அழுக்குப் புடவை - Page 29
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6474
அவள் தாயும் தந்தையும் என்ன கூறப் போகிறார்கள் என்பதைக் கவனித்துக் கொண்டிருந்தாள். மங்கல் பாசத்துடன் ‘படி’யிடம் சொன்னான்: “நீ உள்ளே போ மகளே!”
படி அங்கிருந்து கிளம்பினாள். உடனே மங்கல் சொன்னான்: “இந்த வருடம் வெளியூர்கள்ல இருந்து வந்த பயணிகள்ல ஒரு இளைஞன் இருந்தான். அவனுக்கு இருபத்தைந்து வயசு இருக்கும். பார்க்க ரொம்பவும் நல்ல பையனா இருந்தான். டஸ்காவுல இருக்குற முன்ஷி(க்ளார்க்)யோட மகன். பூமி, வீடு, நிலங்கள்... நிறைய சொத்துகள் இருக்குற ஒரு குடும்பத்தின் ஒரே வாரிசு...”
அதைக் கேட்டு ராணுவின் முகம் மங்கலானது. “அப்போ... அந்த ஆள்..?”
“ம்... நீ விஷயம் முழுவதையும் கேளு” - மங்கல் தொடர்ந்து சொன்னான்: “அந்தப் பையன் சொல்றான் ‘நான் கல்யாணம் பண்றதா இருந்தா படியை மட்டும் தான் பண்ணுவேன்’னு.”
“அப்படியா?” - ராணு எல்லாவற்றையும் மறந்துவிட்டாள். அவளால் அதை நம்ப முடியவில்லை.
“உன் மேல சத்தியமா...” - அவன் ராணுவைத் தொட்டு சத்தியம் பண்ணினான். ராணு வேகவேகமாக மூச்சுவிட்டுக் கொண்டிருந்தாள். சல்வாருக்குள் அவளுடைய கால்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. ராணு தன்னுடைய பதைபதைப்பை அடக்கியவாறு கேட்டாள்:
“அந்த ஆள் நம்ம மகளைப் பார்த்திருக்கிறாரா?”
“பார்த்திருக்கலாம். ஒரு வேளை அப்படி இல்லாமலும் இருக்கலாம்.”
“பார்க்கலைன்னா, பிறகு இது எப்படி நடக்கும்?”
“என்னவோ? கிராமத்துல பஞ்சாயத்தும் அதைத்தான் விரும்புறாங்க. பிறகு... பஞ்சாயத்துலதான் பரமேஸ்வரன் இருக்காருன்னு உனக்குத்தான் தெரியுமே!”
“தெரியும் பஞ்சாயத்துல பரமேஸ்வரன் இல்லாமப் போயிருந்தா இன்னைக்கு என் நிலைமை என்ன ஆகியிருக்கும்?”
“உன் மகள் மகாராணி மாதிரி ஆட்சி நடத்துவான்னு அவங்க எல்லாரும் சொல்றாங்க.”
ராணுவிற்கு அது விருப்பமில்லையென்றாலும் மங்கல் தொடர்ந்து சொன்னான்: “அவனுக்கு வேற எதுவும் தோவயில்லையாம்... அதை அப்படியே ஏத்துக்கிட்டேன். அதுக்காக நான் ஒண்ணும் கொடுக்க மாட்டேன்னு அர்த்தம் இல்ல. என்னால் முடியக் கூடியதை நான் என் மகளுக்குத் தருவேன். எதையும் பாக்கி வைக்க மாட்டேன்.”
“என் மகள்!” - என்று அவன் சொன்னதைக் கேட்ட ராணுவிற்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை.
“டாங்காவும் குதிரையும் மட்டுமில்ல... என்னையே விற்கவேண்டியது வந்தாலும் சரி நம்மோட மகளுக்குக் கொடுக்க வேண்டியதையெல்லாம் கொடுக்கணும் ராணு. சரி... நீ என்ன சொல்ல விரும்புற?” - மங்கல் ராணுவிற்கு ஞாபகமூட்டினான்.
“ஒண்ணுமில்ல... சுர்மாபாயியைக் கொஞ்சம் கூப்பிடணும்.”
“சுர்மாபாயி...” - மங்கல் அதைத் திரும்பத் திரும்ப உச்சரித்தவாறு ராணுவையே உற்றுப் பார்த்தான்.
“உண்மையாகவா?”
ராணு வெட்கத்துடன் தலை குனிந்தாள். அப்போது சன்னு, பூரண்தேயி, வித்யா, ஸ்வரூப், ஜானகி ஆகிய பக்கத்து வீட்டுப்பெண்கள் தாளமேளத்துடன் நடனமாடியவாறு அங்கு வந்தார்கள்.
மங்கல் கையால் சைகை செய்து அவர்களை அமைதியாக இருக்கச் சொன்னாலும், பூரண்தேயி ஓடி வந்து அவனைப் பிடித்துத் தள்ளி வெளியே போகச் சொன்னாள். “போ... வெளியே போ! பொம்பளைங்க மத்தியில ஆம்பளைக்கு என்ன வேலை? செய்ய வேண்டியதையெல்லாம் நீங்க செஞ்சாச்சு. இனி போயி டாங்கவை ஓட்ட வேண்டியதுதானே?”
மங்கல் மரியாதையைக் காப்பாற்றும் வண்ணம் அங்கிருந்து நகர்ந்தான். பெண்கள் தாளம் மேளத்துக்கு மத்தியில் ராணுவிடம் சொன்னார்கள்: “ஆண் பிள்ளையைப் பிரசவிக்கணும். தேவையில்லாம இன்னொரு ஆபத்தைக் கொண்டு வந்துடாதே!”
சந்தோஷத்திலிருந்த பெண்களின் கொண்டாட்டத்தில் தாங்கள் என்ன சொல்கிறோம் என்று அவர்களுக்கே தெரியவில்லை. அந்த ஆரவாரங்களுக்கு மத்தியில் ராணு பூரண்தேயியைச் சற்று தள்ளி அழைத்துக் கொண்டுபோய், செவியில் சொன்னாள்: “வாழ்த்துக்கள் சித்தி!”
பூரண்தேயி சல்வாரை இறுக்கமாக அணிந்துகொண்டு சொன்னாள்: “எதுக்கு வாழ்த்துக்கள்?”
“படிக்கு மணமகன் கிடைச்சாச்சு.”
வாசலில் பார்த்தவாறு நின்று கொண்டிருந்த படி மிளகு வற்றலைப் போல தன் முகத்தைச் சிவப்பாக்கிக் கொண்டு உள்ளே ஓடினாள். பெண்களின் பார்வையின் ஓரத்தில் எப்போதும் கணவன்மார்கள்தான் இருப்பார்கள். திருமணமாகாத பெண்களின் செவிகள் வாத்தியங்களைக் கேட்பதற்கும், கண்கள் திருமண ஊர்வலத்தைப் பார்ப்பதற்கும் ஏங்கிக் கொண்டிருக்கும். அதனால் அங்கு கூடியிருந்த பெண்கள் இப்போதே படியின் திருமண ஊர்வலத்தைப் பார்க்கவும், வாத்திய இசையைக் கேட்கவும் ஆரம்பித்தார்கள். அவர்கள் மணமகன் யார் என்றுகூட கேட்கவில்லை. தலைப்பூ அணிந்த குதிரை மீது அமர்ந்து கையில் வாளை ஏந்தி சவாரி செய்துவரும் வரனை மனக்கண்ணால் பார்த்த அந்தப் பெண்கள் நடனமாடி சந்தோஷ வெள்ளத்தில் மிதந்தார்கள்.
தேவி கோவிலில் தரிசனம் பண்ணுவதற்காக வந்திருந்த பக்தர்கள் பெண்களின் கோலாகல சத்தங்களைக் கேட்டு மங்கலின் வீட்டை நோக்கி நடந்தார்கள். விஷ்ணுதேவி கோவிலில் அல்ல மங்கலின் வீட்டில். இன்னொரு வகையில் சொல்வதாக இருந்தால் அந்த வீடுதான் கோயில் என்பது மாதிரி இருந்தது அந்தப் பயணிகளின் செயல்.
பஞ்சாயத்து தலைவன் க்யான்சந்த், கிராமத்து தலைவன் தாரசிங், கேஸர்சிங், ஜகு, ருல்து, தீவானா, கர்ம்முதீன், துல்லா, ஜமாலா ஆகியோர் வந்து நின்றார்கள். மாடிக்கு மேலே பெண்களும் கீழே ஆண்களும் திரண்டு நின்றார்கள். தேலம் ராயணியும் அவளுடைய மகள்கள் இனாயத்தி, ஆயிஷா, ஸலாமத்தி மூவரும் அங்கு ஓடி வந்தார்கள். அந்தக் கூட்டத்தில் தேலமின் அண்ணன் மகன் ‘முலு’வும் இருந்தான். அவனுடைய கை சைகைகளையும் நடவடிக்கைகளையும் பார்த்து ஸலாமத்தி வெட்கப்பட்டு தலையைக் குனிந்துகொண்டாள். நவாபின் மனைவி ஆயிஷா, குருதாஸின் மனைவி ஆகியோர் நடன நிகழ்ச்சியில் இரண்டறக் கலந்துவிட்டார்கள்.
பூரண்தேயியும் வித்யாவும் சேர்ந்து ராணுவையும் பிடித்து இழுத்துக்கொண்டு வந்தார்கள். அவர்களுக்கு நடுவில் டப்பு தன் வாலை ஆட்டிக் கொண்டு அவரையும் இவரையும் மோப்பம் பிடித்துக்கொண்டு நடந்து கொண்டிருந்தது. ராணு கட்டுப்பாட்டுடனும், சில நேரங்களில் அதை மறந்தும் நடனமாடினாள். அவள் அணிந்திருந்த சல்வார் காற்று பட்டு, பாம்பைப்போல காலில் நெளிந்து ஏறுவதைப் போல இருந்தது. கஷ்டங்களில் அழுத்தப்பட்டுக் கிடந்த ராணுவின் அழகை அதுவரை யாரும் சரியாக கவனிக்கவில்லை. அழகாக இருந்த சட்டைக்குள்ளிருந்து ஏதோ கண்ணடித்து அழைப்பதைப் போல இருந்தது. குறும்புத்தனம் கொண்ட சிறுவன் கண்ணாடியில் சூரிய வெளிச்சத்தை பிரதிபலிக்கச் செய்து மற்றவர்களின் கண்களைச் கூசச் செய்வதைப் போல அது இருந்தது.
நடனமாடிக் கொண்டிருந்த பெண்களுக்கு உலகம் மிகவும் பெரியதாகத் தோன்றியது. அங்கு கூடியிருந்த ஆண்கள் அனைவரும் தங்களுக்குச் சொந்தமானவர்கள் என்று அவர்கள் நினைத்தார்கள்.