சிவந்த நிலம் - Page 16
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6355
இரவு முழுவதும் மீதியிருக்கிறது. ராகவராவ் முகத்தைத் திருப்பிக் கொண்டான். வார்டன்மார்கள் இருவரும் தலைகுனிந்தவாறு, வெளியே சென்றார்கள். மீண்டும் சங்கிலிச் சத்தம். சிறையறையின் கதவு அடைக்கப்பட்டது. ஆழமுள்ள கிணற்றில் எடை அதிகமுள்ள கல் விழுந்ததைப் போல தாழ்ப்பாள் பூட்டப்படும் ஓசை பெரிதாகக் கேட்டது. மீண்டும் படு அமைதி!
ராகவராவ் கால்களை அகல வைத்து மெதுவாகச் சிறையறைக்குள் நடக்க ஆரம்பித்தான். நடக்கும்போது காலில் கட்டப்பட்டிருந்த விலங்கு கணுக்காலில் படாமல் இருக்கவேண்டும். முன்னும் பின்னும் நடக்க ஐந்தடி இடமே அங்கு இருந்தது. நான்கு சுவர்களுக்குள் மொத்தம் ஐந்தடி இடம். ஐந்தடி நடந்தபிறகு திரும்பி நடக்க வேண்டும். சிறையறைக்குள் அவன் நன்றாக நீட்டிப் படுக்க முடியாது. ராகவராவ் ஆச்சரியத்துடன் தன்னுடைய உடம்பைப் பார்த்தான். கைகளையும் கால்களையும் மார்பையும் பார்த்தான். மூக்கையும் முகத்தையும் காதுகளையும் தடவிப் பார்த்தான். எல்லாப் பொருட்களையும் போல அவையும் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தன. எதற்கும் எவ்வித பாதிப்பும் இல்லை. உடம்பு நல்ல சூடாக இருந்தது. உயிர் இருக்கிறது. மூச்சு சீராக வந்து கொண்டிருந்தது. நாளை இந்தச் சூடும் இதயத்துடிப்பும் உயிர்ப்பும் நிரந்தரமாக இல்லாமல் போய்விடும். ஆனால் எதற்காக ராகவராவ் மரணத்தைப் பார்த்துப் பயப்படவில்லை? பிறப்பு- வளர்ப்பு கனவைப் போன்ற அழகான வாழ்க்கைச் சக்கரம். பிறகு அது உதிர்ந்த இலைகளைப் போல படிப்படியாக முதுமையை நோக்கி நகர்கிறது. கடைசியில் ஒரு புதிய வாழ்க்கையின் மலர்ச்சியை அது சந்திக்கிறது. இந்தச் செயல்களுக்கு இடையில் மரணத்தை அல்ல- வாழ்க்கையின் படைப்புத் தன்மையும்- முடிவில்லாத நிலையையும் கொண்ட ஒரு நாட்டியத்தை அவன் பார்க்கிறான். அப்படியென்றால் நாளைய மரணம்? அது எப்படிப்பட்டதாக இருக்கும்? ராகவராவிற்கு இப்போது வயதாகிவிடவில்லை. அவனுடைய உடலில் இலை காய்ந்து விழுந்ததற்கான அடையாளம் இல்லை. பூ மொட்டு இனியும் விரியக்கூட இல்லை. புன்னகைத்தவாறு இதழ்கள் மலரவில்லை. இனியும் மழை பெய்யவில்லை. வானவில் தோன்றவில்லை. குயில்கள் பாட்டுப் பாடவில்லை. அவை பாட்டுப் பாடவில்லையென்றால், மரங்களுடைய உயிருக்கு ஒரு முழுமை கிடைக்கவில்லை என்று அர்த்தம். பிறகு எதற்காக இந்த வாலிபத்தைத் தேடி மரணம் இறங்கி வந்திருக்கிறது?
ராகவராவ் குளிர்ந்த தரையில் முழங்கால்களை மடக்கி வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். தாடைப் பகுதியை கால் விலங்கிற்கு மேலே வைத்தவாறு ஏதோ சிந்தனையில் அவன் ஆழ்ந்திருந்தான்.
மக்புல் அவனை டாக்டரிடம் அழைத்துச் சென்று சிகிச்சை பெற வைத்தார். எழுதவும் படிக்கவும் கற்றுத் தந்தார். நுரையீரல் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது தெரிந்ததும் ராகவராவை இனிமேல் ரிக்ஷா இழுக்கக்கூடாது என்ற கறாராகக் கூறிவிட்டார் மக்புல். அதற்குப் பதிலாக ஒரு பேப்பர் தொழிற்சாலையில் அவர் அவனுக்கு வேலை வாங்கிக் கொடுத்தார். தொழிற்சாலையில் நுழைந்தவுடன் மக்புல்லிடம் கற்றதை நடைமுறையில் செயல்படுத்திப் பார்ப்பதற்கான வாய்ப்பு ராகவராவிற்குக் கிடைத்தது. தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்த பிறகுதான் அவன் கூட்டு ஆலோசனைகளையும் நான்கு திசைகளிலும் நடக்கக்கூடிய விஷயங்களையும் தெரிந்து கொள்ள முடிந்தது. அதற்குப் பின்னால் பாரதத்தின் நகரங்களிலுள்ள பணக்காரர்களும் கிராமங்களிலிருக்கும் ஜமீன்தார்களும் இருந்தார்கள். அது வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவிலும் விஷத்தின் ஓட்டமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தது. ஒவ்வொரு கால் வைப்பிலும் புதிய வாழ்க்கையை முன்னோக்கிக் கொண்டு செல்ல இருக்கும் சூழ்நிலையைச் சிறப்பானதாக்க, மனிதர்களை மேலும் சிறப்பான மனிதர்களாக ஆக்க இடுப்பையும் தலையையும் முறுக்கி மற்போர் புரிய வேண்டியதிருக்கிறது என்பதை ராகவராவ் புரிந்து கொண்டான். தொழிற்சாலைக்கு வேலைக்குப் போனபிறகு ராகவராவ் போராட கற்றுக் கொண்டான். அங்கு அவன் புதிய வாழ்க்கையை விரும்பக் கூடியவர்களைச் சந்தித்தான். அவர்கள் தங்கள் கைகளால் பழைய மரத் துண்டுகளையும் பழைய தாள்களையும் அழகான புதிய பேப்பர்களாக உருவாக்கினார்கள். உறுதியான இரும்பு கூட அவர்கள் கரங்கள் பட்டு இதயத்தைப் போல மென்மை குணம் கொண்டதாக மாறியது.அந்த இரும்பு விவசாயிகளின் பணிக் கருவிகளாகவும், இயந்திரப் பொருட்களாகவும், பூமாலை கோர்க்கப் பயன்படுகிற ஊசிகளாகவும் மாறின. புதிய வாழ்க்கையின் இந்த ஆர்வலர்களைப் பார்த்தபோது மண்ணுக்குக் கீழே போய்விட்ட கடந்த காலத்தை அவன் நினைத்துப் பார்த்தான். அந்தக் கடந்த காலம் நிலக்கரியாக மாறியது. அது இன்று உலோகத்தை உருக்கப் பயன்படும் எரிபொருளாக ஆகியிருக்கிறது. இவை எல்லாவற்றையும் தெரிந்து கொண்டபோது சந்தோஷத்தால் ராகவராவின் தலை மேலும் கொஞ்சம் உயர்ந்தது. அவன் மன நம்பிக்கையுடன் உடன் பணியாற்றுபவர்களின் கைகளை இறுகப் பற்றிக் கொள்கிறான். மண்ணுக்குக் கீழேயிருக்கும் பொக்கிஷங்களைத் தோண்டி வெளியே கொண்டு வரும் ஆற்றல் அந்தக் கைகளுக்கு இருக்கின்றன என்பதை அவன் புரிந்து வைத்திருக்கிறான். மனித வாழ்க்கையை மேலும் அழகானதாக்க அந்தக் கைகளால் முடியும். ராகவராவ் எந்தச் சமயத்திலும் அந்தக் கைகளை விடமாட்டான். அந்தக் கைகள் எதிர்காலத்தை அழிக்கக்கூடிய- அதிக லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற பணவெறியர்களின் கைகள் அல்ல; அது தொழிலாளிகளின் கைகள். புதிய வாழ்க்கையைப் படைப்பவர்களின் கைகள்!
பேப்பர் தொழிற்சாலையில் ஒரு வருடம் பணி செய்ததில் ராகவராவ் எவ்வளவோ விஷயங்களைத் தெரிந்து கொண்டான். வேறு எங்காவது பத்து வருடங்கள் போராட்டம் நடத்தினாலும் இவ்வளவு விஷயங்களைக் கற்றுக் கொண்டிருக்க வாய்ப்பில்லை. மன நம்பிக்கையுடன் போராடுவது, தோல்வி கிடைத்தாலும் ஏமாற்றம் அடையாமல் இருப்பது போன்ற விஷயங்களை அவன் அங்குதான் கற்றான். ஹர்த்தால் மூலமாகப் போராட்டத்தை எந்த முறையில் முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்பதையும் அவன் கற்றான். அங்கு முதலாளிமார்களின் அடியாட்களுடன் பெரும்பாலும் சண்டை போடவேண்டிய சூழ்நிலை வந்திருக்கிறது. அந்த அடியாட்கள் நடந்து கொண்ட முறையில் முதலாளிமார்களின் குணமும் நோக்கமும் வெளிப்படையாகத் தெரிந்தன. அதே நடத்தையைத்தான் ராகவராவ் கிராமத்திலிருந்த ஜமீன்தார்மார்கள், தேஷ்முக்மார்கள் ஆகியோரின் அடியாட்களிடமும் பார்த்திருந்தான். இங்குள்ள அடியாட்களின் போக்கு கிராமத்து அடியாட்களின் போக்கிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருந்தது. எனினும் ராகவராவிற்குப் பல நேரங்களில்அடியாட்களின் நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை உண்டானது. அதனால் தொழிற்சாலையிலிருந்து அவன் வெளியேற்றப்பட்டான். ஆறுமாத சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை அவனுக்கு ஏற்பட்டது.
ராகவராவ் சிறையில் இருக்கும்போது தன்னுடைய கிராமத்தைச் சேர்ந்தவனும், இடையனுமான நாகேஸ்வரனைச் சந்தித்தான். அவனைப் பார்த்ததும் ஆச்சரியப்பட்டு நின்றுவிட்டான் ராகவராவ். அவனுடைய அந்த ஆச்சரியத்தை நாகேஸ்வரனே போக்கினான். நாகேஸ்வரன் விளக்கமாக எல்லா விஷயங்களையும் சொன்னான். ஸ்ரீபுரம் இப்போது முன்பு கண்ட கிராமம் அல்ல. அங்கும் மாற்றத்தின் காற்று வீசத் தொடங்கியிருக்கிறது.