வாழ மறந்த பெண் - Page 17
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6461
கடிதத்தைப் படித்துவிட்டு சிறிது நேரம் நான் எந்தவித அசைவும் இல்லாமல் படுத்திருந்தேன். கனகத்தைப் பற்றி எனக்கு என்ன தோன்றியது? எதையும் நிச்சயமாகக் கூற முடியவில்லை. தோற்றத்தில் இருப்பதைப் போலவே அவளுடைய கடிதத்திலும் ஏதோ ரகசியம் மறைந்திருப்பதைப் போல் எனக்குத் தோன்றியது. அவள் எதற்காக இவ்வளவு விஷயங்களையும் வெளிப்படையாக எழுத வேண்டும்? என்னுடைய நம்பிக்கைகளைத் திருத்த வேண்டும் என்று முயற்சிக்கிறாளோ? அப்படியென்றால், உண்மையாகவே அவள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறாள் என்று அர்த்தம். வாழ்க்கை அதன் எல்லா கவர்ச்சிகளுடனும் எனக்கு முன்னால் வந்து அழைத்தால் கூட அவற்றை மிகவும் சர்வ சாதாரணமாக வேண்டாம் என்று மறுக்க முடிகிற எனக்கு, இந்த சம்பவங்கள் எதிலும் புதுமையும் இருப்பதாக தெரியவில்லை.
ஹா! நான் எதற்காக என்னிடமே இந்த சபதத்தைச் செய்துகொள்ள வேண்டும்? அந்தக் கடிதம் என்னிடம் பாதிப்பு உண்டாக்க வேண்டும். இல்லாவிட்டால் என் மீது நம்பிக்கை வைத்து யாருக்கு என்ன பிரயோஜனம்? அந்தக் கடிதத்தில் கனகம் எவ்வளவு தைரியத்தை வெளிப்படுத்திக் கொண்டாலும், அதில் அவளுடைய மனதில் அழுகைச் சத்தம் எவ்வளவு தெளிவாகக் கேட்கிறது! என்னைப் போல அவளும் கவலையில் மூழ்கிப்போயிருக்கிறாள். எங்கள் இருவரையும் ஒரே மாதிரி பாதிக்கக்கூடிய ஏதோவொரு பிரச்சினை இருக்கிறது. சுய உணர்வுடன் திருத்த முயற்சிக்காமல், இரண்டு பேரும் அவரவர்களின் போக்கில் பயணித்திருக்கிறோம்- மாறுபட்ட வழிகள் மூலமாக. பிறகு ஒவ்வொருவரும் எங்கேயோ போய் சேர்ந்திருக்கிறோம். முழுமையான மனக்கட்டுப்பாடு என்ற விஷயத்தைக் கொண்டு என்னால் பெருமைப்பட்டக் கொள்ள முடியும். தன்னுடைய வாழ்க்கையை அர்த்தம் நிறைந்ததாக ஆக்கிய தன் மகனை நினைத்து கனகம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். எனினும், யாரும் மகிழ்ச்சியாக இல்லை. எங்களுடைய இதயங்கள் ஒன்று சேர்ந்து தேம்பித் தேம்பி அழுவதைப்போல இருக்கிறது. என் கனகம், நீங்கள் உண்மையிலேயே எனக்கு ஒரு ஆறுதல்தான். சகோதரி, உங்களுக்கு நானும் அப்படி இருக்கிறேனே!
அதே நாள் இரவு!
கடந்த ஆறேழு மணி நேரங்களுக்குள் என்னவெல்லாம் நடந்து முடிந்துவிட்டது! நடு இரவு வேளையின் இந்தத் தனிமைச் சூழலில் அலையடித்துக் கொண்டிருக்கும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு, நான் இந்த வரிகளை எழுதுவதற்கு என்னுடைய எல்லா சக்திகளையும் மையப்படுத்துகிறேன். சம்பவங்களை ஒழுங்கான வரிசையில் குறிப்பிடுவது என்பது இதைப்போன்ற கட்டத்தில் மிகவும் கஷ்டமான ஒரு விஷயமாக இருப்பதைப் போல் தோன்றுகிறது நான் முயற்சித்துப் பார்க்கிறேன்.
மதிய நேரம் தாண்டியவுடன் நளினி தன் கணவனின் வீட்டிற்குப் புறப்பட்டாள். அவள் பாலனுடன் என் அறைக்கு வந்து பயணத்திற்கான அனுமதி கேட்டாள். ஹா! அந்த முகத்தில் தெரிந்த அழகான உணர்ச்சிகள் இந்த உலகத்திற்குச் சொந்தமானவைதானா? சந்தோஷமும் காதல் ஒளியும் கலந்திருந்த அந்தக் கண்கள் இரண்டு நட்சத்திரங்களைப் போல எனக்கு முன்னால் இப்போதும் மின்னிக் கொண்டிருக்கின்றன. எதிர்பார்ப்புகள் அவளைச் சுற்றி மின் அலைகளை உண்டாக்கியிருப்பதைப் போல் தோன்றியது.
"நாங்க போயிட்டு வரட்டுமா?"
கைகளைக் கூப்பியவாறு நளினி கேட்டாள். அந்த நேரம் என்னுடைய சிந்தனைகள் பல யுகங்களையும் கடந்து பின்னோக்கிச் சென்றன. பழங்காலத்திலிருந்து நவீன குடும்ப உறவிற்கு வளர்ந்து வந்த மனிதனின் முன்னோக்கிச் செல்லும் நீண்ட பயணத்தையும் இல்லறத்தின் இனிமையையும் ஒரு திரைப்படத்தைப்போல நான் எனக்கு முன்னால் பார்த்தேன். நான் அவர்களை இதயப்பூர்வமாக வாழ்த்தினேன்.
அந்தப் பிரிவு நிரந்தரமான ஒன்றாக எனக்குத் தோன்றியது. நளினி இனி திரும்பி வரமாட்டாள். அவளுடைய இதயத்தில் எனக்கென்று வைத்திருப்பதற்கு இடமில்லை. இந்த வீடும் பிறந்து வளர்ந்த சுற்றுப்புறங்களும் மட்டுமல்ல- இன்றுவரை இருந்து வந்த எல்லா உறவுகளையும் விட்டுவிட்டு அவள் நிரந்தரமாகப் பிரிந்து போகிறாள். இந்தப் புதிய பிறவியில் அவளுக்குப் பழைய விஷயங்களைப் பற்றி கனவுக்கு நிகரான நினைவுகளைத் தாண்டி வேறெதுவும் இருக்கப் போவதில்லை. அவர்கள் இருவரும் தனித்து வாழ்க்கைக்குள் காலடி எடுத்து வைத்து நடந்து போகிறார்கள். அவர்கள் மற்றவர்களிடமிருந்து பெற வேண்டியதையெல்லாம் பெற்று சந்தோஷத்துடன் பிரிகிறார்கள். உறவினர்களுக்கு அவர்கள் இழப்புதான். அவர்களுக்கு ஒரு புதிய வாழ்க்கை பிறந்துவிட்டது. எதிர்பார்த்த ஒளிமயமான வாழ்க்கை. அவர்களுக்கு நன்மைகள் உண்டாகட்டும்!
நான்கு மணிக்கு ஜட்காக்காரன் வந்தான். வண்டியில் ஏறி உட்கார்ந்தவுடன் மற்ற எல்லா விஷயங்களும் படிப்படியாக மறந்து போய், என்னுடைய உலகத்தில் நானும் கனகமும் மட்டுமே எஞ்சி இருந்தோம். எங்களுடைய நட்பு, எவ்வளவோ வருடங்களாக இருந்து கொண்டிருப்பதைப் போலவும் ஆழமானதாகவும் தோன்றியது. நாங்கள் நீண்ட காலத்திற்குப் பிறகு ஒருவரையொருவர் சந்திப்பதைப் போல இருந்தது.
என் மனதில் கவலைகள் நிறைந்த ஆர்வம் நிறைந்திருந்தது.
அது ஹோட்டலுடன் இணைந்திருக்கும் ஒரு தற்காலிக இருப்பிடம். இடது பக்கமிருந்த கார் ஷெட்டிற்கு வெளியே இருந்த முற்றத்தில் பூச்செடிகள் வைத்து அழகுபடுத்தியிருந்தார்கள். கீழே அமர்ந்து ஓய்வு எடுப்பதற்காக நிழல் தரும் மரங்களுக்குக் கீழே இருக்கைகள் அமைத்திருந்தார்கள்.
நான் கேட்டைக் கடந்ததும், கனகம் அங்கு வந்து என்னை வரவேற்றாள். நாங்கள் ஒன்று சேர்ந்து வராந்தாவரை நடந்தோம். வெயில் முழுமையாக ஆக்கிரமித்திருந்தது. காற்று அசைவே இல்லாமல் இருந்தது. என்னவோ நடக்கப் போகிறது என்பதைப் போன்ற ஒரு தோற்றம். வாசலில் இருந்த மரங்களுக்குக் கீழே அமரலாம் என்று நாங்கள் முடிவெடுத்தோம். இரண்டு மூன்று குஷன்களை கனகம் எடுத்துக் கொண்டு வந்து அந்த சாய்வு பெஞ்சுகளில் வைத்தாள். வேலைக்காரன் ஒரு வட்டவடிவமான மேஜையை எங்களுக்கு முன்னால் கொண்டு வந்து போட்டான். அவன் அதன் விரிப்பை சரி பண்ணிவிட்டு, கீழே விழுந்து கிடக்கும் காய்ந்த இலைகளைப் பொறுக்கி சுற்றுப்புறத்தைச் சுத்தம் செய்துவிட்டோம் என்ற நம்பிக்கையுடன் திரும்பிப் போனான்.
பிறகு நாங்கள் உரையாடலை ஆரம்பித்தோம். கனகம் அந்தக் கடிதத்தைப் பற்றி ஒரு வார்த்தைகூடக் கேட்கவில்லை. நான் கூறவும் இல்லை. எனினும், நாங்கள் இருவரும் அதைப் பற்றித்தான் அப்போது நினைத்துப் கொண்டிருந்தோம் என்பதுதான் உண்மை.
"கடிதத்தைப் படிச்சீங்கள்ல... அதற்குப் பிறகு...?"
அந்தக் கேள்வியைக் கனகம் கேட்கவில்லை. ஆனால், அவளுடைய கண்கள் எப்போதும் அதைத்தான் கேட்டன. உள்ளுக்குள் முழங்கிக் கொண்டிருந்த அந்தக் கேள்வி காரணமாக இருக்கலாம். உரையாடல் இடையில் அவ்வப்போது நின்று கொண்டிருந்தது. எதுவும் கூறுவதற்கு இல்லாமலோ, எல்லாவற்றையும் மறந்துவிட்டது மாதிரியோ நாங்கள் வெறுமனே எதுவும் பேசாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தோம்.
வேலைக்காரன் தேநீரும் பலகாரங்களும் கொண்டு வந்தான்.