அழுக்குப் புடவை - Page 4
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6473
ராணுவின் நிர்வாணமான மார்புப் பகுதியைப் பார்த்து வெட்கப்பட்ட மங்கல் அப்போதே எழுந்து ஓடிவிட்டான். உலகத்தவரின் பார்வையில் அவன் ராணுவின் கணவனின் சகோதரனாக இருந்தாலும், ராணுவின் பார்வையில் அவன் அவளுடைய மூத்த மகனாகத்தான் இருந்தான். மங்கலை வளர்த்ததே ராணு தான். அவனும் ராணுவைத் தன்னுடைய சொந்த அன்னையாகத்தான் நினைத்தான். இல்லாவிட்டால் எதற்கு மங்கல் தன்னுடைய சொந்தத் தாயை ‘பெரியம்மா’ என்று அழைக்க வேண்டும்? சில நேரங்களில் ராணு மங்கலை திட்டுவதற்கும் அடிப்பதற்கும்கூட காரணம் அதுதான்.
எனினும், இப்போது சில வருடங்களாக எல்லாம் மாறிப்போய் விட்டது. ராணுவின் குழந்தைகள் வளர மட்டுமல்ல; மங்கல் அவர்களை எதிர்க்க ஆரம்பித்தான். கணவனான தலோக்காசிங் மது அருந்திவிட்டு வருவதும், ஐந்தான் மாமியார் குணத்தைக் காட்டுவதும் நடந்து கொண்டிருந்தன. அதைத் தொடர்ந்து ராணு வாழ்க்கையில் அமைதியை இழக்கத் தொடங்கினாள். குடும்பத்தின் வருமானம் குறைந்ததுதான் இதற்கெல்லாம் காரணம்.
தலோக்கா வாரத்திற்கு மூன்று, நான்கு நாட்கள் வேலைக்கே போவதில்லை. ஹுஸூர் சிங்கின் கண்களுக்குப் பார்வை சக்தி குறைந்தது. கட்டிலிலேயே அவன் எப்போதும் உட்கார்ந்து கொண்டு தன்னுடைய காதுகளால் எல்லாவற்றையும் பார்க்க ஆரம்பித்தான். ஹுஸூர் சிங்கின் கண்கள் காலையில் ஆற்றில் குளித்துக்கொண்டிருக்கும் புறாக்களின் சிறகுகளைப்போல துடித்துக்கொண்டிருக்கும்.
ஒரு விடுமுறை நாளன்று சாயங்கால நேரத்தில் தலோக்கா ராணுவிற்கு அருகில் வந்து தன்னுடைய பாக்கெட்டிலிருந்து ஒரு தக்காளியை எடுத்தான். அதை அவளிடம் நீட்டியவாறு அவன் சொன்னான்: “இதோடு சேர்த்து கொஞ்சம் வெங்காயத்தை அறுத்துப் போட்டு ஒரு கிண்ணத்துல வச்சு கொண்டு வா!”
ராணு காய்கறியை அப்போதுதான் வேகவைத்துக் கொண்டிருந்தாள். கையிலிருந்த கரண்டியை மண் சட்டியில் நுழைத்த அவள் எழுந்தாள்.
“இன்னைக்கும் அந்த நாசம் பிடிச்சதைக் கொண்டு வந்தாச்சா?” தலோக்கா வேண்டுமென்றே கனிவாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னான்: “தினமும் அதைக் கொண்டு வரவில்லையே, ராணு?”
“தினமும் கொண்டு வந்தாலும் சரி; இல்லாட்டியும் சரி... மது அருந்த நான் விடமாட்டேன். புட்டி எங்கே இருக்கு?” ராணு கோபக் குரலில் தொடர்ந்தான்: “அதுல என்கிட்ட இல்லாதது என்ன இருக்குன்னு நான் பார்க்குறேன்.”
ராணு எங்கே பெரிய ஆர்ப்பாட்டத்தை உண்டாக்கிவிடுவாளோ என்று தலோக்கா பயந்தான். ஆனால் அவள் அதைச் செய்தாள்.
தலோக்கா பற்களைக் கடித்துக்கொண்டு சொன்னான்: “அடியே நாயே! நான் உன்கிட்ட நல்ல அன்புடன் பேசிக்கிட்டு இருக்கேன். ஆனா நீ கடிவாளம் இல்லாத குதிரைமேல உட்கார்ந்து சவாரி பண்ணிக்கிட்டு இருக்கே”
“ஆமா... உண்மைதான். நீங்க மட்டும்தான் குதிரைமேல உட்கார்ந்து சவாரி செய்ய முடியுமா? வேற யாருக்கும் முடியாதா என்ன? இந்த விஷயத்துல ஒரு முடிவு கண்டு பிடிச்சிட்டுத்தான் அடங்குவேன். ஒண்ணு இந்த வீட்டுல இந்தப் புட்டி இருக்கணும். இல்லாட்டி நான் இருக்கணும். ரெண்டும் ஒரே நேரத்துல இருக்க முடியாது.”
ராணு சாராய புட்டியை எடுப்பதற்காக அறைக்குள் வேகமாக ஓடினாள். தலோக்காவின் முகபாவம் மாறியது. அவன் ராணுவின் தலைமுடியை இறுகப் பற்றினான். ஒரே இழுப்பில் அவள் தரையில் போய் விழுந்தாள். விளக்கின் திரி அணையப் போவது மாதிரி இருந்தது. பின்னர் பிரகாசமாக எரிந்தது. வேப்பமரத்தின் கிளைகளில் அமர்ந்திருந்த பறவைகள் பறந்தோடின. டப்பு திடுக்கிட்டு எழுந்து எதுவும் தெரியாமல் குரைக்கத் தொடங்கியது. “அப்பா... அப்பா...” மூத்த மகள் ‘படி’ உரத்த குரலில் அழுதாள். பந்தாவும், ஸந்தாவும் பயந்து போய் மூலையில் ஒளிந்துகொண்டார்கள். அவர்களில் ஒருவன் தக்க சந்தர்ப்பம் பார்த்து வெளியே ஓடினான். இளைய குழந்தை “அம்மா... அம்மா...” என்று அழைத்து அழுவதற்குப் பதிலா பதைபதைத்துக் கொண்டிருந்தது. “ஓ... ஓ...” என்று அது அழ ஆரம்பித்தது. ஹுஸூர் சிங் கட்டிலைவிட்டு எழுந்து வாய்க்கு வந்தபடி திட்டியவாறு தட்டுத்தடுமாறி வெளியே வந்தான். கண்களுக்கு பார்வை சக்தி இல்லாததால் அவன் கால் தடுமாறி அடுப்பின்மீது விழுந்தான்.
முதல் பலப்போட்டியில் ராணு வெற்றி பெற்றாள். அவள் தலோக்காவின் கையில் தன் பற்களைப் பதித்தாள். அதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் வேதனையில் கத்திய தலோக்கா ராணுவின் தலைமுடியைப் பிடித்து சுவரோடு சேர்த்து மோதினான். தொடர்ந்து அவன் தன்னுடைய குதிரையிடம்கூட பயன்படுத்தியிராத வார்த்தைகளைக் கொண்டு அவளை வாய்க்கு வந்தபடி திட்டினான்.
“அய்யோ! அய்யோ! என் அம்மாவைக் கொன்னாச்சா?” பயந்து போன படி உரத்த குரலில் அழுதாள். அவளுடைய பாட்டி வெளியே வந்தபோது, படியின் பைஜாமா நனைந்து போயிருந்தது. “இந்தத் தெருப்பொறுக்கியோட மகள் எப்படியோ என் வீட்டுக்கு வந்து சேர்ந்துட்டா...” - பாட்டி சொன்னாள். உடனே மங்கல் தன் தாயைத் தடுத்தான். “நீங்க சும்மா இருங்க, பெரியம்மா. அது புருஷன்-பொண்டாட்டிக்கு இடையில் இருக்குற சண்டை. அந்தச் சண்டைக்குள்ளே நுழையிறது சரியில்ல...”
“எதுக்கு பேசாம இருக்கணும்?” - கிழவி புலம்பிக் கொண்டிருந்தாள். “என் மகன் கஷ்டப்பட்டு உழைச்சு சம்பாதிச்ச பணத்துல அவன் குடிக்கிறான். இந்தத் தேவடியாளோட அப்பன் சம்பாதிச்ச பணத்துல இருந்து எடுத்து ஒண்ணும் அவன் குடிக்கல. மண்ணுக்குக் கீழே போயிட்டாலும் தாடகையைப் போல ஒரு மகளை இங்கு கொண்டு வந்து விட்டுட்டுப் போயிட்டாள்.”
தாயின் ஆதரவு கிடைத்தவுடன் தலோக்கா முழுமையாக ஒரு அரக்கனாகவே மாறிவிட்டான். அவன் ராணுவின் ஆடையைக் கிழித்தான். அவளை நிர்வாணமாக்கிவிட்டு உரத்த குரலில் கத்தினான்: “வெளியே போடீ.... என் வீட்டை விட்டு வெளியே போடீ...”
மயக்க நிலையில் ராணுவும் புலம்பிக் கொண்டிருந்தாள்: “ நான் இனிமேல் ஒரு நிமிடம்கூட இந்த வீட்டுல இருக்க மாட்டேன். இதோ போறேன்.”
வாசலில் மண்ணாலான சுவருக்குப் பக்கத்தில் சில நிழல்கள் தெரிந்தன. மேலே - மாடிகளில் சில பெண்களின் நிழல்கள் அசைந்தன.
“அய்யோ! கொல்றான்! கொல்றான் ஓடிவாங்க...” யாரோ உரத்த குரலில் கத்தினார்கள்.
அங்கு நடந்த அந்தக் காட்சியை எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் ராணுவைக் காப்பாற்ற யாரும் முன் வரவில்லை. தேலம்ராயணியும், அவளுடைய மகள்களும் பூரண்தேயி, நவாபின் மனைவி ஆயிஷா, சன்னு, வித்யா, ஸ்வரூப் என்று எல்லோரும் அங்கு இருந்தார்கள். ஆனால், சன்னு மட்டும் அழுதுகொண்டிருந்தாள்: “அய்யோ! ராணுவைக் கொல்றான். அவளை காப்பாத்துங்க” என்று.