வாழ மறந்த பெண் - Page 16
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6461
அவர் கடிதங்கள் எழுதினார். இடையில் அவ்வப்போது பணமும் அனுப்பி வைப்பார். ஒரு குற்ற உணர்வு அவருடைய கடிதங்களில் நிழலாடிக் கொண்டிருக்கும். தன்னுடைய தவறை வேறு யாரையும்விட அதிகமாக அவர் புரிந்து கொண்டிருக்கிறார் என்பதாக நான் நினைத்தேன். அந்த மனதின் வேதனையை படிப்படியாக என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. தன்னுடைய காதல் உலகத்தை அப்படியே எனக்குத் தர அவரால் முடியவில்லை. என்னை விட்டு ஒரேயடியாக பிரிந்து போவதற்கும், என்னுடன் தொடர்ந்து உறவு கொள்ளவும் மனம் இல்லாமல் அவர் தவித்துக் கொண்டிருந்தார். ஒரு பெண்ணின் வாழ்க்கையில் இப்படிப்பட்ட சோதனைகளை நடத்திப் பார்க்கும் ஆண்களின் இயல்பை நான் நியாயப்படுத்த மாட்டேன். மாறாக, அதற்கு ஒரு கருவியாக இருக்க சம்மதித்த நான் எல்லா குற்றங்களையும் ஏற்றுக் கொள்கிறேன். அவரை அவருடைய வழியில் போகும்படி நான் அனுமதித்தேன். என்னுடைய மற்றும் என் குழந்தையின் நலத்தைத் தவிர, வேறு எதையும் நான் எழுதியதில்லை.
என்னுடைய எதிர்காலம் முற்றிலும் என் கையில்தான் இருக்கிறது என்ற புரிதல் எனக்கு உண்டானது. இன்னொருவரை நம்பியிராத ஒரு வாழ்க்கைக்காக முயற்சி செய்து, அந்த வழியில் என்னுடைய எல்லா சக்திகளையும் மையப்படுத்தினேன். அது ஒரு முழுமையான வெற்றியாக அமைந்தது. வெகு வேகமாக ஒரு பாடகி என்ற வகையில் நான் மிகவும் புகழ்பெற்றவளாக ஆனேன். வாழ்வதற்கு மட்டும் பணத்தையும் சம்பாதித்தேன். வானொலி ரசிகர்களுக்கு என்னுடைய குரல் நாளடைவில் மிகவும் பழகிப் போன ஒன்றாகவும் கொஞ்சம் பிடித்தமானதாகவும் ஆனது.
மூன்று வருடங்கள் கடந்தோடின. சிறிதும் எதிர்பாராத ஒரு சூழ்நிலையில் ஒருநாள் அவர் என் வீட்டிற்கு வந்தார். என்ன காரணத்தாலோ, எனக்கு சிறிதுகூட மகிழ்ச்சி உண்டாகவில்லை. நான் நீண்ட காலமாகவே அவரை மறப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தேன். அந்தக் கடுமையான முயற்சியைத் தகர்க்கக்கூடிய ஒரு சம்பவமாகவே நாங்கள் மீண்டும் சந்தித்த அந்தச் சம்பவம் எனக்குத் தோன்றியது. நாங்கள் ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டோம். ஒருவரையொருவர் நலம் விசாரித்துக் கொண்டோம். அந்த நிமிடங்கள் மிகவும் வேகமாக முடிந்துவிடக் கூடாதா என்பது மட்டுமே என்னுடைய விருப்பமாக இருந்தது. அவரும் மகிழ்ச்சியுடன் இருந்ததாகத் தெரியவில்லை.
சகோதரி, அவர் எதற்காக வந்திருந்தார் தெரியுமா? மிகுந்த தயக்கத்துடன், மெதுவான குரலில் அவர் அதைச் சொன்னார். தன்னுடைய திருமணத்திற்கு என் அனுமதியை வாங்குவதற்காக வந்திருக்கிறாராம்!
ஏதாவது தடைகள் கூறு வேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை. என்னுடைய வழியை விட்டு அந்த மனிதர் நீங்கிப் போவது குறித்து எனக்கு சந்தோஷமே. நான் சிறிதும் தயங்காமல் சம்மதத்தையும் ஆசீர்வாதத்தையும் தந்தேன். அத்துடன் அந்த உறவு நிரந்தரமாக முடிவுக்கு வந்தது.
அந்த மறு சந்திப்பிற்கு என் மனம் மாறியதற்கு அதையும் தாண்டிய பங்கு இருக்கிறது. அவரை இரண்டாவதாக ஒருமுறையவாது நான் பார்க்காமல் இருந்திருந்தால், இன்னொரு ஆணுடன் என்னை ஏதாவதொரு வகையில் சம்பந்தப்படுத்த என்னால் முடிந்திருக்காது என்பதுதான் என்னுடைய உறுதியான கருத்து. அவர்மீதும் அதே வழியில் காதலிக்கும் ஆண் இனத்தின் மீதும் வைத்திருந்த மதிப்பு என்னைப் பொறுத்த வரையில், அந்த சாயங்கால வேளையில் முடிவுக்கு வந்துவிட்டது.
முடிந்தவரையில் சந்தோஷமாக வாழவேண்டும் என்றும்; மணியை ஏதாவதொரு நல்ல நிலையை அடையும்படிச் செய்ய வேண்டும் என்றும் நான் தீர்மானித்தேன். அன்றிலிருந்து இன்றுவரை உள்ள என்னுடைய வாழ்க்கைக்கு அதைத் தவிர வேறு லட்சியம் எதுவும் இல்லை. அவனுக்கு ஐந்து வயது நடக்கும்போது, நான் சென்னைக்கு இருப்பிடத்தை மாற்றினேன். திரைப்படங்களில் நடிப்பதற்கு எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன. என்ன காரணத்தாலோ ஒரு பின்னணிப் பாடகியாக வரவேண்டும் என்றுதான் எனக்கு விருப்பம் உண்டானது.
ஒரு திருமணத்தைப் பற்றி அதற்குப் பிறகு நான் அதிகமாக நினைத்ததேயில்லை. பழைய கதைகளை மறைத்து வைத்துக் கொண்டு, ஒருவனை வாழ்க்கை முழுவதும் ஏமாற்றவோ, அதைத் திறந்து கூறி ஒருவனுடைய இரக்கத்தையும் அன்பையும் பெறவோ எனக்கு விருப்பமில்லை. ஸ்டுடியோவிலுள்ள வாழ்க்கையில் உண்மையாகவே அதற்கான சந்தர்ப்பங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட தடவை என்னைத் தேடி வந்தன. அதை வேண்டாம் என்று மறுப்பதிலும், அதன் மூலம் ஆணை ஏமாற்றத்திற்குள்ளாக்குவதிலும் எனக்கு மிகுந்த ஒரு ஆனந்தம் தோன்றியது. யாரிடமும் நம்பிக்கை கொண்டவளாக இருக்க வேண்டும் என்ற பொறுப்பு எதுவும் இல்லாமலிருந்ததால், மனதிற்குப் பிடித்த ஒரு இளைஞனுடன் சேர்ந்து என்னுடைய ஓய்வு நேரங்களில் இருந்த தனிமையை விரட்டியடிக்க நான் சிறிதும் தயங்கவில்லை. கிடைத்த பொருளாதார உதவிகளை வேண்டாம் என்று கூறவும் இல்லை. ஆனால், இவை அனைத்தும் சிறிது காலத்திற்கு முன்பு நடந்தவை.
இப்போது எனக்கு என்னுடைய மகனின் நலனில் மட்டுமே கவனம் இருக்கிறது. அவனையும் சிறிது அறிமுகப்படுத்திவிட்டால், இந்தக் கடிதத்தை முடிவுக்குக் கொண்டு வந்துவிடலாம் என்று நினைக்கிறேன். சிறு வயதாக இருக்கும்போதே டாக்டராக வர வேண்டும் என்பதுதான் அவனுடைய விருப்பமாக இருந்தது. என்னை எடுத்துக் கொண்டால், அவனை சிவில் சர்வீஸில் உயர்ந்த பதவியில் உட்கார வைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பமாக இருந்தது. ஆனால், அவனுடைய விருப்பங்களுக்கு நான் ஒரு தடையாக இருக்க நினைக்கவில்லை. நான் முன்பே கூறியது மாதிரி, இப்போது அவன் கல்கத்தாவில் ப்ராக்டீஸ் பண்ணிக் கொண்டிருக்கிறான். ஆரம்பமாக இருந்தாலும், நிறைய ப்ராக்டீஸ் உள்ள ஒரு டாக்டராக மணி இருக்கிறான்.
என் வாழ்க்கையை எடை போட்டுப் பார்ப்பதில் எனக்கு சிறிதும் விருப்பமில்லை சகோதரி. எனினும் உங்களுடைய கதை என்னை மிகவும் ஆச்சரியப்பட வைத்துவிட்டது. காதலித்த ஒருவனுக்காக இத்தனை நீண்ட காலம் காத்திருக்க முடியுமா? இது ஒரு தியாகம் என்னும் பட்சம், இதனால் யாருக்கு என்ன கிடைக்கிறது என்று நான் யோசிக்காமல் இல்லை. அது வேறு விஷயம். நாம் இப்போது மிகவும் முக்கியமாக அறிமுகமாகிவிட்டிருக்கிறோம். பெண்ணின் புனிதத் தன்மையை அதன் விளிம்பு எல்லைகள் வரை பின் தொடர்ந்திருக்கும் சகோதரியாகிய உங்களுக்கு இந்த கனகத்தைச் சந்திப்பதில் ஆட்சேபனை எதுவும் இருக்காது என்று நான் நம்பலாமா? சாயங்காலம் நாம் ஒருவரையொருவர் சந்திப்போம் என்ற எதிர்பார்ப்புடன்-
சகோதரியின் நம்பிக்கைக்குரிய
கனகம்.