அதனால் அவள்... - Page 14
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6621
இனிமை இழைகின்ற கனவுகள் தோன்றிட
மந்தார மலரே, நீ மயங்கு என் மடிதனிலே.’
சரிதாவின் கவிதை அடிகளை உதடுகள் உச்சரித்தன. அதன் கடைசி சீர் மட்டும் வாயை விட்டு வெளிவராமல் தொண்டைக்குள்ளேயே நின்றுவிட்டது.
பல வகைப்பட்ட உணர்ச்சிகள் முகத்தில் ஒளிரும்படி அவளை யார் இவ்வளவு அழகாகப் படைத்திருப்பார்கள்? மேஜையின் மேல் கையுன்றிச் சிறிது நேரம் சிலை போல் நின்றாள் சரிதா.
மெலிந்த உருவம், கன்னத்திலும் மூக்கின் கீழ்ப்பகுதியிலும் சின்னஞ்சிறிய ரோமங்கள். உயர்ந்து நிற்கும் மார்பு.
உள்ளத்தின் அடித்தளத்தில் ஏதோ ஒரு வகையான உணர்வு தோன்றிப்பின் சிறிது நேரத்தில் மறைந்து போயிற்று. அந்த உணர்வு எப்படிப்பட்டதாக இருக்க முடியும்? ஒரு வேளை இன்னதெனக் குறிப்பிட முடியாத உயர்ந்ததோர் உணர்வாக இருக்குமோ?
ஓணம் விடுமுறையில் அவள் எழுதியிருந்தாள். குண்டு குண்டான எழுத்துக்களில், அவளுக்கே உரிய அழகான நடையில். ஒரு கவி உள்ளம் அந்த எழுத்தின் ஒவ்வொரு பகுதியிலும் வெளிப்படுவதை என்னால் உணர முடிந்தது.
“நாம் இருவரும் சந்தித்த அந்த முதல் சந்திப்பு என் உள்ளத்தில் ஒரு புயலையே உருவாக்கிவிட்டது. என்னுடைய உள்ளச் சுவர்களுக்கு எப்படிப்பட்ட கொடுங்காற்றையும் வென்று நின்றிடக் கூடிய வல்லமை இருக்கிறதென்று நான் இதுவரை நம்பியிருந்தேன். ஆனால் அப்படியில்லை என்பதை இப்போது நான் உணர்கிறேன்.”
ஒரு வகையான குற்ற உணர்வுடன் நான் கடிதத்தை வாசித்தேன். மனம் ஒரே நிலையில் இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருந்தது. அவளுடைய உள்ளத்துள் அந்தக் கொடுங்காற்றை- புயலை- உருவாக்கியதற்கான காரணகர்த்தா முழுமையாக நான்தானே? சிறிதுகூட மீற முடியாத வகையில் என்னைக் கை விலங்குகளும், கால் தளைகளும் பிணைத்திருப்பதை அப்போதுதான் முதன் முறையாக தெளிவாக உணர்ந்தேன். அந்த உண்மையை நான் ஏன் சரிதாவிடம் கூறாமல் மறைத்திருக்க வேண்டும்? அதை மறைத்ததனால் அதன் விளைவு எந்தத் திசையில் திரும்பிவிட்டது? ஐயோ! நான் செய்தது எவ்வளவு பெரிய தவறு!
அன்று சுமார் ஐந்து மணி இருக்கும். நூல் நிலையத்திலிருந்து படியிறங்கி வந்து கொண்டிருந்தேன். நான் வேகமாக நடந்து செல்ல முற்படும்போது, எனக்கு நேர் எதிரே சரிதா மட்டும் தனியாக வருவது தெரிந்தது. அவளை நேருக்கு நேர் கண்டதும் எனது இதயம் வேகமாக அடிக்கத் தொடங்கியது. இதயத்தை முழுமையாகத் திறந்து அவளுடன் பேசிவிட வேண்டும் என்று நானும் எத்தனை நாட்களாக எண்ணிக் கொண்டிருக்கிறேன்! தெரிந்தோ, தெரியாமலோ நாமாக ஏன் ஒருவருடைய மனதில் வீணான ஆசைகள் அரும்ப வழி செய்து கொடுக்க வேண்டும்?
இரண்டு பேரும் புன்முறுவல் செய்தோம். எந்தவிதக் கபடமும் இல்லாத உண்மையான சிரிப்பு அவளுடையது.
குற்ற மனப்பான்மை கலந்து வரத் தாழ்வான குரலில் நான், “கடிதம் கிடைத்தது. பதில் எழுத முடியவில்லை. மன்னிக்க வேண்டும்” என்றேன்.
“பரவாயில்லை... மன்னிப்பா? எதற்கு மன்னிப்பு? நான் உங்களை பதில் போடும்படி சொல்லவில்லையே! கடிதத்தில் கூட நான் என் வீட்டு முகவரியை எழுதியிருக்கிறேனா என்று பாருங்கள்!”
நிமிஷங்கள் ஸ்தம்பித்துப் போய்விட்டனவோ என்பது போன்ற ஓர் உள்ளுணர்வு! சரிதாவிடம் என்னைப் பற்றிய எல்லா விவரங்களையும் இப்போதே முழுமையாகக் கூறிவிட்டால் என்ன? இனியும் அவற்றைக் கூறாமல் மறைத்துக் கொண்டு காலம் தாழ்த்திக் கொண்டிருப்பது என்னைப் பொறுத்தவரை நல்லதாகப்படவில்லையே! ஆனால், இதுமாதிரியான திறந்த இடத்தில் நின்று கொண்டு அதிக நேரம் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை யாரேனும் காண நேர்ந்தால்?... நாளைக்கே கல்லூரி முழுவதும் இதுபற்றிய பேச்சாகத்தானே இருக்கும்? மதில்களிலே மாணவர்கள் சாக் பீஸாலும், கரியாலும் கண்டதையெல்லாம் எழுதிவிடுவார்களே!
“என்ன யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள்? வீட்டுக்குச் செல்ல நேரமாகிவிட்டது இல்லையா?”
“நோ... நோ! அதெல்லாம் ஒன்றுமில்லை!”
“என் செல்லக் குழந்தைகளை வரும்போதே அறைக்குள் நன்றாகப் பூட்டி வைத்துவிட்டுத்தான் வருவது வழக்கம” என்றாள் அவள்.
என் நெற்றியில் ஏற்படும் சுருக்கங்களை சரிதா கவனித்திருக்க வேண்டும்.
“நூற்றுக்கணக்கான பொம்மைகள் என்னிடம் இருக்கின்றன என் அறையில். அவைதாம் என் குழந்தைகள்...”
“குழந்தைகள் இரண்டு அல்லது மூன்றுக்குள் இருந்தால்தானே நல்லது? நீங்கள் பாட்டுக்கு நூற்றுக்கணக்கில்...”
இரண்டு பேரும் விழுந்து விழுந்து சிரித்தோம். சம்பளத்தின் ஒரு பகுதியைப் புத்தகம் வாங்குவதற்காகவும், பொம்மை வாங்குவதற்காகவும் என்றே ஒதுக்கி வைத்து விடுகிறாளாம் சரிதா.
“சிறிது தூரம் நடந்துவிட்டு வரலாம் என்று வந்தேன். உடன் வருவதற்கு ஓர் ஆள்கூடக் கிடைக்கவில்லை. என்னுடன் தங்கியிருக்கும் நண்பர்கள் எல்லோரும் சினிமாவுக்குப் போய்விட்டார்கள். என்னுடன் வருகிறீர்களா, கொஞ்ச தூரம்? அப்படியே காலாற நடந்துவிட்டு வருவோமே!”
“ஓகே!... போவோமே!” என்று ஒப்புக் கொண்டாள் சரிதா. ‘ஐயோ! நான் வரவில்லை. சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன்’ என்று அவள் என்னுடன் வர மறுப்பாள் என்று எதிர்பார்ப்பேன். ஆனால் நான் நினைத்த மாதிரி நடக்கவில்லை!
கடற்கரையை ஒட்டி இருவரும் நடந்தோம். மணலின்மேல் வெள்ளை வெளேரென்று கிடந்த முத்துச் சிப்பிகளை அவள் பொறுக்கிக் கொண்டே வந்தாள். அவளுக்கு விருப்பமில்லாத சில சிப்பிகளை, என்ன நினைத்தாளோ தெரியவில்லை, மீண்டும் கடல்நீருக்குள்ளேயே எறிந்துவிட்டாள். அவளுடைய உடலை ஓர் அங்குலம் விடாமல் வெள்ளைநிறச் சேலை மூடிக்கொண்டிருந்தது. அழகான தும்பை மலர் போன்றிருந்தாள். அவள் எப்போதும் அப்படிப்பட்ட பருத்தி நூலாடைகளைத்தான் உடுத்துவாளாம். அதன் கீழ்ப்பகுதியில் மணல் ஒட்டிக் கொண்டிருந்தது. கடலை நோக்கித் தலையை நீட்டியபடி கிடந்த பாறையின் மறைவில் இரண்டு பேரும் அமர்ந்தோம். என்ன பேச வேண்டும் என்றுகூடத் தோன்றவில்லை. அதற்கான துணிவு, கடல் காற்றோடு சேர்ந்து பறந்து போய்விட்டதோ? சின்னஞ் சிறிய தீவுக்கு அப்பால் மலைச்சரிவில் ஒரே அந்திச் சிவப்பு. பகல் இன்னும் சிறிது நேரத்தில் விடைபெறப் போகிறது. பகல் சென்றதும் இரவு வந்துவிடும். அதாவது, பகலின் மரணத்தில், இரவின் ஜனனம்!
என் மோதிரத்தில் பொறித்திருந்த ஆங்கில எழுத்தைத் தன் விரலால் சுட்டிக்காட்டிக் கேள்வி கேட்பது போல் என்னைப் பார்த்தாள் சரிதா.
“என் மனைவியின் பெயரின் முதல் எழுத்து” என்றேன்.
“இந்த பந்தம் என் மோதிர விரலை மட்டுமில்லை. கையையும் காலையும், உள்ளத்தையுங்கூடக் கட்டிப் போட்டுவிட்டது!” என்றேன்.
ஒரு சிப்பியைக் கடல் நீரில் எறிந்த அவள், புன்னகை அதரங்களில் தவழக் கேட்டாள்.
“எனக்கு அது தெரியாதென்று நினைத்தீர்களா? அந்த பந்தத்தை அறுத்துவிடும்படி சொல்வேன் என்று எதிர்பார்த்தீர்களா? நிச்சயம் நான் அதைச் செய்ய மாட்டேன்!” என்றாள் அவள்.