சிவந்த நிலம் - Page 21
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6354
சிலர் அதற்குக் குத்துவிளக்கேற்றி வைத்து வரவேற்பு தருவார்கள். சிலர் சங்கு ஊதி வரவேற்பார்கள். பெண்கள் குலவை இட்டும் மந்திரங்கள் சொல்லியும் வரவேற்பார்கள். தைரியம்மிக்க விவசாயிகள் தங்களின் துப்பாக்கிக் குழாயில் திலகம் இட்டு வரவேற்பார்கள். இப்படியெல்லாம் அவன் நினைக்கவில்லை.
தான் இப்படி சிந்தித்தது தப்பான ஒன்று என்று ராகவராவ் நினைத்தான். இந்தியாவில் புரட்சி இந்திய முறையிலேயே வரும். அந்தப் புரட்சி நம்முடைய பண்பாடு, கலாசாரம், நாடோடி பாடல்கள் ஆகியவற்றின் நறுமணம் கமழத்தான் வரும். அதில் வெளிநாட்டுத்தனமான எந்த அடையாளமும் இருக்காது. அதன் வடிவம் அசாதாரணமானதாகவும் புதியதாகவும் இருக்கும். இதுவரை யாரும் பார்க்கவோ, கேட்கவோ செய்யாத முறையில் அந்தப் புரட்சி இருக்கும். எனினும், அது முற்றிலும் இந்தியத்தன்மை கொண்டதாகவே இருக்கும். அதைப் பார்த்து நமக்குச் சொல்லத் தோன்றும்- இந்தப் புரட்சி எங்களுக்குச் சொந்தமானது என்று ஆமாம்... "இந்தக் காட்சி எங்களின் கிராமத்தின் காட்சிதான்!"- ராகவராவ் மெதுவான குரலில் சொன்னான்.
அந்தச் சமயத்தில் கிராமத்திலேயே மிகவும் வயது முதிர்ந்த பெரியவரான நாராயணன் ராகவராவின் கையில் நிலத்தை அளக்கப் பயன்படும் சங்கிலியைக் கொடுத்தவாறு சொன்னார்: "மகனே, நிலத்தை அளந்து எல்லோருக்கும் வினியோகம் பண்ணு..."
சங்கிலியைக் கையில் வாங்கிக் கொண்டு ராகவராவ் சொன்னான்: "இந்த நேரத்துல கிராம அதிகாரி இருந்தா நல்லா இருக்கும். ஸ்ரீராம் புத்தலு எங்கே?"
ராகவராவ் சொன்னதைக் கேட்டு அங்கு கூடியிருந்தவர்கள் உரத்த குரலில் சிரித்தார்கள். அவர்களில் ஒருவன் சொன்னான்: "அந்த ஆள் ஜமீன்தார்மார்களோட அதிகாரியா இருந்தான். ஸ்ரீராம் புத்தலு ஏழைகளான நம்மோட அதிகாரியா எப்போ இருந்தான்? அவன் நமக்காக ஒருநாள் கூட நிலம் அளந்தது இல்ல. அதனால் அவனும் ஜமீன்தார் கூட்டத்தோட சேர்ந்து ஓடிட்டான்.."
"கிராமத்தின் புரோகிதர் சீதாராம் சாஸ்திரி எங்கே? இந்த நல்ல நிகழ்ச்சியில் அவரோட ஆசீர்வாதம் இருந்தா நல்லா இருக்கும்?"
மீண்டும் சிரிப்பு உயர்ந்தது.
"ஜமீன்தாரோட மங்கல நிகழ்ச்சின்னா புரோகிதர் கட்டாயம் இருந்திருப்பார். ஆனா, இது விவசாயிகளோட மங்கல நிகழ்ச்சியாச்சே!"- நாகேஸ்வரன் சொன்னான்.
பொறுமையை இழந்த விவசாயிகள் ஒரே குரலில் சொன்னார்கள்: "ராகவராவ், நேரத்தை வீண்பண்ண வேண்டாம். நிலம் சம்பந்தப்பட்ட விஷயத்துல நாங்க எந்தவொரு அதிகாரியையும் புரோகிதரையும் எதிர்பார்க்கல. எத்தனையோ நூற்றாண்டுகளா நாங்க இந்த நல்ல வேளைக்காகக் காத்திருந்தோம்."
ராகவராவ் அளவுச் சங்கிலியை எடுத்துக் கொண்டு சொன்னான்: "கொட்டும் குலவையும் சங்கநாதமும் முழங்கட்டும்! எல்லோரும் வயலுக்குப் போவோம். இன்று ஸ்ரீபுரம் விவசாயிகளின் வெற்றி முன்னேற்றம் தொடங்குது."
ராகவராவ் முன்னோக்கி நடந்ததும், இசை முழங்கியது. விவசாயிகள் சந்தோஷத்தில் தங்களையே மறந்து போயிருந்தார்கள். வயதான கிழவர்கள் சந்தோஷத்தாலும் உணர்ச்சிப் பிழம்புகளாய் ஆனதாலும் சில நேரங்களில் சிரிக்கவும் அழவும் செய்தார்கள். பெண்கள் வெற்றிக் கதையைப் பாடலாகப் பாடினார்கள். ஆண்கள் அதைப் பின்தொடர்ந்து பாடினார்கள். பாடல் படிப்படியாக கர்ஜனையாக மாறியது. அது காற்றில் கலந்து பல மடங்கு எதிரொலித்தது.
"ஆந்திர மக்களுக்கு கோழைத்தனத்துடனும்
பலவீனத்துடனும் எந்தவொரு
உறவும் இல்லை.
இன்று நம்முடைய மக்களுக்கு
தேர்தல் நாள்.
எழுந்து நில்லுங்கள்!
எல்லோரும் வாருங்கள்!
வெற்றிப்பயணம் புறப்பட்டது."
ராகவராவ் அமைதியாகக் கண்ணீரைத் துடைத்தான். விவசாயிகளுக்கு நிலம் கிடைத்த நாள், அதற்கு முன்பு ஸ்ரீபுரத்தில் நிலம் வினியோகம் செய்த நான்கு நாட்கள் இவை எதையும் அவனால் மறக்க முடியாது. ராகவராவின் வாழ்க்கையில் மிகவும் குறிப்பிடத்தக்க நாட்கள் அவை. நிலம் வினியோகம் செய்யும்போது சிறிய அளவில் சண்டையும் மோதலும் உண்டானது. சிலர் நிலத்தின் இந்தப் பகுதி வேண்டுமென்றும், சிலர் அந்தப் பகுதி வேண்டுமென்றும் பிடிவாதம் பிடித்தார்கள். சிலர் தேவைக்கும் அதிகமாக நிலத்தைச் சொந்தமாக்க ஆசைப்பட்டார்கள். சிலர் முன்பு தங்களுக்கு இருந்ததைவிட குறைவாக நிலம் இருந்தால் போதும் என்றார்கள். ஆனால், நிலத்துடன் நல்ல அனுபவம் கொண்ட கிராமத்தலைவர் ஊராட்சியின் உதவியுடன் யாரும் குறை கூறாத வண்ணம் நில வினியோகத்தை அருமையாக நடக்கும்படி பார்த்துக் கொண்டார். அந்தச் சமயத்தில் தன் தந்தை வீரய்யா நடந்து கொண்ட விதத்தை ராகவராவ் நினைத்துப் பார்த்தான். எல்லோருக்கும் நிலம் தந்தபிறகுதான், தன்னுடைய நிலத்தைத் தரவேண்டும் என்று ராகவராவ் முடிவெடுத்திருந்தான். கிராமத்தைச் சேர்ந்த எல்லா விவசாயிகளுக்கும் நிலம் கொடுத்த பிறகு மீதமிருந்தால் வீரய்யாவிற்குத் தருவான். ஏனென்றால் வீரய்யா ராகவராவின் தந்தை ஆயிற்றே!
ஆனால், வீரய்யா பிரச்சினையைச் சரியாக புரிந்து கொள்ளவில்லை. அதனால் ராகவராவ் நிலத்தை வினியோகம் செய்து கொண்டிருந்தபோது அவன் மீண்டும் மீண்டும் முன்னால் வந்து தனக்கும் நிலம் தந்தாக வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்தான். ராகவராவ் அதைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டே அளவுச் சங்கிலியுடன் முன்னோக்கி நடந்தான். தன்னுடைய சொந்த மகனின் கடுமையான நடத்தையில் மனம் நொந்துபோன வீரய்யா மற்ற விவசாயிகளிடம் குறைபட்டுக் கொண்டான். சில விவசாயிகள் ஆரம்பத்திலேயே வீரய்யாவிற்கு நிலம் தரவேண்டும் என்று ராகவராவிடம் சொன்னார்கள். அவன் தன் தந்தைக்குக் கிராமத்தில் இருப்பதிலேயே நல்ல நிலத்தைத் தருவதற்குத் தயாராக இருந்தான். ஆனால், அவனுடைய தந்தையின் பொறுமையின்மையைப் பார்த்து அவன் அந்த முடிவிலிருந்து மாறிவிட்டான்.
கடைசியில் மனம் வெறுப்படைந்து வீரய்யா அந்த இடத்தை விட்டு ஒதுங்கி நின்றபோது, அவனுக்கு நிலம் கிடைத்தது. ராகவராவ் எதிர்த்தும், கிராம ஊராட்சி வீரய்யாவுக்குத் தேவைக்கும் அதிகமாக நிலம் தந்தது. வீரய்யா மகிழ்ச்சிப் பெருமிதத்தில் தன்னை மறந்து துள்ளிக் குதித்து தன்னுடைய நிலத்தைப் பார்ப்பதற்காக ஓடினான். அவன் இரண்டு பிடி மண்ணை வாரி காற்றில் பரவவிட்டவாறு சொன்னான்: "இந்த நிலம் எனக்குச் சொந்தம். தொடர்ந்து வீரய்யா ஓடிவந்து தன் மகனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தான்.