அழுக்குப் புடவை - Page 21
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6474
அதற்கு முன்பும் மங்கல் மூன்று நான்கு தடவைகள் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்திருக்கிறான். ராணு அதைப் புரிந்துகொள்ளவும் செய்தாள். எனினும் அவள் அமைதியாகவே இருந்தாள்.
நாட்கள் கடந்து செல்ல, பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண்கள் ராணுவை மேலும் அதிகமாகத் தொந்தரவு செய்யவும் திட்டவும் ஆரம்பித்தார்கள். அவர்கள் கூறுவதும் ஒரு வகையில் சரியாகக்கூட இருக்கலாம். ராணு அதைப்பற்றி சிந்தித்தாள். ‘என்னைப் பற்றியும் என் பிள்ளைகளைப் பற்றியும் மங்கலுக்கு எந்தவொரு சிந்தனையும் இல்லை’ என்று அவள் நினைத்தாள். இதென்ன தமாஷா இருக்கு! அந்த விஷயத்தை என் முன்னால கொண்டு வரக்கூடாது’ என்று மங்கல் எதிர்த்ததையும் ராணு காதால் கேட்டிருக்கிறாள். அவளுக்கு மங்கலிடம் எதையும் கூறவும் முடியவில்லை. ராணுவிற்கு அவனிடம் என்ன அதிகாரம் இருக்கிறது.
‘அதிகாரம் இருக்கு. பஞ்சாயத்து முன்னால், கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், ஆண்கள் முன்னால் மங்கல் எனக்குப் புடவை தந்து கல்யாணம் பண்ணின ஆள்தானே? சிந்திச்சுப் பார்த்தால் எனக்கு அதிகாரம் இருக்கத்தான் செய்யுது. இல்லைன்னும் இருக்கலாம். புடவைன்னா என்ன? அஞ்சு முழம் துணி. அதுக்குப் பிறகு நடந்த திருமணச் சடங்குகளுக்கு என்ன அர்த்தம்? சரின்னா எல்லாம் சரிதான். இல்லாட்டி எல்லாமே தப்புதான்...’ - இப்படி தனக்குள் பேசிக் கொண்டாள் ராணு.
தலோக்காவிற்கு ராணு இந்த அளவு பயப்படவில்லை. கடைசியில் அடி, உதை வாங்கினாலும் வாயிலிருந்து வரும் வார்த்தைகளையெல்லாம் அவள் கூறிவிடுவாள். ஆனால் மங்கலிடம் எதையும் கூற முடியாமல் இருப்பதற்குக் காரணம் என்ன? ‘அவன் விரலைக் காட்டிட்டுப் போகட்டும். எனக்கு நேரா நிற்கக்கூட மாட்டான். இருந்தாலும்... அதன் நோக்கம் என்ன? சரி.. இருக்கட்டும். எல்லாம் நல்லதுக்குத்தான். அடி, உதை வாங்கவேண்டியது இல்லையே!’
இப்படி சில நாட்களாக சிந்தித்ததன் விளைவாக மங்கலுடன் தன்னால் என்ன காரணத்துக்காகப் பேச முடியவில்லை என்பதை ராணு புரிந்துகொண்டாள். மற்ற பெண்கள் சூழ்நிலைகேற்ப தங்களின் கணவன்மார்களிடம் ஏதாவது வாங்கித் தரும்படி கேட்பார்கள். பகலில்- மோதிரம், இரவில் - ஆபரணம். கணவன்மார்களும் அவற்றைக் கட்டாயம் வாங்கிக் கொடுத்தாக வேண்டும்.
அன்று மங்கல் வீட்டிற்குத் திரும்பி வந்தபோது சிறிது பகல் இருந்தது. அஷ்டமியில் ஒளி குறைவாக இருந்த நிலவு கிக்கர் மரத்தில் சிக்கிக் கிடப்பதைப் போல் காட்சியளித்தது. மங்கல் வண்டியிலிருந்து குதிரையை அவிழ்த்து, அதற்குத் தீவனம் கொடுத்தான். டாங்காவை நிறுத்தும் இடத்திற்கு வலது பக்கத்தில் விவசாயப் பண்ணையைச் சேர்ந்த கரும்புத் தோட்டம் இருந்தது. பதினைந்து, பதினாறு அடிகள் உயரம் கொண்ட கரும்பு செடிகள் அடர்த்தியாக நின்று கொண்டிருந்தன. சிலந்திகள் வலையை நெய்துகொண்டு ஒரு செடியிலிருந்து இன்னொரு செடிக்கு ஊஞ்சலாடிக் கொண்டிருந்தன. தோட்டத்தின் இடது பக்கம் பாதையின் ஓரத்தில் நிறைய சிறு சிறு வீடுகள் இருந்தன. அதன் முடிவில் மதர்ஸா இருந்தது. மதர்ஸாவிற்குப் பின்னால் தான் தேலம் ராயணியின் வீடு இருக்கிறது. அங்குதான் நிலவு இப்போது மறையப் போகிறது.
காற்றில் ஏதோவொன்றின் வாசனை கலந்திருந்தது. அது என்ன என்று மங்கலுக்குத் தெரியும். விவசாயிகள் அந்தக் காலகட்டத்தில்தான் கரும்பை ஆட்டிச் சாறு எடுத்து சர்க்கரை தயாரிப்பார்கள். அவர்கள் பானைகளில் கிக்கர் மரத்தின் சிதைந்த தோலையும் சர்க்கரையையும் சேர்த்து வாயை மூடிக் கட்டி கரும்புத் தோட்டத்தின் மத்தியில் குழி தோண்டி வைத்துவிடுவார்கள். சில நாட்கள் கடந்த பிறகு, அந்தப் பானைகள் தாமே பேச ஆரம்பிக்கும். பிறகு அவை போதை நிறைந்த மதுபானைகளாக மாறி காற்றை அசுத்தப்படுத்துகின்றன.
பத்ர மாதம் அஸ்வினத்திற்கு கடந்து செல்கிறது. வெப்பமும், உஷ்ணக் காற்றும் பட்டு ‘தகதக’வென கொதித்துக் கொண்டிருந்த உடலுக்கு அப்போது வீசிய குளிர்காற்று ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக இருந்தது. என்னவென்று வார்த்தையால் கூற முடியாத ஒருவித உணர்வும், சக்தியும் மனித இதயத்தை அலைக்கழிக்கும் காலகட்டமிது. ஆண்களைப் பொறுத்தவரையில் அதை மறைத்து வைக்கவும் முடியாது. போர்வையை விட்டெறியவும் முடியாத காலகட்டம். பெண்கள் பழைய போர்வைகளையும், ஸ்வெட்டர்களையும் சலவை செய்து சுத்தமாக்கி குளிருடன் போட்டிபோடத் தங்களைத் தயார் பண்ணிக் கொண்டிருந்தார்கள். இனி அவர்களைப் பொறுத்தவரையில் மலைகூட சாதாரணம்தான். அதே நேரத்தில் குளிர்ந்த காற்றின் அணைப்பால் ஆண்களின் நரம்புகள் சிலிர்த்து நிற்கின்றன. அவர்களின் எழுச்சிபெற்ற நரம்புகளைக் குளிரச் செய்ய பெண்களுக்கு மட்டுமே முடியும்.
மங்கல் தன் வீட்டிற்குத் திரும்பி வந்து கொண்டிருந்தான். அப்போது மதர்ஸாவிற்குப் பின்னாலிருந்த வீட்டில் மாடியிலிருந்து யாரோ அவனை அழைத்தார்கள். “ஏய்... மங்கல்!” என்ற அந்த அழைப்பைக் கேட்டு அவன் மாடியைப் பார்த்தான். ஸலாமத்தி! நல்ல மனிதனைக்கூட பைத்தியம் பிடிக்க வைக்கும் ஸலாமத்தியின் அழகான தோற்றம் மங்கலைப் பாடாய்ப்படுத்தியது. அவள் சொன்னாள்: “அங்கேயே நில்லுங்க! நான் கொஞ்சம் பேசணும்.”
மங்கல் ஒரு சிலையைப் போல அதே இடத்தில் நின்றான். ஸலாமத்தி வீட்டிற்குள்ளிருந்த படிகள் வழியே இறங்கி வருவதற்குப் பதிலாக வெளியே செல்லுவதற்கான படிகளில் இறங்கி வந்தாள்.
“என்ன ஸலாமத்தி?” மங்கல் கேட்டான்.
“ஒண்ணுமில்ல...” அவளுடைய குரலில் கவலையும் குறையும் கலந்திருந்தன.
“நான் உங்க முன்னாடி அழுதாலும் எதுவும் சொல்ல மாட்டேன் என்பது மாதிரி இருந்தது” ஸலாமத்தியின் நடவடிக்கை.
“என்ன? சொல்லுங்க.” - மங்கல் சற்று முன்னால் நகர்ந்து நின்று சொன்னான்.
“கொஞ்சம் தள்ளி... கொஞ்சம் தள்ளி...” - ஸலாமத்தி பயந்து பின்னோக்கி நகர்ந்து நின்றாள்.
ஸலாமத்தியின் உடம்பிலிருந்து அப்போது வந்த நறுமணம் மங்கலுக்கு இதற்கு முன்பு அறிமுகமில்லாத ஒன்று. அது நகரத்திலிருந்து வந்திருக்கும் வாசனை. காதலை ஒரு வழிபண்ணும் வாசனை. குளிர் காற்று பட்டு துடித்துக் கொண்டிருந்த மங்கலின் நரம்புகள் திடீரென்று பாம்பைப்போல சிலிர்த்து நின்றன. அவன் ஸலாமத்தியைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் ஆவேசம் பொங்க அவளை நெருங்கினான்.
“உங்களுக்கு என்னைப் பார்த்து பயமா ஸலாமத்தி?”
“ஆமாம்... அன்னைக்கு ஒருநாள்...”
ஞாபகத்துல இருக்கு. “ஆனா, எப்பவும் ஒரே மாதிரியா இருக்குமா ஸலாமத்தி?”
மங்கல் முன்னால் நெருங்கியபோது ஸலாமத்தி, “வேண்டாம்,, வேண்டாம்.. ” என்று கூறியவாறு நகர்ந்து சுவரோடு சேர்ந்து நின்றாள். அதற்குமேல் மங்கல் நெருங்கினால் சத்தம் போட்டு ஆட்களை அழைப்பது அவளுடைய திட்டம்.
ஆனால் மங்கல்தான் நரிக்குட்டி ஆயிற்றே! ஸலாமத்தி சிந்தித்தாள். ‘மங்கல் என் வாயை மூடினாலோ, என் முகத்தைத் தன்னோட முடிகள் வளர்ந்திருக்கும் மார்போடு சேர்த்து அனைத்துக் கொண்டாலோ என் திட்டமெல்லாம் புஸ்வானமாயிடும்...’