வாழ மறந்த பெண் - Page 5
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6460
இரண்டு மாதங்களுக்குப் பிறகு...
என்னுடைய உடல்நிலை தேறி வருவதாகத் தோன்றுகிறது. எழுந்து நடப்பதற்கும் படிகளில் ஏறுவதற்கும் எனக்கு சிரமமாக இல்லை. கல்லூரிக்குப் போகும்படி அண்ணன் கூறினாலும், நான் என்னுடைய படிப்பை நிரந்தரமாக நிறுத்திக் கொண்டு விட்டேன் என்பதுதான் உண்மை. மூன்று நான்கு மாதங்கள் கடுமையாக முயற்சி செய்தால், ஒரு பட்டம் கிடைக்கும். ஆனால், அது என் வாழ்க்கைக்கு எதுவும் தரப்போவது இல்லை. என் தாய்க்கு அது முழுமையாக புரிந்திருக்கிறது என்பது உண்மையிலேயே நிம்மதி தரக்கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது. அவள் என்னைக் கட்டாயப்படுத்துவாள் என்று நான் சந்தேகப்பட்டேன். ஹா! நான் என் தாய்க்கு எந்த அளவிற்கு கடமைப்பட்டிருக்கிறேன்!
சந்திரனுக்குப் பிறகு ஆறு மாதங்கள் கழித்து...
நேற்று தேர்வு முடிந்து, கல்லூரியை மூடினார்கள். தொடர்ந்து என் வீடு ஆடல்களும் பாடல்களும் நிறைந்த ஒரு இடமாக ஆனது. அவர்கள் படிப்பைப் பற்றியும் விடைத்தாளில் எழுதிய முட்டாள் தனமான விஷயங்களைப் பற்றியும் சிறிதுகூட நிறுத்தாமல் பேசிய போது, என் இயதத்தில் ஒரு புதிய உணர்வு உண்டாக ஆரம்பித்தது. கல்லூரியை விட்டதற்காக எனக்குள் ஒரு வருத்தம் இருக்கிறதோ? நான்அதைப்பற்றி ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. சிறிது நேரம் கடந்தபிறகு, என் கண்கள் கண்ணீரால்நிறைய, நான் தேம்பித் தேம்பி அழுதேன். ச்சே! எனக்கே வெட்கமாக இருந்தது. இளமை, வாழ்க்கையின் லட்சியம் ஆகியவை ஒளிர்ந்து கொண்டிருந்தபோது, நான் மட்டும் அழுது கொண்டிருந்தால்...! அடுத்த நிமிடம் நான் கண்களைத் துடைத்துவிட்டு, தோழிகளை நோக்கி புன்னகைத்தேன். தொடர்ந்து நாங்கள் நீண்ட நேரம் பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தாலும் அவர்களுடைய இதயத்தின் அடிப்பகுதி வரையில் அந்த அழுகை ஆழமாகச் சென்றிருக்கிறது என்பதை என்னால் உணர முடிந்தது.
சந்திரனுக்குப் பிறகு ஒரு வருடம் கழித்து...
என்னை நாடகத்திற்கும் பாட்டுக் கச்சேரிக்கும் இழுப்பதற்கான முயற்சியிலிருந்து ஆட்கள் விலகிச் சென்றிருந்தார்கள். குறிப்பிட்டுக் கூறும்படி எதுவும் நடக்காமல் காலம் நீங்கிக் கொண்டிருந்தது. நாட்கள் அனைத்தும் ஒரே மாதிரி கடந்து போய்க் கொண்டிருந்தன. என்னுடைய இதயத்தைப்போல வெப்பம் நிறைந்த கோடை காலமும், கண்களைப்போல ஈரமாக இருந்த மழைக் காலமும், சிந்தனைகளைப் போல மூடியிருந்த பனிக் காலமும் கடந்து போயின. நான் என் தாய், சகோதரன், தோழிகள் ஆகியோர் இருக்கும்போது கூட தனியாக இருப்பதைப் போலவே உணர்ந்தேன். கடந்து போன சம்பவங்களை நினைத்துப் பார்ப்பதையும்அவற்றை நினைத்துக் கவலைப்படுவதையும் நான் ஒரு கலையாகக் கற்றுக் கொண்டிருக்கிறேனோ? இந்த கடந்த ஒரு வருடம் எனக்கு எதைக் கற்றுத் தந்திருக்கிறது? எனக்கு எதுவும் புரியவில்லை. ஆனால், ஒரு விஷயம் மட்டும் உண்மை. என்னைப் பொறுத்தவரையில், அவர் ஒரு மிகப்பெரிய மனிதராக வளர்ந்து கொண்டிருந்தார். மக்களும் அதைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அவருடைய திறமைகளைப் பற்றி எழுதாத ஒரு பத்திரிகை கூட இல்லை. எங்களுடைய காதல் உறவைஅவர்கள் மிகவும் உயர்வுபடுத்தி வாழ்த்துகிறார்கள். சந்திரன் மூலமாக நான் இன்று மனிதர்களின் கவனத்தில் படுகிறேன். கடவுளே! அவரும் மக்களும் வைத்திருக்கும் நம்பிக்கையைக் காப்பாற்றுவதற்கான சக்தியை எனக்கு நீதான் தரவேண்டும்!
இரண்டு வருடங்கள் கழித்து...
இன்று சந்திரனின் இரண்டாவது வருட நினைவுநாள். இரண்டு பிரபல வார இதழ்களில் அவரைப் பற்றிய கட்டுரைகள் பிரசுரமாகி இருப்பதை நான் பார்த்தேன். ஒன்றில் சந்திரன் எண்ணெய் சாயத்தில் வரைந்த நான்கு அருமையான ஓவியங்கள் இடம் பெற்றிருந்தன. இன்னொரு வார இதழில் எங்கள் இருவரின் புகைப்படங்களும் இருந்தன. என் படத்திற்குக் கீழே 'ஓவியரின் திருமணமாகாத விதவை' என்று எழுதப்பட்டிருந்தது. அந்தக் கட்டுரையில் என்னை மிகவும் அதிகமாகப் புகழ்ந்திருந்தார்கள். அவை அனைத்தும் என்னுடைய கடமையை மேலும் அதிகமாக ஞாபகப்படுத்தின. அவருடைய ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்தனை செய்வதற்கு மட்டுமாவது நான் வாழ்ந்துதான் ஆக வேண்டும்!
மூன்று வருடங்கள் கழித்து...
நேற்று அண்ணனின் திருமணம் நடந்தது. கல்லூரியில் எனக்கு மிகவும் பிடித்த தோழியான மாலினிதான் மணப்பெண். எனினும், அந்த விஷயத்தில் எனக்கு கூறிக் கொள்கிற மாதிரி ஆர்வம் எதுவும் தோன்றவில்லை. நாளை அவர்கள் அண்ணன் வேலை செய்யும் இடத்திற்கும் போகிறார்கள். மாலினியை மகிழ்ச்சியுடன் அனுப்பி வைக்கவாவது எனக்கு முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! கடவுளே! இப்படியே எத்தனை நாட்கள் இருப்பது! மறதி என்பது பலருக்கும் ஒரு கொடுத்து வைத்த விஷயம் என்று கூறுவார்கள். அவளுக்காகவாவது என்மீது கருணை காட்டக்கூடாதா? நாட்கள் நகர நகர நான் சந்திரனுடன் மேலும் நெருக்கமாகிறேன். வாழ்ந்து கொண்டிருந்தபோது அவரிடம் நான் குறைகளைக் கண்டுபிடித்தேன். சில நிமிடங்களுக்கு பதைபதைப்பு அடைந்திருக்கிறேன். மரணத்தைத் தழுவிய அவரோ எப்போதும் என்னுடன் அன்புடனே இருந்து கொண்டிருக்கிறார். அவர் மனம் நோகும் வகையில் ஒரு வார்த்தை கூட கூறமாட்டார். நான் அவரைக் கோபப்படச் செய்ய முயற்சிக்கிறேன். சண்டை போடுகிறேன். எனினும்... எனினும்... ஹா! என்ன சிந்தனைகள் இவை! அன்பு கலந்த நினைவுகள் மரணமென்ற நெருப்பு ஜுவாலைகளைவிட சுட்டெரிக்கக் கூடியவை என்பதை என்னால் உணர முடிகிறது.
ஆறு வருடங்கள் கழித்து...
எனக்கு இப்போது இருபத்தாறு வயது நடக்கிறது. வசந்தம் இல்லாத வருடங்கள்! ஈரமான கண்களுடனும், வறண்டுபோன இதயத்துடனும் நான் காத்திருக்கிறேன். யாரை எதிர்பார்த்து? மறைந்துபோன கனவுகளுக்காகவா? சந்தோஷம் நிறைந்த சூழல்கள் என் சிந்தனைகளை அலைபாயச் செய்கின்றனவோ? நான் வாழ்கிறேனா? இல்லை... நான் வாழ மறந்து விடுகிறேன்.
ஏழு வருடங்கள் கழித்து...
மனிதனின் விருப்பங்களையும் முடிவுகளையும் எதிர்த்து தோற்கச் செய்யும் ஒரு முயற்சி அவனைச் சுற்றிலும் நடக்கிறது என்பதை நான் உணர்கிறேன். ஒரு பெண்ணின் வாழ்க்கையிலாவது நிச்சயமாக அது இருக்கும். இல்லாவிட்டால் எதற்காக மனிதர்கள் என்னை இப்படி துன்பத்திற்குள்ளாக்க வேண்டும்? பாடும் திறமையைக் கொண்ட எவ்வளவோ பேர் நம் நாட்டில் இருக்கிறார்கள்! எனினும், அவர்களுக்கு என் பாட்டைத்தான் கேட்க வேண்டும். எது எப்படியோ, ஒரு இக்கட்டான நிமிடத்தில் நான் அதற்கு சம்மதித்துவிட்டேன். ஒரு வகையில் பார்க்கப்போனால், நான் அதற்காக சந்தோஷப்படுகிறேன். அவருக்கு எவ்வளவோ பிடித்திருந்த அந்தப் பாடலை இன்று பதிவு செய்வதற்காக நான் பாடினேன். ஹா! நான் அந்தப் பாடலைப் பாடும்போதெல்லாம் அவர் உணர்ச்சி வசப்பட்டதை நான் நினைத்துப் பார்க்கிறேன். அந்தப் பாடலை எனக்கு சொல்லித் தந்ததே சந்திரன்தான். அந்தப் பாடலைஅவர் கேட்பதற்காக அல்லாமல் பாட வேண்டிய சூழ்நிலை வரும் என்று ஒரு நாளும் நான் நினைத்தது இல்லை. எனினும், என்ன காரணத்தாலோ இன்று நான் அதற்கு சம்மதித்துவிட்டேன். அந்தக் குரல் இனிமேல் ஏராளமான இசைக் கருவிகளிலிருந்து புறப்பட்டு காற்றில் கலந்து ஒலிக்கும். அங்கு இருக்கும் அவருடைய ஆத்மாவில் என்னைப் பற்றிய நினைவுகளை எழுப்பிக் கொண்டு அது முடிவே இல்லாமல் பயணம் செய்யும். அந்தப் பாடலின் பிறப்பிடம் மறைந்து போன பிறகும் அளவற்ற அந்த அன்பிற்கு முன்னால் என்னுடைய எளிய காணிக்கையாக அந்தப்பாடல் உயர்ந்து ஒலிக்கட்டும்.