வாழ மறந்த பெண் - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6460
பத்து வருடங்களுக்குப் பிறகு...
ஹா! நான் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்.இரண்டு வருடங்களுக்குப் பிறகு நான் பிழைத்துக் கொண்டேன். நான் அதைப்பற்றி எதுவும் இந்தக் குறிப்புகளில் எழுதாமலிருந்தது என்னை நானே ஏமாற்றிக் கொள்ளும் ஒரு செயலோ? இருக்கலாம். எனினும், இந்த முன்னேற்றம் அதை எழுதுவதற்கான தைரியத்தை எனக்குத் தருகிறது. ஆமாம்... என் மனதை... அதன் சரியான இடத்திற்குள் நுழைந்து கைக்குள்ளாக்கிய நாள்- அது இரண்டு வருடங்களுக்கு முன்பு... அண்ணனும் மாலினியும் அவர்களுடைய இரண்டு குழந்தைகளும் எங்களுடன் வந்து தங்குவதற்காக வந்தார்கள். என் தாய் இந்த அளவிற்கு மிகுந்த சந்தோஷத்துடன் இருந்த ஒரு காலத்தை நான் எப்போதும் நினைத்துப் பார்த்ததில்லை. அந்த நாட்களில் எங்களுடைய இல்லம் மீண்டும் உயிர்த்துடிப்புடன் நிறைந்திருந்தது. குழந்தைகள் அவர்களுடைய அன்னையைவிட அதிகமாக என்மீது அன்பு செலுத்தினார்கள். என் தாயை எடுத்துக் கொண்டால், இளைய குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு, வீட்டிற்குள் சுற்றிச் சுற்றி வலம் வந்து கொண்டிருப்பதே அவளுடைய வேலையாக இருந்தது. அந்தச் சமயத்தில் அவள் என்னைப் பார்த்து பெருமூச்சு விடுவது மட்டும் ஒருவித அமைதியற்ற நிலையை உண்டாக்காமல் இல்லை. எனினும், இரண்டு தாய்களையும் ஒரு பாட்டியையும் அந்தக் குழந்தைகள் ஒரே மாதிரி சந்தோஷம் கொள்ளச் செய்தார்கள். சிறு குழந்தைகள்தான் என்ன அருமையான படைப்புகள்! விரக்தியடைந்து போயிருக்கும் மனதில்கூட புத்துணர்ச்சியையும் வெளிச்சத்தையும் அவர்களால் உண்டாக்க முடிகிறது. கவலைகள் நிறைந்த இந்த உலகத்தில் சந்தோஷம், குழந்தைகள் வடிவத்தில் பிறவி எடுக்கிறது. சிறிது நாட்களுக்காகவாவது காலையில் கண் விழிப்பதிலும் பகல் நேரத்தை நகர்த்துவதிலும் ஒரு அர்த்தம் இருப்பதைப்போல் நான் உணர்ந்தேன். ஹோ! நான் எழுத நினைத்தது அதை இல்லையே!
நடு கோடைக்காலம் முடிவடையும் நிலையில் இருந்தது. முதலில் விழுந்த மழைத்துளிகள் பட்டு முல்லைக் காடுகள் மலர்களை அணியும் காலம். எட்டு வருடங்களுக்கு முன்னால் சந்திரன் என்னிடம் விடைபெற்றுப் புறப்பட்ட நாளைப்போல அந்தச் சுவர் முல்லை மொட்டுக்களால் நிறைந்து வெள்ளை நிறத்தில் காட்சியளித்தது. நான் எல்லா மாலை நேரங்களிலும் அந்தச் சுவருக்கு அடியில் சென்று நின்றிருப்பேன். அவர் அன்று சொன்னது எவ்வளவு உண்மையானது! உணர்ச்சிவசப்பட்டு பாதி மயக்க நிலையில் நின்றிருந்த நிமிடம்! எனினும் அந்த உதடுகளின் உரசலை இப்போது கூட நான் உணர்கிறேன். எல்லா ஆசைகளும் இல்லாமல் போன பிறகும், நான் வாழ்வதற்கு உதவியாக இருப்பது அதன் வெப்பம்தான். கடவுளே! அவருடன் நான் நம்பிக்கையுடன் இருப்பதற்கு நீதான் உதவியாக இருந்தாய்.
ஆமாம்... நான் அதைப்பற்றி எழுதத்தான் போகிறேன். அன்று சாயங்காலம் மாலினியின் அண்ணன் வந்தார். கடந்த பத்து வருடங்களில் வீட்டிற்கு அப்படி யாரெல்லாம் வந்திருக்கிறார்கள்? யாரையும் நான் கவனிக்கவில்லை. யாரிடமும் பேசியதுமில்லை. எனினும், என்ன காரணத்தாலோ நான் ராஜன் அங்கு வந்ததை வெறுக்கவில்லை. இரவில் என் தாயும் அண்ணனும் மாலினியும் ஒன்று சேர்ந்து இருந்தபோது, நானும் அவர்களுடன் இருந்தேன். நான் எதுவும் பேசவில்லை. ராஜன் எவ்வளவு அழகாகப் பேசினார்! அண்ணன் அந்தக் கூட்டத்தில் முற்றிலும் ஒளியே இல்லாமல் போனதை நான் கவனித்தேன். ராஜனோ மாலினியையும் அவரையும் தான் விரும்பியபடியெல்லாம் கிண்டல் பண்ணிக்கொண்டிருந்தார். இப்படியே இரண்டு மூன்று மணி நேரங்கள் சந்தோஷமாக போனதே தெரியவில்லை என்று கூறினால் போதுமல்லவா? பன்னிரண்டு மணிக்கு நான் என்அறைக்குத் திரும்பி வந்தபோது, என் இதயம் என்ன காரணத்தாலோ குற்ற உணர்வுடன் துடித்துக் கொண்டிருந்தது. நான் சந்திரனின் படத்திற்கு முன்னால் விழுந்து வணங்கி, எனக்கு சக்தி தரும்படி வேண்டிக் கொண்டேன்.
காலையில் கண் விழித்தபோது, நான் மீண்டும் என்னுடைய வேதனைக்கு மத்தியில் இருந்தேன். அந்தச் சிறு குழந்தைகளும் ராஜனும் ஒரு மங்கலான நிழலைப் போல என் நினைவுகளில் தங்கி நின்றார்கள். எனக்கு மிகவும் நிம்மதியாக இருப்பதைப் போல் தோன்றியது. அந்தக் கவலை நிறைந்த சூழல் என் மனதின் தப்பித்தலுக்கு எந்த அளவிற்கு அவசியமாக இருக்கிறது என்பதையே இப்போதுதான் நான் புரிந்து கொண்டிருக்கிறேன்.
குளித்து முடித்து வந்த நான் சந்திரனின் படத்திற்கு மலர் மாலையை அணிவித்தேன். அந்த நேரத்தில் சோகமயமான ஒரு மணிச் சத்தத்தைப் போல என் இதயத்தின் துடிப்புகள் மிகவும் பலமாக உலகமெங்கும் கேட்கிற மாதிரி ஒலிப்பதைபோல் நான் உணர்ந்தேன். நான் அந்த படத்தையே மீண்டும் ஒருமுறை கூர்ந்து பார்த்தேன். எனக்கு ஆறுதல் கூறுவதற்காக ஒரு வார்த்தையாவது கூற அந்த உதடுகள் மலர்கின்றனவோ? எட்டு நெடிய வருடங்கள் வெந்து வெந்து எரிந்து கொண்டிருக்கும்- ஒரு நம்பிக்கை கொண்டிருந்த பெண்ணிடம் கனிவுடன் ஒரு வார்த்தையாவது கூற என் சந்திரன் முயற்சிக்க மாட்டாரா? தியானத்திற்கு நிகரான இந்த வாழ்க்கையின் புனிதத் தன்மையை அவர் அறிந்திருப்பாரா?
என் கைகள் வணங்க, கன்னங்கள் வழியாக கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. பின்னால் ஒரு காலடிச் சத்தம் கேட்டு நான் சுய உணர்விற்கு வந்தேன். அது ராஜன்தான் என்பதைக் கண்டுபிடிக்க எனக்கொன்றும் சிரமமாக இல்லை. நான் எழுந்து அங்கேயே நின்றிருந்தேன்.
"பாமா, நீ எவ்வளவு காலம் இப்படியே இருக்க நினைக்கிறே? உனக்கு ஒரு தடவையாவது வாழணும்னு தோணலையா?"
எனக்கு கடுமையாக வெறுப்பு தோன்றியது. என் மனம் ரசித்துக் கொண்டிருந்த அந்த இனிமையான சோகப் பாடலை அவர் எதற்காகத் தடை செய்ய வேண்டும்?
"இந்த பிரார்த்தனைகளுக்கு நான் ஒரு தடையாக இருக்கிறேன் என்பதை நினைத்து நான் வருத்தப்படுகிறேன். இருந்தாலும், இது தேவையே இல்லை. மனநோய் என்றுதான் நான் நினைக்கிறேன். என் எல்லா சக்திகளையும் பயன்படுத்தி நான் அதை மனம் திறந்த கூறுகிறேன். முடியுமென்றால் உன்னைக் காப்பாற்ற நான் விரும்புகிறேன்."
நான் அதே வெறுப்புடன் அவருடைய முகத்தைப் பார்த்தேன். என் கண்கள் சிறிது நேரம் எந்தவித அசைவும் இல்லாமல் அவரின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தன. அந்த முகம் அன்பும் இரக்கமும் நிறைந்ததாக இருந்தது. அவை அனைத்தும் எனக்கு கட்டாயம் தேவைப்படக்கூடியவை என்றும்; ஒரு நோயாளியிடம் மருந்து சகிதமாக வரும் நர்ஸைப்போல அவர் தேடி வருவது எனக்கு கட்டாயம் தேவைப்படுகிற ஒன்று என்றும் என் இதயம் என்னிடம் கூறியது. ஆனால் என்னால் எதுவும் பேச முடியவில்லை. நான் பார்வையை அங்கிருந்து நீக்கி, எதுவும் பேசாமல் நின்றிருந்தேன்.