வாழ மறந்த பெண் - Page 14
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6461
அவர் ஏதாவது கம்பெனிகளுடன் சேர்ந்து வருடத்தின் பெரும்பாலான நாட்கள் ஊர் ஊராக அலைந்து கொண்டிருப்பார். வீட்டிலிருக்கும் என் தாயையும் என்னையும்விட நாடக கம்பெனியில் இருக்கும் நடிகைகள் பலர் மீதும்- இயல்பாகவே அவர் அதிக அன்பு வைத்திருந்தார். இப்படிக் கூறுவதை வைத்து அவர் எங்களை முழுமையாக மறந்துவிட்டார் என்று நான் கூறவில்லை. பண விஷயத்தில் முடிந்த வரைக்கும் உதவி செய்வதற்கும் அவர் தயங்கவில்லை. என்னைப் பொறுத்தவரையில் சிறு வயதில் இருந்தே (நான் சிறு பெண்ணாக இருக்கும்போதே என் தந்தை மரணத்தைத் தழுவிட்டார்) வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருக்கும் ஒருவரின் பொறுப்பற்ற தன்மை என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொண்டிருந்தேன். என் அண்ணனின் இந்த அலட்சியப் போக்கு என்னை அந்த வகையில் பாதித்தது. எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற இந்த சுதந்திரம் எதையும் செய்ய என்னை அனுமதிக்கவில்லை. பக்கத்து வீடுகளில் இருக்கும் இளம்பெண்களுடன் பழகுவதற்கோ பேசுவதற்கோ கூட எனக்கு தைரியம் இல்லாமல் போனது. கல்வி கற்றிராத அவர்களுடைய பழக்க வழக்கங்கள் எனக்கு சிறிதும் பிடிக்கவில்லை. மதிய உணவு சாப்பிட்டுவிட்டு, ஆண்கள் வெளியே சென்றுவிட்டால், பெரும்பாலான நேரங்களில் பக்கத்து வீட்டிலிருக்கும் பெண்கள் என் வீட்டிற்கு வந்து கூடிவிடுவார்கள். ஒவ்வொரு நாளும் அவர்களுடைய முக்கிய உரையாடல், அன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டிராத ஏதாவது பெண்களைப் பற்றியதாக இருக்கும். அது முழுமையான விரோதத்துடனும் கோபத்துடனும் இருக்கும். மறுநாள்- அன்று வந்திராத யாரைப் பற்றியாவது பேச்சு இருக்கும். இப்படி அவர்கள் இரக்கமே இல்லாமல் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு இரையாகாதவர்கள் அந்தப் பெண்களில் யாரும் இல்லை. அந்தப் பெண்களுடன் எந்தவிதப் பழக்க வழக்கமும் வைத்துக் கொள்ளாமல் நான் என்னுடைய அறையில் இசைத்தட்டுக்களைப் பாட வைத்துக் கொண்டு தனியே இருப்பேன்.
கடுமையான ஏமாற்றமோ, பெரிய எதிர்பார்ப்புகளோ எனக்கு இல்லை. எப்படி வாழ்க்கையில் முன்னேறுவது என்பதைப் பற்றி நான் அப்படியொன்றும் அதிகமாக நினைத்ததில்லை. இசையில் ஓரளவுக்கு ஈடுபாடும் சிறிது பயிற்சியும் இருந்ததால், நான் எப்போதாவது ஒருமுறை பாட்டுக் கச்சேரிகளில் பங்கெடுப்பேன். என் அண்ணனின் புகழ்தான் எனக்கு இந்த விஷயத்தில் மிகவும் உதவியாக இருந்தது. எனினும் திருச்சிராப்பள்ளியிலும் புதுக்கோட்டையிலும் நடைபெற்ற இரண்டு இசை நிகழ்ச்சிகள், ஒரு பாடகி என்ற வகையில் எனக்கென்று ஒரு அடித்தளத்தை உண்டாக்கித் தந்தன என்பதென்னவோ உண்மை. மேலும் இசையில் பயிற்சி பெறுவதற்கும், அந்தப் பாதையில் முயற்சிகள் செய்வதற்கும் அது ஒரு தூண்டுகோலாக இருந்தது.
அந்தக் காலத்தில் இசை கற்பதற்காக வேறு ஊர்களிலிருந்து நிறைய இளைஞர்கள் எங்களுடைய ஊருக்கு வந்து கொண்டிருந்தார்கள். குடுமி வளர்த்து, பின்னால் கொண்டை போட்டு, பெரிய வெள்ளை நிறக் கம்மல் அணிந்து, நெற்றியில் செந்தூரப் பொட்டு வைத்து, ஊரில் இருக்கும் மற்றவர்களைப் போல தாங்களும் இருப்பதில்தான் முதலில் அவர்கள் அக்கறை காட்டுவார்கள். நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்குப் பிறகு, தோற்றத்திலும் மொழியிலும் மட்டுமல்ல- பொதுவான கலாச்சாரத்திலேயே- தமிழர்களாகவே மாறிவிட்ட பலரையும் நான் பார்த்திருக்கிறேன். அவர்களில் பெரும்பாலானவர்கள் இசையில் தீவிர ஈடுபாடு கொண்டவர்களாக இருந்தார்கள். எனினும், அவற்றையெல்லாம்விட அவர்களுடைய பொருளாதாரம்தான் ஊர்க்காரர்களின் கவனத்தில் அதிகமாகப்பட்டது. அரசர்களைப் போல ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தவர்களுக்குப் பஞ்சமே இல்லாமல் இருந்தது. தஞ்சாவூரிலும் அதைச் சுற்றியுள்ள ஊர்களிலும் இருந்த பெரும்பாலான தாசிகளின் வீடுகள் நல்ல நிலையில் இருப்பதற்குக் காரணமே அந்த இளைஞர்களின் அருளால்தான் என்று கூறினால் அதில் பெரிய ஆச்சரியம் எதுவும் உண்டாகாது.
எல்லோரைப் பற்றியும் இப்படிக் கருத்து கூறிவிட முடியாது. மிகவும் நல்லவர்களாக வாழ்ந்து கொண்டிருந்த பலரும்கூட இருந்தார்கள். அவர்களில் ஒரு இளைஞரைப் பற்றித்தான் நான் இப்போது கூற போகிறேன். என்னை அவருடன் நெருங்கச் செய்த முக்கிய விஷயமே அதுவாகத்தான் இருக்க வேண்டும்.
நான் பாடிய ஒரு திருவிழா நடைபெற்ற ஊரில்தான் நாங்கள் ஒருவரோடொருவர் முதல் முறையாகப் பேசினோம். அதற்கு முன்னால் எங்களுக்கு ஒருவரை ஒருவர் தெரியும். குடுமியும் செந்தூரப் பொட்டும் தங்க மாலையும் இல்லாத அந்தப் பாடகரை கவனிக்காமல் இருக்க யாராலும் முடியாது. இசை கற்றுக்கொள்வதற்காக வந்திருந்த ஒரு இளைஞர் என்பதைவிட, விடுமுறை காலத்தில் ஊர்களைச் சுற்றிப் பார்க்க புறப்பட்ட ஒரு கல்லூரி மாணவரைத்தான் நான் அவரிடம் கண்டேன். முற்றிலும் ஒரு மாணவரின் வாழ்க்கையைப் போலவே அலட்சியமும், முயற்சியற்ற தன்மையும் கொண்ட வாழ்க்கை. மற்ற நண்பர்களிடமிருந்து அவரை அது முற்றிலும் வேறுபட்டவராகப் பிரித்துக் காட்டியது. இசையை ஒரு வாழ்க்கைக்கான அடித்தளமாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று சிறிதும் நினைத்திராத அவர் அப்படித்தான் இருக்க முடியும். பாட்டுக் கச்சேரிகளுக்கும் திருவிழா கொண்டாட்டங்களுக்கும் நல்ல ஆடைகள் அணிந்து செல்லாமல் விலை மகளிர்கள் இருக்கும் இல்லங்களைத் தேடிச் செல்லாமல் தன்னுடைய மனிதர்களுக்கு மத்தியில் இருப்பதைப் போலவே மிகவும் அடக்கமாக இருந்த அவருடைய அந்த வாழ்க்கை என்னை முன்பே ஈர்த்துவிட்டிருந்தது. அதனால் அந்த அறிமுகம் வெகு வேகமாக எங்களை மேலும் நெருங்கச் செய்தது.
சகோதரி, எங்களுடைய காதல் கதையை நீளமாக எழுதி உங்களைச் சோர்வடையச் செய்ய வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. இளம் வயதில் நடைபெற்ற அந்த சம்பவங்களை மறந்துவிட வேண்டும் என்பதுதான் என் விருப்பம். அசாதாரணம் என்று கூறுகிற அளவிற்கு அதில் எதுவும் இல்லை என்பதே உண்மை. பிறகு... கட்டாயம் கூற வேண்டும் என்று தோன்றுகிற ஒன்று- அவருடைய தனிப்பட்ட குணம் அவர் ஒரு நடைமுறை மனிதராக இருந்ததே இல்லை என்பதுதான் என்னுடைய எண்ணம். இல்லாவிட்டால் மூன்று வருடங்கள் பிரிந்திருந்துவிட்டு, மீண்டும் நாங்கள் சந்திப்பது வரையிலாவது...! ஒருவருக்கொருவர் ஒத்துவராத எத்தனையோ விஷயங்களை அவர் தன்னிடம் கொண்டிருந்தார். பெண்கள் மீது அவர் அதிக ஈடுபாடு இல்லாமல் இருந்ததை ஒரு தகுதியாகக் கருதியது தவறோ என்று பிற்காலத்தில் நான் சந்தேகப்பட்டிருக்கிறேன்.
ஆரம்ப நாட்கள் ஒருவரையொருவர் உணர்ச்சிவசப்பட்டு மதித்துக் கொள்வதிலும் பாராட்டிக் கொள்வதிலும் கழிந்தன. ஒருவரையொருவர் அறிந்துகொள்ளாமலே நாங்கள் அந்தச் சமயத்தில் மிகவும் அதிகமாக நெருங்கிவிட்டோம். தொடர்ந்து வந்த அடுத்த கட்டம் சிந்தனை, உணர்ச்சி ஆகியவற்றின் மாறுபட்ட செயல்பாடுகளால் தெளிவற்றதாகவும் நிச்சயமற்றதாகவும் இருந்தது. அப்போது நாங்கள் அழவும் சிரிக்கவும் செய்தோம்.