
அடுத்த நாள்
நான் ஒலிபரப்பு நிலையத்திலிருந்து திரும்பி வந்து இப்போது ஒரு மணி நேரம் கூட ஆகவில்லை. கனகம் எவ்வளவு இனிமையாகப் பாடினாள்! இது ஒரு புறம் இருக்க, அதைவிட எவ்வளவு அருமையாக இருந்தன. அவளுடைய உரையாடலும் நடத்தையும்! ஐம்பதை நெருங்கிய வயதைக் கொண்டிருக்கும் அவளுடைய குரல் இப்போது கூட ஒரு சிறுமியின் குரலைப்போல இனிமையாக இருக்கிறது. எவ்வளவோ அனுபவங்களை வாழ்க்கையில் பார்த்தாகிவிட்டது என்பதை வெளிப்படையாகக் கூறும் அந்த முகம் அழகானது என்று கூறுவதை விட கம்பீரமானது என்பதே சரியானது.
கனகத்தைப் பார்த்தவுடன் எனக்கு என்ன தோன்றியது? அது கூறுவதற்கு சிரமமானதே... அவளுக்கு அந்த அளவிற்கு வயது இருக்காது என்று தோன்றியிருக்கலாம். ஆனால், அந்த தோணல் ஒரு நிமிட நேரத்திற்குக் கூட நீடிக்கவில்லை. அதற்குள் எல்லாவற்றையும் மறக்கிற மாதிரி அவள் என்னை முழுமையாக ஈர்த்துவிட்டாள். கனகம் ஸ்டுடியோவை விட்டு வெளியே வந்தபோது, நான் வரவேற்பறையில் அவளுக்காகக் காத்திருக்கிறேன் என்ற விஷயம் தெரிந்து, அவள் நான் இருக்கும் இடத்திற்கு வந்து என்னுடன் பேசத் தொடங்கினாள்.
"பாமா, உங்களைப் பற்றி எனக்கு எவ்வளவோ முன்பிருந்தே தெரியும். உங்களுடைய ஒரேயொரு பாடல் என் மனதுடன் உங்களை அந்த அளவிற்கு நெருக்கமாக்கி விட்டிருந்தது."
அதைக் கூறும்போது அவள் என்னையே கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போல எனக்குத் தோன்றியது. தொடர்ந்து என்னுடைய கைகளைப் பற்றி தன் மடியில் வைத்துக் கொண்டு சொன்னாள்:
"நாம அறிமுகமாகிக் கொள்ள என்றில்லாமல் இருந்திருந்தால், நான் நிச்சயமாக இன்னைக்கு வந்திருக்க மாட்டேன். என்னுடைய மகன் இரண்டு வருடங்களுக்குப் பிறகு கல்கத்தாவில் இருந்து நாளைக்குத் திரும்பி வர்றான். ஒரு தாய்க்கு - அதுவும் ஒரே ஒரு மகன் மட்டுமே இருக்கும் அன்னைக்கு- அப்படிப்பட்ட ஒரு நாளன்று வீட்டில் இல்லாமல் இருப்பது என்பது எவ்வளவு கஷ்டமான ஒரு விஷயம் என்பதை நினைத்துப் பாருங்களேன்! எனினும், நான் இங்கே வந்துட்டேன். சென்னையை விட்டு நான் ஒரு வாரம் வெளியே இருக்கணும்னு நினைக்கிறேன். அதனால் தந்தி அடிச்ச உடனே இங்கே புறப்பட்டு வந்துட்டேன்."
ஸ்டேஷனுக்கு வெளியே இருந்த பூந்தோட்டத்தில் அமர்ந்து, நாங்கள் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். கனகம் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதைவிட என்னுடன் அறிமுகமாகிக் கொள்வதில்தான் மிகவும் ஆர்வமாக இருந்தாள். தன்னுடைய கணவர் ஏற்கெனவே மரணத்தைத் தழுவி விட்டார் என்பதும்; மகன் இரண்டு வருடங்களாக கல்கத்தாவில் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும் ஒரு டாக்டர் என்பதும் மட்டுமே அவளைப் பற்றி நான் தெரிந்து கொண்ட விஷயங்களாக இருந்தன. அதற்கு மேல் கேட்டபோதெல்லாம் சமாதானமாக அவள் இப்படிக் கூறினாள்:
"நான் ஒரு வாரத்திற்கும் மேலாக இங்கேதானே இருக்கப் போறேன்! நாம மேலும் அதிகமாக ஒருவரைப் பற்றி ஒருவர் தெரிந்து கொள்ளலாம்."
தனிப்பட்ட விஷயங்களைப் பற்றி ஒருவரோடொருவர் உரையாடிக் கொள்வதைவிட, பொதுவான விஷயங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதில்தான் கனகத்திற்கு ஆர்வம் அதிகமாக இருந்தது. முதலில் அதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே, அப்படிப்பட்ட விஷயங்களையே அவள் பேசினாள். அவை எல்லாமே ஆர்வத்தைத் தூண்டக்கூடியவையாக இருந்தன.
எனினும், என்னுடைய தனிமை நிறைந்த வாழ்க்கையைப் பார்த்து அவளுக்கு அச்சரியம் உண்டானது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. ஒரு மனிதருடன் உண்டான காதலுக்காக ஒரு வாழும் காலம் முழுவதையும் அவரையே மனதில் நினைத்துக் கொண்டு வாழ்வது என்பது...! அது ஒரு புதிய விஷயமாக கனத்திற்குத் தோன்றியிருக்க வேண்டும். அவள் ஒரு டாக்டரின் கூர்மையுடன் அந்த விஷயத்தைப் பற்றி என்னிடம் பேசினாள். எங்களுடைய உறவு காதல் என்பதைத் தாண்டிச் செல்லவில்லை என்பதைத் தெரிந்து கொண்டபோது, கனகம் சிறிது நேரம் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கிவிட்டாள். நான் அவளுடைய முகத்தில் தெரிந்த உணர்ச்சி வேறுபாடுகளை கவனித்தேன். என்னுடைய மனம் அப்போது பதைபதைப்பும் பெருமையும் அடைந்தது. எந்த ஒரு பெண்ணுக்கும் பொறாமை உண்டாகச் செய்யும் அந்தக் காதல் தவத்தைப் பற்றி அவள் என்ன நினைப்பாள்? ஆனால், அவள் நான் சந்தோஷமடையும்படி எதுவும் சொல்லவில்லை. படிப்படியாக அந்தக் கண்களில் கவலையும் கேலியும் கலந்திருப்பதைப் போல எனக்குத் தோன்றியது.
"சகோதரி, இதே நிலையில் பத்து அல்லது இருபது வருடங்களுக்குப் பிறகு வாழ்க்கை முடிந்து விடுகிறதுன்னு வச்சுக்கோங்க. உங்களுக்கு அதில் திருப்திதானா?"
அவள் கேட்டாள். அதற்கு ஒரே வார்த்தையில் என்ன பதில் கூற முடியும்? நான் எந்த பதிலையும் கூறவில்லை.
"சாதாரணமாக நடப்பதைப் போல வாழ்க்கை வேறொரு வழியை நோக்கித் திரும்பிப்போய், அதன் எல்லா சுகங்களையும் கவலைகளையும் அனுபவிப்பதைவிட அதிகமான திருப்தி இந்த வாழ்க்கையில் இருக்கிறதா என்றுதான் நான் கேட்கிறேன். லாபங்களையும் இழப்புகளையும் இறுதியில் கணக்கு கூட்டிப் பார்ப்பதுதானே நல்லது என்று நினைத்து நான் முன்னால் நடந்து வந்துட்டேன். அவ்வளவுதான்."
கேள்வி எனக்கு மிகவும் தெளிவாகப் புரிந்தது. அது மட்டுமல்ல- என்னைச் சுற்றிலும் சம்பவங்களை நடக்க ஆரம்பித்த இந்தச் சிலநாட்களுக்கு முன்னால் நான் சிறிதும் நினைத்துப் பார்த்திராத ஒரு விஷயம் இது என்றும் கூறுவதற்கில்லை. எனினும், என்னால் எந்த பதிலையும் கூற முடியவில்லை. இந்த எண்ணங்களில் இருப்பதைப் போல என்னுடன் உண்மையாக இருக்க அப்போது முடியவில்லை. பிறகு... சரியான ஒரு முடிவும் என்னிடம் இல்லாமல் இருந்தது. ஆழமான உணர்ச்சிகளுடன் சந்திரன் என் மனதில் நிற்காமல் போய் எவ்வளவோ காலம் கடந்துவிட்டது! வெறும் நினைவுகள் மட்டும்... அவை அனைத்து என்னை கேலி செய்து, குற்றம் சுமத்துகின்றன. எல்லாம் அப்படித்தான் நடந்தன என்பதற்கும் மேலாக என்ன கூறுவது? எனினும், அது ஒரு சரியான சமாதானமாக இருக்க முடியாது. எத்தனையோ பகல்களும் இரவுகளும் வேறு எந்த விஷயமும் என் இதயத்திற்குள் நுழைய இடமில்லாத அளவிற்குக் கடந்து போயிருக்கின்றன! நாட்கள் அல்ல.... மாதங்கள் அல்ல... வருடங்கள். ஒரே விஷயத்திற்கு மாறுபட்ட பக்கங்கள் இருக்கத்தானே செய்கின்றன! அந்தக் கேள்வியே ஒரு வகையில் பார்க்கப் போனால் இதயமே இல்லாத ஒன்றாக எனக்குத் தோன்றியது. என் மவுனத்தில் இருந்தே அதைத் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த நேரத்தில் என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டு கனகம் இப்படிக் கூறியிருக்க வேண்டிய தேவையே இல்லையே!
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook