வாழ மறந்த பெண்
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6461
முதல் நாள்
இன்று நான் கல்லூரியிலிருந்து வந்தபோது, அவர் என்னை எதிர்பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார். நானும் அதை ஏற்கனவே எதிர் பார்த்திருந்தேன். நேற்று நடந்த கலை நிகழ்ச்சிகளைப் பற்றி நாங்கள் எவ்வளவோ பேச வேண்டியதிருக்கிறதே! ஆடைகளை மாற்றி அணிந்து கொண்டு, நான் திரும்பி வந்தபோது என் தாய் எங்கள் இருவருக்கும் தேநீர் கொண்டு வந்து வைத்தாள்.
"எடுத்துக் கொடு. நான் சமையலறைக்குள் போறேன். இல்லாவிட்டால் அங்கே எதுவும் நடக்காது. பிறகு... கொஞ்சம் சூடு அதிகமாக இருக்கும். ஆற்றிக் கொடு."
நான் தேநீரை ஆற்றி அவரிடம் கொடுத்தேன். அதை ருசித்து அருந்தி விட்டு சந்திரன் சொன்னார்:
"அப்படின்னா, கலை நிகழ்ச்சிகளைப் பற்றி கல்லூரியில் கருத்து எப்படி இருக்கிறது? பாமா, நான் உங்களை எதிர்பார்த்துக் காத்திருந்தேன்."
"ஓ...! பெண்களின் கருத்துக்கு என்ன மதிப்பு இருக்கு? ஆண்களின் கருத்தை நான் தெரிந்து கொள்ளணும்."
"அங்கே எங்களுக்கு வேற வழியே இல்லை. உங்களின் பாடலும் நடிப்பும்தான் மனிதர்களை அவ்வளவு நேரம் அங்கே இருக்கும்படி கட்டிப் போட்டதுன்னு பொதுவா எல்லாரும் பேசிக்கிறாங்க. பிறகு... பெண்கள் எங்களைப் பற்றி ஏதாவது நல்ல வார்த்தைகள் கூறுவார்களா என்ற சந்தேகத்தையும் நீங்கதான் தீர்த்து வைக்க வேண்டுமென்று நினைக்கிறேன்."
சந்திரன் உற்றுப் பார்த்துக் கொண்டு சொன்னார். நான் என்னுடைய கோப்பையில் தேநீர் ஊற்றியவாறு- அதே கூர்மையான பார்வையை நானும் பார்த்தவாறு சொன்னேன்:
"இந்தக் கருத்து ஒரு கடன் தீர்ப்பதாக இருக்கணும். அந்தக் கண்காட்சியில் இருந்த ஓவியங்களைப் பற்றி நான் சொன்னதற்கு பதிலாகக் கூறுகிறீர்கள். அப்படித்தானே?
தேநீர் பாத்திரத்தைக் கீழே வைத்துவிட்டு நான் அவருடைய கண்களையே உற்றுப் பார்த்தேன். அப்போதும் அதே கூர்மையான பார்வைதான்.
"எது எப்படியோ இந்தப் பாராட்டை அப்படியே நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்."
"எதனால்? நான் உண்மையாகத்தான் சொன்னேன். கல்லூரியில் இருந்த கருத்தும் அதுதானே...?"
"கொஞ்சம் வித்தியாசம் இருந்தது..."
"என்ன?"
"உங்களுடன் நான் வந்த காட்சிகள் அனைத்தும் நன்றாக இருந்தன என்றார்கள். நான் பாடியது, நடனமாடியது எல்லாம் சந்திரனின் பிரகாசத்தில் ஒளிர்ந்தன என்றார்கள்."
"சரிதான்! கேட்குறதுக்கு ரொம்பவும் நல்லா இருக்கு. ஆனா, இதை நான் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லையே!"
"உங்கள் விருப்பம். ஆனால், அந்தக் குறும்புத்தனம் கொண்ட பெண்கள் இன்று முழுவதும் அதைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருப்பார்கள்."
"பிறகு நீங்க என்ன சொன்னீங்க பாமா?"
அவர் தேநீர் பாத்திரத்தை மேஜைமீது வைத்துவிட்டு நிமிர்ந்து கொண்டு கேட்டார். அப்போதும் அதே கூர்மையான பார்வைதான்.
"நான் என்ன சொல்றது? அந்த உண்மையை மறுக்கக்கூடிய சக்தி எனக்கு இல்லையே!"
அந்தச் சமயம் என் தாய் அங்கு வந்தாள். தொடர்ந்து இயல்பான அவசரத்துடன் சொன்னாள்:
"இங்கே பாரு பாமா. சந்திரன் இன்னைக்கு வீட்டுக்குப் போக போறாராம். இரண்டு வருடங்களாகவே எப்போதும் இப்படி பதிமூன்றாம் மணி ஆகிறபோதுதான் அந்த விஷயத்தைச் சொல்றது! அப்படி இருக்குறப்போதான் நானே நினைக்கிறேன்- இந்தக் கலைஞர்கள் எல்லாரும் இப்படித்தானா? எல்லாரும் அரைக் கிறுக்கர்கள் என்று ரவி சொல்றது சரிதான். இல்லாவிட்டால் இரவு வண்டியில் பயணம் செய்து, கொஞ்சம்கூட தூங்காம விழித்திருந்து வீணாக ஏன் சிரமப்பட வேண்டும்? எது எப்படி இருந்தாலும் சந்திரன் இன்னைக்கு நம்முடன் இருந்து சாப்பிடட்டும். நான் எல்லாம் தயார் பண்ணி வச்சிட்டேன்."
என் தாய் அதே அவசரத்துடன் காலியான தேநீர்ப் பாத்திரங்களை எடுத்துக் கொண்டு, நாங்கள் எதையும் கூறுவதற்கு முன்னால் அங்கிருந்து கிளம்பினாள்.
நாங்கள் அதற்குப் பிறகும் நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்தோம். நான் அப்போது என் அன்பிற்குரிய தாயைப் பற்றி நினைத்துப் பார்த்தேன். நாங்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற விஷயத்தில் வேறு யாரையும்விட, என் தாய்க்குத்தான் அதிக மகிழ்ச்சி. சாதாரணமாகப் பார்த்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமே இல்லை. எனினும், தன்னுடைய மகளைக் காதலிக்கக்கூடிய ஒரு இளைஞன் என்பதற்கு மேல் சந்திரனைப் பற்றி அதிகமாக எதுவும் அவளுக்குத் தெரியாது. அல்லது புகழ்பெற்ற ஒரு ஓவியரும் பாடகருமான அவர் ஒரு நல்ல மனிதர் என்பதையும் அவள் மனதில் நினைத்திருக்க வேண்டும். கடந்த இரண்டு வருடங்களாக அவர் இந்த நகரத்தில் மதிப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதையும் அவள் நினைத்திருக்க வேண்டும். ஒரு மருமகனைப் பற்றி அந்த அளவுக்குத் தெரிந்திருந்தால் போதுமா? பெண்கள் தாங்களே தேடிக்கொள்ளும் கணவர்களைப் பற்றி தாய் தந்தையர்க்கு பொதுவாக எதிர்ப்புதான் இருக்கும். அது அவர்களின் உரிமைமீது கையை வைக்கும் செயல் என்று அவர்கள் நினைப்பதே காரணம். இல்லாவிட்டால் அதுவரை இருந்த எல்லா உறவுகளையும் இணைத்திருக்கும் சங்கிலிகள் ஒரு பெண்ணைப் பொறுத்தவரையில் திருமணத்துடன் இல்லாமல் போய்விடுகின்றன என்ற உண்மையை அவர்கள் புரிந்து கொண்டிருப்பதுகூட அதற்குக் காரணமாக இருக்கலாம். அந்த நிமிடத்தில் அவர்கள் தங்களுடைய திருமணத்தைப் பற்றி நினைத்துப் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். தாங்கள் செய்ததையே தங்களிடம் செய்யப் போகிறார்கள் என்ற நினைப்பு அவர்களுக்கு வந்துவிடும். எனினும், என் தாய்க்கு அப்படிப்பட்ட எண்ணம் எதுவும் இல்லாமல் இருந்தது. அவள் சந்திரனை ஒரு துணை என்று தான் நினைத்தாள். ரவி அண்ணனும் அப்படித்தான். கிரிக்கெட் விளையாட்டில் மிகவும் ஆர்வமாக இருந்த அவர் பொறுப்புணர்வு கொண்ட ஒரு மனிதரைத் தன் குடும்பத்துடன் உறவு கொள்ளச் செய்வது குறித்து மிகுந்த மகிழ்ச்சியைக் கொண்டிருந்தார். அவர் சந்திரனின் இல்லத்தைச் சேர்ந்தவர்களுடன் கலந்து பேசி எங்களுடைய திருமணத்திற்கு அவர்களின் மழுமையான சம்மதத்தையும் ஆசீர்வாதத்தையும் வாங்கினார். சூழ்நிலைகளை இந்த அளவிற்கு உதவியாக இருக்கும் வணணம் ஆக்கியதற்காக நான் மனப்பூர்வமாக கடவுளுக்குத் திரும்பத் திரும்ப நன்றி கூறினேன்.
இனியும் அந்த நல்ல நிகழ்ச்சி நடப்பதற்கு நான்கு வாரங்கள் கூட இல்லை. எதிர்பார்ப்புகள் நிறைந்திருந்த அந்த நாட்களில் ஒரு வாரத்திற்குக்கூட சந்திரனைப் பிரிந்திருப்பது என்பது எனக்கு மிகவும் கவலை தரக்கூடிய ஒரு விஷயமாக இருந்தது. வீட்டில் அவர் பல ஏற்பாடுகளையும் செய்ய வேண்டியதிருக்கும். எனினும், அவ்வளவு நாட்களையும் கழிப்பது என்பது மிகவும் சிரமமான ஒரு விஷயமாகவே இருந்தது.
இரவு எட்டு மணி ஆனபோது, ரவி அண்ணன் வந்தார். நாங்கள் மூன்று பேரும் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்தினோம். என் தாய் ஒவ்வொன்றையும் சாப்பிடும்படி சந்திரனைக் கட்டாயப்படுத்தியவாறு அருகில் நின்றிருந்தாள்.