மங்கல் அலட்சியமாகச் சொல்லிவிட்டு, வேறு ஏதோ ஒரு உணர்வால் உந்தப்பட்டு ராணுவின் வலதுகையைப் பிடித்தான். தொடர்ந்து இருட்டிலேயே இருந்ததால் அவனுக்கு எல்லாவற்றையும் தெளிவாகக் காண முடிந்தது.
ராணு தன் கைகளைப் பின்னால் இழுக்கவில்லை. துடித்துக் கொண்டிருக்கும் இதயத்துடன் அவள் அமைதியாகத் தன் வாழ்க்கையின் கூட்டாளி, மருதாணி அணிந்த தன் கையை சாட்டை பிடிக்கும் கையிலேயே வைத்திருப்பானா, இல்லாவிட்டால் வீசி எறிந்துவிடுவானா என்று பார்ப்பதற்காகக் காத்திருந்தாள். ஆனால், அப்படியெதுவும் நடக்கவில்லை. மங்கல் கை தானாகவே கீழே விழுந்தது. அதோடு சேர்ந்து ராணுவின் கையும்.
திருமணம் என்பது சந்தோஷமும் உற்சாகமும் தரக்கூடிய ஒன்று என்றுதான் மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். சிலருக்கு அதைப்பற்றி எதுவுமே தெரியாது. வேறு சிலருக்கு அதைப்பற்றி தெரியும்; என்றாலும், திருமணத்தால் கிடைத்த சந்தோஷமும் உற்சாகமும் புத்துணர்ச்சியும் அவர்களைப் பொறுத்தவரையில் கடந்துபோன விஷயங்களாகிவிட்டன. திருமணத்தின் மூலம் கிடைக்கும் ஆனந்தம், பிச்சைக்காரன் பிச்சை பெறுவதற்காக ஹாத்திமின் தர்பாரிற்குச் சென்று மனிதத் தன்மையையும், சுய மரியாதையையும் அடமானம் வைத்து, அதன்மூலம் கிடைக்ககூடிய ஒன்றோ, இரண்டோ சில்லறைக் காசுகளுக்கு நன்றி கூறுவதற்கு நிகரானது என்று கூறுவதே பொருத்தமானது.
காலையில் மங்கலும் ராணுவும் படுக்கையை விட்டு எழுந்தபோது வெளியிலிருந்து யாரோ பூட்டைத் திறந்தார்கள். மங்கல் வெளியே செல்வதற்காக இரண்டு, மூன்று அடிகள் எடுத்து வைத்துவிட்டு, திடீரென்று ஏதோ மெதுவான குரலில் முனகியவாறு தரையில் உட்கார்ந்துவிட்டான். ராணு வேகமாகத் தன் மாமியாரிடம் ஓடினாள்: “அம்மா! சமையலறையின் சாவி எங்கே?”
“எதுக்கு மகளே?” - ஜந்தான் கேட்டாள்.
“மஞ்சள் எடுக்கணும். மங்கலுக்குப் பெரிய காயம் உண்டாகியிருக்கு.”
ஜந்தான் துப்பட்டாவின் முனையிலிருந்து சாவியை எடுத்துக் கொடுத்தாள். ராணு சாவியுடன் சமையலறைக்குள் போவதற்குப் பதிலாக, வாசலுக்கு ஓடினாள். அங்கு அவளுடைய பிள்ளைகள், போர்வையை மூடியும் மூடாமலும் உறங்கிக் கொண்டிருந்தார்கள். ராணு தன் பிள்ளைகளை நல்ல வண்ணம் போர்வையால் மூடிவிட்டு, மூத்த மகளின் அருகில் சென்றாள். படி கண் விழித்தவாறு படுத்திருந்தாள். ராணு தாய்ப் பாசத்துடன் தன் மகளின் தலையை வருடினாள். கோபமுற்ற படி, நீளமான நகங்களால் தன் தாயின் முகத்தைக் கீறியவாறு சொன்னாள்: “என்னைத் தொடாதீங்க. முகத்துல கரி தேய்க்க அந்த ஆளுக்கிட்டேயே போய்க்கோங்க.”
ராணுவின்மீது இதுவரை கொஞ்ச நஞ்சமா தாக்குதல்கள் நடந்திருக்கின்றன? அவை போதாதென்று, இதோ அவளுடைய மகளும் காயத்தை உண்டாக்குகிறாள். ‘மகளே! நான் உனக்காகத்தான் இதையெல்லாம் சகிச்சுக்கிட்டு இருக்கேன். ஆனா நீயோ..’ என்று வேண்டுமானால் ராணு கூறியிருக்கலாம். ஆனால், அதைச் சொல்வதற்கு அவளுக்கு எங்கே நேரம் இருந்திருக்கிறது? ராணு இதெல்லாம் நடக்கும் என்று கொஞ்சமும் சிந்திக்கவில்லை. தன் சொந்த மகள்! ஒன்பது மாதங்கள் வயிற்றுக்குள் சுமந்து, பல கஷ்டங்களையும் வேதனைகளையும் தாங்கி ஒருநாள் அவளை பூமிக்குக் கொண்டு வந்தாள். பிறகு பட்டினியும் சிரமங்களும் கடந்து வளர்த்து அவளைப் பெரியவளாக்கினாள். அந்த மகள் இதோ தன் தாயின் முகத்தில் காயத்தை ஏற்படுத்துகிறாள். ‘என் மகள் நகத்தால கீறல. முகத்துல பூ வரையிறா அவ’ - ராணு தனக்குள் கூறிக்கொண்டாள்.
உணர்ச்சியற்ற நிலையில் ராணு சமையலறையிலிருந்து மஞ்சள் எடுத்து அதை எண்ணெயில் போட்டுச் சூடாக்கி, படுக்கையறைக்குத் திரும்பி வந்தபோது அங்கு மங்கலைக் காணவில்லை. அவள் நான்கு பக்கங்களிலும் தேடிவிட்டு வாசல் பக்கமாக ஓடினாள். ஆனால் மங்கல் அந்த இடத்தைவிட்டுப் போய்விட்டிருந்தான்.
பதைபதைத்துப் போன ராணு மங்கலைத் தேடி நடந்தபோது, டப்பு தன் வாலை ஆட்டியவாறு அவள் அருகில் வந்து நின்று முன்கால்கள் இரண்டையும் ராணுவின் உடல் மீது வைத்தது. ‘ராணு! உங்கக்கிட்ட இவங்க எப்படியெல்லாம் நடக்குறாங்கன்னு எனக்கு நல்லா தெரியும். ஆனா, எல்லாம் சரியாகும்’ என்று ராணுவிற்கு அந்த நாய் ஆறுதல் கூறினாலும் கூறலாம்.
சன்னு தினமும் காலையில் கோவிலுக்குச் செல்வதுண்டு. அவளுடைய ராம நாம உச்சரிப்பைக் கேட்டுத்தான் பக்கத்து வீடுகளைச் சேர்ந்த பெண்கள் தூக்கம் களைந்து எழுவது வழக்கம். அன்று கோவிலுக்குச் செல்வதற்குப் பதிலாக சன்னு, ராணுவின் வீட்டுப் பக்கம் வந்தாள். வாசலில் அவள் ராணுவைப் பார்த்தாள்.
“என்ன ராணு சுகம்தானா?”
ராணு அதற்குப் பதிலெதுவும் கூறவில்லை.
“சீக்கிரம் சொல்லுங்க. இப்போ எப்படி இருக்கீங்க?”
அப்போதும் எந்த பதிலும் கூறாமல் நின்றிருந்த ராணுவின் தோளைப் பிடித்துக் குலுக்கியவாறு சன்னு கேட்டாள்: “என்ன! ராத்திரி ஏதாவது நடந்ததா? சொல்ல முடியாத அளவுக்கு உங்க வாயில என்ன வச்சிருக்கீங்க?”
ராணு தன் வாயில் வைத்திருப்பது என்ன என்பதை அவள் மற்றவர்களுக்கு எப்படிக் கூறி புரிய வைப்பது? வாய்க்குள் இட்டிருக்கும் பலகாரம் வேக வைத்ததன் ஆவியின் உஷ்ணம் பட்டு ராணுவின் உணர்ச்சிகளும், விருப்பங்களும், உற்சாகமும் முழுமையாக அடங்கி விட்டிருந்தன.
ராணு தரையில் தன் பார்வையைப் பதித்தவாறு சொன்னாள்: “ராத்திரி ஒண்ணும் நடக்கல?”
சன்னு ராணுவின் முகத்தையே வெறித்துப் பார்த்துவிட்டு சொன்னாள்: “சுத்த பொய்! உங்க முகத்துல காயங்கள் எப்படி வந்தது?”
ராணுவின் முகத்தில் வியர்வைத் துளிகள் அரும்பின. அவள் சிறிது நேரம் வெட்கத்துடன் தலைகுனிந்து விட்டு துடித்துக்கொண்டிருக்கும் உதடுகளுடன் சொன்னாள்: “நீங்க நினைக்கிறதை நான் தேடல சன்னு! வெட்கத்தை மறைக்க ரெண்டு ஆடைகளும், பசியை அடக்க ஒரு நேர உணவும் மட்டும்தான் எனக்குத் தேவை. இந்த விஷயத்துல கடவுள் என்ன நினைக்கிறார்னு யாருக்குத் தெரியும்? அம்பாதேவி என்ன நினைக்கிறாங்களோ? மங்கல் திரும்பவும் எங்கேயோ போயாச்சு...”
“ராமா! ராமா! அந்த நாசமாப் போறவன் எங்கே போனான்?” உதய சூரியனைப் பார்த்தவாறு சன்னு சொன்னாள்: “அய்யோ... உங்க முன்னாடி அப்படி நான் சொல்லியிருக்கக் கூடாது...” அதைக் கேட்டு ராணு அழுவதைப் போல புன்னகைத்தாள். சன்னு அவளுக்கு ஆறுதல் கூறினாள். “எதையும் நினைச்சு பயப்பட வேண்டாம் ராணு! அவன் போனது மாதிரியே திரும்பி வருவான்.”