![சிவந்த நிலம் sivanda nilam](/images/sivantha-nilam-novel.jpg)
"நம்ம காங்கிரஸ் என்ன சொல்லுது. சீக்கிரமா சொல்லு..."
"காங்கிரஸ் சொல்றது இதுதான். விவசாயிகள் கைப்பற்றிய நிலங்களை ஜமீன்தார்மார்களுக்குத் திருப்பித் தந்திடணும். ஏனென்றால் ஜமீன்தார்மார்களும் விவசாயிகளும் சகோதரர்கள். சகோதரனின் உரிமையை இன்னொரு சகோதரன் தட்டிப் பறிப்பது நியாயம் இல்ல. அதனால் விவசாயிகள்கிட்ட வேண்டிக்கிறது என்னன்னா, அவர்கள் நிலத்தை ஜமீன்தார்மார்களுக்குத் திருப்பித் தந்திடணும்..."
துண்டுப் பிரசுரத்தைப் படித்துவிட்டு ராகவராவ் விவசாயிகளின் முகத்தைப் பார்த்தான். திடீரென்று அதிர்ச்சியும் படு அமைதியும் அங்கு உண்டானது. யாராலும் எதுவும் பேசமுடியவில்லை.
கடைசியில் ஒரு விவசாயி உரத்த குரலில் சொன்னான்: "நிலம் உழுது புரட்டிப் போட்டு விளைச்சல் உண்டாக்கி பாடுபடுறவனுக்குத்தான் சொந்தம். இன்னொருத்தனோட கஷ்டங்களுக்கும், வருமானத்துக்கும் மேலே அரண்மனை கட்டிக்கிறவன் நிலத்தோட சொந்தக்காரனா எப்படி ஆக முடியும்? ஆந்திராவுல இருக்குற விவசாயிகளிடம் நிலத்தை ஜமீன்தார்மார்களுக்குத் திருப்பித் தந்திடணும்னு காங்கிரஸ் சொல்லுது. அதே நேரத்துல எத்தனையோ நூற்றாண்டுகளா நம்ம நிலத்தை நம்மகிட்ட இருந்து எமாற்றிப் பிடுங்கினவங்களைப் பார்த்து அது ஒண்ணும் சொல்லமாட்டேங்குது."
"ஜமீன்தார் உங்களோட சகோதரன்னு இந்தத் துண்டுப் பிரசுரத்துல அச்சடிச்சிருக்கு."- ராகவராவ் சொன்னான்.
"ஜமீன்தார்மார்கள் எங்களோட சகோதரமார்கள் இல்ல. அவங்க காங்கிரஸோட சகோதரர்களா இருக்கலாம். ஜமீன்தார்மார்கள் எங்களோட விரோதிகள்!"- மற்றொரு விவசாயி போர்க்குரலில் சொன்னான்.
கிழவி புன்னம்மா சீறினாள்: "யார் என்ன சொன்னாலும் சரி. விமானம் இல்ல; கடவுளே வந்தாலும் சரி. நாங்க எங்களோட நிலத்தை ஜமீன்தார்மார்களுக்குத் திருப்பித் தர்றதா இல்ல."
புன்னம்மா ஜமீன்தாரின் அரண்மனையை நோக்கி ஓடினாள். அங்கு கோபுர வாசலில் எரிந்து கொண்டிருந்த ஒரு தீபத்தை எடுத்து நிலத்தை நோக்கி வீசி எறிந்தாள். தொடர்ந்து அவள் எல்லா விளக்குகளையும் எடுத்து ஊதி அணைக்க ஆரம்பித்தாள். சிறிது நேரத்தில் அரண்மனை இருட்டில் மூழ்கியது. கிராமங்கள் கண்களைச் சிமிட்டிக் கொண்டிருந்தன. விவசாயிகள் பலவித சிந்தனை ஓட்டங்களுடன் தங்கள் முகத்தை ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.
பிறகு ஒருநாள் ஜகன்னாத ரெட்டியும் பிரதாப ரெட்டியும் போலீஸ், இராணுவம் ஆகியவற்றின் துணையுடன் கிராமத்திற்கு வந்தார்கள். அவர்கள் கிராமத்தைக் கையில் எடுத்தார்கள். ராகவராவ் அந்தச் சமயத்தில் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தான். அவனை கைது செய்தார்கள்.
ரஸாக்கர்களைக் கொன்றதாக ராகவராவின் மீது குற்றம் சுமத்தப்பட்டது. தொடர்ந்து வழக்கு நடந்தது. ராகவராவிற்குத் தண்டனை விதிக்கப்பட்டது. நாளை காலை எழு மணிக்கு அவனைத் தூக்கு மரத்தில் தொங்கவிடப் போகிறார்கள்.
ராகவராவ் தன்னைத்தானே கேட்டுக் கொண்டான். தான் உண்மையில் கொலைகாரனா? கொலைச் செயலின் வடிவமும், குணமும் பலவிதத்தில் இருக்கலாம். மனதில் வெறுப்பையும், பகையையும் வைத்துக்கொண்டு, இல்லாவிட்டால் வேறு ஏதாவது ஒரு காரணத்தை வைத்துக்கொண்டு ஒரு மனிதன் இன்னொரு மனிதனைக் கொலை செய்யலாம். ரஸாக்கர்மார்கள் இரவு நேரங்களில் போலீஸ், ராணுவம் ஆகியவற்றின் உதவியுடன் கிராமங்களை ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருந்தார்கள். கிராமத்தைக் காப்பாற்றத் தயாரான சமயத்தில் ராகவராவிற்கு முன்னால் என்ன செய்வது என்பதைப் பற்றி ஒரு தெளிவான முடிவே இல்லை. ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்குத் தேவைப்பட்ட ஆவேசத்தால் உண்டான குருட்டுத்தனமான ஒரு பலம் மட்டுமே அவனிடம் இருந்தது. இதற்கு முன்பு ராகவராவ் கிராமங்கள் எரிந்து சாம்பலானதைப் பார்த்திருக்கிறான். அறுவடை செய்யப்படும் நிலையில் இருக்கும் வயல்கள் நெருப்புக்கு இரையாவதையும் பார்த்திருக்கிறான். யெல்லரெட்டியின் இறந்துபோன கண்களையும் பார்த்திருக்கிறான். அவை எல்லாவற்றையும் பார்த்து அவன் தனக்குள் ஒரு உறுதிமொழி எடுத்தான். அவன் தனிப்பட்ட ஒரு மனிதனையோ, உருவத்தையோ பார்க்கவில்லை. அவன் தன்னுடைய கிராமத்திற்கு எதிராக நடந்து கொண்டிருந்த பயங்கரமான அக்கிரமங்களின் கறுத்த நிழலை மட்டுமே பார்த்தான். அவன் முன்னோக்கி நடந்தான்.அந்த ஆக்கிரமிப்பின் மார்பில் ஈட்டியைச் சொருகி இறக்கினான். அக்கிரமங்களை எதிர்ப்பது இம்சையா என்ன? தன்னுடைய உயிரைக் காப்பாற்றுவதும் தாயின், சகோதரிகளின் மானத்தைக் காப்பாற்றுவதும் தனக்குச் சொந்தமான வயலில் விளைந்திருக்கும் பொன் நிறக் கதிர்களைக் காப்பாற்றுவதும் இம்சையா என்ன?
ராகவராவ் தன் இதயத்தைப் பார்த்துக் கேட்டான். எனினும் ஒரு குற்ற உணர்வின் முகமும் அவனுக்கு முன்னால் தோன்றவில்லை. ஏன் அதைச் செய்தோம் என்று வருத்தப்படக்கூடிய அளவிற்கு அவன் எதையும் செய்யவில்லை. இதுவரை நடந்த விஷயங்கள் ஒவ்வொன்றையும் மனதில் நினைத்துப் பார்த்த ராகவராவ் தன் வாழ்க்கைக் கதையின் தாள்களை மடக்கி வைத்தான். அவன் பிறகு சந்தோஷத்துடன் மரணத்தைத் தழுவிக் கொள்வதற்குத் தயாரானான்.
சிறையறையின் இரும்புக் கதவு மெதுவாகத் திறக்கப்பட்டது. ராகவராவ் வெளியே நடந்து வந்து கொண்டிருக்கும் தன் தந்தையின் முகத்தைப் பார்த்தான். அவனுக்குப் பின்னால் வயதான வார்டன் நின்றிருந்தான். அந்த மனிதனின் கண்களில் நீர் நிறைந்திருந்தது.
வீரய்யா மெதுவாக நடந்து தன் மகனுக்கு அருகில் வந்தான். ராகவராவ் மெதுவாகத் தன் தந்தையின் பக்கம் திரும்பி தாழ்ந்த குரலில் சொன்னான்: "அப்பா, உட்காருங்க."
வீரய்யாவும் ராகவராவும் சிறையறையின் தரையில் அமர்ந்தார்கள். வீரய்யாவின் உதடுகள் நடுங்கிக் கொண்டிருந்தன. அவனுடைய முஷ்டி பலம் கொண்டதாக இருந்தது. தலை வினோதமான முறையில் லேசாக நடுங்கிக் கொண்டிருந்தது. எவ்வளவோ விஷயங்களைச் சொல்ல வேண்டும் என்று அவன் நினைத்தான். ஆனால், எதையும் சொல்ல அவனால் முடியவில்லை. தன் தந்தையின் இந்த நிலைமையைப் பார்த்து ராகவராவின் இதயம் ஒருமாதிரி ஆகிவிட்டது. தான் இப்போது அழுது விடுவோமோ என்று அவன் பயந்தான். ராகவராவ் மிகவும் கஷ்டப்பட்டு தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு தன் தந்தையைப் பார்த்துக் கேட்டான்:
"கிராமத்துல நிலைமை எப்படி இருக்கு?"
"கிராமத்துல மனிதர்கள் யாரும் இல்ல. இளைஞர்கள் எல்லோரும் கைது செய்யப்பட்டுட்டாங்க. சிக்காத ஆட்கள் காட்டைத் தேடி ஓடிட்டாங்க. அவங்களை கைது பண்றதுக்காக ராத்திரியும் பகலும் வீட்டு வாசல்ல போலீஸ் காவல் நிக்குது. சில நேரங்கள்ல நடுராத்திரி நேரத்துல காட்டுல இருந்து வெடிச் சத்தம் கேட்கும். அது காதுல விழுறப்போ கிழவி புன்னம்மா உரத்த குரலில் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணுவா. 'இன்னொரு ஆளும் போயாச்சு. ஹா... ஹா...'ன்னு அவளோட குரல் கேட்டுக்கிட்டே இருக்கும்."
"புன்னம்மா பாட்டியா?"
"ஆமா... புன்னம்மாவுக்குப் பைத்தியம் பிடிச்சிருச்சு."
ராகவராவால் சில நிமிடங்களுக்கு எதுவுமே பேசமுடியவில்லை. சிறிது நேரம் கழித்து அவன் கேட்டான்: "அப்போ ஜகன்னாதரெட்டி?"
"ஜமீன்தார் தன்னோட அரண்மனையை விட்டு வெளியே வர்றதே இல்ல. அரண்மனைக்குள்ளேயே ராணுவமும் போலீஸும் எப்பவும் காவல் காத்துக்கிட்டு இருக்கு.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook