வாழ மறந்த பெண் - Page 10
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6460
புடவையில் ஒரு சிறிய சுருக்கம் விழுவதைக் கூட விரும்பாமல், ரோஜா மலரின் இதழ்களைப் போல் இருக்கும் தன் பாதங்களை வெல்வெட் செருப்புகளிலிருந்து எடுக்காமல் எப்போதும் அணிந்திருந்த தனக்குள் இருந்த ஒரு கல்லூரி மாணவியை இப்போது மாலினியால் அடையாளம் கண்டுபிடிக்கத்தான் முடியுமா, எவ்வளவோ வாழ்ந்துவிட்ட அவள் அவை எல்லாவற்றையும் மறந்துவிட்டாள். இன்னும் பத்தோ, இருபதோ வருடங்கள் கடந்துவிட்டால், நளினியும் இந்தக் கனவுகள் நிறைந்த காலங்களை முற்றிலும் மறக்கத்தான் போகிறாள். வாழக்கையின் கரையில் இருந்து கொண்டு, இவை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருப்பது என்பதுதான் எவ்வளவு சுவாரசியமான ஒரு விஷயமாக இருக்கிறது! இருபத்தாறு வருடங்களுக்கு முன்பு உண்டான அனுபவங்களுக்கு என்னால் எவ்வளவு சீக்கிரமாகத் திரும்பிச் செல்ல முடிகிறது! இன்று நளினியும் பாலனும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்துவிட்டுப் பிரிந்து சென்ற காட்சியைப் பார்த்தபோது நான் என்னவெல்லாம் சிந்தித்தேன்! நிறைய மலர் மொட்டுகள் இருந்த அந்த முல்லைச் செடிகளோடு சேர்ந்து நின்று கொண்டு, மாலை நேரத்தின் மங்கலான நிலவு வெளிச்சத்தில் அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். பிறகு... ஹா! அதே காட்சிதான். இன்னும்இருபதோ இருபத்தியிரண்டோ வருடங்கள் கழித்து அடுத்த தலைமுறை இதே செயலைத் திரும்பச் செய்வதை என்னால் தெளிவாகப் பார்க்க முடிகிறது. ஹா! எவ்வளவு வேகமாக வருடங்கள் கடந்தோடுகின்றன! பாவம் நளினி! ஒரு தாயாக ஆவதைப் பற்றியும் பிறகு மகளுடைய திருமணத்தைப் பற்றியும் இப்போது அவளால் நினைத்துப் பார்க்க முடியுமா? எதையும் நினைப்பதற்கு முன்பே, அவை அனைத்தும் அவளுடைய தலைமீது வந்து விழுந்துவிடும். திருமணத்திலிருந்து அதற்கான தூரம் எவ்வளவோ குறைவுதான்.
அடுத்த நாள்
திருமணத்திற்கான ஏற்பாடுகள் 'மளமள'வென்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. என்னைச் சுற்றிலும் வாழ்க்கை இரைச்சலிட்டு ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த அலையடிகளில் இருந்து முற்றிலும் ஒதுங்கி இருக்க என்னால் முடியவில்லை. இதயத்தின் அடித்தட்டில் இனம்புரியாத இனிய ஆனந்தம் தாண்டவமாடியது. என்னைச் சுற்றி துடித்துக் கொண்டிருந்த பிரகாச வெளிப்பாடுகள் முழுமையாக என்னை ஆக்கிரமித்து விட்டிருப்பதை என்னால் உணர முடிந்தது. இன்று வானொலியில் பாடியபோது (உங்களுக்கு ஆச்சரியம் உண்டாகலாம்) எனக்கு அது முற்றிலும் புரிந்துவிட்டது. நான் என்னுடைய குரலைத்தான் கேட்கிறேனா என்று நானே ஆச்சரியப்பட ஆரம்பித்து விட்டேன். பத்தொன்பது வருடங்களுக்குப் பிறகு என் குரலை ஆயிரக்கணக்கான மக்கள் இன்று முதன்முறையாகக் கேட்டார்கள். என்னுடைய தலை முடியிலும் முகத்திலும் வெளியே தெரியுமாறு வந்து சேர்ந்திருக்கும் மாற்றங்கள் உண்மையாகவே என்னுடைய குரலை பாதிக்கவேயில்லை. நான் எதற்காக அவற்றைப் பிடித்து அழுத்தி வைத்து நாசம் பண்ணினேன்? இல்லாவிட்டால் இன்று அந்த இசைத் திருவிழாவின் ஆரம்ப நாளிலேயே நான் பாடி ஆக வேண்டும் என்று அவர்கள் ஏன் என்னைக் கட்டாயப்படுத்த வேண்டும்? ஆகாசவாணியில் இருப்பதிலேயே மிகவும் அதிகமாக திரும்பத் திரும்ப ஒலித்திருக்கும் அந்த இசைத்தட்டு என்னை அவர்களுடைய இசை ரசிகர்களுடன் அந்த அளவிற்கு நெருங்கச் செய்திருக்க வேண்டும். ஒரு பலவீனமான நிமிடத்தில் நான் அதற்கு சம்மதிக்கவும் செய்தேன். அதன் விளைவு என்னவாக இருக்கும்? என்னுடைய ஆழமான தவத்தையும், வாழ்க்கையின் புனிதத்தையும் அது கேள்வி கேட்டுவிடுமோ என்று நான் பயப்படாமல் இல்லை. எனினும், ஒரு வயதான பெண்ணுக்கு இருக்க வேண்டிய மன தைரியத்தை வயதுக்கு வந்திருக்கும் நளினி எனக்குத் தருகிறாள். நேரடியாக இசை ரசிகர்களைச் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லாத ஒரு உறவாயிற்றே இது!
அடுத்த நாள்
இன்று காலையில் ராஜனும் குழந்தைகளும் வந்தார்கள். அவர் எந்த அளவிற்கு மாறியிருக்கிறார்! முதுமையின் எல்லா அடையாளங்களும் அந்த முகத்தில் தெளிவாகப் பதிந்திருக்கின்றன. பழைய விஷயங்களைப் பற்றி நான் ஞாபகப்படுத்தினாலும், ராஜனின் நடவடிக்கைகளில் அவற்றையெல்லாம் அவர் மறந்துவிட்டதைப் போலத் தோன்றியது. அதை மீண்டும் நினைவிற்குக் கொண்டு வர வேண்டிய அவசியம் எதுவும் இருப்பதாகத் தோன்றாததால், நானும் அதே மாதிரி இருப்பதைப் போல் காட்டிக் கொண்டேன்.
ராஜனின் மூத்த மகள் மல்லிகாவிற்குப் பன்னிரண்டு வயது நடக்கிறது. இளைய மகள் லதாவிற்கு மூன்று வயது. சுமா வயதில் அவர்களுக்கு நடுவில் இருக்க வேண்டும். மல்லிகா எப்போதும் நளினியின் அறையிலேயே இருந்தாள். லதா தன் தந்தையை விட்டுப் பிரிவதே இல்லை. ஏதாவது நடக்க முடியாத விஷயத்திற்காக அவள் ராஜனைப் பாடாய்ப்படுத்திக் கொண்டிருப்பாள். இல்லாவிட்டால் அழுது கொண்டிருப்பாள். ஆண் பிள்ளை என்று ராஜன் அழைக்கும் சுமா மிகுந்த சுறுசுறுப்புடன் எல்லா இடங்களிலும் ஓடித்திரிந்து கொண்டிருப்பாள். அந்த வகையில் இந்த சுற்றுப் புறங்கள் நிலவிக் கொண்டிருந்த அமைதியைக் கிழித்துக் கொண்டு படு அமர்க்களமாக இருந்தன. புதிய ஆட்கள்! புதிய ஆடை, அணிகலன்கள்! புதிய ஆசைகள்! நான் முடிந்த வரையில் என்னுடைய அறையிலேயே ஒதுங்கியிருந்தேன்.
நேற்று முதல் இங்கிருக்கும் ஒலிபரப்பு மையத்தில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் 'பாடல் திருவிழா' வானொலியின் அருகில் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருக்க எனக்கு உதவியது. இன்னும் பதின்மூன்று நாட்களுக்கு அந்த விழா நடக்கும். இந்தியாவில் இருக்கும் புகழ் பெற்ற பாடகர்களில் பலரும் இந்தப் பாடல் திருவிழாவில் பங்கு பெறுகிறார்கள் என்று கேள்விப்பட்டேன். ஒவ்வொரு நாளும் புதிய குரலுக்காக இசை ரசிகர்கள் காத்திருப்பார்கள். முதல்நாள் பாடிய எனக்கு இந்த விஷயத்தில் தனிப்பட்ட விருப்பம் இருப்பதற்குக் காரணம் இருக்கிறது. மற்றவர்கள் எப்படிப் பாடுகிறார்கள் என்பதை நான் தெரிந்து கொள்ள வேண்டுமே. நாளை கனகம் பாடப் போகிறாள். திரையுலகத்தில் மிகவும் புகழ்பெற்ற அந்தப் பின்னணிப் பாடகியின் பாடல்கள் மீது எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. ஆனால், அவளுக்கு என்னைப் பற்றி ஏதாவது தெரிந்திருக்கும் என்று நான் சிறிதும் நினைத்திருக்கவில்லை. அதனால் இன்று மதியம் அவளுடைய தந்தி கிடைத்தபோது நான் ஆச்சரியப்பட்டு விட்டேன். என்னுடைய பாடலை எத்தனையோ ஆயிரம் இசை ரசிகர்களைப் போல அவளையும் ஆனந்த வயப்படச் செய்திருக்கிறது. அறிமுகம் ஆகிக் கொள்வதற்கு விரும்புகிறாள் போலத் தெரிந்தது. நான் இதற்கெல்லாம் தகுதியானவள்தானா? எனக்கே அதை நம்புவதற்குக் கஷ்டமாக இருந்தது. எனினும், இந்தப் புதிய அறிமுகத்திற்காக என் இதயம் ஏங்கியது. ஹா! நான் மிகவும் அதிகமாகவே கட்டுப்பாட்டை விட்டு விலகிச் செல்கிறேன்.