அழுக்குப் புடவை - Page 16
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6474
இல்லாவிட்டால் மங்கல் திருமண மண்டபத்தில் அடங்கி இருக்கமாட்டான். ஆட்கள் லத்தி, ஈட்டி, புல் அறுக்கப் பயன்படும் கத்தி (கண்டாஸா) ஆகியவற்றுடன் மங்கலைத் தேடிப் புறப்பட்டார்கள். பஞ்சாயத்தின் சட்டங்களைப் பிறப்பிக்கும் க்யான்சந்த் வெளியே தெரியும்படி, “வேண்டாம் வேண்டாம்” என்று கட்டளை போட்டவாறு எல்லோருக்கும் உற்சாகத்தை ஊட்டிக் கொண்டு பின்னால் வந்தான். திருமண மண்டபத்தில் பெண்கள் மட்டுமே இருந்தார்கள். அவர்களுள் மங்கலை இந்த உலகத்திற்கு அளித்த அன்னையும் இருந்தாள்.
ஆண்களின் தீவிர முயற்சிகளைப் பார்த்து பயந்துபோன ராணு உரத்த குரலில் அழ ஆரம்பித்தாள். “என்னை விட்டுடுங்க தோழிகளே! நான் வாழப் போறது இல்ல” என்று சொன்ன ராணு மயக்கமடைந்து கீழே விழுந்தாள். பெண்கள் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த பானையை எடுத்து அதிலிருந்த நீரை அவளுடைய தலைமீது ஊற்றினார்கள். மரணத்தைப் பார்த்ததைப் போல இனிமேல் திருமணத்தையும் பார்த்துக்கொள் என்பதாக இருந்தது அவர்களின் நடவடிக்கை.
மக்கள், மங்கலை விவசாயப் பண்ணையைச் சேர்ந்த பருத்தித் தோட்டத்தில் பிடித்தார்கள். அவன் ஆரம்பத்திலேயே அடி, உதைகள் வாங்கி மிகவும் பலவீனமாக இருந்தான். இரண்டாவது தாக்குதலில் கிட்டத்தட்ட மரண நிலையில் இருந்தான். வேண்டுமென்றால் மங்கல் ஓடி அவர்களிடமிருந்து தப்பித்திருக்கலாம். அதற்கான அதிர்ஷ்டம் அவனுக்கில்லை என்றுதான் சொல்லவேண்டும். மிர்ஸாவின் குதிரையைக் கூட ஸாஹபான் கட்டிப் போடத்தானே செய்தான்? அதைப்போல மங்கலின் குதிரையும் முன் கால்கள் கட்டப்பட்ட நிலையில் சற்று தூரத்தில் நின்று மேய்ந்துகொண்டிருந்தது. வயலை நாசம் செய்துவிடக் கூடாது என்பதற்காக மங்கல் குதிரையின் முன் கால்களை சங்கிலியால் கட்டி ‘அலிகார்’ பூட்டுப் போட்டு பூட்டுவது எப்போதும் வழக்கத்திலிருந்த ஒன்று.
தன்னுடைய நண்பர்களான நவாப், இஸ்மாயில், குருதாஸ் ஆகியோர் இந்த ஆபத்திலிருந்து தன்னைக் காப்பாற்றுவார்கள் என்று மங்கல் எதிர்பார்த்தான். ஆனால் அந்த அயோக்கியர்களும் கோட்லாவின் மற்றவர்களுடன் சேர்ந்துகொண்டார்கள். அவர்கள் மங்கலுக்கு அறிவுரை சொன்னார்கள்: “சரி... இருக்கட்டும் நண்பா! கல்யாணம் தானே! கொலை ஒண்ணும் நடந்துடலையே!”
மங்கல் ஒளிந்திருந்த இடத்திலிருந்து சற்று தூரத்தில் இருந்தது அந்தக் கிணறு. சில வருடங்களுக்கு முன்பு அந்தக் கிணற்றுக்கு அருகில்தான் மங்கலின் அண்ணனான தலோக்கா கொலை செய்யப்பட்டான். எப்போதையும் விட திடீரென்று இருட்டு வந்து சேர்ந்ததும் சூரியன் தலோக்காவின் வீட்டு வாசலில் இரத்தத்தைச் சிதறவிட்டதும் அன்றுதான். அங்கிருந்த மண்ணில் அப்போதும் இரத்தத்தின் வாசனை வந்துகொண்டிருந்தது.
கிராமத்து மனிதர்கள் மங்கலைச் சுற்றி வளைத்தபோது, அவன் பருத்தி வயலின் மத்தியில் ஒரு குழியில் பதுங்கி உட்கார்ந்திருந்தான். சில நேரங்களில் குளிர்காலத்தில் கோட்லாவில் ஏதாவது நரியோ அல்லது காட்டுப் பன்றியோ வந்துவிட்டால் மக்கள் இந்த மாதிரி கையில் கிடைத்த ஆயுதங்களுடன் அவற்றை வேட்டையாடுவதுண்டு. குழிக்குள் மறைந்திருந்த மங்கல் ஒரு காட்டுப்பன்றியைப் போலத் தோன்றினான். கையில் ஆயுதங்களுடன் சுற்றிலும் கேட்கும் வண்ணம் சத்தம் போட்டவாறு அங்கு வந்த மக்கள் கூட்டம் மங்கலைப் பார்த்தவுடன் அமைதியாகிவிட்டார்கள். யார் முதலில் அவனைப் போய் பிடிப்பது என்பதை அறிவதற்காக அவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
மங்கலின் முகத்தில் தெரிந்த வெளிப்பாடுகளைப் பார்த்து கிராமத்து ஆட்கள் பயந்துவிட்டார்கள். அவர்கள் கையில் இருந்த கழிகளைத் தரையில் தட்டி மங்கலைப் பயமுறுத்த முயற்சித்தார்கள். கோழைத் தனத்தில் உண்டான ஆவேசத்துடன் தரையில் அடித்துக்கொண்டிருந்த கழிகள் பூமியில் அடையாளங்களை உண்டாக்கின. கிராமத்து ஆட்கள் வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தார்களே தவிர, யாரும் மங்கலின் அருகில் செல்லவில்லை. அவனுடைய மிகவும் நெருங்கிய நண்பனான குருதாஸ் முன்னால் சென்றான். அதைப் பார்த்து கேஸர்சிங், நவாப், இஸ்மாயில், ஜகு ஆகியோரும் அவன் அருகில் சென்றார்கள். மங்கல் ஓடித் தப்பிப்பதற்காகக் குழிக்குள் இருந்து வெளியே குதித்தான். அத்துடன் ஆட்கள் நான்கு திசைகளில் இருந்தும் அவனைச் சுற்றி வளைத்துக் கொண்டார்கள்.
அங்கு உண்டான கோலாகலங்களைப் பார்த்து வழியில் போய்க் கொண்டிருந்தவர்கள் திரும்பிப் பார்த்தார்கள். கிராமத்து ஆட்கள் மங்கலின் தலைமுடியைப் பிடித்து இழுத்துக்கொண்டு சென்றார்கள். சீக்கிய மதத்தைச் சேர்ந்தவனாக இருந்ததால் தலை முடியை அவமதிக்காமல் கேஸர்சிங்கும் தாராசிங்கும்தான் கவனத்துடன் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அந்த மோசமான காரியத்தைச் செய்ததே அவர்கள்தான். பிடித்து இழுத்துச் செல்வதிலிருந்து தப்பிப்பதற்காக மங்கல் சிறிது நேரம் நடப்பான். பிறகு அவன் கட்டிப் போடுவதற்காகக் கொண்டு செல்லப்படும் திருட்டுக் காளையைப் போல பின்னோக்கி நடப்பான். வயல் வழியே இழுத்துக் கொண்டு சென்றதால் மங்கலின் நீளமான தலைமுடியிலும் தாடிக்கு மத்தியிலும் ஏராளமான சருகுளும் குப்பைகளும் ஒட்டிக் கொண்டிருந்தன. உடல் பூமியில் இழுபட்டதால் கிழிந்துபோன ஆடைகள் இரத்தத்தில் நனைந்திருந்தன.
ஆற்றிலிருந்து தர்மசாலையை அடைந்தபோது ஊர்வலமாகச் சென்ற மனிதர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமானது. பாதையில் பயணம் சென்றவர்கள் பாதையின் ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்றார்கள். அவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தவாறு நின்றிருந்தார்கள். கிக்கர் மரங்களுக்கு மத்தியில் சற்று விலகி நின்ற ஒரு பெண் பயணி அந்தக் கிராமத்தைச் சேர்ந்த வேறொரு பெண்ணிடம் கேட்டாள்:
“அக்கா, இது என்ன?”
அவள் ஆச்சரியத்துடன் அந்த வெளியூர் பெண்ணை உற்று பார்த்தவாறு சொன்னாள்: “அய்யோ! உங்களுக்கு இவ்வளவு வயசாகியும், இது கல்யாணம்ன்றது தெரியலையா?”
கோட்லாவிலிருந்து சற்று தூரத்திலிருந்த விஷ்ணுதேவி மலை அப்போதும் வெள்ளைப் புடவை அணிந்து ஒய்வெடுத்துக் கொண்டிருந்தது. அந்தச் சமயத்தில் அங்கு ஏராளமான புனிதப் பயணிகள் வழிபாடுகள் நடத்தி திரும்பிப் போய்க்கொண்டிருப்பார்கள். பவுர்ணமி சமயத்தில்தான் விஷ்ணுதேவி மலைக்கு நிறைய புனிதப் பயணிகள் வருவார்கள் அவர்கள் இப்போது மேள, தாளங்களுடன் தேவி மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருப்பார்கள். ‘காப்பாற்றுவதாக இருந்தால் இப்போது காப்பாற்று! தேவி! அம்பிகையே! பாவம் செய்தவர்களைக் காப்பாற்ற வேண்டிய சந்தர்ப்பம் இதுதான்’ புனிதப் பயணிகள் மந்திரங்களை உச்சரித்தவாறு தெற்குப் பக்கமும் தங்கள் கண்களை ஓட்டாமல் இருக்க மாட்டார்கள். அப்போது கோட்லாவின் இந்த வெளிச்ச இருட்டும் அவர்களின் பார்வையில் படவே செய்யும்.
பஞ்சாயத்து தலைவன் க்யான்சந்த் தொழிலாளர்களை வைத்து சரி பண்ணி தன்னுடைய வயலுடன் சேர்க்காமல் விட்டு வைத்திருந்த ஒரு இடம் கிராமத்திற்கு வெளியில் அது மட்டுமே. அங்குதான் மங்கல் காயம் பட்டு மயக்கமடைந்து கீழே விழுந்தது. பிக்காக்ஸ், மண்வெட்டி ஆகியவற்றைப் பயன்படுத்தி பல நாட்கள் கஷ்டப்பட்டு வேலை செய்ததன் பலனாக ஆற்றிலிருந்து அங்கு நீரைத் திருப்பிக்கொண்டு வர முடிந்தது.