அதனால் அவள்... - Page 3
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6619
கொலை நடந்ததை நேரில் கண்டவர் ஒருவர்கூட இல்லையென்றாலும் கண்டெடுத்த சான்றுகளும் சூழ்நிலையும், கொலை செய்தவர் அவருடைய கணவரான பிரதிவாதியே என்ற உண்மையை மிக மிகத் தெளிவாக எவ்விதச் சந்தேகத்துக்கும் இடமின்றி நிரூபிக்கின்றன. திருமதி மேனனின் உடலை மருத்துவப் பரிசோதனை செய்தபோது அவர் கர்ப்பமாக இருந்த உண்மை புலனாகியது. இதன்மூலம் திருமதி மேனனை மட்டுமின்றி, அவரது வயிற்றில் வளர்ந்த நான்கு மாத வளர்ச்சி பெற்ற குழந்தையையும் கொன்ற குற்றத்துக்குப் பிரதிவாதி ஆளாகிறார். முழுக்க முழுக்க மிருகத்தனமாகச் செய்யப்பட்ட இந்தக் கொலை வழக்கில் இந்தியக் குற்றப்பிரிவுச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மிக மிகக் கடுமையான தண்டனை அளித்துத்தான் ஆக வேண்டியிருக்கிறது. குற்றவாளிகள் யாராயிருந்தாலும், சட்டத்தின் முன் எல்லோரும் சமமானவரே...”
பப்ளிக் ப்ராஸிக்யூட்டர் சர்க்கார் தரப்பு வழக்கை எவ்வளவு அழகாக நடத்தினான். சசாங்கனை பப்ளிக் ப்ராஸிக்யூட்டராக நியமிக்க முழுமுதற்காரணமாக இருந்தவனே நான்தான். பப்ளிக் ப்ராஸிக்யூட்டராக நியமிக்க வேண்டியவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலில் சசாங்கனின் பெயர் இல்லை. மாவட்டத்திலேயே சிறந்த வழக்கறிஞன் என்ற தகுதி சசாங்கனுக்கே உண்டு என்று செஷன்ஸ் நீதிபதியும் கூறினார். விளைவு, அரசாங்கத்திடம் சமர்ப்பித்த பட்டியலில் முதல் பெயரே சசாங்கனுடையதுதான். நியமனம் செய்யப்பட்டதும் அவனேதான். எனக்குக் கிடைத்த தண்டனையை நினைத்து, சட்ட மந்திரிக்கு மிக்க மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கும்.
கலெக்டருக்கு இந்த தண்டனை வேண்டியதுதான் என்பார் அவர்.
விதியின் செங்கனலில் வெந்து சிறகடிக்கும் விட்டில்கள் என்று மனிதர்களைக் குறித்து ஒரு புலவன் பாடியிருப்பது கூட நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை நினைத்துத்தான் இருக்குமோ?
ஒருவேளை, இதுவே தெய்வ தண்டனையாக- தெய்வ புருஷரை பழித்ததற்கான தண்டனையாக இருக்குமோ?
அந்த ‘ஸ்வாமிஜி’ நகரத்துக்கு வருகை தந்தபோது அவரை வரவேற்கக் குழுமியிருந்த பக்தர்களின் கூட்டத்தில் ஸ்வப்னாவும் இருந்தாள். அவளுடைய முகத்தைக் கண்டதும், தம் சுட்டு விரலால் அவளைத் தமக்கு அருகில் வரும்படி சைகை காட்டினார் ‘ஸ்வாமிஜி’. அவர் நகரத்தை விட்டுச் செல்லும்வரை இரவு, பகல் எந்த நேரமும் அவள் ‘ஸ்வாமிஜி’யின் அருகிலேயே கிடந்தாள். முதல் நாளில் அவளைக் கண்டவுடன், அவளது ‘பாப்’ செய்யப்பட்ட முடியையும், பளபளப்பு மிக்க கழுத்தையும், முதுகையும் மெதுவாகத் தொட்டு, “பெண்ணே! உன் துயரத்தை என்னால் உணர முடிகிறது. என் வருகையால் உன் துன்பம் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும்” என்றார்.
‘ஸ்வாமிஜி’யுடன் பழகியபோது ஏற்பட்ட இன்பம் தரக்கூடிய நினைவலைகளை என்னிடம் அவள் விவரித்தபோது, எனக்குச் சிரிப்புத்தான் வந்தது. நான் சிரிப்பதைக் கண்டு, அவளுக்கு ஏற்பட்ட சினத்தைப் பார்க்க வேண்டுமே!
“சாட்சாத் பகவானின் அவதாரமான ‘ஸ்வாமிஜி’யைப் பரிகாசம் செய்கிறீர்கள். அதற்கான தண்டனை உங்களுக்கு நிச்சயம் கிடைக்கத்தான் போகிறது. வேண்டுமானால் பார்த்துக் கொள்ளுங்கள்” என்றாள்.
அப்போது பிந்து பிறந்து விட்டாளா? ஊஹூம்... அவள் இப்போது என்ன செய்துகொண்டிருப்பாள்? ‘இந்திர ப்ரஸ்த’த்தில் குளிர்ப்பதனம் செய்த விசாலமான அறை ஒன்றில் அமர்ந்து, வெளிநாடுகளிலிருந்து வாங்கி வந்த பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருப்பாளோ? நூலினால் இணைத்துக் கட்டி ஆட்டுவிக்கும் பொம்மலாட்டத்தை என் அன்பு மகள் பார்த்திருக்கிறாளா? நன்றாக ஞாபகமில்லை. சென்ற நான்கு ஆண்டுகாலமும், மகளே, நானும் நீயும் ஒன்றாகவே அல்லவா வாழ்ந்துகொண்டிருக்கிறோம். மகளே, அப்பாவை உன் கரங்களால் சுற்றி வளைத்துக் கொண்டே தூங்கு. அப்பா புதிய ஒரு கதை சொல்லப்போகிறேன். அதாவது ஒரு பொம்மையைப் பற்றிய கதை.
பல வருஷங்களுக்கு முன் ஒரு ஊரில் ஒரு பெரிய பணக்கார வீட்டுப் பெண் இருந்தாள். ஒரு நாள் அவள் ஒரு பொம்மையை விலைக்கு வாங்கினாள். அந்தப் பொம்மையை அவள் தன் படுக்கையறையில் வைத்துப் பத்திரமாகக் காத்து வந்தாள். அந்தப் பொம்மையை ஒரு நூலுடன் இணைத்து அவள் நூலை ஆட்டும் சமயங்களில் எல்லாம் நூலின் சலனத்துக்கேற்ப அந்தப் பொம்மையும் ஆடும். அந்தப் பொம்மைக்கு உயிர்கூட இருந்தது தெரியுமா? மகளே, நீ அகலிகையின் கதையை இதற்கு முன் கேட்டிருக்கிறாயா? இல்லையா? உண்மைதான். உனக்குப் புராணக் கதைகளில் ஒன்றுகூடத் தெரியாதே! முகமூடிக் கதைகளும், ‘டார்ஜான்’ கதைகளுமல்லவா நீ கேட்டிருப்பாய்? நாளாக ஆக அந்தப் பொம்மை அவளுடைய சொல்லைக் கேட்க மறுத்துவிட்டது. உயிருள்ள பொம்மையில்லையா? அதற்கும் உணர்ச்சி என்ற ஒன்று இராதா? கடைசியில், பொம்மையை அவள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அந்தப் பொம்மையைக் கண்டாலே, அவளுக்கு அவ்வளவு வெறுப்பு! வேதனையுடன் மேலும் பல வருஷங்கள்வரை அந்தப் பொம்மை அவளுடனேதான் தன் வாழ்வைக் கழித்தது. ஒரு நாள் பார்த்தால், அந்தப் பெண் இறந்து கிடக்கிறாள். மகளே, அவளை யார் கொன்றிருப்பார்கள்?”
“அந்தப் பொம்மையாகத்தான் இருக்கும். இல்லையா, டாடீ...?”
கெட்டிக்காரி என் மகள்!
என் மகள் ஒரு பெரிய வக்கீல் ஆவாள்.
“மகளுக்கு அந்தப் பொம்மை வேண்டும். இல்லையா?”
“எனக்கு அது வேண்டாம் டாடீ! அதை ஒரு கயிற்றில் கட்டி ஒரு இடத்தில் தொங்கவிட்டு விடுவோம். அங்கேயே கிடந்து சாகட்டும். இல்லையா, டாடீ?”
இவ்வளவும் என் மன ஓட்டம்!
அங்கே நிற்பது யார்? ரோந்து சுற்றும் அதிகாரியாக இருக்குமா? நீங்கள் ஏன் என் அறையையே வெறித்து வெறித்துப் பார்க்கிறீர்கள்? ஒரு வேளை, நான் உறங்கிவிட்டேனா இல்லையா என்று பார்க்கிறீர்களா? அல்லது நான் தப்பி ஓடிவிட்டேனா இல்லையா என்று உறுதி செய்து கொள்கிறீர்களா? ஒரு வேளை, தற்கொலை செய்து கொள்ளத்தான் முயன்று கொண்டிருப்பேன் என்று நினைத்திருப்பீர்கள், இல்லையா?
நான் யாரென்று உங்களுக்குத் தெரியுமா? ஆறு மாதத்துக்கு முன்வரை மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த ஸ்ரீ தேவராஜ மேனன், ஐ.ஏ.எஸ். நான்தான்!
தற்கொலை செய்துகொள்ளவா? நானா? உங்களுக்கென்ன பைத்தியமா பிடித்துவிட்டது? உயிரற்ற சவம் தற்கொலை செய்து கொள்வதா? இந்த உண்மைகூடவா உங்களுக்குத் தெரியவில்லை? உங்களுக்குப் போய் இந்த வேலையைக் கொடுத்திருக்கிறார்களே, அவர்களைச் சொல்ல வேண்டும்.
ஏய், சிறைக் காவலனே! அந்த ஆளை இழுத்துக் கொண்டு போகிறாயா இல்லையா? எட்டு வருஷங்களுக்கு முன் நான் இறந்தது உங்களுக்கெல்லாம் தெரியாதா என்ன? நீங்கள் அந்தச் செய்தியைப் பத்திரிகைகளில் பார்க்கவில்லையா? முதல் பக்கத்திலேயே என் புகைப்படத்தைப் போட்டிருந்தார்களே! என் கழுத்தைச் சுற்றியிருந்தது என்னவென நீங்கள் நினைத்தீர்கள்? கொலைக் கயிறு ஐயா, கொலைக் கயிறு!