
இந்தித் திரைப்பட இயக்குனர் ராஜேந்தர்சிங் பேடி உருது மொழியில் எழுதிய ‘ஏக் சாதர் மைலி ஸீ’ என்ற புதினத்தின் தமிழாக்கம் இது. பஞ்சாப்பின் கிராமத்து மக்களுடைய வாழ்க்கையை - குறிப்பாக சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர்களின் சமூக வாழ்க்கையை இந்த நூல் தெளிவாக நமக்குக் காட்டுகிறது. இந்த நூல் இந்தியாவின் பிற மொழிகளிலும், ஃபிரெஞ்ச், ஆங்கிலம், ரஷ்யன், ஜெர்மன், சைனீஸ் ஆகிய வெளிநாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு, மக்களின் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
ஒரு காலத்தில் இந்தியாவின் பாரீஸ் என்று அழைக்கப்பட்ட லாகூர் நகரத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும், பஞ்சாப்பின் கிராமப்புற மக்களின் வாழ்க்கைமீது மிகவும் ஈடுபாடும், நெருக்கமும் கொண்டவர் ராஜேந்தர்சிங் பேடி. இந்தியா இரண்டாகப் பிளவுபட்டபோது, ராஜேந்தர்சிங்கிற்கும் தன்னுடைய பிறந்த நாடு இல்லாமல் போனது. அதன் விளைவாகப் பிழைப்பு தேடி வந்த அவர், மும்பை திரைப்பட உலகில் நுழைந்து எழுத ஆரம்பித்தார். இன்றைய பஞ்சாப்பில் இந்த நூலில் காட்டப்பட்டிருக்கும் பல விஷயங்கள் மாறிவிட்டன. பல்வேறு சமுதாயங்களைச் சேர்ந்தவர்களுக்கிடையில் முன்பு இருந்த அன்பும் உதவும் குணமும் இரக்கமும் இப்போது பார்க்க முடியாத விஷயங்களாகி விட்டன. அதற்குப் பதிலாக இருப்பவை பயமும் நம்பிக்கையற்ற நிலையும் பகைமையும்தான்...
ராணு என்னும் ஏழைப் பெண்ணின் வாழ்க்கையை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் இந்நூல் மூலம் பஞ்சாப்பின் கிராமத்து வாழ்க்கையை ஓரளவுக்கு நம்மால் தெரிந்துகொள்ள முடியும்.
இந்திய கிராமத்தின் ‘மாதிரிப் பெண்’ணான ராணுவின் வாழ்க்கையைக் கொண்ட இந்த நூலை மொழிபெயர்த்ததற்காகப் பெருமைப்படுகிறேன். அந்தப் பெருமிதத்துடன் இந்த நூலைத் தமிழ் வாசகர்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.
அன்புடன்,
சுரா
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook