வாழ மறந்த பெண் - Page 2
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6460
இரவு முழுவதும் புகை வண்டியில் பயணம் செய்ய வேண்டுமே! சரியாகத் தூங்காததால், பசிக்காமல் இருக்காது. சந்திரன் முடிந்தவரையில் என் தாய் கூறியதைப் பின்பற்றியதாகவே நான் உணர்ந்தேன்.
சாப்பிட்டு முடிந்து எழுந்தவுடன், ரவி அண்ணன் தன் அறைக்குள் சென்றார். என் தாய் சமையலறையில் இருந்தாள். நாங்கள் வரவேற்பறையில் தனியாக இருந்தபோது, அந்தப் பிரிவை நினைத்துக் கவலைப்பட ஆரம்பித்தேன். துடிக்கும் இதயத்துடன் நாங்கள் சிறிது நேரம் எதை எதையோ பேசிக் கொண்டிருந்தோம். ஒரு வாரத்திற்குள் அவர் திரும்பவும் வருவார். அதற்குப் பிறகு மூன்று வாரங்கள் கடந்து விட்டால், நாங்கள் நிரந்தரமாக இணைந்து விடுவோம். நிலைமை அப்படி இருக்கும்போது, இந்த அளவிற்கு நான் ஏன் கவலைப்பட வேண்டும்? அறிவு கூறிய அந்த சமாதானங்களால் இதயத்தின் பொறுமையற்ற நிலையைத் திருப்திபடுத்த முடியவில்லை என்பதுதான் உண்மை. அது முற்றிலும் என் மனதில் இருந்த அமைதியற்ற தன்மை மட்டுமே என்று எனக்குத் தோன்றவில்லை. சந்திரனின் முகமும் மிகவும் உயிரற்று இருப்பதைப் போலவே தோன்றியது. அவருடைய வாய்ப் பேச்சும் குறைந்து விட்டிருந்தது. நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோதெல்லாம், அவருடைய இதயம் பேச்சைவிட்டு விலகி வேறு ஏதோ கனவுலகிற்கு அவ்வப்போது பறந்து போய்க் கொண்டிருப்பதாக நான் உணர்ந்தேன்.
ஒரு வாரத்திற்குப் பிரிந்திருப்பது! கடவுளே, அதைக்கூட அவரால் தாங்கிக் கொள்ள முடியாது. அந்த இதயத்தின் பலவீனமான தன்மையை நான் எத்தனை தடவை மிகவும் நெருக்கமாக உணர்ந்திருக்கிறேன்! அன்பு செலுத்த மட்டுமே அவரால் முடியும். அவரே அன்பின் வடிவம்தான். அழகான அந்த உடலில் இதயத்திற்கு மட்டுமே முக்கிய இடம் இருக்கிறது. ஒரு பெண் அதன் சொந்தக் காரியாக ஆவதைவிட வேறென்ன பெரிதாகக் கிடைத்துவிடப் போகிறது! நான் என்னுடைய மனக் கவலைகளை ஒரு பக்கம் ஒதுக்கி வைத்துவிட்டு, அவரைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று விரும்பினேன். வேதனை நிறைந்திருந்த அந்தக் கண்களில் முத்தமிட்டு மகிழ்ச்சியுடன் போய் வாருங்கள் என்று கூற என்னுடைய மனம் துடித்தது. எனினும், நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
"பாமா, நான் புறப்பட வேண்டிய நேரம் வந்து விட்டது. ஒரு வாரத்திற்கு மேலே அங்கே இருக்க மாட்டேன். பலரையும் நேரில் பார்த்து அழைக்க வேண்டியதிருக்கு. வீட்டில் பல ஏற்பாடுகளையும் செய்ய வேண்டியதிருக்கு. நான் போயிட்டு வந்திடுறேன்."
அதைக் கூறும்போதுகூட அவர் அதே இடத்தில்தான் உட்கார்ந்திருந்தார். கண்களில் எப்போதும் தெரியக்கூடிய அந்தக் கூர்மை, அவருடைய கண்களிடம் நிரந்தரமாக விடைபெற்றுக் கொண்டு விட்டதோ என்றுகூட நான் சந்தேகப்படாமல் இல்லை.
"சந்திரன், உங்க முகம் மிகவும் வாடியிருக்கிறதே, ஏன்?"
நான் என்னையே அறியாமல் கேட்டுவிட்டேன். அந்த நிமிடங்களில் அவர்மீது அன்பு வைத்திருக்கும் யாராக இருந்தாலும் அந்தக் கேள்வியைத்தான் கேட்டிருப்பார்கள்.
"ஒண்ணுமில்லை... திருமணம் என்பது எவ்வளவு பெரிய விஷயம் என்பதை என்னால் உணர முடிகிறது. அதனால்தான் எப்போதும் அதற்காக நான் பயந்து கொண்டும் இருந்தேன்."
அவர் தன்னுடைய சிந்தனை வயப்பட்ட கண்களை சுவரில் இருந்த ஓவியங்களில் ஒன்றில் பதித்துக் கொண்டே சொன்னார். ஒரு நிமிடத்தில் என் இதயத்தில் ஒரு நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்தது. அது என்னை பலமாக சுட்டதைப்போல நான் உணர்ந்தேன். அப்படியென்றால் அவரை வேதனைப்படச் செய்து கொண்டிருப்பது எங்களுடைய திருமண விஷயம்தான்!
"சந்திரன், நம்முடைய திருமண விஷயத்தை நினைத்து வேதனைப்படுறீங்களா?"
அந்தக் கேள்வி சற்று கடுமையாக ஆகிவிட்டது என்பதாக உடனே நான் உணர்ந்தேன்- என்னுடைய மன வேதனைகள் மிகவும் அதிகமாக அதில் கலந்திருந்ததையும்தான். எனினும், அதை அவர் புரிந்து கொண்டார். அந்தக் கண்களில் இருந்த கூர்மையும் மலர்ச்சியும் எங்கிருந்தோ அந்த முகத்திற்கு வந்து சேர்ந்தது. அவர் என்னுடைய கையைப் பிடித்து வைத்துக் கொண்டு, அதை பலமாக அழுத்தியவாறு அதிகார தொனியில் கேட்டார்!
"பாமா, என்ன சொல்றீங்க? நான் அப்படியொண்ணும் நினைக்கல. கணவனின் அன்பைப் பற்றி மனைவி சந்தேகப்படுவது உண்டு. ஆனால் ஒரு காதலனையே...? இன்னொரு வகையில் சொல்றதா இருந்தால் என்னைக் கொஞ்சம் வேதனைப்பட வைத்தால்தான் உங்களுக்கு சந்தோஷமே. அதை நினைச்சு மகிழ்ச்சியடைய நான் இப்போது நல்லாவே தெரிஞ்சுக்கிட்டேன்."
அவர் கூறியது முழுவதும் எனக்குப் புரிந்துவிட்டது என்று கூறுவதற்கில்லை. நான் சிறிது நேரம் அமைதியாக இருந்தேன்.
"என் பாமா, எவ்வளவு நாட்களுக்குப் பிறகு நாம் ஒரு வாரம் ஒருவரையொருவர் பிரிந்திருக்கப் போகிறோம்? எவ்வளவு வேலைகள் இருந்தாலும், ஐந்து மணி ஆகிவிட்டால், உங்களைத் தவிர வேறு எதைப் பற்றியும் என்னால் சிந்தித்துப் பார்க்கவே முடியாது. ப்ரஷ், சாயம் எல்லாவற்றையும் கீழே வைத்துவிட்டு, நான் சாலைக்கு வந்திடுவேன். எனக்குள் பாடகன் உண்டாவது அந்தச் சமயத்தில்தான். இரண்டு வருடங்களில் அந்த வழக்கத்தை மீற வேண்டிய சூழ்நிலை ஒரு சில நாட்களில் மட்டுமே உண்டாகியிருக்கிறது."
என் இதயம் படிப்படியாகக் குளிர்ந்தது. நான் என்னவெல்லாம் நினைத்துவிட்டேன்! அவர் எங்களுடைய முதல் அறிமுகத்தையும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற சம்பவங்களையும் மனதில் நினைத்துப் பார்த்து ஆனந்தம் அடைந்து கொண்டிருக்கிறார் என்பதை என்னால்உணர முடிந்தது-. ச்சே...! நான் அந்தக் கேள்வியைக் கேட்டிருக்கவே கூடாது என்று என் மனம் அவ்வப்போது என்னிடம் கூறிக் கொண்டிருந்தது.
"ஓ... சந்திரன், நீங்கள் எவ்வளவு சீக்கிரமா தப்பா நினைச்சிட்டீங்க! இனி அது நடக்காது. தினமும் ஒன்றோ இரண்டோ மணி நேரங்கள் மட்டுமே பார்க்கும்போது அதற்கெல்லாம் நேரம் இருந்தது. இப்போது..."
நான் அப்போது என் கண்களின் மூலம்தான் அதிகம் பேசுவதைப் போல் எனக்குத் தோன்றியது. விளக்கின் வெளிச்சம் கதிர்களால் மறையும் அளவிற்கு என் கண்கள் ஈரமாயின.
"நான் ஒரு மனைவியின் நிலையில் இருந்து கொண்டு அதற்கு சம்மதித்தேன். போதுமா? சரி... இப்போது தூங்கணும். அம்மா எங்கே!"
அவர் எழுந்தார். ரவி அண்ணன் பத்திரிகையை மடித்து, கை இடுக்கில் வைத்துக் கொண்டு, எரிந்து கொண்டிருந்த சிகரெட்டுடன் அங்கு வந்தார். பயணத்தை எப்படி மகிழச்சியுடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்த தன் சொந்தக் கருத்துக்களை அவர் கூற ஆரம்பிக்க, அம்மாவும் வந்துவிட்டாள். எனக்கு வேறு என்னவோ சந்திரனிடம் கூற வேண்டும் போல் இருந்தது. ஒரு நிமிடம் அவர் மட்டும் தனியாக எனக்குக் கிடைத்திருந்தால்...? நான் சந்தோஷமாக அவரை வழியனுப்ப வேண்டும். அப்படி இல்லையென்றால் மனதில் அமைதியே இருக்காது.