அதனால் அவள்... - Page 13
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6621
“அம்மா, பேசாமல் என்னுடன் வந்துவிடு. ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொள்வோம். வேண்டுமானால் பாருவம்மாவுக்குங்கூட நம்முடனேயே வந்து விடட்டும்” என்றேன்.
“வாடகை வீட்டிலேயே ஒரு வேளை என் உயிர் பிரிந்துவிட்டால்? வேண்டாமடா, மகனே, வேண்டாம்! இந்த வீட்டையும், தோட்டத்தையும் விட்டு நான் ஒருபோதும் வரமாட்டேன். இங்கே உன் அப்பாவின் சுடலைக்கு அடுத்தே என்னையும் சுடவேண்டும்” என்றாள் அம்மா.
இதயத்தையே சுக்கு நூறாகக் கிழித்தெறியக்கூடிய சக்தி படைத்த வார்த்தைகள்! கண்கள் கலங்கிய கோலத்துடன், அம்மா முன் இருந்த இடத்தை விட்டு எழுந்து நின்றாள்.
“வருத்தப்படாதே, மகனே! அம்மா என்ற முறையில் எதை எதையோ நினைத்துப் பேசிவிட்டேன்.”
என் முகத்தை நேராகப் பார்க்காமலே இந்த வார்த்தைகளைக் கூறியபடி உள்ளே சென்றுவிட்டாள் அம்மா.
சிறிதுநேரம் சென்றது. சமையலறைக்குள் நான் சென்றபோது அங்கே கலங்கிய கண்களை ஆடையின் நுனியால் துடைத்தவாறு நின்றுகொண்டிருந்தாள் அம்மா.
“சே! சே! என்ன புகை பார்த்தாயா, அப்பப்பா, கண்ணெல்லாம் எரிகிறது! ஒரே சூடாக இருக்கும்போல் இருக்கிறது.”
அம்மா ஏதோ பழைய கால நினைவுகளை எண்ணிக் கொண்டு கண்கலங்கியிருக்க வேண்டும் என்ற உண்மை பிடிபட எனக்கு அதிக நேரமாகவில்லை... அந்தப் புகை, என்பது எதைக் குறிப்பதாக இருக்கும்? அன்பு மகனின் எதிர்காலம் இருண்டுவிடுமோ என்ற கவலையாக இருக்குமோ?
வேதனை தரக்கூடிய நினைவுகள்! மனதின் ஒரு மூலையில் இவை கிடந்து எரிந்து சாம்பலாகக் கூடாதா? இந்த நினைவலைகளை யாருடன் பங்கிட்டுக் கொள்ள முடியும்? யாராவது ஒருவருடன் இதயத்தை முழுமையாகத் திறந்து, அங்கே அடைந்து கிடக்கிற எத்தனையோ ஆயிரம் தாபங்களைக் கொஞ்சமும் மறைக்காமல் வார்த்தை ரூபத்தில் வெளிக்கொணர்ந்தால்...? வருஷக்கணக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளில் சிலர் தங்களைச் சுற்றி வளைத்திருக்கிற கற்சுவர்களுடன் பேசித் தங்கள் அபிலாஷைகளைத் தீர்த்துக் கொள்வார்கள் என்று எங்கேயோ படித்த ஞாபகம்.
“ஆதி நதியது. அலையெழுப்பியோடும்
அந்தக் கரைகளின் உறுதி போகாது!”
ஆசிரியராக நான் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, வாழ்க்கையின் ஒவ்வொரு விநாடியும் அன்னையின் உடல்நலம் குறித்த சிந்தனைதான்.
எத்தனை நல்ல மாணாக்கர்கள்! அன்பே வடிவான எத்தனை ஆசிரிய நண்பர்கள்!
நல்ல ஒரு நடிகனாகவும் நான் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, என்னிடமே எனக்கு வியப்பு மூண்டது.
நான் அதுவரை நடித்ததில்லை. ஆசிரியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தயாரித்த அந்தச் சிறிய நாடகத்தின் கதாநாயகன் பாத்திரத்தை ஏற்று நடிக்கும்படி கல்லூரித் தலைவர் என்னைக் கேட்டுக் கொண்டபோது நான் உண்மையிலேயே மறுக்கத்தான் செய்தேன். ஆனால், அவர் விட வேண்டுமே!
நடிப்பு என்னைப் பொறுத்தவரை இதுவரை பழகிக் கொள்ளாத ஒன்று என்பது உண்மை. ஒரு வேளை வாழ்க்கையில் எனக்கு ஏற்பட்டிருக்கிற தோல்விக்கான காரணங்கூட அதுவாகத்தான் இருக்குமோ?
எனக்கு மட்டும் நடிக்கத் தெரிந்திருந்தால் நான் ஏன் இந்தச் சிறைச்சாலையின் இரும்புக் கம்பிகளுக்குள் அடைந்து கிடக்கப்போகிறேன்?
நாடகத்தில் என் மனைவியாக நடித்தவர் சரிதா. அவளை என்னிடம் முதன் முதலில் அறிமுகப்படுத்தி வைத்தவர் மலையாளப் பேராசிரியர். அவருடைய அறைக்குள் நான் நுழைந்தபோது, பேராசிரியரிடம் அவள் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள். அவளுடைய பேச்சு தெளிவாகக் காதில் விழவில்லை. அதில் என்ன நகைச்சுவை இருந்ததோ தெரியவில்லை. விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தார். பேராசிரியர். பேச்சு என்னைப் பற்றியதாக இருக்குமோ?
என் மன ஓட்டத்தை அறிந்தவர்போல் பேராசிரியர், “உட்காருங்கள், தேவன். இவர்தான் மலையாள லெக்சரர் குமாரி சரிதா. ஆள் கொஞ்சம் துடுக்கு புரிகிறதா? அதாவது, தப்பாக நினைத்துவிடாதீர்கள்; கவிதை எழுதும் ஆற்றல் உண்டு. பயப்படாதீர்கள் புதுமாதிரி கவிதை ஒன்றுமில்லை. பழைய ரீதிதான்! புனைப்பெயரில் எழுதுவது வழக்கம்” என்றார்.
அவளுடைய புனைப்பெயர் என்னவென்று அறியும் ஆவலுடன் தலையைத் தூக்கிய நான் அவளது முகத்தையே பார்த்தேன். பளபளவென்று மின்னிக் கொண்டிருந்த அந்தக் கண்களில் குழந்தையொன்றின் குறுகுறுப்பு!
“ஸ்வப்னா!”
பேராசிரியர்தான் அப்படிச் சொன்னார்.
எனக்கு ஒரே வியப்பு!
என் மனைவியின் பெயரும் அதுதானே? ‘ஸ்வப்னா’வின் கவிதைகள் என்றால் என்னை மிகவும் கவர்ந்திருக்கின்றன. சரிதாவுடன் தனியாக அவளுடைய கவித்துவம் குறித்து ஏதாவது பேச வேண்டும் என்று என்னுள் ஒரு வகையான கிளர்ச்சி! ஆனால், நான் ஒன்று பேசப் போய் அவள் அதைக் கேலிப் பொருளாக எண்ணிவிட்டால்?
இனிமையான உரையாடல் முடிவற்றுத் தொடர்ந்து கொண்டிருந்தது.
அப்போது மணி அடித்தது. மணியின் ஓசை கேட்டதும், தம் இருக்கையிலிருந்து எழுந்தார் பேராசிரியர்.
“தேவனுக்கு க்ளாஸ் இருக்கிறதா இப்பொழுது?”
“இல்லை.”
“சரிதாவுக்கு?”
“இல்லை.”
“அப்படியானால் நீங்கள் இருவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருங்கள். எனக்கு இப்போது மூன்றாம் ஆண்டு மெயின் க்ளாஸ் இருக்கிறது.”
உரூபின் ‘சுந்தரிகளும் சுந்தரன்மாரும்’ நாவலைக் கையில் இடுக்கியவாறே போனார் பேராசிரியர்.
தன்னைவிடப் பலசாலியான ஒரு மல்யுத்த வீரனைச் சண்டை நடக்கும் மேடையில் பய உணர்ச்சியுடன் சந்திக்கும் ஒரு சாதாரண மல்யுத்த வீரனின் மனநிலையில் நான் என்ன பேசுவதென்று தெரியாமல் எனக்குள்ளேயே ஒரு போராட்டத்தை மூட்டிவிட்டுக் கொண்டு அமர்ந்திருக்கிறேன். நேரம் ஆக ஆகத்தான் பேசுவதற்கான துணிவு எனக்குப் பிறந்தது. அலையைப் போல் சாந்தமும் சலனமும் மாறி மாறி வந்து கொண்டிருந்தன, உள்ளத்தின் அடித்தளத்தில்.
சரிதாவின் மையிட்ட வளைந்த கரிய புருவங்களையும், கனவுகள் தண்டவமாடிக் கொண்டிருக்கும் நீல நயனங்களையும் கண் இமைக்காமல் நோக்கினேன். அதரங்களில் புன்னகை மிளிர அவள் கேட்டாள்.
“ம். ஏன் என்னை அப்படிப் பார்க்கிறீர்கள்?”
“ஒரு கவியினுடைய இதயத்தின் ஆழத்தை அளந்து கொண்டிருக்கிறேன்.”
“அளந்துவிட்டீர்களா?”
பதில் கூறவில்லை.
ஏதோ ஒரு வகையான உணர்வினால் உந்தப்பட்ட என் நெஞ்சம் உயர்ந்து தாழ்ந்து கொண்டிருந்தது.
“கவியும் கலைஞனும் ஒரே வகைப்பட்டவர்கள்தான்; ஒரே உணர்ச்சிக்கு அடிமையானவர்கள்தான் பி.ஏ. மாணவர்களுக்கு மகாகவி ஷேக்ஸ்பியரின் ‘டெம்பெஸ்ட்’ நாடகத்தை நீங்கள் நடத்திக் கொண்டிருப்பதை இன்று காலையில் வராந்தாவில் சிறிது நேரம் நின்றபடி கவனித்துக் கொண்டிருந்தேன். இது தவறாக இருந்தால், தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள். பாடம் சொல்லிக் கொடுக்கும் அனுபவம் இதற்கு முன்பே உங்களுக்கு இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.”
அவளுடைய பேச்சில் காணப்பட்ட பணிவும், அடக்கமும் என்னை வெகுவாகக் கவர்ந்தன.
அடுத்த மணி அடிக்கும் வரை நாங்கள் பேசிக் கொண்டே இருந்தோம். பேச்சின் சுவாரஸ்யத்தில் நேரம் போனதைக்கூட இருவரும் அறியவில்லை.