வாழ மறந்த பெண் - Page 4
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6460
இந்த நோய் உண்மையாகவே ஒரு வஞ்சகம் நிறைந்ததுதான். இங்கு இருக்கும்போது அவரை வந்து தாக்குவதற்கான தைரியம் அதற்கு ஏன் இல்லாமல் போய்விட்டது? அப்படி வந்திருந்தால், நான் அவரை மிகவும் பத்திரமாகப் பார்த்துக் கொண்டு அவருக்கு அருகிலேயே இருந்திருப்பேனே! அதற்குப் பிறகு எது வேண்டுமானாலும் நடக்கட்டும். அது என்னை நிச்சயம் நிம்மதி கொள்ளச் செய்யும். அது மட்டுமல்ல; என்னால் அவரைக் காப்பாற்ற முடியும் என்று கூட எனக்குத் தோன்றுகிறது.
அந்தக் காய்ச்சலின் ஆரம்பத்தைப பற்றி அண்ணன் என்ன எழுதியிருக்கிறார்? அவர் இங்கிருந்து போனவுடன், யாரோ ஒரு நண்பரைப் பார்ப்பதற்காக தூரத்தில் எங்கோ போயிருக்கிறார். திரும்பி வந்தபோது இரவில் நல்ல மழை பெய்திருக்கிறது. குடையை எடுத்துக் கொண்டு வெளியே போகும் பழக்கம் இல்லாத சந்திரன் ஸ்டேஷனில் இருந்து நனைந்து கொண்டே வீட்டிற்குச் சென்றிருக்கிறார். அன்று தொடங்கிய ஜலதோஷம், காய்ச்சலாக மாறியிருக்கிறது. கஷ்டம்தான்! அது அப்படிப்பட்ட பெரிய விஷயமாகிவிட்டதே! தொடர்ந்து இரண்டு நெடிய பயணங்கள்! நண்பருக்கு ஒரு கடிதம் எழுதினால் போதாதா? இதற்கு மேலும் அதைப் பற்றி நினைத்து என்ன பிரயோஜனம்? தன்னுடைய சொந்த உடல் நலத்தைப்பற்றி அவர் கொஞ்சமாவது கவனம் செலுத்துவது என்பது, நான் வற்புறுத்திக் கூறும்போது மட்டுமே. இந்தப் பயணத்தைப் பற்றி அவர் என்னிடம் ஒரு வார்த்தைகூட கூறவில்லை. நான் அதற்கு சம்மதிக்க மாட்டேன் என்று நினைத்ததுதான் காரணமாக இருக்க வேண்டும். ஒரு ஜலதோஷத்தால் இவற்றையெல்லாம் செய்ய முடியுமா? அது ஆரம்பமாகி இன்றோடு பன்னிரண்டு நாட்கள் ஆகிவிட்டன. இப்போதாவது கொஞ்சம் முன்னேற்றம் உண்டாகி இருக்கக் கூடாதா? அடுத்த கடிதத்திற்கு மேலும் பதினான்கு மணி நேரங்கள் காத்திருக்க வேண்டும். இந்த நேரத்தை நான் எப்படி நகர்த்துவேன் என்பதை நினைக்கும் போது எனக்குள் பயம் உண்டாகிறது.
இரண்டு நாட்களுக்குப் பிறகு...
எல்லாம் முடிந்துவிட்டது!
நேற்று காலை ஒன்பது மணிக்கு அது நடந்தது. நேரத்தை நான் ஞாபகப்படுத்திப் பார்த்துக் கொள்கிறேன்... அண்ணனின் தந்தி கிடைத்தபோது ஒரு மணி இருக்கும். அதைத் தொடர்ந்து எனக்கு சுய உணர்வு வந்தது நான்கு மணி நேரத்திற்கு முன்புதான். இப்போது நான் அழவில்லை. எனக்குக் கவலையும் இல்லாமல் போய்விட்டது என்று நினைக்கிறேன். இரண்டு வார வேதனைகளுக்குப் பிறகு, இந்த நீண்ட ஓய்வு எனக்கு ஆறுதலாகவே இருக்கிறது. இதயத்தில்தான் என்ன அமைதி! நான் இந்த அளவிற்கு உணர்ச்சியே இல்லாமல் எப்போதும் இருந்ததில்லை. எங்கும் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கும் நெருப்பு ஜுவாலைகள்! என் இதயத்திலும் இந்த அறையிலும் சுற்றியிருக்கும் அனைத்து உலகத்திலும் வெளிச்சமயம்தான்...! இந்த உலகம் எவ்வளவு அழகாக இருக்கிறது! நான்...
இரண்டு வாரங்கள் கழித்து...
எனக்கு இப்போதும் நடப்பதற்கு சக்தியில்லை. டாக்டர் மிகவும் அக்கறையுடன் கவனித்துக் கொள்கிறார். டாக்டர்கள் பாவம்! ஆட்கள் கட்டாயப்படுத்தினால், அவர்கள் ஒரு இறந்த பிணத்திற்குக் கூட சிகிச்சை செய்வார்கள்- தேவைப்பட்டால் நல்ல உடல்நலத்தைக் கொண்ட ஒரு பந்து விளையாடும் வீரனைக்கூட. இல்லாவிட்டால் எதற்காக அவர் எனக்கு மருந்து தர வேண்டும்? நான் ஒரு நோயாளி அல்ல என்பதைத் தெரிந்து கொள்ள வெறும் சாதாரண அறிவு போதாதா? நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவரை குணப்படுத்த அவர்களால் முடியவில்லை- அவர்களுடைய மருந்துகளுக்கு முடியவில்லை. மருந்துகளைக் கொடுத்து வெறுமனே அவர்கள் என்னைக் குடிக்கச் செய்கிறார்கள். அவர்கள் என்னிடம் நடந்து கொள்வதைப் பார்த்தால் எனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று அவர்கள் நினைத்து விட்டார்கள் என்பதைப் போல இருந்தது. பாவங்கள்! இவர்கள் நோய்களைப் புரிந்து கொள்வதெல்லாம் இப்படித்தான் போலிருக்கிறது. இந்த மருத்துவமனைகளிலிருந்து ஒருவனாவது உயிருடன் வெளியே செல்கிறான் என்றால் அதைப் பற்றி ஆச்சரியம்தான் பட வேண்டும். என்அறிவு எப்போதையும்விட இப்போது மிகவும் தெளிவாக இருக்கிறது. நான் என்னுடைய வலது கையால் எழுதுகிறேன். இடது உள்ளங்கையை மடித்து கன்னத்தில் வைத்துக் கொண்டிருக்கிறேன். இதோ... இதை உயர்த்த வேண்டுமென்று தோன்றினால் உயர்த்துவதற்கும் தாழ்த்த வேண்டுமென்று தோன்றினால் தாழ்த்துவதற்கும் என்னால்முடியும். என் கடிகாரத்தில் நேரத்தைச் சரியாக என்னால் கூற முடியும். பத்து இருபத்தேழு. இது இரவு நேரம். ஹோ! நானே என்னுடைய இயல்பான அறிவை சந்தேகப்பட்டு விட்டேன் அல்லவா! நன்கு களைத்துப் போய்விட்டிருந்தாலும் எனக்கு வேறு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆமாம்... எனக்கு நடப்பதற்கு சக்தி இல்லை. அவ்வளவுதான்.
மீண்டும் இரண்டு வாரங்கள் கழித்து...
அவருடைய மரணத்திற்குப் பிறகு இப்போது ஒரு மாதம் ஓடிவிட்டது. இரங்கல் செய்திகள் இப்போதும் முடியவில்லை. அவை அனைத்தும் எனக்கு ஆறுதல் கூறுவதற்காகத்தான். கலை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் மட்டும் எங்களை அறிந்திருக்கும் அறிமுகமில்லாதவர்கள்கூட அந்தக் கூட்டத்தில் இருந்தார்கள். நண்பர்களுடன் பங்கிடும்போது கவலை குறைய வேண்டும். என்ன காரணத்தாலோ எனக்கு அது சிறிதும் நடக்கவில்லை. எந்தவித சலனமும் இல்லாமலிருந்த என்னுடைய மனதைச் செயல்படச் செய்ததும், அதன்மூலம் என்னைக் கண்ணீர்விட வைத்ததும் அந்தக் கடிதங்கள்தான். அவை என்னை அவரைப் பற்றி மேலும் நினைக்கச் செய்து, அவருடன் மேலும் மேலும் தொடர்பு கொள்ளச் செய்தன. என் கனவுகளை என்னால் உண்மைகளிலிருந்து பிரித்துப் பார்க்க முடியவில்லை. நான் விழித்திருக்கும்போதே கனவுகள் காண்கிறேன். சந்திரன் என்னுடன்தான் இருக்கிறார் என்ற எண்ணம் என்ன நடந்தும் என்னை விட்டுப் பிரியவில்லை. நான் அவருடன் சேர்ந்து கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெறுகிறேன். பூங்காவில் நடக்கிறேன். சிறிதும் நிறுத்தாமல் பேசிக் கொண்டிருக்கிறேன். அப்போது நான்அழுகிறேன். அவர் அடுத்த நிமிடம் என்னை விட்டுப் பிரிந்து போய்விடுவார் என்று என்னுடைய இதயம் மெதுவான குரலில் கூறுகிறது. நான் அதை சந்திரனிடம் ஒருமுறை கூட கூறுவில்லை. என்னைவிட்டுப் போகக் கூடாது என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்ளவும் இல்லை. கண் விழிக்கும்போது நான் அடக்க முடியாமல் அழுகிறேன். அவர் இறந்துவிட்டார் என்பதை நம்பும்படி நான் என்னுடைய உணர்வுகளுடன் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். அந்தக் கடிதங்களில் ஒன்றுக்குக் கூட அதைச் செய்ய முடியவில்லை. எல்லாம் அவருடைய மரணத்தை விட வாழ்க்கையைத்தான் ஞாபகப்படுத்துகின்றன. கடவுளே! இது என்ன ஒரு மனஅமைதி இல்லாத வாழ்க்கையாக இருக்கிறது! நாட்கள் கடக்க கடக்க, நான் சுய உணர்வுடன் அழுகிறேன்.