சிவந்த நிலம் - Page 11
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6353
கள்ளக்கடத்தல் வியாபாரம் செய்வதற்கிடையில் மிகவும் ஆபத்தான அந்த விளையாட்டை ஒரு முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்று ஒன்றிரண்டு தடவைகள் ராகவராவ் நினைத்தான். ஆனால், எப்படி அதை நிறுத்த முடியும்? அவன் தன்னுடைய கிராமத்தின் பட்டினியையும் வறுமையையும் நன்கு தெரிந்தவன் ஆயிற்றே!
ராகவராவின் கிராமத்திலிருக்கும் சாம்பட்டேலுக்கும் போலீஸ் அதிகாரிக்குமிடையே இருக்கும் நட்பு இப்போது அவனுடைய மனதை விட்டு மறைந்து போகவில்லை. அவன் இந்த மாதிரி விஷயங்களை பத்திரிகைகளைப் படித்துத் தெரிந்து கொள்ளவில்லை. தன்னுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவிலும் அவன் அதை அனுபவித்து அறிந்திருக்கிறான். அதனால் நான்கு மாதங்கள் தொடர்ந்து சூரியப்பேட்டையில் இருந்தாலும் போலீஸ்காரர்களிடம் போய் புகார் கூறுவதால் ஏதாவது பிரயோஜனம் உண்டாகும் என்று ராகவராவ் நினைக்கவில்லை. இந்த விஷயத்தில் போலீஸ் ஏதாவது நடவடிக்கை எடுக்கும் என்று யாராவது லட்சம் தடவைகள் சொன்னாலும் ராகவராவ் அதை நம்பமாட்டான். போலீஸிடம் கூறும்படி எப்போதாவது யாராவது சொன்னால் ராகவராவ் கிண்டலாகச் சிரித்து அதற்குப் பதில் கூறுவான்.
ராகவராவ் வசித்த தெருவில் அவனைப்போல மற்ற வீடுகளில் வேலைசெய்யும் பணியாட்கள் நிறைய இருந்தார்கள். அவர்கள் எல்லாரும் நகரத்திலிருக்கும் அடிமைகள். அவனைப்போல எண்ணிக்கையில் அடங்காத அடிமைகள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இருக்கும் பலவகைப்பட்ட கிராமங்களிலிருந்தும் நகரத்தைத் தேடி வந்திருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் வினோதமான ஒரு பழக்கமுண்டு. அவர்கள் வீட்டு உரிமையாளர்கள் இல்லாத நேரத்தில் அவர்களின் குற்றங்களையும் குறைகளையும் ஒருவரோடொருவர் கூறிக் கொள்வார்கள். ஆனால், கிராமத்திலிருக்கும் அடிமைகள் சாதாரணமாக இந்த மாதிரி தங்களின் எஜமானர்களைப் பற்றி கேவலமாகப் பேசமாட்டார்கள். அதனால் இப்படிப்பட்ட வசைப் பாடல்களில் ராகவராவிற்கு எந்தவொரு மன அமைதியும் சந்தோஷமும் கிடைக்கவில்லை என்பதே உண்மை. கேவலமாகப் பேசுவதாலும், எண்ணுவதாலும் மனதிலிருக்கும் கோபம் வேண்டுமானால் தணியலாம். ஆனால், வயிற்றின் பசி குறையவே குறையாதே!
ஒருநாள் ராகவராவ் தன் பக்கத்து வீட்டின் வேலைக்காரனான வெங்கிட்டனிடம் இந்த விஷயத்தை மனம் திறந்து பேசியபோது, அவன் உரத்த குரலில் விழுந்து விழுந்து சிரித்தான்.
"ராவ், நீ ஒரு வடிகட்டின முட்டாள். நீ சொல்றதுல கொஞ்சம் கூட அர்த்தமே இல்ல. பசியை இல்லாமச் செய்யிறதுக்கான வழி என்ன தெரியுமா? எஜமான் உன்னை விழுங்கப் பார்க்குறான்னா, அதுக்கு முன்னாடி நீ அவனை விழுங்கிடணும். காய்கறி, பருப்பு, ரொட்டி, வெற்றிலை, பாக்கு ஆகியவற்றிலிருந்து பெருசா எடுக்க முடியலைன்னா, முதலாளிமார்களோட நகைகளை எடுத்துட்டு ஊரைவிட்டே ஓடிடவேண்டியதுதான்! இன்னும் வாய்ப்பு கிடைச்சா, முதலாளியோட பொண்டாட்டியையும் தூக்கிட்டுப் போயிடு. நீ ஒரு இளைஞன். பார்க்குறதுக்கும் அழகா இருக்கே. கிராமத்தை விட்டு நீ வந்து அதிக நாட்கள் ஆகல. உன் உடம்புல இப்பவும் இரத்தமும் உணர்ச்சியும் இருக்கு."
இவ்வளவையும் சொல்லி விழுந்து விழுந்து சிரித்து முடித்த வெங்கிட்டன் ராகவராவின் தொடையில் அடித்தான். வெங்கிட்டன் அந்தத் தெருவிலுள்ள வேலைக்காரர்களுக்குத் தலைவனாக இருப்பவன். ஏராளமான குளங்களில் நீர் குடித்தவன். எவ்வளவு இடங்களில் திருடிவிட்டு அவன் யாருக்கும் தெரியாமல் ஓடிவந்திருக்கிறான் என்பதற்கு ஒரு கணக்கே இல்லை. இதுவரை அவன் தன் பெயரை இருபது முறைகள் மாற்றியிருக்கிறான். இனியும் இருபது தடவைகள் அவன் தன் பெயரை மாற்றிக்கொண்டாலும், அதனால் ஒன்றும் நடந்துவிடப் போவதில்லை. பக்கத்துத் தெருக்களிலிருக்கும் வீடுகளில் வேலை பார்க்கும் ஆண்களும் பெண்களும் திருடினார்கள் என்றால், அதில் ஒரு பகுதியை வெங்கிட்டனுக்குத் தந்துவிடவேண்டும்.
இப்படிப்பட்ட குணங்களைக் கொண்ட வேலைக்காரர்கள் மது அருந்துவதும் போதைப் பொருட்கள் உட்கொள்ளுவதும் எஜமானர்களை வாய்க்கு வந்தபடி திட்டுவதும் வழக்கமான ஒரு விஷயமே. அடுத்த நிமிடம் அவர்கள் நனைந்த பூனையைப்போல எஜமானர்களின் வீடுகளில் அடிவருடிகளாக மாறி வேலை செய்பவர்களாக மாறிவிடுவார்கள்.
வெங்கிட்டன் பல நேரங்களில் ராகவராவைப் பலவந்தப்படுத்தி தான் தங்கியிருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றிருக்கிறான். எனினும், ராகவராவ் எப்போதும் அவனிடமிருந்து விலகியே நின்றான். அந்த அடிமைகளின் எந்த விஷயத்தில் தனக்கு வெறுப்பு என்பதை அவனாலேயே புரிந்து கொள்ள முடியவில்லை. அந்தச் சின்னஞ்சிறு கோழிக்கூடுகள் மிகப்பெரிய சூளைகளும் கூட என்ற நம்பிக்கை ராகவராவிற்கு இருந்தது. மனிதர்கள் தங்களின் அப்பாவித்தனத்தை மெதுவாக எரிந்து கொண்டிருக்கும் அந்தச் சூளையை நோக்கி உந்தித் தள்ளிவிட வேண்டியது ஒன்றுதான் நடக்கவேண்டியது. வெங்கிட்டனுடைய வாழ்க்கை முறையும் மற்ற வேலைக்காரர்களின் வாழ்க்கை முறையும் பீமய்யா, வீரய்யா ஆகியோரின் வாழ்க்கையையும் ராகவராவ் நினைத்துப் பார்க்கும்படி செய்தன. பீமய்யாவுக்கும் வீரய்யாவுக்கும் ஒருகாலத்தில் தங்களைப் போல வீடும் நிலமும் இருந்தன என்று தன் தந்தை கூறியதை ராகவராவ் நினைத்துப் பார்த்தான். நிலத்தை இழந்தபோது, அவர்கள் விவசாயத் தொழிலாளிகளாக மாறினார்கள். பிறகு அடிமைகளாக ஆனார்கள். கடைசியில் தேஷ்முக் ஜமீன்தார் ஆகியோரின் வாடகை குண்டர்களாக ஆனார்கள். பீமய்யாவும் வீரய்யாவும் மது அருந்துவதையும் போதை மருந்துகள் உட்கொள்ளுவதையும் பொறுக்கித்தனமாக நடப்பதையும் ராகவராவ் நேரிலேயே பார்த்திருக்கிறான். நகரத்தின் அந்த அடிமைகள் தன் கண் முன்னால் பீமய்யாமார்களாகவும் வீரய்யாமார்களாகவும் ஆகிக் கொண்டிருப்பதை அவனே உணர்ந்தான். அதாவது- அவர்கள் அழிந்து கொண்டிருந்தார்கள். பசி என்ற நெருப்பில் கிடந்து முனகிக் கொண்டு கிராமத்தில் இருந்தபோது அவர்களுக்குச் சில குணங்கள் இருந்தன. நகரத்திற்கு வந்தபிறகு அந்தக் குணங்களை அவர்கள் இழந்து விட்டார்கள். அவர்கள் மீது ராகவராவிற்கு அளவுக்கு மீறிய கோபமும் வெறுப்பும்தான் இருந்தனவே தவிர, வேறு எதுவும் இல்லை. அதனால் அவர்களைத் திருத்த முடியும் என்ற நம்பிக்கை அவனுக்கு இல்லை.
ராகவராவ் தன்னுடைய சொந்த அறிவையும் புத்திசாலித்தனத்தையும் பயன்படுத்தி தான் தப்பித்தால் போதும் என்று நினைத்தான். அவன் மனப்பூர்வமாகப் பணக்காரரின் வீட்டில் வேலைகளைச் செய்து, நம்பிக்கைக்குரிய மனிதனாகத் தன்னைக் காட்டிக்கொண்டான். தன் சொந்த கிராமத்தில் கூட அவன் இந்த அளவிற்கு வேலை செய்ததில்லை. ஆனால், இவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்தும் அவனுக்கு எந்தவொரு பிரயோஜனமும் இல்லை. சில நாட்களில் பரிசு என்ற முறையில் இரண்டு சப்பாத்திகள் அதிகமாகக் கிடைக்கும். சில நாட்களில் பணக்காரருடைய மனைவியின் செயற்கையான சிரிப்பும் பாராட்டும் கிடைக்கும். 'பையன் நல்லவன்' என்பாள் அவள். மூன்று, நான்கு நாட்கள் நல்ல நிலையில் அவன் வாழ்க்கை போய்க் கொண்டிருந்தாலும், அடுத்த நாள் பழைய கதை திரும்ப ஆரம்பித்து விடும். மீண்டும் பசியும் பட்டினியும்...
ஒருநாள் சமையலறையில் ஒரு கைக்குட்டை காணாமல் போனது.