வாழ மறந்த பெண் - Page 7
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6460
"பாமா, நான் சொல்றதை நீ கேக்குறியா? நீ எந்த உலகத்திற்காக இந்த தவத்தைச் செய்யிறே? என்னிடம் கூற மாட்டாயா? உன்னை மிகவும் விரும்பக்கூடிய என்னிடம்...!"
நான் என்ன பதில் கூறுவது என்பதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தபோது, என் உதடுகள் இந்த வார்த்தைகளைக் கூறின;
"நன்றி... ஆனால், நீங்க எனக்காக கஷ்டப்பட வேண்டிய அவசியமே இல்லை. என்னை நிம்மதியாக இருக்க விடுங்க."
நான் அப்போதும் அந்த முகத்தைப் பார்த்தேன். அதிலிருந்து எனக்கு என்ன புரிந்தது என்பதைப் பற்றி என்னால் உறுதியாகக் கூற முடியவில்லை. ஆனால், என்னுடைய வார்த்தைகள் மிகவும் கொடூரமானவையாக இருந்தன என்பதை நான் உணர்ந்தேன். அவருக்கே தெரியாமல் அந்த வார்த்தைகளை நான் அழிக்க முடிந்திருந்தால், நான் நிச்சயமாக அதைச் செய்திருப்பேன்.
"இப்படியெல்லாம் இருக்கும் என்று நான் நினைக்கல. சிரமம் கொடுத்ததற்கு என்னை மன்னிப்பேல்ல? நான் இதைப்பற்றி இனியொரு தடவை பேச மாட்டேன். சரியா?"
அவர் என்னுடைய பதிலை எதிர்பார்த்திருக்க வேண்டும்- ஒரு நிமிடம் அங்கேயே நின்றிருந்தார். நான் எதுவும் கூறவில்லை. கூறக்கூடாது என்று நினைத்தேனா என்ன? அது எனக்குத் தெரியாது. 'மன்னிக்கிற அளவுக்குத் தவறு எதுவும் செய்யலையே!' என்று கூறியிருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். எனினும் கூறவில்லை. அதற்குள் அவர் அறையை விட்டுப் போயிருந்தார்.
நான் என்னுடைய மனதைச் சமாதானப்படுத்துவதற்காக முயற்சித்தாலும், அந்த நடவடிக்கை மனப்பூர்வமானதாக இல்லை என்ற எண்ணம் என்னை துன்பத்திற்குள்ளாக்கியது. நான் இதே விஷயத்தை இன்னும் சற்று ஒழுங்காகக் கூறியிருக்கலாம். அவருடைய வார்த்தைகள் அந்த அளவிற்கு வெறுப்பைத் தரக்கூடியதா என்ன? ஒரு வகையில் பார்க்கப் போனால், என் சிந்தனைகளின் வெளிப்பாடாகத்தானே அவை இருந்தன? இல்லாவிட்டால் அவர் அதைக் கேட்டிருக்கக் கூடாதா? வேண்டாம்... வேண்டாம்... நான் அதை விரும்பவில்லை. ஆனால், நான் அதைக் கூறியிருக்கலாம். அதைக் கேட்டு அவர் சந்தோஷம் கூட அடைந்திருக்கலாம். ஒரு பெண் எதிர்பார்த்த மாதிரி நடப்பதைப் பார்த்து எந்த ஆண்தான் விரும்பாமல் இருப்பான்?
நான் மீண்டும் ராஜனைத் தேடினேன். ஆனால், அவர் வீட்டை விட்டுப் போய்விட்டிருந்தார்.
இரண்டு வாரங்கள் கழித்து எனக்கு ராஜனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் அவர் மன்னிப்பு கேட்டிருந்தார். நான் அவருக்கு எழுத வேண்டிய வார்த்தைகள்... என் பதில் கடிதத்தில் நான் அதை அப்படியே எழுதினேன். அந்தக் கடிதம் எங்களை இணைக்கக்கூடிய ஒரு சங்கிலியாக ஆனது. தொடர்ந்து சில நாட்கள் நாங்கள் ஒருவருக்கொருவர் கடிதம் எழுதிக் கொண்டிருந்தோம். ஓ... நான் என்னுடைய தவறுகளைத் தெளிவாக நினைத்துப் பார்க்கிறேன். இந்த 'திருமணமாகாத விதவை'யின் சபலங்கள் அவள்மீது நம்பிக்கை வைத்திருக்கும் யாருக்கும் தெரியாமலே முடிவுக்கு வரட்டும். இரண்டு வருடங்கள் நீடித்த அந்த மென்மையான உறவை நான் இறுதியாக முடிவுக்குக் கொண்டு வந்தேன்.
'எனக்கு சக்தி இல்லை. என்னை மறந்துடுங்க. எப்போதும் உங்களுடைய தங்கையாக இருக்க வேண்டுமென்பதுதான் என்னுடைய விருப்பம். இறுதியாக நான் தீர்மானித்த முடிவு இதுதான்.'
ஹா! அந்த வார்த்தைகளை எழுதியபோது, என் இதயம் இரண்டாகப் பிளப்பதைப்போல் நான் உணர்ந்தேன். ஆனால், என்னால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை. நான் என்னைக் காப்பாற்றிக் கொண்டேன். கடவுளே! இந்த தைரியம் எப்போதும் எனக்கு இருக்க வேண்டும். அடுத்த நிமிடம் நான் புன்னகைத்தேன். என் உணர்ச்சிகள் அப்போது எப்படி இருந்தன? நான் புனிதமானவள்! என் சந்திரனுடன் சேர்ந்து நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
எனினும், என் இதயத்தில் ஒரு மெல்லிய கவலை இருந்தது. அதுவும் இன்று இல்லாமல் போனது. தைரியசாலியான அந்த இளைஞர் இதோ திருமணம் செய்து கொண்டுவிட்டார். என்னுடைய அனுமதிக்காக அவர் காத்திருந்திருக்கிறார் அவ்வளவுதான்.
அடுத்த மாதம்
நான் என்னுடைய சிந்தனைகளை பலமான தவச் செயல்கள் மூலம் புனிதப்படுத்துகிறேன். ஹா! இவை எவ்வளவு அருமையான நாட்கள்! நான் என்னுடைய சந்திரனைத் திரும்பவும் அடைந்திருக்கிறேன். ராஜனிடமிருந்து அவரை வேறுபடுத்திப் பார்க்க என்னுடைய மனம் எவ்வளவோ பாடுபட்டிருக்கிறது! எல்லாம் கடந்து போன கனவுகள்... இன்று அங்கே சந்திரன் மட்டுமே இருக்கிறார். என்னை நம்புகிற- நான் நம்பும் சந்திரன் மட்டும். நாங்கள் இப்போதும் எப்போதும் சேர்ந்தே இருக்கிறோம். எங்களுடைய இதயங்கள் ஒன்று சேர்ந்து பாடுகின்றன. என்ன இனிமையான பாடல்! என் கண்கள் பல வண்ணங்களைக் கொண்ட அழகான காட்சிகளைக் காணுகின்றன! நாக்கு இனிப்பான பொருட்களை ருசிக்கின்றன. அந்தத் தொடலால் உண்டாகும் வார்த்தையால் விவரிக்க முடியாத புத்துணர்ச்சி சிறிதுகூட மறையாமல் அப்படியே இருக்கும். கடவுளே! இந்த இனிமையான அனுபவங்களுக்காக என்னை நிரந்தரமாக விட்டுவிடு!
பன்னிரண்டு வருடங்கள் கழித்து...
என்னுடைய படகு கட்டுப்பாட்டை விட்டு விலகி கடலின் ஓட்டத்திற்கு எதிராக நீங்கிக் கொண்டிருக்கிறது. எனினும், என்ன கடுமையான வேலை! நீர் ஓட்டத்துடன் போராட வேண்டிய தேவை இல்லாமலிருந்தாலும், நான்மிகவும் சோர்வடைந்து விட்டேன். காற்று எனக்கு சாதகமாக இலலை. பலவற்றையும் என்னால் விளக்கிக் கூற சிரமமாக இருக்கிறது. சபலங்களைக் கடந்து கொண்டு அறிவு செயல்பட ஆரம்பித்துவிட்டதோ? நான் சிந்திக்கிறேன். எனக்கே விருப்பமில்லாமல் சிந்திக்கிறேன். எதன் தொடர்பான காரிய, காரண உறவையும் நான் தெரிந்துகொள்ள வேண்டும். வாழ்க்கை மீது நான் கொண்டிருக்கும் விருப்பம் என்னை இந்த அளவிற்கு எந்தச் சமயத்திலும் பாடாய்படுத்தியதில்லை. ஹா! அதை நான் கடந்து செல்கிறேன். என் அனைத்து பலங்களுடனும் நான் அதைச் செய்கிறேன். எனினும், எனக்கு அமைதி இல்லை.
சந்திரன் நிரந்தரமாக என்னைவிட்டுப் பிரிந்து போய்விட்டார். அது நடந்தது பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு. அவர் இனி உயிருடன் வரப்போவது இல்லை. நான் கனவுகளின் உலகத்தில் இருக்கிறேன். தேவைப்பட்டால், நான் கண் விழிக்கலாம். என் தாயின் கண்ணிரைத் துடைப்பதற்கும், உயிரற்ற இந்த இல்லத்தை வாழ்வின் புத்துணர்ச்சியுடன் இருக்கும்படி செய்வதற்கும் என்னால் முடியும். எல்லாவற்றையும் வெகு வேகமாகச் செய்ய வேண்டும். என்ன கொடுமையான தனிமை! என்னை ஈர்க்கக்கூடிய விஷயங்கள் சுற்றிலும் முழங்கிக் கொண்டிருக்கின்றன!