
அந்த இடம் ஒரே ஒரு நிறத்தில் இருந்தது. சூரிய கிரணத்தின் நிறம். அதில் மற்ற எல்லா நிறங்களும் மறைந்துபோயின. ஒவ்வொருவரின் நிறத்தையும் அடையாளம் கண்டுபிடிக்க மனிதனின் அறிவைப் பயன்படுத்த வேண்டிய நிலை வந்தது.
வெளியே வேறொரு கூட்டம் பாட்டுப் பாடிக் கொண்டும் நடனமாடிக்கொண்டும், ஒரு ஆள் வேறொரு ஆள்மீது விழுந்து கொண்டும், சிறிய சிறிய கூட்டங்களாக நெருங்கி வந்து கொண்டிருந்தனர். தேவியைப் பற்றி பஜனைப் பாடல்களைப் பாடுவதில் கைதேர்ந்த பக்தர்கள் கூட்டமே அது. பாவ நிவர்த்திக்காக தேவி தரிசனத்திற்கு வந்தவர்கள் அவர்கள். செய்ததும், செய்து கொண்டிருப்பதும், செய்யப் போவதுமான பாவங்களிலிருந்து விடுதலை பெறுவதுதான் அவர்களின் நோக்கம்.
பக்தர்களின் கூட்டம் நெருங்கி வந்தது. ஏழு வருட கடுங்காவல் தண்டனையை அனுபவித்துவிட்டு சிறையிலிருந்து விடுதலை பெற்று வரும் சௌத்ரி மெஹர்பான்தாஸும், கணஷ்யாமும் அந்தக் கூட்டத்தில் இருந்தார்கள். பக்தர்களின் கொண்டாட்டத்தில் தங்களையே மறந்து நடந்து கொண்டிருந்தாலும், தலை குனிந்து தங்களின் பார்வையை பூமியின்மீது அவர்கள் பதித்துக் கொண்டிருந்தார்கள். எத்தனையோ வருடங்கள் வஞ்சனை, சதி என்று இருந்த மெஹர்பான்தாஸும், கணஷ்யாமும் இப்போது மிகவும் அமைதியாக இருந்தனர். எனினும் அந்த மவுனம் அவர்களுடைய கடந்த கால வரலாற்றை வெளிப்படுத்துவதாக இருந்தது.
அவர்களுடன் இருபத்து ஐந்து, இருபத்து ஆறு வயதுள்ள அழகான ஒரு இளைஞனும் இருந்தான். தேவியைப் பற்றிய பஜனைப் பாடலில் தன்னையே மறந்துவிட்ட அந்த இளைஞனைப் பார்த்து கிராமத்து மக்கள் ஆச்சரியப்பட்டார்கள். எல்லோரின் உதடுகளிலிருந்தும் ஒரே ஒரு கேள்வி எழுந்தது. ‘இந்த இளம் வயதில் அவன் என்ன பாவம் செய்தான்?’ என்பதே அந்தக் கேள்வி. ஒருவேளை அவன் பாவம் செய்திருக்க மாட்டான். பாவம் அவனை பாடாய் படுத்தியிருக்கும்.
கூட்டத்தை ஒதுக்கிக்கொண்டு களைத்துப்போன மங்கல் ராணுவிடம் வந்தான். அவளைத் தோளில் தொட்டுக் குலுக்கியவாறு அவன் சொன்னான்: “ராணு! அதுதான் நம்ம மகளோட மணமகன்” - மங்கல் பஜனைப் பாடலைப் பாடியவாறு வந்து கொண்டிருந்த இளைஞனுக்கு நேராக விரலைச் சுட்டிக் காட்டினான்.
ராணு, அழகான தோற்றத்தைக் கொண்ட அந்த இளைஞனைப் பார்த்தாள். அவளுடைய இதயத்தில் திருமணம் முடிந்தது. ராணு தன் மனதில் படியின் கையிலிருந்த பூ மாலையை அவனுடைய கழுத்தில் அணிவித்தாள். இந்த அளவிற்கு அழகான தோற்றமும், நல்ல நடத்தையும், நல்ல உடல் நலமும் உள்ள ஒரு மணமகன் கிராமத்திலுள்ள ஒரு மகளுக்கும் இதுவரை கிடைத்திருக்க வாய்ப்பில்லை. ஆனந்தத்தால் திக்குமுக்காடிப் போன ராணு அருகில் நின்றிருந்த சன்னுவைப் பிடித்து இழுத்து நடனம் ஆடிக்கொண்டே சொன்னாள்: “ஹாய் சன்னு... நான் கரையைக் கடந்துட்டேன்..”
பெண்களுக்கு மத்தியில் நின்றிருந்த ‘படி’ தலையை உயர்த்தி தன்னுடைய வரப்போகும் கணவனைப் பார்த்தாள். நடனப் பாடல் படியின் வெட்கத்தை மறைத்துப் பிடித்தது. தன் உடலில் இருந்த இரத்தம் முழுவதும் முகத்திறகு வந்துவிட்டதைப் போல் அவள் உணர்ந்தாள். அதே இரத்தம், ஸலாமத்தியின் முகத்திலிருந்து காணாமல் போனது. அவள் தன் அக்காவிடம் சொன்னாள்: “வீட்டுக்கு போகலாம் அக்கா. சோர்வா இருக்கு.”
ராணு குழந்தையைப் போல அவளுக்கும் இவளுக்கும் தன்னுடைய சந்தோஷத்தைக் காட்டிக் கொண்டிருந்தாள். “பாருங்க! சித்தி! அதோ பாருங்க... வித்யா! ஸ்வரூப்! நீங்களும் பாருங்க!”- அவள் சொன்னாள். பூரண்தேயி பார்த்தாள். வித்யா உறுதி செய்தாள். ஸ்வரூப் எடை போட்டாள். ராணு தலையை ஆட்டியவாறு அவர்களிடம் கேட்டாள்: “என்ன, நல்ல ஆள்தானே?”
சன்னுவின் முகம் ஒளி குறைந்து ஒரு மாதிரி ஆவதைப் பார்த்து ராணுவின் பார்வையில் ஒரு நடுக்கம் உண்டானது. அவளுடைய முகம் வெயிலில் வாடி விழுந்த வெண்டைப்பூ போல ஆனது. ராணு சன்னுவின் முகத்தையே உற்றுப் பார்த்தவாறு சொன்னாள்: “அய்யோ... சன்னு! இது என்ன?” தொடர்ந்து அவள் அதே பார்வையுடன் அந்த இளைஞனைப் பார்த்தாள். அப்போது அவன் பிச்சைப் பாத்திரத்தை நீட்டி ராணுவிடம் என்னவோ யாசித்தான்.
“அய்யோ...நான் செத்துட்டேன்!” ராணு மூச்சை உள்ளே இழுத்தாள். அதே சுவாசம் வெளியே வருவதற்கு முன்பு தன் முகத்திலிருந்த சிவப்பு நிறம் சிறகு முளைத்து பறப்பதைப்போல் அவளுக்கு தோன்றியது. முதலில் ராணுவின் கைகள் நடுங்கின. பிறகு உடல் முழுவதும் அதேபோல நடுங்கியது. ராணு அந்த இளைஞனைப் பார்த்துக் கொண்டே சொன்னாள்: “இவன் ... இவன்தான்... என்னோட...”
ராணு தாங்க முடியாத துக்கத்தால் சுய உணர்வை இழந்து தரையில் விழ இருந்தாள். அதற்குள் கிழவனான மாமனார் தட்டுத் தடுமாறி அங்கு வந்தான். அருகில் நின்றிருந்த ஜந்தானைக்கூட பொருட்படுத்தாமல் அவன், விழப் போன ராணுவைத் தாங்கிப் பிடித்தான். இன்று ஹூஸூர்சிங்கின் கண் புறாவின் சிறகைப் போல துடிப்பதற்குப் பதிலாக சிறகை விரித்து ஆகாயத்தை நோக்கி உயர ஆரம்பித்தது.
“வா... மகளே!” - ஹூஸூர்சிங் துடிக்கும் உதடுகளுடன் அழைத்தான்: “மகளே! நீ எதுக்கு அழறே? இதோ என்னைப் பாரு. மகனைத் தருபவன் எப்பவும் மகனைத்தான் தருவான். அப்படித்தான் இந்த மகனும் கிடைச்சிருக்கான்.”
ஹூஸூர்சிங் பிறகு மருமகளின் மனதிற்கு அமைதி கிடைக்கக்கூடிய முயற்சிகளில் இறங்கிவிட்டான். அவனுடைய கண்கள் கங்கையும், யமுனையுமாக மாறி தாடி என்ற வனத்தில் அது தேங்கியது. தலோக்காவின் மரணத்திற்குப் பிறகு ஹூஸூர்சிங்கின் கைகள் இன்றுவரை சிறிதும் கிடைக்காத பொருளைத் தேடும் முயற்சியில் இறங்கியதேயில்லை. அவனுடைய குரல் தொண்டைக்குள்ளேயே நின்றுவிட்டது. யோகி வெறுமனே வெந்நீரில் தேடி என்ன பயன்? ஒருமுறை இழக்கப்பட்ட இரத்தினம் நிரந்தரமாக இழக்கப்பட்டதுதான். இனி அது உங்களுக்குத் திரும்பக் கிடைக்கப் போவதில்லை. ஆமாம்... அந்த இரத்தினத்திற்குப் பதிலாக மாணிக்கமோ, மரகதமோ, வைடூரியமோ உங்களுக்குக் கிடைக்கலாம். ஆனால், இழக்கப்பட்ட அதே இரத்தினம் கிடைப்பது என்பது கஷ்டமான ஒரு விஷயம்தான்.
அதனால்தானே ஹூஸூர்சிங்கின் கண்கள் இந்த உலகத்துடன் உள்ள தொடர்பை நீக்கி வேறெங்கோ பார்த்துக் கொண்டிருந்தன? பிறகு பார்வை அவனுடைய நிலைக்கொள்ளா நிலையில் கண்ணீர் சிந்தியது. இப்போது ஹூஸூர்சிங் அவனே பார்க்கும் பொருளாகவும் பார்க்கக் கூடியவனாகவும் ஆகிவிட்டான். விளையாட்டும், அதைப் பார்ப்பவனும் அவனேதான். ஹூஸூர்சிங் அணிந்திருந்த மஞ்சள் நிறத் தலைபாகை அவிழ்ந்து விழுந்தது. அதன் நுணியால் தன் கண்களையும் மூக்கையும் துடைத்த ஹூஸூர்சிங் ஒரு யோகியைப் போல இருந்தான். அவன் இந்த உலகத்தை விட விரும்பினான்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook