வாழ மறந்த பெண் - Page 13
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6461
எச்சில் இலைகளும், சாப்பிட்ட காய்கறிகளின் மிச்சங்களும் விழுந்து சுத்தமில்லாமல் இருப்பதை சுத்தம் செய்யச் சொல்லியும் பாத்திரங்களையும் மற்ற பொருட்களையும் திரும்பக் கொடுக்கும்படிக் கூறவும் செய்த மாலினி வெளியே எல்லா இடங்களிலும் சுறுசுறுப்பாக நடந்து திரிந்தாள். அண்ணனுக்கும் அதிகமான வேலைகள் இருந்தன. ஆமாம்... அவர் தான் அவை எல்லாவற்றையும் செய்ய வேண்டும். நான் படுக்கையின் விரிப்பைச் சரி பண்ணி விரித்துவிட்டு, கட்டிலில் உட்கார்ந்தேன். எட்டு மணி இன்னும் ஆகவில்லை. சாளரத்தின் வழியாக இளம் வெயில் உள்ளே நுழைந்து படுக்கைமீது விழுந்து கொண்டிருந்தது. நான் எழுந்து சாளரத்தின் திரைச்சீலையைச் சரி செய்துவிட்டு, திரும்பவும் வந்து உட்கார்ந்தேன். தொடர்ந்து கால்களை எடுத்துப் படுக்கையில் வைத்துக் கொண்டு, சாதாரணமாக படுத்தவாறு உறையைப் பிரித்துக் கடிதத்தைக் கையில் எடுத்தேன்.
சற்று நீளமாக இருந்த அந்தக் கடிதத்தை நான் இங்கு அப்படியே கூறிவிடுவது என்று முடிவு செய்தேன். கனகத்தின் சொந்தக் கதையை மிகவும் சுருக்கமாக எழுத என்னால் முடியும். ஆனால், அப்படிச் செய்யும்போது, நான் அந்தச் சகோதரிக்கு மிகப் பெரிய தவறு இழைத்ததாக ஆகிவிடும். காரணம்- என்னால் கொஞ்சம் கூட ஒத்துக் கொள்ள முடியாத பல விஷயங்கள் அதில் இருக்கின்றன. அதை அவளுடைய வார்த்தைகளில் இல்லாமல் எழுதும்போது, அவளுக்கு நீதி செய்யவில்லை என்பதைப் போன்ற ஒரு சூழ்நிலை வரலாம். அதை அப்படியே விட்டுவிடலாம் என்றால், இந்தக் குறிப்பு முழுமையற்றதாகிவிடும் என்று நான் பயப்படுகிறேன். உண்மையாகவே அது நல்லதாக இருக்காது. என் இதயத்தில் இருப்பதைப் போலவே வாழ்க்கைக் கதையிலும் அது மறையாமல் இருந்துவிட்டுப் போகட்டும்.
கனகத்தின் கடிதம்
அன்புள்ள சகோதரி,
இப்போது இரவு பன்னிரண்டு மணி தாண்டிவிட்டது. ஒரு மணி நேரத்திற்கு முன்னால் நாம் ஒருவரை விட்டு ஒருவர் பிரியும்போது, இப்படி ஒரு கடிதம் எழுதுவதைப் பற்றி நான் சிறிது கூட நினைத்திருக்கவில்லை. எனினும் இரவு நீண்ட நேரம் வளர்ந்திருக்கும் இந்த நேரத்தில் நான் ஒரு நீளமான கடிதத்தை எழுதுவதற்கு இறங்கியிருக்கிறேன். நாளை நாம் ஒருவரையொருவர் சந்திப்பதற்கு முன்னால் நீங்கள் என்னைச் சிறிதாவது தெரிந்திருக்க வேண்டுமல்லவா?
சகோதரி, இந்த விஷயங்களையெல்லாம் உங்களிடம் நேரில் கூற வேண்டும் என்றுதான் நான் நினைத்திருந்தேன். அந்த விஷயத்தில் எனக்கு எந்தவிதத் தயக்கமும் இல்லை. ஆனால், உங்களிடம் மிகவும் உண்மையானவளாக இருக்க வேண்டும் என்று விருப்பப்படும் அதே நேரத்தில் நான் கூறுகிறேன்... நான் பலவற்றையும் மறைக்க வேண்டியதிருக்கிறது. அவற்றை ஒரு கடிதத்தில் எழுதும்போது, மிகவும் வசதியாக அதைச் செய்ய முடியும் என்பதால்தான் முக்கியமாக நான் இந்தக் கடிதத்தையே எழுதுகிறேன்.
திருமணமாகாமலே ஒரு தாயாக ஆகியிருக்கும் நான் திருமணமாகாமலே ஒரு நம்பிக்கைகுரிய பத்தினிப் பெண்ணின் கடமைகளை முழுமையாகச் செய்து கொண்டிருக்கும் சகோதரிக்கு முன்னால் உண்மையாகவே ஒரு விலைமாதுதான். (இந்த வரிகள் உங்களை ஆச்சரிப்படச் செய்கின்றனவா?) ஆனால், இந்தக் கடிதத்தை எழுதும்போது அப்படியொரு குற்ற உணர்வு என்னை ஆக்கிரமித்து சிறிதும் விரக்தியடையச் செய்யவில்லை. வாழ்க்கையில் ஒவ்வொன்றுக்கும் நாம் தரும் முக்கியத்துவங்கள் எப்படிப்பட்டதாக இருந்தாலும், கடந்து போன அனுபவங்கள் உண்மைகளாகவே இருக்கும். அவற்றை நல்லது என்றோ கெட்டது என்றோ நாம் குறிப்பிடலாம் அவ்வளவுதான். கண்ணுக்குத் தெரியாத- மிகவும் ஒரே சாயலில் இருக்கும் ஒரே கண்ணியிலிருந்து கிளம்பி நாம் இருவரும் இரண்டு வழிகளில் பிரிந்து சென்றிருக்கிறோம். இந்த வெவ்வேறு வழிகளை ஒற்றுமைப்படுத்தி எடைபோட நான் முயற்சிக்கவில்லை. ஒன்றே ஒன்றை மட்டுமே இந்த விஷயத்தில் என்னால் கூற முடிகிறது. விளக்கங்களுக்குச் செல்லாமல் என் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக ஆராய்ந்து பார்த்தபோது எனக்கு தோன்றுவது இதுதான். நான் கவலைப்படவோ கோபப்படவோ இல்லை.
தான் செய்வது எதுவும் தவறானது என்பதை ஒத்துக் கொள்ளாமல் இருப்பது யாருக்கும் மிகவும் எளிதான ஒரு விஷயமே. தூக்குமரத்திற்கு அடியில் கூட கவலைப்படாதவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். நான் அந்த அளவிற்கு எழுதவில்லை. பலவற்றையும் செய்யாமல் இருந்திருக்க வேண்டும். பலவற்றையும் வேண்டாம் என்று ஒதுக்கியிருக்க வேண்டும். ஆனால், வாழவேண்டும் என்பது என்னுடைய சொந்த பொறுப்பாகவும் தேவையாகவும் ஆனபோது, நான் என்னுடைய வழிகளில் முன்னோக்கி நடந்தேன். சரியான பாதைகள் வழியாக இயற்கையாகவே நடந்து செல்ல முடிந்தவர்கள் என்னைப் பார்த்து கேலி பண்ணிய போதெல்லாம் என்னால் புன்னகைக்க மட்டுமே முடிந்தது. கடவுளின் சிலைக்கு முன்னால் தலை குப்புற விழுவதற்குக் காரணமாக இருந்தபடிக்கு அப்பால் நின்று கொண்டு பிரார்த்தனை செய்யும் ஒரு பக்தனைவிட, அதிகமாகப் பெருமைப்பட வேறெதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அவ்வளவுதான்.
ஓ! நான் இன்னும் என் கடிதத்தை ஆரம்பிக்கவே இல்லை. சகோதரி, நான் ஒரு ஆணை மனப்பூர்வமாகக் காதலித்து, அவருக்கு என்னை சமர்ப்பணம் செய்தபோது, என் இதயம் முழுமையான சந்தோஷத்தில் மூழ்கியது. அந்த நினைவு உணர்ச்சிமயமானதும் குளிர்ச்சி நிறைந்ததும் என்பதுதான் உண்மை. இளமைக்கே இருக்கக் கூடிய எல்லா வகையான இனிய அனுபவங்களும் எவ்வளவு தெளிவாகக் கண்களுக்கு முன்னால் தெரிகின்றன! அது இன்றிலிருந்து முப்பத்தோரு வருடங்களுக்கு முன்பு நடந்தது. அன்று நான் பதினெட்டே வயது கொண்ட ஒரு இளம்பெண்ணாக இருந்தேன். என்னுடைய அப்போதைய திறமைகளைப் பற்றி நான் பின்னால் பலமுறை நினைத்துப் பார்த்திருக்கிறேன். எதுவுமே தெரியாத ஒரு சிறு பெண்ணாக இருந்திருக்கிறேனோ நான்? நிச்சயமாக அப்படி இல்லை. காதலுக்கும் ஏமாறுதலுக்கும் இடையில் இருக்கும் இடைவெளி எவ்வளவு குறைவானது என்பதைத் தெளிவாகவே நான் தெரிந்திருந்தேன். எனினும், நான் காதலித்தேன். ஏமாற்றப்படவும் செய்தேன். எனக்குப் பல நேரங்களில் தோன்றியிருக்கிறது. நம்முடைய மிகப்பெரிய ஆபத்துக்களை நாமே இழுத்துக் கொண்டு வந்து நம்மீது போட்டுக் கொள்கிறோமோ என்று. சகோதரி, நீங்கள்?
பழைய நினைவுகளைத் திரும்பவும் தட்டி எழுப்பிக் கொண்டு வருகிறபோது உணர்ச்சிகள் சிந்தனையின் ஒருமுகத் தன்மையை முழுமையாக பாதிக்கின்றன. நான் அனுசரித்துச் செல்ல முயற்சிக்கிறேன்.
ஆமாம்... என்னுடைய சொந்தக் கதையை முப்பது வருடங்களுக்கு முன்னாலிருந்து ஆரம்பிக்க வேண்டியதிருக்கிறது. பொருளாதாரப் பிரச்சினைகளால் கல்லூரிப் படிப்பின் முதல் வருடத்தைக் கூட முடிக்க முடியாமல் நான் தஞ்சாவூரில் இருக்கும் என் வீட்டில் இருந்தேன். வீட்டில் வயதான தாய் மட்டுமே இருந்தாள். எங்களைக் காப்பாற்றுவதற்கு என்று இருந்த ஒரே ஒரு உயிரான என்னுடைய அண்ணன் அப்போது தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் புகழ்பெற்ற ஒரு நாடக நடிகராக இருந்தார்.