வாழ மறந்த பெண் - Page 20
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6461
அவள் மறுநாள் புறப்படுவதாக இருந்த பயணத்தை மாற்றி வைக்க நினைத்திருப்பதாகச் சொன்னாள். நான் அவளை சமாதானப்படுத்த மிகவும் சிரமப்பட வேண்டியதிருந்தது.
வீட்டிற்குத் திரும்பி வந்தபோது லதா எதற்கோ பிடிவாதம் பிடித்து அழுது கொண்டிருந்தாள். ராஜன் அவளைச் சமாதானப்படுத்த பலனே இல்லாமல் முயற்சித்துக் கொண்டிருந்தார். நளினி பிரிந்து போனதால் தனியாகிவிட்ட மல்லிகா சற்று சீக்கிரமே படுத்துத் தூங்கியிருக்க வேண்டும். சுமா தன் தந்தையின் அருகில் தங்கையின் அழுகையைத் தான் வாங்கிக் கொள்வதைப் போல நின்றிருந்தாள். உறக்கம் அவளுடைய தைரியம் முழுவதையும் இல்லாமல் செய்திருந்தது. நொறுங்கிய ஒரு கப்பலைப் போல குடும்பம் சின்னாபின்னமாகி இருப்பதைப் போல நான் உணர்ந்தேன். அந்த அறையில் வேறு யாரும் இல்லை. நான் ராஜனிடமிருந்து லதாவை வாங்கினேன். என் ஹேண்ட் பேக்கை அவளுடைய கையில் கொடுத்தவுடன், மேகங்களுக்கு மத்தியில் இருக்கும் சந்திரனைப் போல அவள் கண்ணீருக்கு நடுவில் புன்னகைக்க ஆரம்பித்தாள். நான் லதாவை என் அறைக்குக் கொண்டு சென்றேன். சுமாவும் என்னுடன் வந்தாள்.
லதாவிற்கு ஒரு மோட்டார் கார் வேண்டும். பிறகு அதில் வைக்க முடியாத அளவிற்கு ஒரு வீடு நிறைய மிட்டாய் வேண்டும். தந்தை கூறுவதைப் போல எதையும் செய்வதில்லை. அவற்றையெல்லாம் நான் வாங்கிக் கொடுப்பதாகக் கூறியவுடன், அவள் அமைதியாக என் தோளில் சாய்ந்து விட்டாள். சுமாவோ அந்த நேரத்தில் என் படுக்கையில் படுத்துத் தூங்கி விட்டிருந்தாள்.
நான் லதாவை சுமாவிற்கு அருகில் படுக்க வைத்தேன். தூங்கிய பிறகும் அவளுடைய ஏங்கல் நிற்கவில்லை. அழகான அந்த முகங்களைப் பார்த்துக் கொண்டே எந்தவித அசைவும் இல்லாமல் நான் அமர்ந்திருந்தேன். வருடக் கணக்கில் தொடர்ந்து கொண்டிருக்கும் என் சிந்தனைகளைப் பற்றி எனக்கு எந்த நினைவும் இல்லை.
"குழந்தைகள் தூங்கிட்டாங்களா?"
நான் அதிர்ச்சியடைந்து கண் விழித்தேன். ராஜன் அறைக்குள் நுழைந்து மேஜை மீது சாய்ந்து நின்றிருந்தார். வலிய மலர வைத்த புன்னகை தவழ்ந்த அந்த முகம் வாடிய செந்தாமரைப் பூவைப் போல இருந்தது.
நான் அந்தக் கேள்வியைக் கேட்டு எழுந்து நின்றேன். அப்போது எனக்கு அதைப் பற்றி நினைக்க முடியவில்லை. என் சிந்தனைகள் பதினெட்டு வருடங்களுக்கு அப்பால் வேகமாகப் பறந்து சென்றன. அன்று என் அறைக்குள் வந்து பேசிய ராஜனை நான் எனக்கு முன்னால் பார்த்தேன். தலைமுடிகள் கொட்டி, பருமனான உடலுடன் இருக்கும் இப்போதைய தோற்றத்திலிருந்து பிரகாசமான அந்த இளைஞர் எவ்வளவோ வேறுபட்டிருந்தார்! என்னிடமும் அதே மாதிரி மாற்றங்கள் உண்டாகியிருக்க வேண்டும். பதினெட்டு வருடங்கள்! அன்று இரவு நான் எவ்வளவு கவலைப்பட்டேன்! எல்லாம் இப்படித்தான் முடியும் என்பது தெரிந்திருந்தால்...!
"லதா இவ்வளவு சீக்கிரம் உறங்கிட்டாளே! அரைமணி நேரத்துக்கும் அதிகமா நான் அவளுடைய அழுகையை நிறுத்த முயற்சித்தேன்."
ராஜன் தன்னுடைய புன்னகையை மேலும் அதிகமாக்க முயற்சித்தார். நான் பார்த்தபோது, அந்த வாடிய செந்தாமரை வதங்கிக் கீழே விழுந்துவிடுவதைப் போல இருந்தது.
அப்போது முன்னாலிருந்த ஹாலில் இருந்த கடிகாரம் 'க்ணிம், 'க்ணிம்' என்று பத்து முறைகள் ஒலித்தது. நான் நேரத்தைப் பற்றி நினைத்தது அப்போது மட்டும்தான்.
"மாலினியும் அண்ணனும் தூங்கிட்டாங்களா?"- நான் கேட்டேன்.
"ரொம்பவும் முன்னாடியே தூங்கிட்டாங்க. அவங்க நல்லா உறங்கி எவ்வளவு நாட்களாச்சு! நேற்று தூங்கவே இல்லைன்னு நினைக்கிறேன்."
"அப்படின்னா நான் சாப்பிட்டுட்டு வர்றேன். குழந்தைகள் தனியா இருப்பாங்கன்னு நினைச்சுத்தான் நான் இவ்வளவு தாமதமானாலும் வந்தேன்."
ராஜன் அதை ஒத்துக் கொண்டார்.
சாப்பிட்டு முடித்து நான் திரும்பி வந்தபோது, ராஜன் குழந்தைகளுக்கு அருகில் என் படுக்கையில் உட்கார்ந்திருந்தார். சாளரத்துடன் உயர்ந்து நின்றிருந்த சந்திரனைப் பார்த்து அவர் என்னவோ கனவுகள் கண்டு கொண்டிருந்தார். சுற்றிலும் அமைதி நிலவிக் கொண்டிருந்தது. வெளியிலிருந்து பனி அணிந்த குளிர்ந்த காற்று எதையோ நினைத்துக் கொண்டதைப் போல அவ்வப்போது அறைக்குள் நுழைந்து கொண்டிருந்தது.
"நீங்க தூங்கலையா?"
நான் கேட்டேன். அவர் தன் சிந்தனை படர்ந்த முகத்தை உயர்த்தி என்னை வெறுமனே பார்த்தார். தொடர்ந்து லதாவின் நெற்றியில் விழுந்திருந்த சுருள் முடிகளைப் பின்னோக்கி இழுத்து விட்ட அவர் தலை குனிந்து உட்கார்ந்திருந்தார்.
அப்போதும் அந்தப் பழைய துறுதுறுப்பான இளைஞரை நான் அவரிடம் தேடிக் கொண்டிருந்தேன். ராஜனின் பார்வைகள் என் முகத்தைவிட அதிகமாக என் இதயத்தை நோக்கிச் செல்வதைப் போல நான் உணர்ந்தேன்.
"லதா என்னுடன் படுத்திருக்கட்டும். சுமாவை மட்டும் நீங்க கொண்டு போனால் போதும்."
நான் சொன்னேன். ராஜன் அவளைத் தூக்குவதற்காக அடுத்த நிமிடம் படுக்கையை விட்டு எழுந்தார்.
"எனக்கு அவசரம் ஒண்ணுமில்ல... உங்களுக்கு தூக்கம் வர்றப்போ போனால் போதும்."
"எனக்கு தூக்கம் வரல... குழந்தைகள் தூங்கிவிட்ட பிறகு, இனி எதற்காகக் காத்திருக்கணும்? அவர்கள் இவ்வளவு சீக்கிரமா தூங்குறதுன்றது எப்பவும் நடக்கக்கூடிய ஒரு விஷயம் இல்லை. எத்தனை தடவை முயற்சித்தாலும், தாய் இல்லாத குறையை ஒரு தந்தையால் சரி பண்ணவே முடியாது"- அவர் லதாவை தள்ளிப் படுக்க வைத்து, அவளுடைய உடல்மீது போர்வையை இழுத்து விட்டுக் கொண்டே தொடர்ந்து சொன்னார்: "இன்னைக்கு நான் தப்பிச்சிட்டேன். நாளைக்கு வீட்டுக்குப் போயிட்டா என்ன செய்வது என்பதை நினைக்கிறப்போ பயம் வருது."
"அதற்கு ஒரு அம்மாவை இவர்களுக்குக் கொண்டு வரணும்."
நான் அதைச் சொன்னபோது, என் குரலில் நடுக்கம் கலந்திருந்தது. உள்ளுக்குள் தங்கி நின்றிருந்த திடமான முடிவின் கனமும்தான். நான் கூறியதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாததைப் போல ராஜன் என் முகத்தையே பார்த்தார். நான் அந்த வார்த்தைகளை மேலும் உறுதியாகவும் அர்த்தம் நிறைந்ததாகவும் திரும்பச் சொன்னேன்.
அவர் எழுந்து ஆச்சரியத்துடன் என்னையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தார். பல வருடங்களாக அடக்கி வைத்திருந்த ஆசைகள் அந்த இதயத்தைத் தகர்த்துக் கொண்டு வெளியே வருவதைப் போல நான் உணர்ந்தேன்.
காய்ந்த இலைகளில் ஓசை எழுப்பியவாறு மலைக்காற்று வெளியே எங்கோ ஆரவாரித்துக் கொண்டிருந்தது.
"உண்மையாகவா? பாமா, நீ இப்படிக் கூறுவதில் ஏதாவது உண்மை இருக்கிறதா? சொல்லு... உண்மையைச் சொல்லு..."
"நான் எல்லாவற்றையும் சொல்லியாச்சு. இனிமேல் நீங்கதான் முடிவு எடுக்கணும்."