வாழ மறந்த பெண் - Page 9
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6460
மனம் உண்மையாகவே அதன் வரம்புகளைத் தாண்டியிருக்கும். அதை வெளிப்படுத்துவதற்கு என் மனம் எவ்வளவோ முறை துடித்தாலும், ஏற்கனவே இருக்கும் முடிவுகள் ஒரு ஆமையைப் போல அவற்றின் ஓட்டுக்குள் தலையை இழுத்துக் கொள்கின்றன. ஒரு சம்பவம் என்னிடம் உண்டாக்கும் உணர்வுகளை என்னால் இப்போது வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. ஒவ்வொன்றையும் மேலும் அதிகமாக ஆராய்ந்து அறிய முயலும் ஒரு இலக்கியவாதியாக என்னால் ஆக முடிந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! ஹா! ஒரு பெண்ணின் வரையறைகளுக்குள் இருந்துகொண்ட நான் என்னவெல்லாம் எழுதியிருப்பேன்!
இருபத்து நான்கு வருடங்கள் கழித்து...
நளினியின் கண்களில் புதிதாக ஒளிர்ந்து கொண்டிருக்கும் உணர்ச்சிகள் சரித்திரம் திரும்புகிறது என்பதற்கான அடையாளங்களாக இருக்குமோ? நேற்றிலிருந்து என் சிந்தனை அதைப் பற்றியே உள்ளது. அப்பிராணிப் பெண்! கடவுள் அவளுக்கு அருள் செய்யட்டும்! அந்த இளமை தவழும் வயதில் எந்த அளவிற்கு ஆர்வம் நிறைந்திருக்கும்! இருபத்தாறு வருடங்களுக்கு அப்பால் என்னுடைய நினைவு எவ்வளவு வேகமாகப் பயணிக்கிறது! அது மட்டுமல்ல- இப்போது இருக்கும் காலத்தைவிட அந்தப் பழைய நினைவுகள் எவ்வளவு தெளிவாகவும் சந்தோஷம் அளிப்பவையாகவும் இருக்கின்றன? அன்பு செலுத்தவும், எதிர்பார்ப்பில் இருக்கவும், புன்னகைப்பதற்கும் என்றே இருக்கக்கூடிய வயது அது. ஆமாம்... அன்று நான் நளினியைப் போலவேதான் இருந்தேன்- தோற்றத்திலும்... என் தாய் அதை எப்போதும் என்னிடம் கூறிக் கொண்டிருப்பாள். அப்போதைய சிந்தனைகளும் ஆசைகளும்! வேகமாக எழுந்து, முதல் தடவையாக தன் தாயின் அடி வயிற்றைத் தேடும் கன்றுக் குட்டியைப்போல அது மிகவும் சாதாரணமானதாகவும் கள்ளங் கபடமற்றதாகவும் இருக்கும்! நளினி அழகான அந்த வசந்தத்தின் அடிவாரத்தில் இப்போது இருக்கிறாள். அவளுடைய பாதத்திற்குக் கீழே ஸ்ப்ரிங் குஷன் இருக்கிறது. ஒரு இடத்திலும் அவளால் நிலையாக நின்று கொண்டிருக்க முடியாது. அவள் எதையெதையோ தெரிந்து கொள்ள நினைக்கிறாள்! என் மேஜை மீது இருக்கும் சந்திரனின் படத்தைப் பற்றி அவள் இதற்குள் ஓராயிரம் தடவையாவது விசாரித்திருப்பாள். நாங்கள் அறிமுகமான விதம், காலம், அவருடைய சிறப்பம்சங்கள், பேசக்கூடிய விஷயங்கள்... இப்படி எவ்வளவோ. இறுதியில் மனதில் வைத்துக் கொண்டிருக்காமல், அவள் கல்லூரியில் இருக்கும் தன் நண்பனைப் பற்றிச் சொன்னாள். அழகான இளைஞன். நேற்று அவளுடைய விருந்தாளியாக இங்கு வந்திருந்தான். நான் அந்தச் சமயத்தில் சந்திரன் முதல் தடவையாக இங்கு வந்த நாளைப் பற்றி நினைத்துப் பார்த்தேன். பையன் கொஞ்சம் கருப்பு நிறத்தில் இருந்தான். எதுவும் முழுமையடைந்திராத உடல் உறுப்புகள் எனினும் ஆச்சரியம் என்றுதான் சொல்ல வேண்டும்! அதே அடக்கம், அதே புன்னகை, அதே பேச்சு! அண்ணனும் மாலினியும் இப்படித்தான் இருந்திருப்பார்களா? ராஜனும் அவருடைய சினேகிதியும்? எனக்கு எதுவும் புரியவில்லை. நான் என் செல்லம் நளினிக்கு நல்லது நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன்.
அதே வருடம் ஆறு மாதங்கள் கழித்து...
நளினியின் காதல் உறவு இப்போது மிகவும் வளர்ச்சியடைந்து விட்டிருந்தது. முழுமையான ஒரு இளைஞனாக அவள் பாலனைப் பார்த்தாள். அவனைப் பற்றிய நினைவுகளில் அவள் சந்தோஷம் கண்டாள். அவளுடைய கண்கள் இப்போது மேலும் பல மடங்கு அழகாக இருந்தன. அந்த நடவடிக்கைகளிலும் ஆச்சரியப்படம் வகையில் மாறுதல்கள் உண்டாயின. இதுநாள் வரையில் எதுவுமே தெரியாமலிருந்த ஒரு அப்பாவிப் பெண்ணாக இருந்த அவள், இப்போது ஒரு துணிச்சல் குணம் கொண்ட பெண்ணாக மாறிவிட்டிருந்தாள். அவள் சிந்திக்கவும் வாழவும் கற்றுக் கொண்டிருந்தாள். அவளுடைய ஒவ்வொரு வார்த்தைக்கும் செயலுக்கும் இப்போது நோக்கம் இருந்தது. இவையெல்லாம் எப்படி நடக்கிறது? ஒரு இளைஞனின் நட்பும், அவனைப் பற்றிய நினைவுகளும் ஒரு இளம்பெண்ணின் வாழ்க்கைக்கு இந்த அளவிற்கு அவசியமாகத் தேவைப்படும் உயிர்ப் பொருள்களா? நான் நினைத்துப் பார்க்கிறேன். ஹா! அவை ஒவ்வொன்றும் எனக்கு எவ்வளவு தெளிவாகப் புரிகிறது! அதைத் தாண்டி அந்த மிகப்பெரிய சக்தியின் ஓட்டத்தில் வாடிக் கருகிப் போகும் வாழ்க்கையைப் பற்றியும்!
இருபத்தைந்து வருடங்கள் கழித்து...
நளினிதான் மிகவும் பாசம் வைத்திருந்த அத்தையின் மரணச் செய்தியுடன் இன்று என்னிடம் வந்தாள். அந்தச் சம்பவத்தை என்னால் நீண்ட நேரத்திற்கு நம்பவே முடியவில்லை. பாவம் ராஜன்! தாய் இல்லாத மூன்று குழந்தைகளையும் வைத்துக் கொண்டு அவர் என்ன செய்வார்? வீட்டுக் காரியங்களையெல்லாம் தன் மனைவியிடம் ஒப்படைத்து விட்டு, எந்தவிதக் கவலையும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டிருந்த அவர் இனி எப்படி வாழ்க்கையை நடத்துவார்? அந்தக் குடும்பத்தின் அடித்தளமே ஆட்டம் கண்டிருக்கிறது. அந்த இல்லத்தரசி இல்லாதஅந்த வீட்டைப் பற்றி சிந்தித்துப் பார்ப்பதற்கே முடியவில்லை. நளினி தான் மிகவும் அன்பு வைத்திருந்தஅந்த அத்தையை நினைத்துத் தேம்பித் தேம்பி அழுதாள். அவளுக்கு இனி மாமாவைப் பார்ப்பதற்கான மனத் தெம்பே இல்லை. எனினும், என்னிடம் பலமான வேதனையை உண்டாக்கியது அந்த எண்ணங்களா? இருக்கலாம். இல்லாவிட்டால் அப்படியே இருக்க வேண்டும் என்று நான் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன். இந்தச் சம்பவங்கள் அனைத்துடனும் தொடர்பு கொண்டு, ஏதாவது முன்பே முடிவெடுக்கப்பட்ட விஷயங்கள் இருக்குமோ? இருக்கும் என்று நம்ப என்னால் முடியவில்லை. அப்படி இருந்தால், அதற்குக் காரணம் யாராக இருக்கும்? அந்த மனைவியின் இடத்தில் வேறொரு பெண் இருந்திருந்தால்கூட, இந்தச் சம்பவம் நடந்திருக்குமா? அப்படியென்றால்... நான்... ஆமாம்... அப்படி நடந்திருந்தால், நான் சிறிதும் கவலைப்பட்டிருக்கவே மாட்டேன். ஹோ! நான் என்னவெல்லாம் சிந்திக்கிறேன்! இந்த எண்ணங்கள் எதுவும் என்னுடையவை அல்ல. நான் சாதாரணமாக நினைத்துப் பார்த்தேன். அவ்வளவுதான்! ராஜனும் இந்த நேரத்தில் அப்படி எதையாவது நினைத்திருப்பாரா? ச்சே...! அவர் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கும் வேதனைகளை உண்மையாகவே என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் சிறிதும் இரக்கமே இல்லாமல் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். எனினும், வாழ்ந்துவிட்டுக் கவலைப்படுவது வாழாமலே இருப்பதைவிட உயர்ந்ததாயிற்றே!
இருபத்தாறு வருடங்கள் கழித்து...
நளினியின் திருமணம் நடப்பதற்கு இன்னும் நான்கு நாட்கள்தான் இருக்கின்றன. ரவி அண்ணனும் குடும்பமும் வந்து சேர்ந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. மாலினி எவ்வளவு அருமையான ஒரு தாயாக இருக்கிறாள்! குழந்தைகளைக் குளிக்கச் செய்வதிலும், அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றுவதிலும் அவள் நன்கு பழக்கப்பட்டிருந்தாள். அவர்களுடன் சரி நிகராக உரையாடவும் விவாதிக்கவும், அவளுக்கு ஒரு சிறு குழந்தையைவிட மிகவும் எளிதான மன ஓட்டங்களே இருக்கின்றன என்பதைப் போலத் தோன்றும்.