வாழ மறந்த பெண் - Page 8
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6460
பதினைந்து வருடங்கள் கழித்து...
சந்திரனின் கலைப் படைப்புகளைக் கொண்டு நான் என்னுடைய எல்லா சுவர்களையும் அலங்கரித்திருக்கிறேன். அவருக்காகப் பாடிய அந்தப் பாடலை இசைத்தட்டு திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டிருக்கிறது. அந்தப் புகைப்படமும் என்னுடைய மேஜைமேல் இருக்கிறது. எனினும், ஹா! நான் கூறுகிறேன்- என் சந்திரன் என்னுடைய சிந்தனைகளில் நிற்கவில்லை. நான் பல வழிகளையும் பயன்படுத்தி அதற்காகப் பல வேளைகளிலும் முயன்று பார்க்கிறேன். நான் அவரை நினைத்து நினைத்து அழுது கிடந்த நாட்கள் எவ்வளவு இன்பமானவையாக இருந்தன! இன்று என்னால் அப்படி இருக்க முடியவில்லை. நான் எல்லாவற்றையும் மறந்து போகிறேன். எதனுடனும் எனக்கு எந்தவொரு பற்றும் இல்லை. மனப்பூர்வமாக குலுங்கிக் குலுங்கி அழுவதற்கு இனிமேல் என்னால் எந்தச் சமயத்திலும் முடியாத என்பதுதான் உண்மை. தேங்கி நிற்கும் ஒரு கவலை மட்டும் எப்போதும் எனக்குள் தங்கி நின்றிருக்கிறது. அது என்னுடைய வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே ஆகியிருக்க வேண்டும். அதிகாலை வேளையில் சூழல்களைச் சுறுசுறுப்பாக்கிக் கொண்டு சூரியனின் கதிர்கள் என்னுடைய சாளரத்தின் வழியாகக் கடந்து வரும் போதும், நிறைய காய்த்து தொங்கிக் கொண்டிருக்கும் மாமரத்தின் கிளைகளை வருடிக் கொண்டு உச்சிப் பொழுது வெயில் குறும்புத் தனங்களைக் காட்டுகிறபோதும், அந்த மரத்துப்போன உணர்ச்சியுடன் என் கண்களின் வழியாக வெளிப்படுவது உண்டு.
அந்தக் கதிர்கள் வாழ்க்கைக்குத் தேவையான வெப்பத்தைத் தருகின்றன. அந்தக் கனிகளில் அடுத்த தலைமுறை ஒளிந்திருக்கிறது. உலகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அது என்னை மறந்துவிட்டது. நான் நம்பிக்கையுடன் வழிபட்ட அதே உலகம்! என்னுடைய வாழ்வின் ஆதாரங்கள் மதிக்கப்பட்டபோது எனக்கு மனதில் சந்தோஷம் இருந்தது. இன்று நான் கைவிடப்பட்டவள். ஹா! நான் என்மீதே நம்பிக்கை கொண்டவளாக இருந்திருக்கிறேனா?
இருபத்து இரண்டு வருடங்கள் கழித்து...
என் தாய் எங்கள் அனைவரையும் விட்டு நிரந்தரமாகப் பிரிந்து சென்று ஒரு மாதம் ஆகிவிட்டது. முன்பெல்லாம் அந்த நிமிடங்களை நேருக்கு நேர் சந்திப்பதைப் பற்றி நினைத்து நான் எந்த அளவிற்கு பயந்திருக்கிறேன்! துக்க அனுபவங்கள் உண்மையாகவே அவற்றைப் பற்றி எதிர்பார்த்துக் கொண்டிருந்ததைவிட, மிகவும் எளிதானவையாகவே இருக்கின்றன. இல்லாவிட்டால் அன்றே நொறுங்கிப் போயிருக்க வேண்டிய நான் எப்படி இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்! நான் வாழ்கிறேன் என்பதல்ல... பழைய மாதிரியேதான்... ஆமாம்... அதுதான் உண்மை. எல்லாவற்றையும் வெறித்தனமாக அன்பு செலுத்திய அவருடைய- மங்கலாகத் தோன்றினாலும் பிரகாசமான முகம் அவ்வப்போது நினைவுகளில் வருவது உண்டு என்பதை நீக்கிவிட்டுப் பார்த்தால், அந்த ஆழமான உறவை வெளிப்படுத்தக்கூடிய விதத்தில் எஞ்சி இருப்பது என்ன? ச்சே...! நான் இந்த அளவிற்கு நன்றி இல்லாதவளாக ஆகிவிட்டேனா என்ன? என் அன்பிற்குரிய அன்னைக்காக இரண்டு துளி கண்ணீர் கூடவா என்னிடம் இல்லாமல் போய்விட்டது?
இல்லாவிட்டால் அந்த விஷயத்தில் ஒரு மாறுபட்ட பெண்ணாக ஏன் இருக்கிறேன்? நான் கவலையின் இனிமையான ஆனந்தத்தை சுவாசிக்கிறேன். அது எத்தனையோ வருடங்களாக இருந்து வரும் நிரந்தரமான தவத்தால் மட்டுமே தன்னகப்படுத்த வேண்டிய உன்னதமான உணர்வு என்பதுதான் உண்மை. ஹா! நான் அதைக் கற்றிருக்கவில்லையென்றால்...!
நளினி இப்போது என்னுடன்தான் இருக்கிறாள். அண்ணனின் ஐந்து குழந்தைகளில் இரண்டாவது குழந்தையான அவள்மீதுதான் என் தாய்க்கு மிகுந்த பாசம் இருந்தது. பாவம்! அவளுடைய கண்கள் இப்போதுகூட காயாமல் ஈரமாகவே இருக்கின்றன. எல்லா விஷயங்களும் இனிப்பாக இருக்க வேண்டிய இந்த பதினைந்தாவது வயதில் அவள் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருக்கிறாள். தன்னுடைய அண்ணனைப்போல எதிலும் அக்கறையே இல்லாமல் இருக்க அவளால் முடியவில்லை. அப்பிராணிச் சிறுமி! அவள் மன ஆறுதலுக்காக எப்போதும் தன்னுடைய சித்தியைத் தேடி வருகிறாள். கவலையைப் பற்றிய ரகசியம் அவளுக்குத் தெரியாது. என் தலையில் இருக்கும் வெள்ளை முடிகளை அவள் பிடுங்கி எறிய முயற்சிக்கிறாள். சித்தியான நான் கிழவியாக ஆகிக் கொண்டிருக்கிறேனாம்... நாற்பத்து இரண்டாவது வயதில் ஒருத்தி எப்படிக் கிழவியாக ஆக முடியும்? சிறு பெண்! அந்த வெள்ளை முடியைப் பற்றிய ரகசியம் அவளுக்குத் தெரியாது. கவலைக்கு மத்தியிலும் அது சிரித்துக் கொண்டிருக்கிறது! வெண்மை பளிச்சிடும் புன்னகை! நளினிக்கு நல்ல கருப்பு நிறத்தில் தலைமுடி இருக்கிறது. எல்லா கருப்பு நிற முடியையும்போல, அது கவலையின் அடையாளம்தான். பல வருடங்களுக்கு முன்னால் அவளுக்கு இருப்பதைப்போல என்னுடைய தலைமுடிகள் கருப்பு நிறத்தில் இருந்தபோது, நான் எவ்வளவோ கவலையில் மூழ்கிக் கிடந்தேன்! அவை புன்னகைப்பதற்குப் பயிற்சி பெற நான் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டியதிருந்தது!
இருபத்து மூன்று வருடங்கள் கழித்து...
நான் ஒரு எழுத்தாளராக இருந்தால், கவலையைப் பற்றி எவ்வளவோ அருமையான நூலை என்னால் எழுதியிருக்க முடியும்! இல்லாவிட்டால் அதற்கு என்னைவிடத் தகுதி கொண்ட நபர் என்று யார் இருக்கிறார்கள்? நான் அதில் என்னவெல்லாம் எழுதுவேன்? சோகத்தைப் பற்றிய என் கருத்து என்ன? எதுவும் தெளிவாக இல்லை. இந்த ஏடுகளில் என் உணர்வுகளையும் சந்தோஷங்களையும் நான் எந்த அளவிற்கு எழுத முயற்சித்தேன்! எல்லாம் எவ்வளவோ முழுமையற்றவையாக இருக்கின்றன! இல்லாவிட்டால் உண்மையற்றவை. என் மனதைப் பிரதிபலிக்கிற மாதிரி ஒரு வரியையாவது எழுத எனக்கு முடிந்திருந்தால்...? ஒருவேளை அது யாருக்கும் முடியாத ஒன்றாக இருக்கலாம். மனதின் நிறைந்தனவாகவும் இருக்கின்றன. பளிங்குத் தரையில் விழுந்த பாதரச உருண்டையைப் போல அது நெருங்கும் இடங்களில் இருந்தெல்லாம் வழுக்கி வழுக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. அதற்குக் குறிப்பிட்டுக் கூறும்படியான லட்சியமோ சீரான தன்மையோ கிடையாது. நிலைமை அப்படி இருக்கும்போது பலமற்ற என் பிடியில் அவை எப்படி அடங்கும்? எல்லவாற்றுக்கும் மேலாக, மாலை நேர ஆகாயத்தில் வெள்ளை நிற மேகங்களுக்க மத்தியில், கருப்புநிறப் புள்ளிகளைப்போல மங்கலாகவும் தெளிவாகவும் பறந்து போய்க் கொண்டிருக்கும். வானம்பாடிகளுடன் அவை தெளிவில்லாமல் இருக்கின்றன. கனவில் இருந்து அவற்றை வேறுபடுத்திப் பார்ப்பது என்பது சிரமமான ஒன்று. அதாவது அவற்றைத் தேடிப்பிடிததுக் குறிப்பிட்டால், அது எந்த அளவிற்கு பயங்கரமான ஒன்றாக இருக்கும்! பண்பாட்டில் என்றல்ல- மனித இனத்தின் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் யாரையும் அதிர்ச்சியடையச் செய்யும் என்னென்ன எண்ணங்கள்- அபூர்வமாக என்றாலும் கூட- நம்முடைய மன வெளியில் பதிந்து மறையாமல் இருக்கின்றன! ஒரு பெண் சிந்திப்பதற்கும் செயல்படுவதற்கும் பராம்பரியம் அனுமதித்திருக்கும் வழிமுறைகளிலிருந்து சிறிதளவு கூட இடது பக்கமோ வலது பக்கமோ விலகுவதற்கு எனக்கு தைரியம் இல்லை.