வாழ மறந்த பெண் - Page 12
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6461
"என் தங்கையே! நானும் உங்களைப் போலத்தான் கவலையில் மூழ்கிக் கிடக்கிறேன். வேறொரு வகையில் என்பது தான் வித்தியாசம். நாம் நிறைய விஷயங்களை மனம் திறந்து பேச வேண்டியதிருக்கு. என்னைப் பற்றி நான் சொல்கிறேன். அதுவரையில் என்னைத் தப்பாக நினைத்துவிடக் கூடாது."
அதைக் கூறும்போது அவளுடைய கண்கள் ஈரமாவதை நான் பார்த்தேன். என் மனதில் உண்டான சிறிது வெறுப்பு கூட அத்துடன் இல்லாமல் போய்விட்டது. நான் சொன்னேன்:
"சகோதரி! அவர் அந்த அளவிற்கு அன்பு கொண்டவராக இருந்தார். எனக்குள்ளிருந்து மிகவும் சாதாரணமாக அவரை அவ்வளவு எளிதாக விட்டு எறிந்துவிட என்னால் முடியாது."
கனகத்தின் முகம் முன்பு இருந்ததைவிட இரக்கப்படும்படி ஆவரை நான் பார்த்தேன். அவள் சிறிது நேர மவுனத்திற்குப் பிறகு என்னைவிட்டு விட்டு, தனக்குத்தானே கூறிக் கொள்வதைப் போல் கூறினாள்:
"சம்பவங்களுக்குப் பெரிய முக்கியத்துவம் இல்லை. எல்லாம் அவற்றைச் சந்திப்பவர்களின் குணத்தைப் பொறுத்தவை. எனக்கு சிந்திப்பதற்கு மேலும் கொஞ்சம் நேரம் வேண்டும். நாம் நாளை சந்திப்போம்."
கனகத்தை நாளைக்கு சாயங்காலம் நளினியின் திருமணத்திற்கு வரும்படி அழைத்துவிட்டு நான் விடைபெற்றுக் கொண்டு அவளிடமிருந்து பிரிந்தேன். சில நாட்களாக என்னை ஆக்கிரமித்து விட்டிருந்த உற்சாக குணங்கள் என்னைவிட்டுப் போயிருந்தன. நான் இதோ, பழைய கவலைகள் நிறைந்த வாழ்க்கையை நோக்கித் திரும்பவும் எறியப் பட்டிருக்கிறேன். நாளைய கொண்டாட்டங்கள் எப்படியாவது முடிந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?
அடுத்த நாள்
இப்போது இரவு பன்னிரண்டு மணி கடந்துவிட்டது. திருமணமும் விருந்து உபசரிப்புகளும் முடிந்துவிட்டாலும், நிறைய ஆட்கள் இன்னும் இங்கிருந்து கிளம்பாமலே இருக்கிறார்கள். இந்த விஷயங்களிலெல்லாம் எதற்காக இந்த அளவிற்கு ஆர்வம் காட்ட வேண்டும்? எல்லோருடைய வாழ்க்கையிலும் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் கடந்து போக வேண்டிய சம்பவங்கள்தான்... அமைதியாகவும் ஆர்பாட்டமில்லாமலும் அதை நடத்தக் கூடாதா? அதற்கு இங்கு எந்த அளவிற்கு அதிக ஆரவாரங்களைக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள்!
வந்தவர்களுக்கு மனிதர்களின் மன அமைதியைக் கெடுக்க வேண்டும் என்பதைத் தவிர, வேறு எந்தவொரு எண்ணமும் இருப்பதைப் போலத் தெரியவில்லை. கனகமும் இல்லாமல் போயிருந்தால் இந்த நாளை நான் எப்படித்தான் கழிப்பது? எது எப்படி இருந்தாலும் அது ஒரு நல்ல விஷயமாகவே ஆகிவிட்டது. நாங்கள் இந்த அறையை விட்டு முகூர்த்த நேரத்தைத் தவிர, வெளியே போகவேயில்லை. இல்லாவிட்டால் சிறிதளவு சிந்தனைகூட இல்லாமல் வேகவேகமாக நடந்து கொண்டிருக்கும் இந்த மனிதர்களுக்கு மத்தியில் எப்படி இருக்க முடியும்? பலரும் தாங்கள் இல்லையென்றால் இந்தத் திருமண நிகழ்ச்சியே நடக்காது என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள். எல்லாம் இன்று ஒருநாள் மட்டும்தானே! அதிகபட்சம் போனால், நாளைக்கும் இருக்கும். அது வம்பு பேசுவதற்கும் சோர்வைக் குறைப்பதற்கும் என்றே இருக்கக்கூடிய ஒரு சந்தர்ப்பம். அது முடிந்துவிட்டால் நிம்மதிதான்.
என்னுடைய பழைய சினேகிதிகள் யாராவது வந்திருப்பார்களோ என்னவோ? அப்படியென்றால் அவர்களைப் போய் பார்க்காமல் இருந்தது ஒரு வகையில் பார்க்கப் போனால் மரியாதைக் குறைவான செயலாக ஆகிவிடும். சொல்லப் போனால் சமீப காலமாக நான் குசலம் விசாரிப்பதற்காக யாரையும் போய்ப் பார்த்ததேயில்லை. யாரும் என்னையும் தேடி வந்ததில்லை. தனிமையில் இருந்து கொள்வதற்கு எல்லோரும் என்னை அனுமதித்து எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டன. அப்படியென்றால் அதில் அந்த அளவிற்குத் தவறு எதுவும் இருப்பதாக நினைக்க வேண்டியதில்லை.
கனகம் இங்கிருந்து போய் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகவில்லை. தன்னுடைய இருப்பிடத்திற்கு அவள் என்னை அழைத்திருக்கிறாள். தன்னுடைய மகன் மணியையும் அவள் எதிர்பார்க்கிறாள். நான் போவது என்று தீர்மானித்து விட்டேன்- அது ஒரு மரியாதை என்பதால் மட்டுமே.
அடுத்த நாள்
நான் இன்று மிகவும் சீக்கிரமே கண் விழித்து விட்டேன். ஒரு சினேகிதி இருப்பது- அவளுடன் மனதைத் திறந்து பேசுவது- இவையெல்லாம் புதிய அனுபவங்களைப் போல தோன்றியது. சிறு முளைத்த பிறகு முதல்முறையாக பரந்து கிடக்கும் நீல வானத்தைப் பார்த்துப் பறந்து மேலே செல்லும் வண்ணத்துப் பூச்சியைப் போல என்னுடைய இதயம் புத்துணர்ச்சி நிறைந்த சந்தோஷத்தை அனுபவித்துக் கொண்டிருந்தது. நான் ஜட்கா வண்டி ஓட்டுபவனை எப்போதோ தயார் பண்ணி வைத்துவிட்டேன்! நான்கு மணிக்கு என்று சொன்னால் சரியாக நான்கு மணிக்கு! நேரம் எறும்பு இழுத்துச் செல்லும் இறந்துபோன பூச்சியைப்போல நீங்கிக் கொண்டிருந்தது. நான் நிலை கொள்ளாத மனதுடன் அப்படி உட்கார்ந்திருந்தபோது கனகத்தின் கடிதத்துடன் அவளுடைய வேலைக்காரன் வந்தான். ஒரு நிமிட நேரம் நான் பலவாறாக நினைத்து சந்தேகப்பட ஆரம்பித்துவிட்டேன். அவள் நான் அங்கு செல்லப் போவதைத் தள்ளி வைத்துவிட்டாளோ? இல்லாவிட்டால் மணி அங்கு வந்து சேர்ந்த சந்தோஷத்தால் மதியமே அங்கு வந்துவிட வேண்டும் என்று கூறினாலும் சரிதான். எது எப்படி இருந்தாலும், அது ஒரு சந்தோஷப்படக் கூடிய சம்பவம் அல்ல. நான்கு மணிக்கு முன்னால் எதற்காக இப்படி அவசரமாக செய்தி கொடுத்து அனுப்ப வேண்டும்? சாயங்காலம் வெளியே போவதற்கான தேவை இல்லை என்ற சூழ்நிலை வந்தால்... ஹா! இந்த நாளை நான் எப்படித்தான் கழிப்பது? ஒரு விஷயத்தைச் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துவிட்ட பிறகு, அது தற்கொலையாகவே இருந்தாலும் சரி- அதைத் தடுப்பவர்கள் எதிரிகள்தான்.
நான் உறையைக் கையில் வாங்கினேன். நல்ல கனமுள்ள ஒன்றாக இருந்தது அது. அடுத்த நொடி நான் அதை பிரிப்பதற்காக உறையின் மூலையைக் கிழித்தேன். அப்போது என்னுடைய சந்தேகங்கள் முழுமையாக நீங்கியது காரணமாக இருக்கலாம்- அந்த ஆர்வத்தைச் சிறிது நேரம் ஒரு ஓரத்தில் ஒதுக்கி வைத்து விட்டு, அதை அறிவதற்கான ஒரு ஆர்வம் எனக்குள் உண்டானது. பிரச்சினைக்குரிய ஏதாவது அதற்குள் இருக்கும்பட்சம், இரண்டோ நான்கோ வரிகள் கொண்ட ஒரு குறிப்புதான் அங்கு இருக்கும். பிறகு என்ன அது? ஆமாம்... அதுதான் தெரியவில்லை. ஆனால், நான் ஒன்று நினைத்தால், அடுத்த நிமிடம் தெரிந்து கொள்ளலாம். பார்ப்போமே!
"பதில் வாங்கிக் கொண்டு வரணும்னு சொல்லியிருக்காங்களா?"
நான் வேலைக்காரனிடம் கேட்டேன்.
"இல்ல... இதை இங்க கொடுக்கணும்னு மட்டும்தான் சொன்னாங்க."
நான் அவனைப் போகும்படிக் கூறிவிட்டு, கடிதத்துடன் என்னுடைய அறையை நோக்கி நடந்தேன்.