வாழ மறந்த பெண் - Page 3
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6460
நான் ஒருவிதக் குழப்பத்துடன் இங்குமங்குமாக நடந்து கொண்டிருந்தேன். இறுதியில் மெதுவாக வாசலுக்குச் சென்று கேட்டிற்கு அருகில் போய் நின்றேன். அங்கு சுவர்மீது படர்ந்திருந்த முல்லைக் கொடியிலிருந்து மெதுவாக நான் பூக்களைப் பறித்தேன்.
அவர் விடைபெற்றுக் கொண்டு வெளியே இறங்கியபோது, நான் அவரைப் பார்த்தேன். என் தாயும் அண்ணனும் வராந்தாவிலேயே நின்றுவிட்டார்கள். ஓட்டிற்கு மேலே படர்ந்திருந்த கொடிகளின் மறைவில், அவர்கள் என்னைப் பார்க்க முடியாது.
நான் அந்த மலர்களை அவருடைய கையில் கொடுத்தேன். தொடர்ந்து உணர்ச்சிவசப்பட்டு பாதி மயக்க நிலையில் சொன்னேன்:
"இதை வச்சுக்கோங்க. ஒரு வாரம் நாம பார்க்க முடியாது. அது மட்டும் உண்மை."
அவர் அதை வாங்கி, சிறிது முகர்ந்து பார்த்துவிட்டு என் கைகளை இறுகப் பற்றினார். அப்போது என் உடலெங்கும் முல்லை மொட்டுகள் மலர்வதைப் போல் நான் உணர்ந்தேன். அந்தக் கைகள் என்னை அவருடன் நெருங்கச் செய்தன. அந்த உதடுகள் பலமாக என் உதடுகளில் பதிந்தன. தொடர்ந்து அவர் சொன்னார்:
"இது மறையாது. நான் திரும்பி வரும் வரையில் இது இருக்கும் என்பது மட்டும் உண்மை."
அவர் கேட்டைக் கடந்து போனார். அந்த இன்பத்தில் மூழ்கிப் போய் நான் எவ்வளவு நேரம் அங்கேயே நின்றிருந்தேன் என்பது எனக்கே தெரியாது.
ஆறு நாட்கள் கழித்து...
அவர் இன்று திரும்பி வரவேண்டும். நிமிடங்களுக்கும் மணிகளுக்கும் முக்கியத்துவம் அதிகம் உண்டாகியிருப்பதைப் போல் தோன்றியது. நான் இந்த வாரம் முழுமையான மனக் குழப்பங்களில் மூழ்கிவிட்டேன். அவரிடம் எந்த மாதிரியான சந்தேகங்களையெல்லாம் கேட்க வேண்டிய இருக்கிறது! என்னுடைய அறிவு மண்டலம் மிகவும் சுருங்கிப் போய் விட்டதைப் போல் நான் உணர்ந்தேன். எது எப்படி இருந்தாலும் இந்தக் கடலை நான் இன்று நீந்திக் கடக்கத்தானே போகிறேன்! அவர் வந்த பிறகு, நான் என்னென்ன புகார்களையெல்லாம் கூற வேண்டியதிருக்கிறது! முதலில் என்ன செய்ய வேண்டும்? சிறிது நேரம் பேசாமல் இருக்க வேண்டும். அப்போது அவர் வந்து என்னுடைய முகத்தைப் பிடித்து உயர்த்தி அன்புடன் காரணம் என்ன என்று கேட்பார். ஆனால், என்னால் அது முடியும் என்று தெரியவில்லை. சந்திரன் கேட்டைத் திறந்து வரும் போதே நான் அவரைத் தேடி ஓடிவிடுவேன் என்பது தான் உண்மை. எது எப்படியோ இனியொருமுறை இந்த வேதனையை நான் தாங்கிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லையே! அதிக பட்சம் போனால், இன்று மட்டும்தான்.
இந்த நாட்கள் ஒரு வகையில் பார்க்கப் போனால் எனக்கு மிகவும் பயனுள்ளவையாகவே இருந்தன. எங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்வதற்கு முயன்றது இப்போது மட்டுமே. நான் உண்மையாகவே ஆச்சரியப்படுகிறேன். காதல் விஷயத்தில் பொதுவாகவே மனிதர்களுக்குப் பொறாமைதான் இருக்கும் என்றுதான் நான் நினைத்திருந்தேன். இரண்டு வருடங்களுக்கு முன்னால் நானும் சந்திரனும் ஒன்றாகப் பூங்காவில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தபோதெல்லாம், என் மனதில் இந்தக் கருத்து உறுதியாகிக் கொண்டே வந்தது. ஆனால், அப்படி நான் நினைத்தது எவ்வளவு முட்டாள்தனமானது என்பதை இப்போது உணர்கிறேன். மனிதர்கள் எவ்வளவோ நல்லவர்களாக இருக்கிறார்கள்! எங்களுடைய திருமண விஷயம் இப்போது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகிவிட்டது. அதைப் பற்றித் தெரிந்து கொண்டவர்கள் எல்லோரும் மிகவும் சந்தோஷப்பட்டார்கள். அந்தக் கலை நிகழ்ச்சி அதற்கு மிகவும் உதவியிருக்கிறது. இந்த உறவு சமூகத்திற்குத் தேவையான ஒரு விஷயம் என்றுகூட நண்பர்கள் கூறத் தொடங்கியிருந்தார்கள். புதிய நாடக உலகத்திற்கு நாங்கள் அவசியம் தேவையானவர்கள் என்று அவர்கள் நினைத்தார்கள். அந்த விஷயத்தை நானும் ஒத்துக் கொள்கிறேன். கடந்த இரண்டு மூன்று நிகழ்ச்சிகள் அந்த அளவிற்கு ஆச்சரியப்படும் வகையில் வெற்றிகரமானவையாக இருந்தன. அவருடைய பங்கு பெறலுக்கு வார்த்தையால் விவரிக்க முடியாத அளவிற்கு ஒரு மகத்துவம் இருந்தது. அதேபோல அந்தக் காதல் பற்றிய ஏக்கத்திற்கும்... ஹா! என்ன அற்புதமான நீண்ட நிமிடங்கள் அவை!
மீண்டும் நான்கு நாட்கள் கழித்து...
கவலைப்படக் கூடிய அந்த தந்திச் செய்தி இன்று கிடைத்தது. சந்திரனுக்குக் காய்ச்சலாம். அது அந்த அளவிற்குத் தீவிரமாக இருக்குமா? பொதுவாக நோய் எதுவும் இல்லாதவர்களுக்கு ஏதாவது வந்தால், அப்படித்தான் வரும். கடவுளே! என் மனதில் சிறிது கூட அமைதி உண்டாகவில்லை. கடவுளிடம் வேண்டிக் கொள்வதைத் தவிர, என்னால் வேறு என்ன செய்ய முடியும்? ரவி அண்ணன் அங்கு போய்ச் சேர்ந்து, ஒரு நல்ல செய்தியை எனக்குக் கூற வேண்டும். இன்று இரவு எந்த நேரமாக இருந்தாலும், அவர் அங்கு போய்ச் சேராமல் இருக்கமாட்டார். நாளை பத்து மணிக்கு முன்னால் என்னுடைய மனதிற்கு நிம்மதி கிடைக்கலாம். ஒரு இடத்தில் உட்கார்ந்திருக்கவோ ஒரு விஷயத்தைப் பற்றித் தொடர்ந்து சிந்திப்பதற்கோ என்னால் முடியவில்லை. நான் மனதிற்குள் வெந்து கொண்டிருக்கிறேன்.
எனினும், இந்த வேதனைகளுக்கு மத்தியிலும் எனக்கு ஒரு நிம்மதி இருக்கத்தான் செய்கிறது. அந்த தந்திச் செய்தி என்னை அதிர்ச்சியடைய வைத்த அதே நேரத்தில் ஒருவித நிம்மதியையும் தந்ததென்னவோ உண்மைதானே! அது ஒரு இரக்கமற்ற சிந்தனை என்று கூறலாமா? எனினும், உண்மையாகவே அது நடந்துவிட்டது. நான் இந்த நான்கு நாட்களும் அவரை சந்தேகப்பட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த சிந்தனைக்குக் காரணமே இல்லாமலிருந்தது. அவருக்குக் காய்ச்சல் வந்திருந்தாலும், அவர் நம்பிக்கைக்கு உரியர் தானே என்ற நினைப்பு என்னைச் சிறிதளவாவது நிம்மதி கொள்ளச் செய்யாமல் இல்லை. அவர் வராமல் போனதற்கு வேறு ஏதாவது காரணம் இருந்தால்...? ஹா! நான் ஒரு கடுமையான இதயத்தைக் கொண்ட பெண்ணாக ஆகிவிட்டேன். அவர் என்ன காரணமாக இருந்தாலும், வராமலே இருக்கட்டும். அந்த நோய் மட்டும் குணமானால் போதும்!
மேலும் ஆறு நாட்கள் கழித்து...
சற்று முன்பு ரவி அண்ணனின் கடிதம் கிடைத்தது. காய்ச்சல் வெளியே கூறும் அளவிற்குக் குறையவில்லையாம். சிறிது முன்னேற்றம் உண்டாகிற வரையில் அண்ணன் அங்கேயே தங்கியிருக்க எண்ணியிருக்கிறாராம். அப்படியென்றால், நிம்மதியை உண்டாக்குகிற நிமிடங்கள் மிகவும் அருகிலேயே இருக்கின்றன. அவர் அதை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார். அப்படி இல்லை என்றால்கூட ஏமாற்றத்திற்கு வழியில்லை. நான் அந்தக் கடிதத்தை எத்தனை தடவை திரும்பத் திரும்ப படித்தேன்! வேறு மாதிரியான எந்தக் குறிப்பும் அதில் இல்லை. எனினும், என் இதயம் காரணமே இல்லாமல் பயம் கொள்கிறது. எழுவதற்கான சக்தியே எனக்கு இல்லை. இனியும் இப்படியே எவ்வளவு நாட்கள் இருப்பது?