அதனால் அவள்... - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6619
“என்னைப் பாம்பு தீண்டிவிட்டது. சும்மா விளையாட்டுக்குச் சொல்லவில்லை, ஜானு. உண்மையைத்தான் சொல்லுகிறேன். ஆனால் ஒரு விநோதம் பார்; என்னைக் கடித்த அந்தப் பாம்பு மறுநிமிஷமே செத்து விழுந்து விட்டது. இதிலிருந்து என்ன தெரிகிறது? பாம்பைவிட என்னிடம்தான் விஷம் என்பதுதானே!”
ஆனால், என் தாய் சிரிக்கவில்லை. பொழுது புலர்வதற்கு முன்பே என் தந்தையின் உயிர் உலகை விட்டுப் பிரிந்துவிட்டது. வெளுத்துக் காணும் அவருடைய உடல் இளநீல வண்ணத்தில் காட்சியளித்தது. தூய வெள்ளைத் துணியால் மூடப்பட்டிருந்தது தந்தையின் உடல். குத்துவிளக்கில் தள்ளாடிக் கொண்டிருந்தன தீ நாளங்கள்.
முன்பெல்லாம் என் தாயின் முகத்தில் காணும் ஒளி எங்கேதான் பறந்து போய்விட்டதோ, தெரியவில்லை. அவள் தினமும் எதையோ நினைத்துக் கொண்டு ஒரு மெழுகுவர்த்தியைப் போல் உருகியவண்ணம் இருந்தாள்.
‘வாழவேண்டும், வாழ்ந்துதான் ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் எனக்கு. தேவனைக் கரையேற்றி விட வேண்டியாவது நான் இந்த உலகத்தில் வாழ்ந்துதானே ஆக வேண்டும்?’ என் தாயின் உள்ளத்தின் அடித்தளத்தில் ஏங்கிக்கிடந்த ஒரே ஒரு வாழ்க்கையின் நோக்கமும் அது ஒன்றாகத்தான் இருந்தது.
அழகிலோ உடல் நலத்திலோ என் தாய்க்கு ஒரு குறைவும் உண்டாகவில்லை; என் தந்தை இறக்கும்போது அவளுக்கு வயது என்ன இருக்கும்? இருபத்து நான்கு இருபத்தைந்து இருக்குமா?
அவளை மறுமணம் செய்து கொள்ளும்படி எத்தனை பேர் தூண்டியிருக்கிறார்கள்! அவர்கள் கூறியபடியெல்லாம் இருந்திருந்தால், அவள் எவ்வளவு மகிழ்ச்சியுடன் வாழ்ந்திருப்பாள்!
எல்லாம் எதற்காக? என் ஒருவனுக்காகத்தானே?
தாயின் நெஞ்சத்து உஷ்ணத்தைச் சிறிதேனும் சுவைத்து உறங்கும் பெரும் வாய்ப்பு என் அன்பு மகள் பிந்துவுக்குக் கிடைக்கவில்லையே! தாய்ப்பாலைச் சுவைக்கும் பாக்கியங்கூட அவளுக்கு குறைந்த நாட்களுக்கே கிடைத்திருக்கிறது. பிந்து பிறந்து சரியாக நாற்பது நாட்கள்கூட ஆகவில்லை. ‘இந்திர ப்ரஸ்த’த்தினுள் நுழைந்து சென்றபோது மடியில் பிந்துவைக் கிடத்தி எதையோ கரண்டியில் ஊட்டிக் கொண்டிருந்த ஆயாதான் என் கண்ணில் பட்டாள்.
“குழந்தைக்கு இந்தப் பருவத்தில் தாய்ப்பாலல்லவா கொடுக்க வேண்டும்!” என்னையும் மீறி ஆயாவிடம் இந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டேன். ஏதோ ஒரு பெரிய குற்றம் செய்துவிட்டதுபோல் ஆயா தன் முன் இருந்த வெள்ளிக் கிண்ணத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் இதே கேள்வியை நான் ஸ்வப்னாவிடம் கேட்டபோது, அவளுடைய வாயிலிருந்து அடுத்த நிமிஷமே அதற்கான பதில் வந்துவிட்டது.
“அது வேண்டுமானால் உங்களுடைய பட்டிக்காட்டுப் பழக்கமாக இருக்கலாம். குழந்தைகள் சப்பினால் என் மார்பின் நிலை என்ன ஆவது? உடம்பின் அழகே கெட்டுப்போய்விடுமே! தாய்ப்பால் கொடுத்தே குழந்தைகளைப் பழக்கப்படுத்திவிடுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆள் இல்லாவிட்டால் பால் கேட்டு அழுது தொலைக்கும்! ‘லேடீஸ் க்ளப்’போய்விடுகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். நான் பேசுகிறபோது அந்த மாதிரி சமயங்களில் குழந்தையையும் இடுப்பில் இடுக்கிக் கொண்டு திரிய முடியுமா என்ன? அதனால்தான் இந்தத் தலைவலியெல்லாம் வேண்டாமென்று முடிவு கட்டிவிட்டேன். இந்த மாதிரியான கெட்ட பழக்கங்கள் குழந்தைக்கு ஏற்படக் கூடாது என்றுதான் இப்படிச் செய்தேன்.”
நான்கு ஆண்டுகாலம் தாய்ப்பாலைச் சுவைத்து வளர்ந்த பட்டிக்காட்டுக்காரனான என் ஆசை எவ்வளவு சீக்கிரம் நிராசையாகப் போய்விட்டது.
“அன்னையின் அன்புப் பாலைச் சுவைத்தால்தான் குழந்தைகள் பூர்ண வளர்ச்சியை அடையும்” என்று பாடிய வள்ளத்தோள் எங்கே? என் மனைவி ஸ்வப்னா எங்கே?
அடுத்த நாள் உச்சிப்பொழுது- சாப்பிட வீட்டினுள் காலடி எடுத்து வைத்தபோது, அங்கே கட்டிலில் படுத்துக் கொண்டு புரண்டுகொண்டிருந்தாள் ஸ்வப்னா.
பால் கட்டிக்கொண்டு அதனால் மார்பு வீங்கி அவதிப்பட்டுக் கொண்டிருந்தாள். மனசினுள் என்னவோ தோன்றவே நான் சிரித்துவிட்டேன்.
உடனே அவளுக்கு வந்த கோபத்தைப் பார்க்க வேண்டுமே!
“ம். சிரிக்கவா சிரிக்கீறர்கள்? அப்பப்பா, என்ன வேதனை! உயிரே போய்விடும்போல் இருக்கிறதே! கொஞ்சமும் இரக்கம் இல்லாமல்... சேசே!” என்றாள்.
குளியலறையில் நுழைந்த நான் கையையும் முகத்தையும் குளிர்ந்த நீரினால் கழுவிக்கொண்டேன்.
வாழ்வில் பலவற்றை இழந்து, பலவற்றைத் தியாகம் செய்து, வாழ்ந்த என் தாயின் நினைவு வந்தது.
பி.ஏ. இறுதித்தேர்வு எழுதி முடித்து நான் ஊருக்குச் சென்றிருந்தபோது அம்மாவின் உடம்பைப் பார்த்ததும் திடுக்கிட்டேன். முன்பு அவளுடைய கண்களில் இருந்த ஒளி எங்கே போய் மறைந்தது? கன்னத்தில் முன்பு காணப்பட்ட சதைப் பிடிப்பு எங்கே? ஐயோ, முகம் முழுவதுந்தான் எத்தனை கோடுகள், எத்தனை சுருக்கங்கள்! பரிவு நிரம்பிய அந்தப் புன்சிரிப்பு மட்டும் அந்த உதடுகளிலிருந்து மலராமல் இருந்திருந்தால் நிச்சயம் வாசற்படியில் நின்று கொண்டிருப்பது என் தாய் என்று யார் கூறினாலும் ஏற்றுக் கொண்டிருக்கவே மாட்டேன். தலை முடியில் என்ன மாற்றம்! ஒரேயடியாக நரைத்துப் போய்விட்டது! என்னைத் தன் தோளோடு சேர்த்துப் பிடித்துத் தேம்பித் தேம்பி அழலானாள். இந்த மாதிரி முன் ஒரு போதும் அவள் நடந்து கொண்டதை நான் பார்த்ததில்லை.
“அம்மா, உனக்கு என்ன நேர்ந்துவிட்டது?”
“ஒன்றுமில்லையடா, மகனே ஒன்றுமில்லை!”
அவளுடைய உடலில் ஏதோ வேதனை அவளை இப்படி உருக்குலைத்துவிட்டது என்பது மட்டும் உண்மை.
துக்கம் என் தொண்டையை அடைத்துவிட்டதால், என்னால் பதிலே பேச முடியவில்லை.
“மகனே, நீ சீக்கிரம் போய்க் குளித்துவிட்டு வா.”
மிளகையும், துளசி இலைகளையும் போட்டுக் காய்ச்சிய தேங்காய் எண்ணெயை அம்மா என் தலையில் தேய்த்துக் கொண்டிருந்தபோது, என் மனம் மீண்டும் மீண்டும் அவளது ஆரோக்கியத்தைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தது. அம்மாவுக்கு உடலில் என்ன குறை இருக்கும்? எங்களோடு கூடவே இருக்கும் பாரு அம்மாவிடம் கேட்டால் ஒரு வேளை எல்லாம் தெரியுமோ?
அடுத்த நாள் மத்தியான வேளை. அம்மா குறட்டை விட்டபடி உறங்கிக் கொண்டிருந்தாள். இதைக் கண்ட எனக்கு அதிக வியப்பே உண்டாயிற்று. இதற்கு முன் அம்மா இப்படி உறங்கி நான் கண்டதேயில்லை.
“பகலில் உறக்கம் கொள்வதைப் போன்ற கெட்ட பழக்கம் வேறில்லை.” இதுதான் என் தாயின் நிரந்தரக் கொள்கை. பகவதி கோவிலில் திருவிழாக் காலங்களில் இரவு முழுவதும் கதகளி நடைபெறும். எப்படியும் அது முடியும் போது சூரியன் உதித்துவிடும். இரவு முழுவதும் சிறிதும் கண்மூட மாட்டாள். வீட்டுக்குத் திரும்பி வந்தாலும் என் தாய் கொஞ்சமாவது கண் மூடவேண்டுமே! ஊஹூம், அதுதான் இல்லை.
“தாடகை... பயங்கரி... அவளைக் கண்டுதான் எவ்வளவு நடுக்கமெடுக்கிறது!”