அழுக்குப் புடவை - Page 10
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6473
நபீஸன் வாலா ஸ்டாண்டில் டாங்கா ஓட்டும் மங்கல், தனது வீட்டிற்கோ அல்லது அங்கு இருப்பவர்களுக்கோ ஏதாவது கடமைகளைச் செய்ய வேண்டும் என்று நினைக்கவில்லை. வீட்டிலிருந்தவர்கள் தினமும் ஒரு நேரம் மட்டுமே சாப்பிடுகிறார்கள் என்ற உண்மையை அவன் தெரியாமல் இருந்தான்.
நிலைமை இப்படி இருக்கும்போது ஒருநாள் மங்கல், தெலம் ராயணியின் இளைய மகள் ஸலாமத்தியுடன் அறிமுகமானான். அவள் வெண்டைக்காய்,கத்திரிக்காய்,பீர்க்கங்காய் போன்ற காய்கறிகளில் மட்டும் தன் கையை வைக்கவில்லை. பார்க்கிற மரங்களைக் கட்டிப் பிடிக்கும் தைரியசாலியாகவும் அவள் இருந்தாள். வழியில் ஒரு நாள் ஸலாமத்தி மங்கலுக்கு வலை வீசினாள். “ஏய் மங்கல்சிங்!”
மங்கல் டாங்காவை விட்டு இறங்கினான். ஸலாமத்தி அவனுக்கு அருகில் சென்று அவன் முகத்தையே உற்றுப் பார்த்தவாறு சொன்னாள்: “உங்க டாங்காவுல என்னையும் ஏற்றிக்கொள்ள முடியுமா?”
“ம்...”
“எப்போ?”
“உங்களுக்கு விருப்பம் இருக்குறப்போ!”
ஸலாமத்தி நான்கு திசைகளிலும் தன் கண்களை ஓட்டியவாறு சொன்னாள்: “அப்படின்னா... இன்னைக்கு ராத்திரியே...”
“என் டாங்கா ராத்திரி நேரங்கள்ல ஓடாதே, ஸலாமத்தி...”
மங்கல் டாங்காவுடன் நகரத்தை நோக்கி திரும்பினான். இரண்டு மைல்கள் கடந்த பிறகுதான் ஸலாமத்தியின் மனதில் இருக்கும் விஷயத்தை மங்கலால் புரிந்துகொள்ள முடிந்தது. உடனே மங்கல் டாங்காவை திருப்ப நினைத்தான். அதற்குள் நகரத்திற்குச் செல்லும் ஒரு பயணி அவனுக்குக் கிடைத்துவிட்டான். இரவு வர இன்னும் பத்து மணி நேரங்கள் இருந்தன. அதனால் அந்தப் பயணியை ஏற்றிக்கொண்டு அவன் நகரத்தை நோக்கி டாங்காவைச் செலுத்தினான்.
மங்கல் சாயங்காலம் தன்னுடைய வீட்டிற்குத் திரும்பி வந்தபோது அங்கு கண்ட காட்சி அவனை பதைபதைக்கச் செய்துவிட்டது. குடும்பத்திலுள்ள அனைவரும் பகல் முழுவதும் பட்டினி கிடந்திருக்கிறார்கள். படி எங்கிருந்தோ கொஞ்சம் அரிசி வாங்கிக் கொண்டு வந்து சமைத்திருக்கிறாள். ஆனால், அதுவரை பசியை அடக்க முடியவில்லை. ராணு அந்த அரிசி நன்கு வெந்து முடிவதற்கு முன்பே, கீழே இறக்கி யாருக்கும் தெரியாமலே அது முழுவதையும் சாப்பிட்டு விட்டாள். மாமனாரும் மாமியாரும் எப்படி வேண்டுமானாலும் போகட்டும்! அவளுடைய சொந்த பிள்ளைகளுக்குக்கூட ஒரு பருக்கை மீதி வைக்காமல் முழுவதையும் அவளே சாப்பிட்டு முடித்தாள். அதைப் பார்த்து கோபத்திற்கு ஆளான ஜந்தான் ராணுவை வீட்டை விட்டு வெளியே துரத்தும் முயற்சியில் இறங்கினாள். ராணு ஒரு கருங்கல் சிலையைப் போல சிறிதும் அசையாமல் நின்றிருந்தாள். அவள் நினைத்திருந்தால் ஒரே அடியில் கிழவியான ஜந்தானை எம உலகத்திற்கு அனுப்பியிருக்க முடியும். ஆனால் அவள் தலைகுனிந்து நின்றுகொண்டு எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டாள்.
அந்த காட்சியைப் பார்த்து மங்கல் அதிர்ச்சியடைந்து நின்று விட்டான். அவன் ஒருவித குற்ற உணர்வுடன் வாசலில் இருந்த வேப்பமரத்திற்குக் கீழேயே நின்றுவிட்டான். மங்கல் அன்று பதினான்கு அணா மட்டுமே சம்பாதித்திருந்தான். அதை வைத்து வீட்டிற்குத் தேவையான உப்பையும் மிளகாயையும் வாங்க முடியுமா என்று அவன் சந்தேகப்பட்டான். திரும்பி வந்தபோதும் அவனுக்கு சவாரி கிடைக்கவே செய்தது. ஆனால் ஸலாமத்தி மீது கொண்டிருந்த ஈர்ப்பில் அவன் டாங்காவில் யாரையும் ஏற்றாமல் திரும்பி வந்துவிட்டான்.
மங்கல் முன்னால் வந்து தன் தாயைத் தடுத்துக்கொண்டு சொன்னான்: “பெரியம்மா! நீங்க எதற்கு இந்த அப்பிராணியை இப்படி கஷ்டப்படுத்துறீங்க? பாவம்... இவங்க எங்கே போவாங்க?”
தன்னுடைய கணவன் இறந்தபோதுகூட அழாத ராணு திடீரென்று உரத்த குரலில் அழ ஆரம்பித்தாள். கண்ணீர் கடலில் நீந்தித் துடித்துக் கொண்டிருந்த அவள் சொன்னாள்: “நான் எதற்கு போகணும்? நான் இந்தக் குடும்பத்துக்கு என்ன செய்யல? மகன்களையும் மகளையும் பெறலையா?”
மங்கல் ராணுவைத் தேற்றிக் கொண்டு சொன்னான்: “தப்பு என்னோடதுதான். அண்ணியோடது இல்ல...” ஜந்தான் இடையில் புகுந்து சொன்னாள்: “நீ எதுக்கு குற்றத்தை ஏத்துக்கணும்? தன்னோட சொந்த பிள்ளைகளைப் பற்றி கவலைப்படாத ஒரு பெண் வேற யாரைக் காப்பாற்றப் போறா?” தொடர்ந்து அவள் ராணுவைப் பார்த்து கைகளைக் கூப்பியவாறு சொன்னாள்: “குருவை ஞாபகத்துல வச்சுக்கிட்டு, கடவுளை மனசுல வச்சுக்கிட்டு நீ இங்கேயிருந்து போக முடியுமா? குருடனையோ செவிடனையோ யாரை வேணும்னாலும் கல்யாணம் பண்ணிக்கோ. என் வீட்டுல இருந்து கிளம்பினா போதும்...”
ராணு தன் மாமியாரை பரிதாபமாகப் பார்த்தாள். அவளுடைய கண்கள் ஜந்தானை இப்படி யாசித்தன: “அப்படியா சொல்றீங்க? நீங்க உலகத்துக்கே தாய். என்னை ஒதுக்காதீங்க! என்னை எப்படியாவது இங்கேயே இருக்க விடுங்க. இந்த உலகத்துல எனக்குன்னு வேற யார் இருக்காங்க?’ அந்தச் சிந்தனையில்தான் ராணு எல்லோருடைய பங்கையும் அவள் ஒருத்தி மட்டுமே சாப்பிட்டிருக்க வேண்டும். இனி இந்த வீட்டில் தான் எப்படி வாழ்வது என்பது அவளுக்கே தெரியவில்லை. பிள்ளைகள் வளர்ந்துவிட்டார்கள். சட்டப்படி அவர்கள் தலோக்காவிற்குச் சொந்தமானவர்கள். மாமனாரும், மாமியாரும், பஞ்சாயத்தும் பிள்ளைகளைத் தன்னுடன் அழைத்துச் செல்ல அவளை அனுமதித்தாலும், அவர்களை எங்கே கொண்டு போவாள்? ராணு வேண்டுமென்றால் பிச்சை எடுக்கலாம். அதற்காக பிள்ளைகளை பிச்சை எடுக்கவிட முடியுமா? தவிர, சம்மு, பந்தா, ஸந்தா, படி ராணுவிற்கு அவர்கள் ஒவ்வொருவரிடமும் சம அளவில் பாசம் இருக்கிறது. இப்போதும் பிள்ளைகளுக்கு ராணுவின் பாதுகாப்பு கட்டாயம் தேவைப்படுகிறது. பிள்ளைகளில் யாராவது இங்கு இருக்கும்படி விட்டுப்போவது என்ற விஷயத்தை நினைத்துப் பார்க்கும்போது ராணுவின் இடுப்பெலும்பு பயங்கரமாக வலித்தது. பிள்ளைகள் தன்னுடன் அவள் தூக்கிச் செல்லும் அளவிற்கு வயதில் சிறியவர்களும் இல்லை, அங்கேயே விட்டுப்போகும் அளவிற்கு வயதில் பெரியவர்களும் இல்லை.
மாமியாரின் கொடுமைகளையும், ஏச்சுப் பேச்சுகளையும் பொறுமையாகச் சகித்துக்கொண்டு திண்டாடிக் கொண்டிருந்த ராணு மனதிற்குள் சிந்தித்தாள். ஒரு விதவைக்கு தன் கணவனுடைய வீட்டில் வசிக்க என்ன உரிமை இருக்கிறது? அவளுக்கு இந்த உலகத்தில் வாழவே அதிகாரம் இல்லை.
ராணுவின் மோசமான நிலைமையைப் பார்த்து மனதில் வேதனைப்பட்ட பக்கத்து வீட்டுக்காரி சன்னு ஒருநாள் அவளை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று, வயிறு நிறைய சாப்பாடு போட்டாள். இனிமேல் எங்கே கிடைக்காமலே போய்விடுமோ என்று நினைத்து ராணு மிகவும் குறைவாகவே சாப்பிட்டாள். சன்னு மிகுந்த இரக்க உணர்வுடன் ராணுவிடம் சொன்னாள்: “இங்கே பாருங்க ராணு-நீங்க கேக்குறதா இருந்தால் நான் ஒரு விஷயம் சொல்றேன் ...”
ராணு ஆர்வத்துடன் சன்னுவைப் பார்த்தாள். சன்னு தொடர்ந்து சொன்னாள்: “உங்க மாமியார் ஒரு பேய். அவள் உங்களை அங்கே வசிக்க விடமாட்டா. பிறகு... அந்த வீட்டில் நீங்க வாழணும்னா, அதுக்கு ஒரே ஒரு வழிதான் இருக்கு...”