அழுக்குப் புடவை - Page 26
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6474
படி குழந்தைகளை வாசலில் உறங்க வைத்துக் கொண்டிருந்தாள். மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையில் நடக்கும் இந்த ஆழமான தந்திரச் செயலில் அவர்களும் பங்கெடுப்பதைப் போல அடுப்பில் நீர் விழாமலிருக்க ராணு அதை முறம் கொண்டு மூடினாள்.
கிண்ணத்தின் ஒரு பகுதியில் ரொட்டி, அறுக்கப்பட்ட வெங்காயம், இன்னொரு பகுதியில் வறுத்த மாமிசம் ஆகியவற்றுடன் ராணு திரும்பி வந்தாள். மங்கல் ஆச்சரியத்துடன் முதலில் ராணுவையும் பிறகு கிண்ணத்திலிருந்த உணவுப் பொருட்களையும் கூர்ந்து பார்த்தான். அவனுடைய வாயில் நீர் ஊறியது. ராணு கண்ணாடி டம்ளரில் சாராயத்தை ஊற்றி மங்கலிடம் நீட்டினாள். அவனால் அதை நம்பவே முடியவில்லை. மங்கல் ராணுவின் கண்களையே வெறித்துப் பார்த்தவாறு சாராயம் நிறைக்கப்பட்ட டம்ளரை வாங்கினான். “இன்மேல் நான் குடிக்கமாட்டேன். அதைமீறி நான் குடித்தால், மாட்டுக் கறியை நான் சாப்பிடுறதா நினைச்சுக்கணும்.”
மங்கல் தன்னுடைய உதடுகளோடு சேர்த்து கண்ணாடி டம்ளரை வைத்தபோது, அதைத் தடுத்த ராணு எதையோ எடுப்பதற்காக மீண்டும் வெளியே சென்றாள். பிறகு அவள் ஒரு கிண்ணத்தில் வெங்காயம், அறுக்கப்பட்ட தக்காளி ஆகியவற்றுடன் வந்தாள். மங்கல் தின்னவும், குடிக்கவும் ஆரம்பித்தான். ராணு அருகில் உட்கார்ந்து அழுது கொண்டே டம்ளரில் சாராயத்தை ஊற்றிக் கொடுத்தாள். இந்த அளவிற்கு சந்தோஷம் நஸீபன்வாலா ஸ்டாண்டில் எப்படி கிடைக்கும்?
சிறிது நேரம் கடந்ததும் சாராயத்தின் போதை ராணுவையும் பாதித்தது. அவர்களில் மது அருந்தியது யார் என்பதைக் கண்டுபிடிப்பதே கஷ்டமான ஒரு விஷயமாக இருந்தது. ராணுவின் துப்பட்டா கீழே விழுந்தது. தொடர்ந்து சட்டையின் பொத்தான் அவிழ்ந்தது. கோவிலின் மணிகள் முழங்கின. பள்ளி வாசலில் முல்லா ‘வாங்கு’ கொடுத்தார். மணிகள் முழங்குவதையும், வாங்கு சத்தத்தையும் கேட்டு மங்கல் வெறுப்புடன் சொன்னான்: “..ச்சே..”
“என்ன?” - ராணு கேட்டாள்.
“இந்த முல்லாவும் பூசாரியும்...” - மங்கல் தேலம் ராயணியின் வீடு இருந்த பக்கம் கையை நீட்டியவாறு சொன்னான்.
மங்கல் எழுந்து வாசல் வரை போனான். வெளியே கடும் இருட்டு இருப்பதைப் பார்த்தவுடன் நடுங்குகிற பாதங்களுடன் திரும்பி வந்தான். பிறகு அவன் தன் கண்களுக்கு முழுபலத்தையும் தந்து உற்று பார்த்தான். ராணு அவனுக்கு முன்னால் நின்றிருந்தாள். முழு நிலவு - அஷ்டமியில் பாதி நிலவிலிருந்து முழுமையான வடிவம் எடுத்து கார்மேகங்களைக் கிழித்துக் கொண்டு கீழே பூமிக்கு இறங்கி வந்திருக்கிறது. மங்கல் மூச்சை அடக்கிக் கொண்டு சொன்னான்: “நீங்க... நீங்க எதுக்கு ஆடை அணிஞ்சிருக்கீங்க?”
ராணு தன்னுடைய பழைய அழுக்கு துப்பட்டா, புடவை ஆகியவற்றை எடுத்து தனக்கும் மங்கலுக்கும் நடுவில் திரையாகப் பிரித்தாள். “இந்தத் திரைச்சீலை எதுக்கு” - மேல் நோக்கி உயர்ந்த இரண்டு கைகள் அந்தப் புடவையின் நுனியைத் தொட்டது. மங்கலுக்கு முன்னால் பெண்ணின் அழகு - ஆண்மைத்தனம் கொண்ட ஒரு ஆணால் பார்க்காமல் இருக்க முடியாத அழகு... நடுவில் உணர்ச்சியைக் கிளறும் பர்தா. அதற்குப் பின்னால் அந்த அழகு நெளிந்து கொண்டிருந்தது.
மங்கலின் முகத்தில் சிவப்பு நிறம் பரவியது. அவனுடைய கண்கள் மூடின. உடலில் இருந்த உரோம குழிகள் தங்கள் இடத்தைவிட்டு இறங்கி வந்தன. அவை சில நேரங்களில் மழைதுளிகளுக்குப் பயந்து ஒளிந்து கொள்கின்றன. சில நேரங்களில் அதற்காக வெளியே வருகின்றன. ஸ்ராவணம், பத்ரம் ஆகிய மாதங்களில் மழை பெய்யும்... எங்காவது பெய்யும்... பத்ரத்திற்கும் அஸுஜினுக்கும் நடுவில் இரவும் பகலும் ஒன்று சேர்ந்து சமமாகின்றன. அப்போது தேவியின் கோட்லாவில் மழை பெய்யாமல் இருக்காது என்று பெரியவர்கள் கூறுவார்கள்.
மங்கல் ஒரு பார்வை தெரியாதவனைப் போல தட்டுத் தடுமாறி ராணுவின் கையைப் பிடித்தான். சிறிது நேரம் கடந்த பிறகு அவன் சொன்னான்: “நீங்க இன்னைக்கு ரொம்பவும் அழகா இருக்கீங்க, அண்ணி!”
9
வாசலில் நின்றிருந்த ஸலாமத்தி தொடர்ந்து தரையில் விழுந்து கொண்டிருந்த மழைத் துளிகளைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள். அவள் தன்னுடைய கைகளைத் தடவியவாறு காரமான மிளகாயைக் கடித்ததைப் போல ஸ்...ஸ்... என்று சத்தம் உண்டாக்கிக் கொண்டிருந்தாள். கோவிலின் மணிச் சத்தமும் பள்ளிவாசலின் ‘வாங்கு’ ஒலி - இரண்டும் ஒலித்து முடிந்தன. மனித உடல் படைக்க முடியவில்லை என்றாலும் அதிலிருந்து மனிதனைத் தடுக்கவும், புலம்பவும் வைக்கும் முல்லாவையும் பூசாரியையும் மனதில் ஸலாமத்தி சபித்தாள்.
இரவின் இரண்டாவது யாமமும் முடிந்தது. கரும்புத் தோட்டத்திற்கு அருகில் இருந்த மதர்ஸாவின் வாசலில் நின்றிருந்த முராத் ஆகாயத்தைப் பார்த்துவிட்டு மற்றவர்களிடம் சொன்னான்: “சுத்தப் பொய், நண்பர்களே! இந்தப் பெண்கள் சொல்றது எதையும் நம்பவே கூடாது.” கலீஃபா ‘ம்’ கொட்டினான். அல்லாதாதும் ஹிக்மத்தும் அவன் சொன்னதற்குத் தலையாட்டினார்கள். பிறகு அவர்கள் தங்களின் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு நடுங்கச் செய்துகொண்டிருந்த மழையில் நனைந்தவாறு கிளம்பனார்கள்: “ம்... சீக்கியனின் இந்தத் தடவை தப்பிச்சுட்டான்...”
முராத் ஏமாற்றத்துடன் திரும்பி வருவதைப் பார்த்த ஸலாமத்தி தன் கையை வீசி தீபத்தை அணைத்துவிட்டு கட்டிலில் காலை நீட்டிப் படுத்தவாறு சொன்னாள்: “அல்லா! உன் கருணை...”
10
இன்று சூரியன் கார்மேகம் என்ற பர்தாவிற்குப் பின்னால் மறைந்திருந்தான். ஆகாயத்தில் அவன் கடுமையான உழைப்பால் உண்டான கவலையாலும் வெட்கத்தாலும் தன்னுடைய கிழிந்து போன போர்வையை மூடி உறங்கிக் கொண்டிருக்கலாம்.
இமயமலையின் காற்று வீசத் தொடங்கியது. அதன் காரணமாக லோப்னார், கோக்னார், பாமிர், சுலைமான் ஆகிய மலைகளிலிருந்து வெள்ளை நிற சிறிய பறவைகள் பறந்து செல்ல ஆரம்பித்தன. ஆயிரம் மைல்களுக்கப்பால் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளின் காகிதப் படகுகள் காலம் என்ற நீரோட்டத்தில் காணாமல் போயிருக்கலாம். நூற்றுக்கணக்கான வருடங்களாகப் புனிதப் பயணிகள் பக்தியுடன் அர்ப்பணம் செய்த நைவேத்யங்களை விஷ்ணுதேவி சிறிய சிறிய தட்டுகளில் வைத்து பக்தர்களுக்குத் திரும்பித் தந்திருக்கலாம்.
கால நிலையின் மாறுதல், இரவு, பகலுக்கு ஒரு சுமையாகிவிட்டது. தோல்வியடைந்த சூரியன் மேகங்களுக்கு பின்னால் மறைந்து கொண்டு பூமியை எட்டிப் பார்த்துப் புன்னகைக்க ஆரம்பித்தான். சூரியன் புன்னகைத்ததுதான் தாமதம்... தித்தர், மைனா ஆகிய பறவைகளின் சிறகுகள் வண்ணங்களால் ஒளிர ஆரம்பித்தன. குயில்கள் மரக்கிளைகளில் ஊஞ்சலாடி, தங்களின் உறக்கத்தை மறந்து இனிய பாடல்களைப் பாடத் தொடங்கின. சூரியன் நாவல், நாஸ்பதி, வேம்பு ஆகிய மரங்களை மட்டுமல்ல - கிக்கர்,கைனி ஆகிய முட்களைக் கொண்ட மரங்களையும் தழுவிக்கொண்டு பூமியின் சோகங்களை நீக்கிக்கொண்டிருந்தது.