சிவந்த நிலம் - Page 27
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6353
அவர்கள் கவுரம்மாவின் வீட்டை விட்டு வெளியே வந்து மற்ற வீடுகளில் கேட்டுப் பார்த்தார்கள். குறுகிய நேரத்திற்குள் விவசாயிகள் அனைவரும் அவரவர் வீட்டிற்குச் சென்று துணிகளைச் சோதித்துப் பார்க்க ஆரம்பித்தார்கள். எங்கிருந்தாவது ஒரு பட்டுச்சட்டை கிடைத்தாக வேண்டும்! வயதான கிழவர்கள் இந்த விஷயத்தில் மிகவும் பிடிவாதமாக இருந்தார்கள். இளைஞர்களும் அந்தக் கூட்டத்தில் நிறைய பேர் இருந்தாலும், அவர்களுக்கு இதில் பெரிய அளவில் ஆர்வம் உண்டாகவில்லை. வீரய்யாவின் அளவுக்கு மீறிய ஆசை என்று மட்டுமே அவர்கள் இந்த விஷயத்தைப் பற்றி மனதில் நினைத்தார்கள். இதற்கிடையில் வண்ணான் ரங்கடு ஒரு கட்டுத் துணிகளுடன் ஓடி வந்தான். அவன் துணிக்கட்டை வீரய்யாவிற்கு முன்னால் வைத்து விட்டுச் சொன்னான்: "இதுல ரெண்டு பட்டுச் சட்டைகள் இருக்கு. ஒரு சட்டை ஜகன்னாதரெட்டிக்குச் சொந்தமானது. இன்னொரு சட்டை பிரதாபரெட்டியோடது."
அதைக் கேட்டு வீரய்யா வெறுப்புடன் சொன்னான்: "என் மகன் ஜமீன்தார்களோட பழைய சட்டையை அணிவதா? ரங்கடு! நீ என்ன சொல்றே?"
ரங்கடு கவலையுடன் சொன்னான்: "இந்தக் கிராமத்துல வேற யார்கிட்டயும் பட்டுச்சட்டை இல்ல..."
வீரய்யா பதிலெதுவும் சொல்லவில்லை. கூட்டத்திலிருந்த இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் அங்கிருந்து போய்விட்டார்கள். வீரய்யா திடீரென்று எதையோ நினைத்தான். அடுத்த நிமிடம் அவன் தன்னுடைய குடிசையை நோக்கி ஓடினான். அங்கு சென்று பெட்டியிலிருந்த ஆடைகள் முழுவதையும் எடுத்து வெளியே போட்டான். பெட்டியின் அடியில் ராகவராவுடைய தாயின் திருமண ஆடைகள் இருந்தன. மற்ற எல்லா ஆடைகளும் பயன்படுத்தப்பட்டு பழையனவாக ஆகிப்போயிருந்தாலும், தலையில் அணியும் ஒரு பட்டுத்துணி மட்டும் பாழடையாமல் அப்படியே இருந்தது. அதை ராகவராவின் தாய் தன் மகன் திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண்ணிற்குப் பரிசாகத் தரவேண்டும் என்பதற்காகப் பாதுகாத்து வைத்திருந்தாள். அவள் அதை அவ்வப்போது வெளியே எடுத்து ராகவராவிடம் காட்டிக் கூறுவாள்: "எந்த அடிமை வேலை செய்ற ஆளோட பொண்டாட்டிக்கிட்டயாவது இப்படிப்பட்ட பட்டுத்துணி இருக்கா? இந்தத் துணியை நான் உனக்கு வரப்போற பொண்டாட்டிக்குத் தரப்போறேன்."
வீரய்யா மிகவும் கவனமாகப் பெட்டியின் அடியிலிருந்த அந்தப் பட்டுத் துணியை வெளியே எடுத்தான். சிவப்பு நிறத்திலிருந்த அந்தப் பட்டுத்துணி விளக்கு வெளிச்சத்தில் மின்னியது. அங்கு கூடி நின்றிருந்தவர்கள் சந்தோஷத்தால் ஆர்ப்பரித்தார்கள். தாங்கள் ஏதோ போரில் வெற்றி பெற்று விட்டதைப் போல் தங்கள் மகிழ்ச்சியை அவர்கள் வெளிப்படுத்தினார்கள்.
"இந்தத் துணியை வைத்து சட்டை தைக்க முடியுமா?" வீரய்யா கேட்டான்.
"ஏன் முடியாது? தையல்காரன் சோமப்பனை உடனே அழைச்சிக்கிட்டு வா நேரம் அதிகம் இல்ல."- ஒரு விவசாயி சொன்னான்.
அவன் சொன்னதுதான் தாமதம்- சோமப்பனை அழைத்து வருவதற்காக ஒரு ஆள் போனான். அவன் அந்த ஆளை அழைத்துக்கொண்டு வந்தான்.
துணியை விரித்துப் பார்த்துவிட்டு சோமப்பன் சொன்னான்: "இதை வச்சு சட்டை தைக்க முடியாது. கை இல்லாத சட்டை தைக்கலாம்."
"அதுபோதும். ஆனால், சீக்கிரம் தச்சுத் தரணும்! - இளைஞர்கள் வேகம் காட்டினார்கள்.
"தையல் இயந்திரம் வீட்டுல இல்ல இருக்கு?"- சோமப்பன் சொன்னான்.
ஒரு விவசாயி தையல் இயந்திரத்தை எடுப்பதற்காகச் சோமப்பனின் வீட்டிற்கு ஓடினான். இதற்கிடையில் அவன் பட்டுத்துணியைப் பரிசோதித்துப் பார்த்தான். ஒன்றிரண்டு இடங்களில் சிறிய துவாரங்கள் இருந்தன. சிறு பூச்சிகள் உண்டாக்கியவை அவை.
"இனி என்ன செய்றது?"- வீரய்யா மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தான்.
"பரவாயில்ல. துவாரங்களை நீக்கிட்டு நான் பட்டுத்துணியைக் கிழிச்சி தைக்கிறேன். ராகவராவ் போடப்போற சட்டையில துவாரங்கள் இருக்கக்கூடாது."
சோமப்பன் சொன்னான்.
சோமப்பன் மிகவும் கவனமாக அந்தத் துணியைக் கிழித்து சட்டை தைக்க ஆரம்பித்தான். கிராமத்திலுள்ள முக்கால்வாசி மக்கள் அப்போது அங்கு குழுமியிருந்தார்கள். இந்த அளவிற்கு விலை மதிப்புள்ள துணியை வைத்து சட்டை தைப்பதை இதற்கு முன்பு அவர்கள் வாழ்க்கையில் ஒருமுறை கூட பார்த்ததில்லை. பட்டுத் துணியின் ஒவ்வொரு இழையுடனும் தங்களின் மூச்சுக் காற்றையும் சேர்த்து தைப்பதைப் போல் அவர்கள் உணர்ந்தார்கள். அவர்களின் எல்லாவித ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் பட்டுத்துணியின் மடிப்புகள் வழியாக எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன. தைப்பதற்கு இடையில் சோமப்பன் அந்தப் பட்டுத் துணியைச் சிறிது கிழித்தான். அப்போது அங்கு கூட்டமாகக் கூடியிருந்த மனிதர்களின் நாக்குகள் ஒரே நேரத்தில் 'உச்' கொட்டின. யாரோ தங்களுடைய இதயத்தைக் குத்திக் கிழிப்பதைப் போல் அவர்கள் நினைத்தார்கள்.
சோமப்பன் மிகவும் கவனமாகச் சட்டையைத் தைக்க முயன்றான்.
"சோமப்பா, சீக்கிரம் சட்டையைத் தைத்து முடி. நாங்க அதுக்கு மேல பூக்களைப் பின்னணும்.- ஒரு பெண் சொன்னாள். இளைஞர்கள் ஆச்சரியத்துடன் அந்தப் பெண்ணைப் பார்த்தார்கள்.
"மகளிர் சங்கமும் ராகவராவிற்கு மரியாதை செலுத்தும்!"- அந்தப் பெண் சொன்னாள்.
பட்டுச்சட்டை வீரய்யாவின் மகனுக்கு மட்டும் ஆனது என்ற நிலை மாறி முழு கிராமத்தின் மக்களுக்கும் சொந்தமானது என்றாகிவிட்டது. ஐந்து பெண்கள் பாட்டுப் பாடியவாறு அதன்மேல் பூக்களைப் பின்னினார்கள். சட்டையின் முன்பக்கத்தின் இடதுபாகத்தில் அரிவாள், சுத்தியல் சின்னத்தை அவர்கள் பின்னினார்கள். இதற்கிடையில் மற்ற பெண்கள் பூமாலை கோர்த்தார்கள். பிறகு சட்டையைப் பூமாலையாய்க் கட்டினார்கள்.
எல்லாம் முடிந்தது. பட்டுத் துணிக்கு இஸ்திரி போடவில்லை என்ற விஷயத்தை யாரோ ஞாபகப்படுத்திச் சொன்னார்கள். சோமப்பனிடம் இஸ்திரி பெட்டி இல்லை. வண்ணானிடமிருந்த இஸ்திரிபெட்டி ரிப்பேர் செய்யப்படுவதற்காக நகரத்திற்குக் கொண்டு செல்லப்பட்டிருந்தது. ஜமீன்தாருடைய தையல்காரனிடம் ஒரு இஸ்திரிபெட்டி இருந்தது. அவனுடைய வீடு ஜமீன்தாருடைய வீட்டுக்குப் பின்னால் இருந்தது. அங்கு யார் செல்வது? அங்கு போலீஸ்காரர்கள் காவல் காத்து நின்றிருந்தார்கள். அவர்கள் யாருடைய காலடிச் சத்தத்தையாவது காதில் கேட்டால் போதும், துப்பாக்கியைத் தூக்கி விடுவார்கள். இரண்டு இளைஞர்கள் முன்னால் வந்து சொன்னார்கள்: "நாங்க போயி இஸ்திரிபெட்டி வாங்கிட்டு வர்றோம்."
அவர்கள் போன பிறகு அகந்து சொன்னான்: "காட்டுக்கும் கிராமங்களுக்கும் செய்தியைச் சொல்லி அனுப்பணும். நாம பட்டுச் சட்டையை ஊர்வலமா கொண்டுபோயி சிறையில தரணும்."
சிறிது நேரத்திற்குள் கிராமத்தின் மொத்த ஆட்களும் மண்டபத்தில் ஒன்று சேர்ந்தார்கள். பந்தத்தை எரிய வைத்து கொள்கைகளை முழங்கினார்கள். இப்போது அவர்களுக்கு ஜமீன்தாரிடமோ, அவருடைய பணியாட்களிடமோ கொஞ்சமும் பயமில்லை. இளைஞர்கள் இஸ்திரிபெட்டி கொண்டு வந்தார்கள். அவர்களில் ஒருவனுடைய முழங்காலுக்குக் கீழே துப்பாக்கிக் குண்டுபட்டு இரத்தம் ஒழுகிக் கொண்டிருந்தது. அதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் அவனும் ஆவேசம் பொங்க கொள்கை முழக்கம் செய்தான்.