அழுக்குப் புடவை - Page 13
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6474
தொடர்ந்து அமைதி நிலவிக் கொண்டிருந்ததால், ராணு தன்னுடைய சிந்தனையிலிருந்து திடுக்கிட்டு சுய உணர்விற்குத் திரும்பினாள். அவள் தன்னைத்தானே கன்னத்தில் அடித்துக் கொண்டாள். இனம்புரியாத ஏதோ பயத்தால் ராணுவின் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது.
ஜந்தான் ராணு சொன்ன கடைசி வாக்கியத்தை நினைத்துக் கொண்டிருந்தாள்: “மருமகளே இல்லாதவங்களுக்கு பேத்தி எங்கேயிருந்து வந்தா?”
அந்த நேரத்தில் க்யான்சந்த், கேஸர்சிங், ஜகு, துல்லா கர்முதீன் ஆகியோர் அங்கு வந்தார்கள். அவர்கள் ஹூஸூர்சிங்குடன் கட்டிலில் உட்கார்ந்த பிறகு, ஜந்தானையும் அழைத்தார்கள். ராணுவின் மறுமணத்தைப் பற்றி பேச்சு ஆரம்பமானது-அதுவும் பஞ்சாயத்து முடிவு செய்ய வேண்டிய ஒரு விஷயம் என்பது மாதிரி.
இந்த வயதான காலத்தில்-மரணத்தை எதிர்பார்த்து வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தக் காலத்தில்-பஞ்சாயத்தும்,சொந்த பந்தங்களும் தன்னை அவமானப்படுத்த வந்திருக்கிறார்கள் என்று ஹூஸூர்சிங் நினைத்தான். அதே நேரத்தில் ஜந்தான் - பெண்களுக்கே இருக்கும் நுண்ணறிவால் விஷயத்தின் அடித்தளம் வரை அவளுடைய மனம் சென்றது. இவ்வளவு இலகுவான,லாபம் தரும் வழி தனக்கு முதலிலேயே ஞாபகத்தில் வரவில்லை என்று அவள் நினைத்தாள். அதற்காக ஜந்தான் வருத்தப்பட்டாள். ஆமாம்! ஞாபகம் வந்தது. அப்போது படி மிகவும் வயதில் இளையவளாக இருந்தாள், இப்போது அவள் திருமண வயதை எட்டிவிட்டாள். இப்போது ராணு மருமகளாக இருப்பதும், படி பேத்தியாக இருப்பதும் லாபமான ஒரு விஷயம்.
ஹூஸூர்சிங் பஞ்சாயத்து உறுப்பினர்களை நோக்கி முகத்தைத் திருப்பிக் கொண்டு, கண்களை மூடி இருந்தபோது ஜந்தான் பற்களைக் காட்டிக் கொண்டு கிழவனை எதிர்த்தாள். “நீங்க இடையில ஒரு தடையா இருக்கக் கூடாது. கிழவா! சாகுறதும் இல்ல, வாழறதும் இல்ல. உலகத்துல என்னவெல்லாம் நடக்குதுன்னு உங்களுக்குத் தெரியுமா? இந்தப் பிறவியில் குருடனா இருக்குறவன் அடுத்த பிறவியிலயும் குருடனாகத்தான் இருப்பான்.”
பஞ்சாயத்து கிழவனுக்கும் கிழவிக்குமிடையில் நடைபெற்ற சண்டையைச் சமாதானத்திற்குக் கொண்டுவந்தது. அவர்கள் இருவரின் அனுமதியையும் வாங்கிக் கொண்டு அவர்கள் அங்கிருந்து கிளம்பினார்கள். கிளம்புகிற சமயத்தில் குடும்பத்தில் மூத்தவள் என்ற முறையில் ஜந்தான் அவர்களை ஆசீர்வதித்தாள்.
பஞ்சாயத்து உறுப்பினர்கள் பார்வையிலிருந்து மறைந்திருப்பார்கள். ராணு சண்டை போடத் தயாரானாள். “நீங்க படியோட திருமண விஷயத்தைப் பற்றி பேசுறதுக்குத்தானே போனீங்க? அதுக்கு மத்தியில என் பிணத்தை எதுக்காக இழுக்கணும்? வெட்கம்னு ஒண்ணு இருந்தா போயி தூக்குல தொங்கி சாகணும், கிழவி... ஆத்துல கலங்கலோட ஓடுற தண்ணியில முங்கி சாகக் கூடாதா? நீங்க என் சம்முவைக் கல்யாணம் பண்ணிக்கலாமே? பந்தாகூட படுத்துக்கங்க. ஸந்தாவைக் கல்யாணம் பண்ணிக்கங்க. பிணமே! நான் யாருக்கு பால் கொடுத்து வளர்த்தேனோ, அவனைக் கல்யாணம் பண்ணிக்கணுமா?”
பின்னால் யாரோ ராணுவின் தலை முடியைத் தொட்டார்கள். அவள் அதிர்ந்துபோய் அந்த இடத்திலிருந்து கீழே விழுந்தாள். ராணு அடித்துப் பிடித்து எழுந்கபோது பற்களைக் கடித்துக் கொண்டு நின்று கொண்டிருக்கும் சன்னுவை அவள் தனக்கு முன்னால் பார்த்தாள். அவள் ராணுவை வீட்டைவிட்டு சற்று தூரத்தில் காலியாகக் கிடந்த மைதானத்திற்கு அழைத்துக் கொண்டு போனாள். அங்குதான் கிராமத்தைச் சேர்ந்த காதலர்களும் காதலிகளும் இரவு நேரங்களில் சந்திப்பார்கள்.
“அடியே தேவிடியா! புருஷன் எதுக்கு? நாங்க உங்க நன்மைக்காக சொல்றோம். அப்போ நீ நாயைப் போல திரும்பி கடிக்கப் பாக்குற...” -சன்னு சொன்னாள்.
“இல்ல, சன்னு...” -ராணு தேம்பி அழுதவாறு சன்னுவின் பாதத்தில் விழுந்தாள். “சன்னு... மங்கல் ஒரு சின்ன குழந்தை. நான் எந்தச் சமயத்திலும் அவனை அந்தப் பார்வையில பார்த்ததே இல்ல...” - ராணு அவளிடம் கெஞ்சுகிற குரலில் சொன்னாள்.
“இங்க பாருங்க ராணு!” - சன்னு தொடர்ந்தாள்: “நீங்க இந்த உலகத்துல வாழணுமா? வயிறா இருக்குற இந்த நரகம் நிறையணுமா? வேண்டாமா? ஒரு பார்வையாலகூட பார்த்தது இல்லையாம்! புல்லெஷா என்ன சொல்லியிருக்கிறார்னு தெரியுமா?”
“இதரோ, பட்னா அதர்லானா (இதிலிருந்து எடுத்து அதில் இடும் வித்தியாசம் மட்டுமே)
இதுவரை அந்தப் பார்வையோட பார்க்கலைன்னா, இனிமேல் பார்த்துக்க வேண்டியதுதான். முட்டாள்!”
ராணு தன் மனதில் அப்போது மங்கலை நினைத்தாள். சன்னு தொடர்ந்தாள். “சிந்திச்சுப் பார்க்கணும். பிணமே! ரெண்டு கல்யாணத்துக்கான அதிர்ஷ்டம் இப்போ யாருக்கு கிடைக்கும்? ஒரு விஷயம் முடிஞ்சது. ஆமாம்! யாருக்கும் தெரியாம மூணு, நாலுன்னு நடக்குதுன்னு வச்சுக்க. அது ஒரு நல்ல விஷயமா? எப்பவும் பயந்துக்கிட்டே இருக்கணும். ஆனா ஆம்பிளைங்களோட விஷயம் வேற உலகம் அவங்களுக்கானது. அவங்கக்கிட்டே யாராவது கேட்பாங்களா? உங்க மங்கலை வெளியே இருக்குற யாராவது தட்டிக்கொண்டு போயிடுவாங்க. அதுக்குப் பதிலா நீங்களே மங்கலை வச்சிக்க வேண்டியதுதானே? ஸலாமத்தியோட விஷயம் தெரியும்ல? சரி அதெல்லாம் இருக்கட்டும்... உங்க மகளோட கல்யாணம் நடக்கணுமா, வேண்டாமா?”
ராணு அதைக் கேட்டு அதிர்ந்து போனாள். “திருமணம் எனக்கா என் மகளுக்கா? என் திருமணம்...” - ராணு ஒரு குழந்தையைப் போல பிடிவாதம் பிடித்தாள். “இல்ல நான் அப்படி எந்தச் சமயத்திலும் நடக்க மாட்டேன்!”
வீட்டிற்குத் திரும்பி வந்தபிறகு ராணு சிந்தனையில் மூழ்கினாள். வேறொரு நெருப்பு அவளுடைய இதயத்தை ஒளிரச் செய்து கொண்டிருந்தது. தன்னுடைய பிள்ளைகளைப் பற்றி அல்ல... பிறகு? பிறக்காத ஒரு குழந்தை தன்னுடைய உடலுக்குள் அசைவதைப்போல் அவள் உணர்ந்தாள்.
சாயங்காலம் பூரண்தேயி வந்தபோது ராணு உடல்நலமில்லாமல் படுத்திருந்தாள். நெற்றியில் துணி நனைத்து கட்டப்பட்டிருந்தது. பூரண்தேயி மெதுவான குரலில் கேட்டாள்: “இது என்ன காய்ச்சல், ராணு?”
ராணு புன்னகைத்தவாறு தன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். பூரண்தேயி சிரித்தாள். அதைப் பார்த்து விஷயம் என்னவென்றே தெரியாமல் படியும் குலுங்கிச் சிரித்தாள்.
மகான்மார்களின், சன்னியாசிகளின், ராதா-கிருஷ்ணனின், சிவன்-பார்வதியின் படங்கள் அதாகவே எப்போது, எப்படி சட்டத்திற்குள் போய் நுழைந்தன என்று யார் பார்த்தது? அந்த தேவிகளின், தேவர்களின் முகத்தில் ஆழமான அன்பு நிறைந்திருந்தது. படியின் வாய் திறந்த சிரிப்பைக் கேட்டு வேப்ப மரத்திலிருந்த பறவைகள் ஓசை உண்டாக்கியவாறு பறந்து சென்றன. கோவிலின் உச்சியின்மீது செங்கதிரோனின் அன்றைய அணைப்பு முடிந்தவுடன், மணி அடித்தது.
மங்கல் எங்கிருந்தோ வாசலில் வந்து நின்றான். அவன் அன்று மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தான். அன்று ஏழு ரூபாய் சம்பாதித்திருந்தான். வழக்கம்போல அவன் அதை ராணுவின் கையில் கொடுத்தான். அப்போது பூரண்தேயி சொன்னாள்: “ஆமா... அவன் சம்பாதிப்பான்.