
எது எப்படி இருந்தாலும், அன்றைக்கு என்னையும் அவனையும் ஸ்டுடியோவுக்கு அழைத்துக் கொண்டு போய் அந்தப் படத்தை எடுக்கச் செய்தார். அவனுடைய அப்பாவை அவனுக்கு தைரியமாக சுட்டிக் காட்டுவதற்காக..."
நான் அந்தப் படத்தைக் கையில் வாங்கிப் பார்த்தேன். அப்போது எனக்கு எல்லா விஷயங்களும் புரிந்துவிட்டன. சந்தேகம் என்ற சுமையைக் கீழே இறக்கி வைத்துவிட்டு, நான் ஓய்வு எடுப்பதைப் போல் உணர்ந்தேன். இனி அதை நான் நம்பலாம். நான் பார்த்ததைக் கூறலாம். ஹா! என்ன ஒரு நிம்மதி!
கனகத்தின் தோளுடன் ஒட்டிக் கொண்டு அவர் நின்றிருக்கிறார்- காலை நீட்டிக் கொண்டு மேஜைமீது உட்கார்ந்திருக்கும் தன் மகனின் தோள்களைப் பற்றியவாறு! ஆமாம்... அது அவர்தான். இருபத்தாறு வருடங்கள் நான் யாரை மனதில் தியானம் செய்து கொண்டு வாழ்ந்தேனோ, அந்த என்னுடைய அன்பிற்குரிய சந்திரன்!
நான் மீண்டும் மணியின் புகைப்படத்தில் என் கண்களை ஓட்டினேன். அப்படியே சந்திரனின் உரித்து வைத்த முகம்! என்னை விட்டுப் பிரிந்த அதே வயது. நான் அந்த முகத்தை ஞாபகப்படுத்திப் பார்க்க முயற்சித்தேன். வருடங்களைக் கடந்து இறந்த காலத்தை நோக்கி... அங்கு ஒரே கூட்டம்! நளினி, பாலன், ரவி அண்ணன், மாலினி, என் தாய், சந்திரன்... எல்லாமே உடலற்ற தலைகள் மட்டும்! ஒன்றிற்குப் பிறகு இன்னொன்றாக அவை மூடுபனியில்... மங்கலான வெளிச்சத்தில் சுற்றிக் கொண்டிருந்தன. என்ன பயங்கரமான முகங்கள்! யாரும் என்னைப் பார்க்கவில்லை. இன்னொரு வகையில் சொல்வதாக இருந்தால் என்னைப் பார்க்க முடியாத ஏதோ ஒரு உலகத்தில் அவர்கள் இருந்தார்கள். எல்லோரும் இறந்து போயிருக்கிறார்கள். அது நரகமாக இருக்க வேண்டும். யாருக்கும் மோட்சம் கிடைக்கவில்லையே! அவர்கள் என்ன வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள்! அந்த முகங்களில் குருதி காய்ந்து ஒட்டிக் கொண்டிருந்தது. கண்ணீர் வற்றி, இமைகள் வீங்கியிருக்கின்றன. அந்த விழிகள் அசையவில்லை. எல்லோரும் அந்த அளவிற்குக் கடுமையான பாவத்தைச் செய்தவர்களா என்ன? ஹா! அதோ... அது... என் தாய்தான். என் அன்பிற்குரிய தாய்... அம்மா... அம்மா...
நான் கட்டிலில் படுத்திருந்தேன். முகத்தில் அரும்பிய வியர்வைத் துளிகளை கனகம் தன்னுடைய மெல்லிய கைக்குட்டையால் துடைத்து நீக்கினாள். அவள் எனக்கு மெதுவாக வீசிக் கொண்டிருந்தாள். என்னுடைய உடலுக்கு எந்தவித பலமும் இல்லாமல் போயிருந்தது. பேசுவதற்கோ கையையோ காலையோ அசைப்பதற்கோ என்னால் முடியவில்லை. ஆனால், ஒரு விஷயத்தை நான் தெளிவாக நினைத்துப் பார்க்கிறேன். எனக்கு இப்போது எந்தவொரு கவலையும் இல்லை. மென்மையான இதயத்துடன் நான் ஓய்வு எடுக்கிறேன்.
எவ்வளவு நேரம் இப்படியே இருந்தேன் என்று எனக்கே தெரியவில்லை. கடந்து போன சம்பவங்கள் நினைவுக்கு வந்தபோது, நான் வேகமாக எழுந்து உட்கார்ந்தேன். அந்த பலவீனமான நிலையைப் பார்த்து எனக்கே வெட்கமாக இருந்தது. எல்லாவற்றையும் மறந்துவிட்டு தைரியமாக நடந்து கொள்ள வேண்டும் என்று நான் முடிவெடுத்திருந்தேன். பிறகு அவை எல்லாம் எப்படி நடந்தன?
படிப்படியாக எனக்கு எல்லாம் ஞாபகத்தில் வந்தன. என் மூளையும் உடலும் மிகவும் களைத்துப் போய் விட்டிருந்தன. என்னால் எதையும் சிந்தித்துப் பார்க்க முடியாததைப் போல இருந்தது. நான் தனியாளாவும் ஆதரவு இல்லாதவளாகவும் ஆகிவிட்டேனா? எனக்கு முன்னால் வாழ்க்கை வழியைத் தடுத்துக் கொண்டு நின்றிருக்கிறது- ஒரு லட்சியமோ ஒரு கொள்கையோ இல்லாமல்... எனினும், பழைய முட்டாள்தனமான சொர்க்கத்திலிருந்து நான் தப்பித்து விட்டேனே! மிகவும் தாமதித்தாவது... மிகவும்! மிகவும்!
அடுத்த நிமிடம் நான் கனகத்தின் முகத்தைப் பார்த்தேன். முழுமையான இரக்கத்துடன் அவள் என் கைகளை இழுத்துக் தன் மடியில் வைத்துக்கொண்டு ஏதோ சிந்தனையுடன் உட்கார்ந்திருந்தாள். நானும் கனகமும் மட்டுமே இருக்கும் உலகம். மற்றவர்களெல்லாம் என்னை விட்டுப் போய்விட்டார்கள். நான் கனகத்தை இறுகக் கட்டிப் பிடித்துக் கொண்டேன். ஹா! அவள் அழுகிறாளோ?
"தங்கச்சி... நான் இதைக்கூறி இருக்கக்கூடாது. அப்படியென்றால், வாழ்க்கை முழுவதும் நம்பிக்கையிலேயே கழத்திருக்கலாமே! நான் மிகவும் யோசித்தேன். அதைச் சொல்லாமல் விட்டால், அது ஒரு துரோகச் செயல்னு நான் நினைச்சேன். இப்போ நான் கவலைப்படுறேன். என் இரக்கமற்ற இதயத்திற்கு அதன் மகத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. என்னை மன்னித்து விடுங்கள்."
நான் ஏதோ ஞானோதயம் அடைந்ததைப் போல அவளையே உற்றுப் பார்த்தேன். அந்த வார்த்தைகளில் என்னுடைய தாயின் குரலும் கலந்து இருந்ததோ? கனகத்தின் முகத்தில் தெரிந்த முதுமையின் அடையாளங்கள் அப்போது பல மடங்குகள் அதிகமாகியிருப்பதைப் போல் தோன்றின.
அவள் என்ன சொன்னாள்? இறுதியில் சொன்ன வார்த்தைகள் மட்டுமே இப்போது என்னுடைய ஞாபகத்தில் இருக்கின்றன. மன்னிப்பு கொடுக்க வேண்டும் என்றா சொன்னாள்? எனக்கு ஒரு பெரிய நிம்மதியைத் தந்ததற்கா?
"என் சகோதரி, என்னுடைய நன்றியையும் கடமைப்பட்டிருப்பதையும் நான் எப்படி வெளிப்படுத்துவேன்?"
"எல்லாம் சரியாக இருக்கலாம். இருந்தாலும் திடீரென்று இப்படிப்பட்ட விஷயங்களைத் தாங்கிக் கொள்வதற்கு யாருக்கும் தைரியம் இருக்காது எனக்கு எத்தனையோ ஆண்களைத் தெரியும். அவர்களில் யாரையும் விட சந்திரன் நல்ல இதயத்திற்குச் சொந்தக்காரா என்பது எனக்கு நல்லா தெரியும். வெறும் சாதாரணமான ஒரு சம்பவம் என்று கூறுவதைவிட வேற்று மனிதர்களின் பார்வையில் இதில் எதுவுமே இல்லை. ஆனால், சொந்த உயிர்க் குருதி மூலம் தொடர்புள்ளவர்களின் விஷயம் அப்படி அல்ல. சகோதரி, நேற்று உங்களின் அறையில் சந்திரனின் புகைப்படத்தைப் பார்த்தப்போ, நான் என்னை எப்படிக் கட்டுப்படுத்திக் கொண்டேன் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும். உங்களுக்கு இந்த பாதிப்பு அதைவிட அதிகமானது."
"இல்லை. நான் அதிக முக்கியத்துவத்தை இந்த விஷயத்துக்குக் கொடுக்கப் போவது இல்லை. இரண்டு வருடங்கள் மூச்சை அடக்கிக் கொண்டு, அவர் இந்த விஷயங்களையெல்லாம் என்னிடமிருந்து மறைத்திருக்கிறார். ஹா! அதற்காக அவர் அனுபவித்த துயரங்களை நான் நல்லா நினைச்சுப் பார்க்கிறேன். ஒரு மனிதன் ஒரே நேரத்தில் வஞ்சகனாகவும் நல்லவனாகவும் இருப்பது என்றால்...?"
பழைய விஷயங்களைப் பற்றி கனகம் பலவற்றையும் சொன்னாள். சந்திரனுக்கு மிகவும் விருப்பமான அந்தப் பாடலை என் இசைத் தட்டில் இருந்து அவள் கேட்டிருக்கிறாள். ஓவியரான சந்திரனை தன்னுடைய கடிதத்தில் தெரிந்தே மறைத்து வைத்ததைப் பற்றியும் கனகம் பேசினாள்.
நான் அதிகம் தாமதிக்காமல் திரும்பிச் சென்றேன். கனகம் என் விஷயமாக அதிகமாக பயந்ததைப் போல் தோன்றியது.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook