அழுக்குப் புடவை - Page 28
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6473
11
இந்த முறை கோட்லாவிற்கு இந்த அளவிற்கு அதிகமாகப் புனிதப் பயணிகள் வருவார்கள் என்றும், எப்போதையும்விட சற்று முன்பே பனிக்காலம் வரும் என்றும், அம்பாதேவி தன்னுடைய பக்தர்களைக் கூட்டமாக இந்தப் பக்கமாக வரும்படி செய்வாள் என்றும் யாரும் நினைத்திருக்கவில்லை. பெஷாவார், குஜரான்வாலா, சம்மடியார், ஸ்யால்கோட் ஆகிய பகுதிகளிலிருந்து லாரிகளிலும், பேருந்துகளிலும் குதிரை வண்டிகளிலும் பயணம் செய்து இவ்வளவு அதிகமான பயணிகள் வந்து சேர்வார்கள் என்று யாரும் மனதில் நினைத்திருக்கவில்லை. கோட்லாவில் இருப்பவர்களின் இல்லங்கள் பணத்தால் நிறையும் என்றும் யாரும் எண்ணியிருக்கவில்லை. திவான்ஷாவின் பலசரக்குப் பொருட்களும் ‘ஜட்’டுகளின் நெய்யும் ‘கைரெ’யின் எண்ணெயும்,தேலம் ராயணியின் காய்கறிகளும் இந்த அளவிற்கு உயர்ந்த விலைக்கு விற்கப்படும் என்று யார் நினைத்தார்கள்? கோவிலிலிருந்த புறாக்கள் தெருக்களில் இறங்கி தானியங்களைக் கொத்திக்கொண்டு பறந்து செல்லும். அவற்றின் அன்பான கு...கு... சத்தம் இருபத்து நான்கு மணி நேரங்களும் வேலை செய்து கொண்டிருக்கும் மாவு ஆலையின் சங்கொலியில் சங்கமமாகிவிடும். தெருக்கோவில், தர்மசாலை, கச்சேரி ஆகியவற்றில் ஊசி குத்தக்கூட இடம் இல்லை. ஒரு ஆள் படுக்கக் கூடிய இடத்திற்குப் பயணிகள் இருபது இருபத்தைந்து என்று வாடகை கொடுப்பார்கள் என்பதை யாரும் கற்பனை கூட செய்ததில்லை. தட்டானின் நகைகளும், ஆசாரியின் தாம்பளங்களும் விளக்குகளும், குயவனின் மண் பானைகளும் நினைத்துப்பார்க்க முடியாத விலைக்கு சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்துவிடும் என்று யாரும் நினைக்கக் கூட இல்லை. புனிதப் பயணிகளின் வருகை தொடர்ந்து கொண்டிருந்தது. ஆடியும், பாடியும், தாளங்கள் போட்டுக் கொண்டும் அவர்கள் கோட்லாவிற்கு வந்து கொண்டிருந்தனர்.
அந்தக் காலகட்டத்தில் கோட்லாவைச் சேர்ந்த பெண்கள் மேலேயிருந்து மெலிந்தும், கீழேயிருந்து தடித்தும் இருந்ததற்கான காரணம் என்ன என்பது யாருக்கும் தெரியாது. கடந்த காலத்தின் உஷ்ணம்தான் காரணம் என்று சிலர் கூறுகிறார்கள். வரப் போகிற குளிர்காலம்தான் காரணம் என்று வேறு சிலர் கூறுகிறார்கள்.
கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் கையில் தட்டுடனும், தட்டில் செந்தூரச் செப்புடனும் கோவிலுக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களின் நடையில் தங்களைத் தாங்களே மறந்து பின்னர் எங்காவது சப்பணம் போட்டு உட்கார்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தால் க்யான்சந்த், கேஸர்சிங், தீவானா, ருல்து போன்றோரின் நரம்புகள் தளர்ந்து போய்விடும். அவர்கள் ‘ஹாய்! ஹாய்!’ என்று ஒரே குரலில் அழைப்பார்கள்.
அன்று பெரிய பூஜை நடக்கும் நாள். ஹூஸூர்சிங், ஜந்தான் ஆகியோர் கூட வெளியே சென்றிருந்தார்கள். ஆனால், ராணு மட்டும் எங்கும் போகவில்லை. அதனால் ‘படி’யும் வீட்டிலேயே இருந்தாள். வயதுக்கு வந்த பெண் அவள். கோவிலுக்கு வந்திருப்பவர்களில் பலதரப்பட்டவர்களும் இருந்தார்கள். யாராவது படியை நோக்கி விரலை நீட்டி விட்டால்...?
ராணு சிவப்பு நிறத்தில் ஏதோ ஒன்றை அரைத்து, அம்மியிலிருந்து எடுத்து கிண்ணத்தில் போட்டாள். கடலைமாவை நீரில் கரைத்து அதில் பச்சை மிளகாய், அறுத்த உருளைக்கிழங்கு ஆகியவற்றைப் போட்டு அதை ஒரு பாத்திரத்தில் வைத்திருந்தாள். அடுப்பிலிருந்த வாணலியில் கடுகெண்ணெய் கொதித்துக் கொண்டிருந்தது. அப்போது சன்னு அங்கு வந்தாள். கறுப்பு நிறக் கம்பளி கோட்டையும், குலாபி துப்பட்டாவையும் அவள் அணிந்திருந்தாள். கருப்புக் கோட்டுக்குள் துறுத்திக்கொண்டிருந்த அவளுடைய வெளுத்த மார்பகங்கள் காதலின் மகத்துவத்தின் கருப்பு,வெள்ளை நிறங்களை வெளிப்படுத்தின. ராணுவைப் பார்த்த உடனே அவள் கேட்டாள்:
“அய்யய்யோ! இன்னைக்கும் நீங்க இங்கேயே இருந்து சாகுறீங்களா?”
ராணு அதற்கு தலையை ஆட்டி “ஆமாம்” என்றாள். சன்னு அருகில் வந்து சொன்னாள்: “வெளியே நாங்க எல்லாரும் உங்களுக்காகக் காத்திருந்தோம்.”
ராணு அணிந்திருந்த புதிய சல்வாரும், சட்டையும் சன்னுவின் பார்வையில் பட்டன. சன்னு அப்போதே, “இதுதான் விஷயம்” என்று கூறி ராணுவின் சல்வாரைத் தொட்டுப் பார்த்தாள். சன்னுவிடமிருந்து தப்பிப்பதற்காக ராணு தன் கையிலிருந்த மாவை வாணலிக்குள் போட்டாள். அவள் கையைத் தூக்கியவுடன் சன்னு சட்டைக்குள் வேறு எதையோ பார்த்தாள். திடீரென்று அவள் ராணுவின் சட்டைக்குள் தன் கையை நுழைத்து வயிற்றைத் தடவிப் பார்த்துவிட்டு, வாசலுக்குச் சென்று நடனமாடி, பாட்டுப் பாடி, சந்தோஷப்பட்டாள்.
“மங்கல் உங்க சொல்படி நடந்துட்டான். அப்படித்தானே? ”
ராணு பதிலெதுவும் கூறாமல் அம்மியிலிருந்து கிண்ணத்தில் எடுத்து வைத்திருந்த பொருளை விரலில் எடுத்து வாய்க்குள் போட்டு நாக்கால் ஓசை உண்டாக்கினாள்.
“அது என்ன?” - சன்னு அந்தப் பாத்திரத்தை உற்றுப் பார்த்துக் கொண்டு கேட்டாள்.
“அது சட்னி...” ராணு சொன்னாள்.
சன்னுவின் கண்கள் விரிந்தன. அவள் உடனே சட்னியை எடுத்து வாயில் வைத்து “ஸி...ஸி....” என்று ஓசை உண்டாக்கினாள்.
“உண்மையைச் சொல்லுங்க. இல்லாட்டி நான் உங்க முகத்துல விழிக்க மாட்டேன்.”
ராணு நான்கு திசைகளிலும் பார்த்துவிட்டு அருகில் நின்றிருந்த ‘படி’யிடம் சைகை காண்பித்தாள். தொடர்ந்து அவள் சன்னுவின் காதில் சொன்னாள்: “ஆமா... உண்மைதான்...”
அதைக் கேட்டு சன்னு ஒரு பைத்தியம் பிடித்தவளைப் போல ஆர்ப்பாட்டம் பண்ணியவாறு வெளியே ஓடினாள். அதே வேகத்தில் மங்கலும் உள்ளே வந்து கொண்டிருந்தான். அவர்கள் இருவரும் மோதிக் கொண்டார்கள். சன்னு வீசி எறியப்பட்டு சுவருக்கு அருகில் போய் விழுந்தாள். மங்கலின் தலைப்பாகையும் அணிந்திருந்த ஆடையும் அவிழ்ந்தன. மங்கலை அப்படிப்பட்ட கோலத்தில் பார்த்த சன்னு வெட்கமும் கோபமும் கலந்த குரலில் சொன்னாள்: “குருடன்! ஆள் வருவதைப் பார்க்க வேண்டாமா?”
“ஆனா, சன்னு!” - மங்கல் என்னவோ கூற ஆரம்பித்தான். அதற்குள் சன்னு அங்கிருந்து போய்விட்டாள். மங்கல் தன்னுடைய தலைப்பாகையை எடுத்தவாறு ராணுவை அழைத்தான்: “ராணு!”
ராணு சமீபத்தில் தான் இருந்தாலும், அவள் அதிர்ச்சியடைந்து போனதென்னவோ உண்மை. மங்கல் இன்றுதான் முதல் தடவையாக அவளைப் பெயர் சொல்லி அழைக்கிறான். ஏதாவது முக்கிய விஷயம் இருக்கும் என்று அவள் நினைத்தாள். ஏதோ ரகசியத்தைக் கூறப் போவதைப் போல மங்கல் ராணுவிற்கு நெருக்கமாகச் சேர்ந்து நின்றான். “கேள் ராணு! மிகப் பெரிய ஆச்சரியம்!” - அவன் சொன்னான். ராணு புன்னகைத்துக்கொண்டே சொன்னாள்: “என்ன? சீக்கிரமா சொல்லுங்க. உங்கக்கிட்ட சொல்றதுக்கு என்கிட்டயும் ஒரு ரகசியம் இருக்கு.”
“நீ என்ன சொல்ல விரும்புற?” - மங்கல் ஆர்வத்துடன் கேட்டான்.
“முதலில் நீங்க சொல்லுங்க.”
மங்கல் ரகசியத்தைக் கூறத் தயாரானான். இதற்கிடையில் சமீபத்தில் நின்றிருந்த ‘படி’யை அவன் பார்த்தான்.