அதனால் அவள்...
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6616
கலெக்டரின் அலுவலகத்திலிருந்து சிறைச்சாலைக்கு...
பின்பு அங்கிருந்து தூக்கு மேடைக்கு...!
நீதிமன்றத்தில் மயான அமைதி நிலவிக் கொண்டிருந்தது. அங்கே கூடியிருந்த மனிதர்களில் ஒருவரேனும் சற்று வாயைத் திறக்க வேண்டுமே! ஊஹூம்... அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் இதோ இந்த அறிவிப்பு.
“ஸ்ரீ தேவராஜ மேனன் ஐ.ஏ.எஸ். தம் மனைவியைக் கொலை செய்ததாகச் சந்தேகத்துக்கு இடமின்றித் தெரிய வருவதால், அவருக்கு இந்த நீதிமன்றம் தூக்குத் தண்டனை அளிக்கும்படி தீர்ப்புக்கூறுகிறது” ... sentence to be hanged by the neck till he is dead… (கழுத்தில் சுருக்கிட்டு, இறக்கும்வரை தூக்கிலிடும்படி தண்டனை விதிக்கப்படுகிறது.)
அதில் அடங்கியிருந்த ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு வெடிகுண்டு போல் தோன்றியது. எங்கே அவை என் உள்ளத்தைத் தாக்கி நுழைந்துவிடுமோ என்று கூட அஞ்சினேன்.
ஐ.ஏ.எஸ்... இந்தப் பட்டத்தைக் கூறும்போது அந்த நீதிபதியின் குரலில்தான் எவ்வளவு அழுத்தம்!
நீதிமன்றத்தில் ஒரே மயான அமைதி நிலவிக் கொண்டிருந்த அந்த வேளையில், அந்த மவுனத்தின் கொடுமையைத் தாங்கிக் கொள்ளச் சக்தி இல்லாததாலோ என்னவோ தமக்கென்றே உரிய அறைக்குள் நுழைந்துகொண்டார் நீதிபதி. நீதிமன்றத்தில் கூடியிருந்தவர்களின் கண்களும் என்னைத்தான் வெறித்து வெறித்து நோக்கிக் கொண்டிருந்தன. அந்தக் கண்களில் காணும் கொடூரத்துக்குத்தான் எவ்வளவு சக்தி!
போலீஸ்காரர்களின் காலணிச்சப்தம் கேட்டபோதுதான் நான் இருக்கும் சூழல் பற்றிய எண்ணமே எனக்கு வந்தது.
நீதிமன்றத்தில் ஒரே நிசப்தம்.
போலீஸ்காரர்கள் புடைசூழ்ந்து வர நான் போலீஸ் வண்டியில் ஏறியபோது என் முகத்தைப் படம் பிடித்த கேமராக்கள்தாம் எத்தனை! இத்தனை புகைப்பட நிபுணர்கள் எங்கிருந்துதான் வந்தார்களோ?
ஸார்... ப்ளீஸ்... தலையைக் கொஞ்சம் வலது பக்கம் சாயுங்கள்! ப்ளீஸ், ப்ளீஸ் ஸ்மைல் ஸார்... இன்று யாரும் என்னிடம் இப்படிக் கூறவில்லை... நன்றி!
முன்பு என் திருமணம் முடிந்தபோது தம்பதிகளான என்னையும் ஸ்வப்னாவையும் சுற்றி எத்தனை எத்தனை ஃபோட்டோக்காரர்கள்! அன்று, “கொஞ்சம் நெருங்கி, ப்ளீஸ் இன்னும் கொஞ்சம்...” என்று நரைத்த தலைமுடியும் நீண்ட தாடியும் வைத்திருந்த அந்த ஃபோட்டோக்காரர் ஸ்வப்னாவுடன் சற்று நெருங்கி நிற்கும்படி கூறியபோது எனக்கு சிறிது கூச்சந்தான்! அப்போது பந்தலில் கூடியிருந்தோரின் கேலிச் சிரிப்பைக் கேட்க வேண்டுமே! கடைசியில் நெருங்கி நின்றதென்னவோ ஸ்வப்னாதான்!
“குட்! தாங்க்யூ, ஸிஸ்டர்!”
அந்த ஆளைப் பொறுத்தவரை எல்லாப் பெண்களுமே சகோதரிகள்தாம்!
அது நடந்து எத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கும்?
எட்டு வருஷகாலம் ஆகிவிட்டது!
இனி என்னைப் புகைப்படம் எடுக்க யாரால் முடியும்? அப்படி நினைத்தாலும் எடுக்கத்தான் முடியுமா? சிறைச்சாலைக்குள்ளேதான் புகைப்படம் எடுக்க முடியாதே!
சிறைச்சாலையின் வாசலில்தான் எவ்வளவு கூட்டம்! நான் இதுவரை அணிந்திருந்த ஆடைகளை அகற்றி, அதிகாரி கொடுத்த சிறை உடுப்புகளை அணிந்தேன். திருமண நாளன்று அணிந்த மோதிரமும் கடிகாரமுமே என் உடலில் இருந்த விலையுயர்ந்த பொருள்கள்! மோதிரத்தைக் கழற்றத்தான் பலமான போராட்டமே செய்ய நேர்ந்தது. அதை விரல்களில் அணிந்து கிட்டத்தட்ட பதினொரு வருஷங்கள் அல்லவா ஆகிவிட்டன! நிச்சயதார்த்தத்தன்று குத்துவிளக்கைச் சாட்சியாக வைத்து விரல்களில் அணிந்த மோதிரம் அது! மோதிர விரலில் எஞ்சி நின்ற தழும்பு என்னையே வெறித்து நோக்குவதுபோல் ஓர் உணர்வு; காக்கி ஆடையணிந்த அந்தச் சிறை அதிகாரி அந்த மோதிரத்தில் செதுக்கப்பட்டிருந்த 'S' என்ற ஆங்கில எழுத்தையும், என்னையும் மாறிமாறிப் பார்த்தார்.
மகாபாவி நான்! இந்த மோதிரத்தை என் விரல்களில் அணிவித்த அவளையே அல்லவா கொன்றுவிட்டேன். சிறை அதிகாரியின் பார்வையின் பொருள் கூட ஒரு வேளை இதுவாகத்தான் இருக்குமோ? என் உதடுகளில் வறண்ட சிரிப்பு ஒன்று மலர்ந்ததுபோல் ஓர் உள்ளுணர்வு!
காக்கி உடையணிந்த அந்த அதிகாரி என் கடிகாரத்தையே சிறிது நேரம் உற்றுப் பார்த்துவிட்டுப் பின்பு என்ன நினைத்தாரோ, அதைக் காதோரம் வைத்து மெதுவாகக் குலுக்கிப் பார்த்தார். ஒரு வேளை கடிகாரம் ஓடாமல் நின்று விட்டதோ? அந்தக் கடிகாரத்தை கையில் கட்டித்தான் எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன! இப்போதுதான் அதன் ஓட்டம் நின்றிருக்க வேண்டும். என் சின்னஞ்சிறு மகள் பிந்துமோள் மட்டும் அதைக் கண்டிருந்தால் என்ன சொல்லியிருப்பாள்?
“டாடீ, சிறிய முள் பதினொன்றிலும் பெரிய முள் ரெண்டிலும் நிக்குதே!” என்று கேட்டிருப்பாளோ, முன்பெல்லாம் கேட்பது போல்?
“டாடீ என்று என்னை அழைக்காதே மகளே, அப்பா என்று கூப்பிடு! அதுதான் நன்றாக இருக்கிறது.” - இது நான்.
“அப்படி வேண்டாம். என் ஸ்வீட்டி! ‘டாடீ’ என்றே கூப்பிடு.” - இது ஸ்வப்னா.
எப்படிக் கூப்பிட்டால் நல்லது என்று தெரியாமல் என்னையும் தாயையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருப்பாள் பிந்து.
“நான் ‘மம்மி’ இல்லையா! சொல்லு டார்லிங், டாடீ என்று அழைத்தால் போதுமென்று. ‘அப்பா’, ‘அம்மா’ என்று அழைப்பதா? சே! சே! ஷேம் தேவு (வேலையாள்) இருக்கிறானே, அவனுடைய மகன் தன் தாயை ‘அம்மா’ என்கிறான்; அவன் கூப்பிடுவதுபோல் நீ கூப்பிடுவதாவது!”
உண்மைதான்...
தேவுவின் மகன் - ஓர் ஏழையின் மகன் - தந்தையையும் தாயையும் அழைப்பதுபோல் ஸ்வப்னாவின்- ஒரு லட்சாதிகாரிணியின் - மகள் தன் தந்தையையும் தாயையும் அழைப்பதாவது!
‘ஷேம்’தான்!
மாதர் சங்கத்திலிருந்து தினமும் வெகு நேரம் கழிந்த பிறகே வீட்டுக்கு வருவாள் ஸ்வப்னா. நான் மேஜை மீது குவிந்த ஃபைல்களை ஒவ்வொன்றாக எடுத்துப்பார்த்து கொண்டிருப்பேன். வாசலையே நோக்கி அமர்ந்திருக்கும் பிந்து கண்களை மெல்லச் செருகிக்கொண்டு கொட்டாவி விடுவாள்.
“எனக்கு தூக்கம் வருது, டாடீ...”
“மணி என்ன ஆகிறது என்று பார், மகளே.”
என்னுடைய பழைய கடிகாரம் பெரும்பாலும் ஓடாது. ஸ்வப்னாவின் தந்தை துபாயிலிருந்து வாங்கி வந்திருந்த அந்தச் சுவர்கடிகாரம் பெரும்பாலும் நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கும். வரவேற்பு அறையில் இருக்கும் அந்தக் கடிகாரத்தில்போய் மணி பார்த்துவிட்டு வருவாள் என் அன்பு மகள்.
“டாடீ! சிறிய முள் பதினொன்றிலும் பெரிய முள் ரெண்டிலும்.”
“வா மகளே! நான் கதை சொல்லுகிறேன்; கேட்டுக் கொண்டே தூங்கிவிட வேண்டும். என்ன?”
படியில் ஏறிப் படுக்கையறைக்குப் போக முற்படும்போது, தேவுவின் ஏக்கம் நிறைந்த விழிகள் எங்களையே நோக்கிக் கொண்டிருக்கும். பாவம், என்ன இருந்தாலும் அவனும் ஒரு குடும்பத் தலைவனில்லையா?
“போலீஸ்காரனும் திருடனும் கதை சொல்லுங்க, டாடீ!”