அழுக்குப் புடவை - Page 2
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6473
அன்று மறையப் போகும் சூரியன் எப்போதும் இருப்பதை விட இரத்த நிறத்தில் இருந்தது. வானத்தின் மூலையில் ஏதோ ஒரு நிரபராதி கொலை செய்யப்பட்டிருக்கலாம். அவனுடைய சிவப்புக் குருதியில் குளித்த சூரியனின் கதிர்கள் வாசலில் நின்றிருந்த வேப்பமரத்தின் இலைகள் வழியாக தலோக்கா சிங்கின் வீட்டின் மீது விழுந்து கொண்டிருந்தன. சிதிலமடைந்து கீழே விழும் நிலையில் இருந்த மண்ணாலான சுவருக்கு அருகில், குப்பைகள் போடக்கூடிய இடத்தில் நின்றுகொண்டு ‘டப்பு’ தலையை உயர்த்தி ஊளையிட்டுக் கொண்டிருந்தது. அன்று மதியம் கிராமத்து அதிகாரிகள், அலைந்து திரிந்து கொண்டிருந்த நாய்களை விஷம் கொடுத்துக் கொல்வதற்காக வந்திருந்தாலும், டப்பு எப்படியோ அவர்களிடமிருந்து தப்பித்துவிட்டது. அது தலோக்காசிங்கின் வாசலிலிருந்த புல்தொட்டிமீது படுத்து உறங்கிக்கொண்டிருந்தது. கிராமத்தில் மனித நடமாட்டம் முற்றிலும் இல்லாமல் போய்விட்டது என்பது தெரிந்ததும் டப்பு வெளியே வந்தது. உடம்பை நெளிந்துக் கொட்டாவி விட்ட அது வெளியே ஓடியது.
இதற்கிடையில் டப்புவின் காதலியான ‘புடி’ இறந்து விறைத்துப் போயிருந்தது. அவள் அருகில் சென்று தன்னுடைய காதலியை முகர்ந்து பார்த்துவிட்டு எதுவும் நடக்கவில்லை என்பது மாதிரி அந்த இடத்தைவிட்டு ஓடினான்.
தலோக்காசிங்கின் மனைவி ராணுவும் பக்கத்து வீட்டுக்காரி சன்னுவும் ஆச்சரியத்துடன் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். சன்னு தன்னுடைய சப்பையான மூக்கிற்கு மேல் சுண்டு விரலை வைத்தாள். ஒரு நீண்ட பெருமூச்சு விட்டவாறு அவள் சொன்னாள்: “அய்யய்யோ.... இந்த ஆண் இனம்.... எல்லாம் ஒரே மாதிரியா இருப்பாங்க?” ராணுவின் கண்கள் துடித்தன. அவள் தன் கண்களைத் துடைத்துவிட்டு, புன்னகைத்தவாறு சொன்னாள்: “இல்ல... உங்க டப்பு அப்படியெல்லாம் ஒண்ணுமில்லையே!”
அதற்குப் பதில் சொன்ன சன்னுவின் வார்த்தைகளைக் கேட்டு இருவரும் வெட்கத்தில் மூழ்கினார்கள். ராணு தன்னடைய வீட்டிற்கு வந்து வேலைகளில் மூழ்கினாள். சாயங்காலம் ஆனதும் அவள் குப்பைகளைக் கொட்டுவதற்காக வெளியே வந்தபோது பகலில் நடைபெற்ற சம்பவங்களை அவள் முழுமையாக மறந்து விட்டிருந்தாள். குப்பைகளை வெளியே எறிந்த ராணு துடைப்பத்தை வைப்பதற்காகப் போனாள். டப்பு அப்போதும் அங்கே இருந்தவாறு ஊளையிட்டுக் கொண்டிருந்தது. அவள் நாயைத் திட்டியவாறு அதை அடித்துவிரட்ட முயற்சித்தாள்.
“போ... போ... தூரப்போ.... சவமே! இங்கே அழறதுக்கு என்ன இருக்கு? சௌதரிமார்களின் வீட்டுக்குப் போய் அழு. அங்கேதான் பணத்தைச் சேர்த்து வச்சிருக்குறதும், ஆண்களின் கூட்டம் உள்ளதும்...”
ராணுவிற்கு சௌதரி மெஹர்பான்தாஸ் மீது ஏகப்பட்ட வெறுப்பு இருந்தது. அதற்குக் காரணம் - அவன்தான் அவளுடைய கணவனான தலோக்காசிங்கை கெட்டவனாக ஆக்கியவன். அதற்குப் பிறகு கிராமத்தைச் சேர்ந்த மற்ற பெண்கள். அவர்களுக்குத் தங்களுடைய கணவர்களைப் பற்றி எந்தவொரு விவரமும் தெரியாது. அதே நேரத்தில் மற்றவர்களின் கணவன்மார்களைப் பற்றி எல்லா விஷயங்களும் தெரியும். நவாப், குருதாஸ் ஆகிய குதிரை வண்டிக்காரர்களின் மனைவிமார்களிடமிருந்து ராணு தன்னுடைய கணவனைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொண்டபோது, அவள் தாங்க முடியாத கோபத்தில் கொதித்தாள். அந்த நெருப்பிற்கு ராணுவை கரிக்கட்டையாக ஆக்க முடிந்ததே தவிர, சாம்பலாக ஆக்க முடியவில்லை. உள்ளுக்குள் மிகவும் பக்குவப்பட்ட ஒருத்தியாக இருந்தாள் அவள்!
தலோக்கா வீட்டிற்குத் திரும்பி வந்தவுடன் ராணு அவனுடன் சண்டை போடுவாள். இறுதியில் தன் கணவனிடமிருந்து அடியோ, உதையோ கிடைக்கும்போது, அவள் ஒரு மூலையில் போய் உட்கார்ந்து சிந்திக்க ஆரம்பிப்பாள் : ‘ஒரு வகையில் பார்த்தால் என் கணவன் கோபம் முழுவதையும் வெளியே காட்டிட்டு வர்றது நல்லதுதான்... நான் நிம்மதியா இருக்கலாமே!’
அந்த ஒரு விஷயத்தில் மட்டும் ராணு தலோக்காசிங்கை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. அதனால் அவள் பிடிவாதமாக தன்னுடைய கணவனை தன்னை நோக்கித் திருப்ப தீவிரமாக முயற்சி செய்வாள். அப்படி முயற்சி செய்வதற்குக் காரணம் என்ன? மேற்பகுதி ஒடிந்த ஆலமரத்திற்குக் கீழே ஒரு சன்னியாசி உட்கார்ந்திருப்பார். அவர் இரும்பாலான கோவணத்தை அணிந்திருப்பார். பெண் என்றால் அவள் எப்படிப்பட்டவள் என்பது அந்தச் சன்னியாசிக்கு இதுவரை தெரியாது. அந்தச் சன்னியாசியைப் பற்றி ஊருக்குள் இப்படிப்பட்ட கதைகள்தான் உலாவிக்கொண்டிருந்தன. அதனால் அவருக்கு முன்னால் எப்போது பார்த்தாலும் பெண்களின் கூட்டமாகவே இருக்கும். சிலர் குழந்தை பெறுவதற்கான வரம்கேட்டு வந்து நிற்பார்கள். வேறு சிலர் நோய் குணமாவதற்கான பரிகாரம் கேட்டு வந்து நிற்பார்கள். இது ஒரு புறமிருக்க, பெரும்பாலான பெண்கள் கணவன்மார்கள் தங்கள் மீது தீவிர ஈடுபாடு கொள்ளுமாறு ஈர்ப்பதற்கு ஏதாவது ஒரு மூலிகை தந்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டு அங்கு வருவார்கள். சில மாதங்களுக்கு முன்னால் அந்தச் சன்னியாசி பூரண்தேயிக்கு ஒரு மந்திரம் சொல்லிக் கொடுத்தார். அதை வைத்து அவள் கர்ப்பிணி ஆகிவிட்டாள் என்பது மட்டுமல்ல; அவளுடைய கணவன் க்யான்சந்த் நிழலைப் போல அவளுக்குப் பின்னால் சதாநேரமும் சுற்றிக்கொண்டிருந்தான்.
தன்னுடைய கணவனின் ஈவு இரக்கமற்ற தொந்தரவுகளிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ராணுவும் பாபா ஹரிதாஸிடமிருந்து திருநீறு மந்திரித்து தன் கணவனுக்கு கொடுத்த பிறகு அவனை தன்னிடம் வர அவள் அனுமதிக்கக் கூடாது. ஆமாம்! இறுதியில் கெஞ்சிக் கூத்தாடி மன்னிப்பு கேட்டால்... அதற்குப் பிறகு... அதற்குச் சம்மதிக்கலாம். ஆனால், தலோக்கா இரண்டு வாரங்கள் பசும்பால் வேண்டுமென்றோ அதைக் குடிக்கவோ செய்யவில்லை.
தலோக்கா இரண்டு, மூன்று நாட்கள் ஆகிவிட்டால் ஒரு நாள் சௌதரி மெஹர்பான்தாஸிடமிருந்து ஒரு புட்டி சாராயம் கொண்டு வருவான். உலகத்திலுள்ள மற்ற எல்லாவித தவறுகளையும் ராணுவால் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால் மது அருந்தும் விஷயத்தை மட்டும் அவளால் பொறுத்துக்கொள்ளவே முடியாது. மதுவைப் போல மோசமான பொருள் இந்த உலகத்தில் வேறொன்றும் இல்லை. ஆண் தன்னுடைய எல்லாவற்றையும் பிற பெண்களிடம் இழந்துவிட்டான் என்றுகூட வைத்துக்கொள்வோம். அப்போதுகூட தன்னுடைய சொந்த மனைவிக்கு என்று கொஞ்சமாவது மீதம் வைத்திருப்பான். ஆனால், மது.... அய்யய்யோ! அதன் கெட்ட வாசனை காரணமாக முகத்தை அருகில் கொண்டு போகக்கூட முடியாது. அவளுக்கென்று எதுவும் மீதமிருக்காது. எல்லாமே இழக்கப்பட்டு விட்டதைப்போல் தோன்றும்.
தலோக்காசிங் பகல் முழுவதும் நவாப், இஸ்மாயில், குருதாஸ் ஆகியோருடன் டாங்கா (குதிரை வண்டி) ஓட்டிக்கொண்டிருப்பான். சாயங்காலம் ஆகிவிட்டால் நஸீபன்வாலா ஸ்டாண்டில் டாங்காவுடன் அவன் காத்திருப்பான். யாராவது வழி தவறிப்போன வேற்று ஊர் பெண்ணைச் சந்திக்க நேர்ந்தால், நல்ல உணவு, சூடும் சுகமும் உள்ள படுக்கை என்று வாக்குறுதிகளைக் கொடுத்து அவளை சௌதரி மெஹர்தாஸின் தர்மசாலைக்குக் கொண்டு வந்துவிடுவான்.