அழுக்குப் புடவை - Page 20
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6474
“முன்னாடி தூங்கின மாதிரிதான்.”
“மங்கலும் அப்படித்தான் தூங்குறானா?”
“ஆமா...”
“ராத்திரி எழுந்திருப்பதோ திரும்பிப் படுக்குறதோ இல்லையா?”
அதைக் கேட்டு அவர்கள் எல்லோரும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தவாறு ஒருவரையொருவர் கட்டிபடித்துக்கொண்டார்கள். பிறகு அந்தப் பெண்கள் ராணுவிற்கு அறிவுரை சொன்னார்கள்:
“ராணு! விஷயம் ஒழுங்கா நடக்கணும்னா நீங்க ஏதாவது செய்தே ஆகணும். இல்லாட்டி கையில கிடைச்ச சொத்து கையை விட்டுப் போயிடும்.”
“வேணும்னா நான் ஒரு தாயத்து வாங்கித் தர்றேன்.” பூரண்தேயி சொன்னாள்.
“சரிதான்” - வித்யா கூறினாள்.
“வேண்டாம்... எனக்கு தாயத்து, மந்திரம் எதுவும் தேவையில்ல...” - ராணு சொன்னாள்.
“இப்படியே இருந்தா கடைசியில கண்ணீர் விட்டு அழ வேண்டிய நிலை வரும்.” - பூரண்தேயி கோபத்துடன் சொன்னாள்.
“நீங்க அழமாட்டீங்கள்ல?” - வித்யா பூரண்தேயியிடம் கேட்டாள்.
பூரண்தேயி வெட்கத்தையும், சுயமரியாதையையும் மறந்து தன்னுடைய செருப்பை நோக்கி விரலைக் காட்டியவாறு சொன்னாள்: “என் - அதுதான் - அழும் - நான் தாயத்து கொண்டு வந்து... என் சம்பு பிறக்காம இருந்திருந்தா உங்க சித்தப்பா என்னை தன்கூட வச்சிருப்பாரா?”
அதைக் கேட்டதும் எல்லோருடைய முகமும் மலர்ந்து பருத்திப் பூ போல வெண்மையானது.
“நீங்க அதுக்காக பாபா ஹரிதாஸோட ஆஸ்ரமத்துல எத்தனை நாட்கள் தங்கினீங்க?” சன்னு கேட்டாள்.
பூரண்தேயி சன்னுவின் தலைமுடியைப் பிடித்தாள். சன்னுவின் “அய்யோ! அய்யோ நான் செத்துடுவேன்” என்ற ஆர்ப்பாட்டத்துடன் அந்த விளையாட்டு முடிந்தது.
நஸீபன் வாலா ஸ்டாண்டில் நவாப், குருதாஸ், இஸ்மாயில் ஆகிய குதிரை வண்டிக்காரர்கள் சேர்ந்து மங்கலை கேள்விமேல் கேள்வி கேட்டுத் துளைத்துக் கொண்டிருந்தார்கள். “இப்போ எப்படி இருக்கு?” - அவர்களின் இந்தக் கேள்வியைக் கேட்டதும் மங்கலின் முகம் ஒரு மாதிரி ஆகிவிடும். உடனே மங்கல் தன் குதிரையைத் தடவிக் கொடுக்கவோ, இல்லாவிட்டால் அதைச் சுத்தப்படுத்தவோ இறங்கிவிடுவான். அப்போது குருதாஸ் கூறுவான்: “உண்மையாகச் சொல்லப் போனால் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிற பொம்பளைங்கக் கிட்டத்தான் அதிக சந்தோஷம் கிடைக்கும்.” “அது எப்படி?” - நவாபோ இஸ்மாயிலோ இப்படி கேள்வி கேட்டு இடத்தை வெப்பமாக்குவார்கள். “எல்லா அனுபவங்களும் உள்ளவளா இருக்கும். விஷயங்களை நல்லா புரிஞ்சுக்குவா” - குருதாஸ் கூறுவான்.
அதைக் கேட்டு எல்லோரும் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கும்போது மங்கல் கோபத்துடன் அவர்களைப் பார்த்துக்கொண்டே கூறுவான்: “உங்க எல்லோரையும் நான் ஒரு வழி பண்றேன்.... முட்டாள்களே!” அந்த நேரத்திற்கு எல்லோரும் அமைதியாக இருப்பது மாதிரி காட்டிக் கொண்டாலும்,தைரியசாலியும் பலசாலியுமான குருதாஸ் கேட்பான்:
“அப்போ தாயின் இடத்தில் வச்சு வணங்குறதுக்கா கல்யாணம் பண்ணினே?”
மங்கல் கோபத்துடன் குருதாஸைப் பார்த்தாலும், அவன் எந்தப் பதிலும் கூற மாட்டான்.
இஸ்மாயில் கதை சொல்ல ஆரம்பித்தான்: “ஒருநாள் ஒரு சீக்கிய மதத்தைச் சேர்ந்த ஒருவனோட ஒரு அணா சேற்றுல விழுந்திடுச்சு...”
“அதுக்குப் பிறகு என்ன ஆச்சு?” - நவாப் மங்கலைக் கண்களால் பார்த்தவாறு சொன்னான்.
“அதுவா? பிறகு அவன் ஒரு துணியை எடுத்துக்கிட்டு சேத்துல இறங்கினான். அணாவைத் தேடோ தேடுன்னு தேடினான். ரொம்ப நேரம் தேடியும் அணா கிடைக்கலைன்னு உடனே அந்தச் சீக்கியன் ‘அல்லா! என் ஒரு அணா... என் அல்லா... என் ஒரு அணா எனக்கு கிடைக்குறது மாதிரி செய்...’னு சத்தம் போட்டு சொல்லிக்கிட்டே சேறு முழுவதிலும் தேடினான். அந்தச் சமயம் ஒரு முஸ்லிம் அந்த வழியா நடந்து போனான். அல்லாவின் பெயரைக் கேட்ட அந்த ஆள் திரும்பி நின்னான். ‘என்ன ஸர்தார் சாஹிப்! நீங்க வா குருன்னு கூப்பிடறதுக்குப் பதிலா எங்களோட அல்லாவைக் கூப்படுறீங்க’ன்னு அந்த ஆள் கேட்டான்.
அதுக்கு அந்த சீக்கியன் சொன்னான்: “ம்... ஒரு அணாவுக்காக எங்களோட குருவை சேத்துல குதிக்க வைக்கிறதா?’ன்னு.” இந்தக் கதையைக் கேட்டு எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தாலும், மங்கல் மிடுக்கான குரலில் சொன்னான்: “அந்த முட்டாள் இஸ்லாம்ல இருந்து சீக்கிய மதத்துக்கு மதம் மாறிய ஆளா இருக்கும்.”
இதற்கிடையில் ஏதாவது பயணிகள் கண்ணில் பட்டால், வண்டிக்காரர்கள் எல்லோரும் அவர்களை நோக்கி ஓடுவார்கள். பயணி பெண்ணாக இருக்கும் பட்சம், அவள் கையில் இருக்கும் பொருள் நவாபின் டாங்காவிலும்,செருப்பு மங்கலின் டாங்காவிலும் இருக்கும். அவள் குருதாஸின் டாங்காவில் இருப்பாள். மனைவி ஒரு டாங்காவில் இருந்தால், கணவன் வேறோரு டாங்காவில் இருப்பான். அவர்களின் குழந்தை ஏதாவதொரு மூன்றாவது டாங்காவில் இருக்கும். இறுதியில் வண்டிக்காரர்கள் சண்டை போட்டவாறு அவரவர் இடத்திற்குத் திரும்பி வருவார்கள்.
மங்கலுக்கு இப்போது பெண்கள்மீது சொல்லிக் கொள்கிற மாதிரி ஈர்ப்பு ஒன்றும் இல்லை. இளம் பெண்களை ஆர்வத்துடன் வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் பழக்கமும் அவனிடமிருந்து விடைபெற்றுக் கொண்டது. எனினும், மங்கல் ஸலாமத்தியை மறக்கவில்லை. இன்று வரை மனைவியுடன் மங்கல் நெருங்கவே இல்லை என்ற செய்தியை கிராமத்தைச் சேர்ந்த மற்ற பெண்களிடமிருந்து ஸலாமத்தி தெரிந்துகொண்டாள். அவள் தன்னை அழகுப்படுத்திக்கொண்டு மங்கலை நெருங்குவதும், டாங்காவில் சவாரி போவதற்கான விருப்பத்தை வெளிப்படுத்துவதுமாக இருந்தாள். எனினும், அவளுக்கு அவன் மீது தாங்க முடியாத வெறுப்பு இருந்தது. ஸலாமத்தி அவனைப் பழிவாங்க வேண்டும் என்று நினைத்தாள். அதற்கு ஒரு நாள் இரவு மங்கலை அழைக்க வேண்டும். அவன் உடலைத் தொடத் தயாராகும்போது, சத்தம் போட்டு ஆட்களைக் கூட்ட வேண்டும். அந்த வகையில் நிரந்தரமாக ஞாபகத்தில் இருக்கும் வண்ணம் மங்கலை அவமானப்படுத்த வேண்டும். இப்படி ஒரு திட்டத்தை மனதில் வைத்துக்கொண்டு ஸலாமத்தி மங்கலை நெருங்கிக் கொண்டிருந்தாள்.
அன்று சாயங்காலம் மங்கல் நஸீபர்வாலா ஸ்டாண்டில் இருக்கும் போது பயந்துகொண்டே மது அருந்தினான். தன் அண்ணன் உயிரோடு இருந்த காலத்தில் அவன் புட்டிக் கணக்கில் மது அருந்திக் கொண்டிருந்தவன்தான். ஆனால் இப்போது மங்கல் மது அருந்த பயந்தான்.
ராணுவும், மற்ற பெண்களைப் போலவே திருமணம் நடந்த நாளிலிருந்து தன் கணவனின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருப்பவளாக ஆகிவிட்டாள். கணவனின் ஒவ்வொரு அசைவையும் அந்தக் கணத்திலேயே அவளால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் ராணு அதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை என்பதென்னவோ உண்மை. எனினும், தன் கணவன் என்ன தவறு செய்திருக்கிறான் என்பதை அறிந்து கொள்வதில் ராணுவிற்கு எந்தவிதச் சிரமமும் இருக்கவில்லை.