சிவந்த நிலம் - Page 28
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6352
கொள்கை முழக்கக்குரல் மற்ற கிராமங்களையும் ஆவேசம் கொண்டு எழச்செய்தது. அவர்களும் அதே கொள்கை முழக்கங்களைப் பின்பற்றி கூறினார்கள். இஸ்திரி போட்ட பட்டுச் சட்டையைத் திரும்பவும் பூமாலை கொண்டு கட்டினார்கள். அப்போது பத்திபாடி கிராமத்திலிருந்து வாத்திய, மேளக்காரர்கள் வந்து சேர்ந்தார்கள்.
அன்றைய இரவை யாராலும் மறக்க முடியாது. அன்று இரவு அய்யாயிரம் விவசாயிகள் பந்தம் கொளுத்தி, கொள்கைகளை முழங்கினார்கள். ஜமீன்தாருடைய அரண்மனைக்கு முன்னால் கோஷங்களை முழங்கியவாறு அவர்கள் ஊர்வலமாக நடந்து சென்றார்கள். அந்தச் சமயத்தில் அரண்மனையில் யாரும் இல்லை. ஜமீன்தாரும் அவருடைய ஆட்களும் அரண்மனையை விட்டு மீண்டும் ஓடிப்போயிருந்தார்கள்.
ஊர்வலம் கடந்து போய்க்கொண்டிருந்த கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளும் ஊர்வலத்தில் தங்களை இணைத்துக் கொண்டார்கள். கொள்கை முழக்கம் காற்றைக் கிழித்துக் கொண்டு எதிரொலித்தது. ஊர்வலம் சிறையின் வெளிவாசலை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது.
ராகவராவ் அப்போது வாழ்க்கையின் கடைசி இரவை சிறையில் கழித்துக் கொண்டிருந்தான். இன்னும் சிறிது நேரம் சென்றால் பொழுது விடிந்துவிடும்.
ராகவராவ் பொழுது புலர்வதற்கு முன்பு அந்தப் பட்டுச் சட்டையைக் கையில் எடுத்தபோது ஆச்சரியத்துடன் தன் தந்தையைப் பார்த்தான். ஆவேசத்தாலும், மகிழ்ச்சியாலும் அவனுடைய கண்கள் விரிந்தன. தன் தந்தை மிகவும் கஷ்டப்பட்டு அந்தச் சட்டையைத் தயார் பண்ணினார் என்பதையும் பத்தாயிரம் கிராம மக்கள் ஊர்வலமாகக் கொண்டு வந்து அதை அங்கு சேர்த்தார்கள் என்பதையும் அறிந்தபோது தனக்குள் உண்டான சந்தோஷத்தை ராகவராவால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. அவனுடைய முகத்தில் பிரகாசமான எதிர்காலம், ஒளிமயமான இலக்கு ஆகியவற்றின் அறிகுறி தெரிந்தது. அவன் ஒரு குழந்தையைப் போல தன் தந்தையின் மார்பில் முகத்தைப் பதித்தான். தந்தை ராகவராவின் தலையை வருடிக் கொண்டிருந்தான்.
"நேரம் இன்னும் அதிகம் ஆகல. நீ இந்தச் சட்டையை அணியணும். இது என்னோட விருப்பம் மட்டுமில்ல. முழு தெலுங்கானாவோட விருப்பமும் இதுதான். வேணும்னா இந்தச் சட்டைக்கு மேலே சிறை ஆடையை அணிஞ்சிக்கோ!"- வீரய்யா சொன்னான்.
ராகவராவ் சிரித்துக்கொண்டே சிறை ஆடையைக் கழற்றிவிட்டு, மிகுந்த ஆர்வத்துடன் அந்தப் பட்டுச் சட்டையை அணிந்தான். வீரய்யா அதை மகிழ்ச்சியுடன் பார்த்தவாறு நின்றிருந்தான். சிவப்பு நிற பட்டுச்சட்டையை அணிந்த பிறகு ராகவராவிற்குத் தோன்றியது இததான். தான் அணிந்திருப்பது வெறும் பட்டுச் சட்டை அல்ல. தங்களுடைய போராட்டத்தின் சின்னமும் மக்களின் கொடியும் கூட அதுதான் என்று அவன் நினைத்தான். சொந்த இரத்தத்தால் தன்னுடைய உடலை அவர்கள் எழுச்சி பெறச் செய்திருக்கிறார்கள். சொந்த வயல்களால் உடலை மறைத்திருக்கிறார்கள். தான் அணிந்திருப்பது தன் தாய், தந்தையின் பெருமைக்குரிய சின்னம் என்பதை அவன் நினைத்துப் பார்த்தான். அந்தச் சட்டையின் புனிதமும் அழகும், மரக்கிளைகளில் ஊர்ந்து செல்லும் பட்டு நூல் புழுக்களுடைய தியாகத்திற்கு நிகரானவை. மானிட இதயத்தில் உதயமான புதிய லட்சியங்களின், எதிர்பார்ப்புகளின் அணிகலன் அது. அதேபோல இளம்பெண்களின் மென்மையான கைகள் சுற்றுகிற சர்க்காவிற்கு நிகரானது அது. ராகவராவ் பட்டுச்சட்டை மீது தன் விரல்களால் தடவியவாறு தன் தந்தையை உற்றுப் பார்த்தவாறு என்னவோ சிந்தனையில் மூழ்கினான். அதிகாலை சூரியன் இரவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தது. அந்த அடியின் தீவிர விளைவால் சிறையின் இரும்பு அறைகள் சூரியனின் கதிர்கள் பட்டு காணாமல் போயின. ஒன்றிரண்டு சிறையறைகள் மட்டும் எப்படியோ மீதமிருந்தன. தாயின் புடவை முந்தானைக்கு அடியிலிருந்து குழந்தை முகத்தை வெளியே நீட்டி கண்களைத் திறந்து பார்ப்பதைப் போல ஆகாயத்திலிருந்து சூரியன் சிறைக்குள் தன்னுடைய கதிர்களைப் பாய்ச்சியது. ராகவராவ் விசிலடித்தவாறு தன் தந்தையைக் கட்டிப் பிடித்துக்கொண்டு சொன்னான்: "அப்பா, பாருங்க! சிறையறைகளால் கூட சூரியனைத் தடுக்க முடியல."
வீரய்யாவின் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. அந்தக் கண்ணீரை அவன் துடைக்கவில்லை. புனிதமான கண்ணீர் தன் சுருக்கங்கள் விழுந்த முகத்தில் வழியட்டும் என்று வீரய்யா வெறுமனே அதை விட்டு விட்டான்.
சிறை அதிகாரிகள் சூழ தன்னுடைய மகன் ராகவராவ் தூக்கு மரத்தை நோக்கி நடந்து போவதை வீரய்யா பார்த்தான். கோஷங்களுடன் ஊர்வலமாக வந்த எண்ணற்ற கிராம விவசாயிகளின் 'ஜெயில் மார்ச்' பாடல் சிறையின் சுவர்களையும் வெளி உலகத்தையும் அதிர வைப்பதாக இருந்தது.
"பார்...
முழு தெலுங்கானாவும் உயிர்த்தெழுந்திருக்கிறது.
தபலா ஒலிக்கட்டும்! ஒலிக்கட்டும்!
வெற்றி முழக்க ஊர்வலத்தின் வழியைக் காட்டுங்கள்!
வெற்றி கிடைக்கும் வரை போர் தொடரட்டும்!
ஒன்று சேருங்கள்! ஒன்று சேருங்கள்
ஆந்திராவின் பிள்ளைகளே
ஒன்று சேருங்கள்!"
சிறைக்கு வெளியிலிருந்து ஒலித்த அந்தப் பாடலை வீரய்யாவின் உதடுகளும் உச்சரித்தன. அந்தப் பாடல் வீரய்யாவின் நம்பிக்கையையும், லட்சியத்தையும் மேலும் பலம் கொண்டதாக ஆக்கின. ஆந்திராவில் விவசாயிகள் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் வரை அவர்களின் உறுதி படைத்த லட்சியங்களுக்கும் வெற்றிகளுக்கும் பிரகாசக் குறைவு உண்டாகாது. பரம்பரை பரம்பரையாக அவர்களின் பிள்ளைகள் வழியே அந்தக் கொள்கைகளும், லட்சியங்களும் வாழ்ந்து கொண்டிருக்கும். அவர்களுடைய கிராமங்களுக்கு இனியொருமுறை தேஷ்முக்மார்கள் திரும்பி வரப்போவதில்லை!