சிவந்த நிலம் - Page 19
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6354
"எங்க கிராமங்கள்ல இப்படிப்பட்ட சம்பவங்கள் புதுசு இல்ல. விவசாயிகள் ஜமீன்தார்மார்களுக்கும் தேஷ்முக்மார்களுக்கும் வரி கட்ட முடியாதுன்னு சொன்ன கிராமங்களிலெல்லாம் இப்படிப்பட்ட, ஏன் இதைவிட பயங்கரமான சம்பவங்கள் நடந்திருக்கு. அவங்க ராத்திரி நேரம் பார்த்து கிராமத்தை ஆக்கிரமிச்சுட்டாங்க. முழு கிராமத்தையும் நெருப்பு வச்சி எரிச்சுட்டாங்க. பகல் நேரத்துல அவங்களால கிராமத்தை ஆக்கிரமிக்க முடியாது. ராத்திரி நேரமா இருந்ததுனால கிராமவாசிகள்ல பலர் காட்டுக்குள்ளே ஓடித் தப்பிக்க முடிஞ்சது. அவங்க எல்லோரும் இப்போ எங்ககூட கைகோர்த்து பிடிச்சு நின்னுக்கிட்டு இருக்காங்க."
ராகவராவ் கண்ணம்மாவின் முகத்தை உற்றுப் பார்த்தான். அவளின் முகத்தில் பயத்தின் அடையாளமோ, கவலையின் ரேகைகளோ சிறிதும் இல்லை. எந்தவொரு உணர்ச்சி மாறுபாடும் இல்லாமல் அவள் பேசினாள். யெல்லரெட்டியின் தாய் உண்மையிலேயே ஒரு புதிய தாயாக மாறியிருந்தாள். அவளின் பயமின்மை, தைரியம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் பல சம்பவங்களை ராகவராவ் கேள்விப்பட்டிருக்கிறான். அவள் விவசாயிகள் சங்கத்தில் தன்னுடைய மகன் யெல்லரெட்டிக்கு எதிராகப் பேசியவள். ஏனென்றால், யெல்லரெட்டி கிராமத்தில் பணக்கார விவசாயிகளில் ஒருவனாக இருந்தான். அதனால் அவன் மக்களின் உணர்ச்சிகளை மதிக்கத் தயாராக இல்லை. அவனுடைய அன்னைதான் அவனைச் சரியான பாதைக்குக் கொண்டு வந்தவள். கண்ணம்மாவிற்கு முன்னால் நின்றிருந்த ராகவராவிற்குத் தெலுங்கு மொழியிலிருந்த ஒரு நாடோடிக் கதை ஞாபகத்தில் வந்தது. அந்தக் கதையின் நாயகி சேவை செய்வதில் தாசியாகவும், அறிவுரை கூறுவதில் மந்திரியாகவும், காதல் விஷயத்தில் ரம்பையாகவும், போர்புரிவதில் வீராங்கனையாகவும் இருப்பாள்.
"இனி என்ன செய்வது? எல்லா விவசாயிகளும் பயந்து போய் காட்டில் மறைஞ்சிருக்காங்க."- கண்ணம்மா சொன்னாள்.
"மக்புல், மற்ற தோழர்கள் ஆகியோர் சொன்னது இதுதான். இப்போ வரி கொடுக்க முடியாதுன்னு சொல்லியாச்சு. இனிமேல் பூமியைச் சரியான முறையில் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யணும்னு கேட்டுக்குறதுதான் விவசாய சங்கத்தின் செயல்பாடா இருக்கும். பூமி சொந்தத்தில் இல்லாதவர்கள் இப்படி ஓடிப்போய் காட்டுல ஒளியாம வேறென்ன செய்வாங்க? கிராமத்துல தாங்கள் பாதுகாத்து வைக்கணும்னு நினைச்சு திரும்பி வர்றதுக்கு அவங்ககிட்ட என்ன இருக்கு?அவங்களுக்குக் கிராமத்துல நிலம் தரணும்."- ராகவராவ் சொன்னான்.
கண்ணம்மாவிற்குப் பின்னால் நின்றிருந்த ஒரு ஆள் சொன்னான்: "ராகவராவ், நீங்க சொல்றது உண்மையிலேயே நியாயமானது. காட்டுல இருக்கிறவங்களுக்கும் நிலம் கிடைக்க வேண்டியது அத்தியாவசியம்தான். அப்படின்னாத்தான் கிராமத்திற்கும் காட்டுக்குமிடையே இருக்கக்கூடிய உறவு மேலும் பலமுள்ளதா ஆகும்."
"ஆந்திராவுல மலைவாழ் மக்கள் வெளிநாட்டினருக்கு எதிரா கொஞ்சம் போராட்டமா நடத்தியிருக்காங்க? மலைவாழ் மக்களின் தலைவர் அல்லூரி சீதாராம்ராஜுவின் போராட்டக் கதை ஆந்திராவுல உள்ள குழந்தைகளுக்குக் கூட தெரியும். அவர் இப்பவும் ஆந்திர காட்டுக்குள்ள இருக்கார்னு மக்கள் நம்பறாங்க. தைரியம் மிக்க மலைவாழ் மக்களை அரசியல்வாதிகளுக்கு எதிராகப் போராட இப்பவும் அவர் தூண்டிவிட்டுக்கிட்டு இருக்காரு."- மற்றொரு மனிதன் சொன்னான்.
"ஆமா... ஆமா..."- கண்ணம்மாவின் தோழர்களில் ஒரு ஆளான சக்கிலியனும் இன்னொரு ஆளான விவசாயத் தொழிலாளியும் சொன்னார்கள். அவர்கள் இருவரும் ஒரே குரலில் சொன்னார்கள்: "சரிதான். எங்களுக்கு நிலம் கிடைச்சபிறகு அதை எங்ககிட்ட இருந்து தட்டிப் பறிக்கிறதுக்கு எந்த அம்மாவோட மகன் வர்றான்றதை நாங்களும் பார்க்கத்தானே போகிறோம்! கிராமத்துல இருக்கிற சக்கிலியர்களுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் நிலம் கிடைக்கணும்."
கண்ணம்மா சிறிது நேரம் என்னவோ சிந்தனையில் மூழ்கிவிட்டு தனக்குப் பின்னால் நின்றிருந்த ஆதிவாசி தோழரிடம் சொன்னாள்: "ராமலு! நாம காட்டுல இருந்து கரீம் நகருக்குப் போகறம்னு காட்டுல இருக்கிற எல்லா விவசாயிகள் கிட்டயும் சொல்லு. அங்கே இருக்குற நிலத்தை விவசாயிகளுக்கு வினியோகம செய்யணும்."
ராமுலு காட்டிற்குள் ஓடினான். சக்கிலியனும் விவசாயத் தொழிலாளியும் அவனைப் பின் தொடர்ந்தார்கள்.
"எனக்கு ரொம்பவும் தாகமாக இருக்கு."- ராகவராவ் சொன்னான்.
கண்ணம்மா ஓடிப்போய் மலைச்சரிவிலிருந்து ஒரு மண்பானை நிறைய நீர் எடுத்துக்கொண்டு வந்தாள். ராகவராவ் அந்தக் குடத்திலிருந்த நீரில் பாதியைக் குடித்து முடித்தான்.
தாகம் அடங்கியபிறகு அவன் கேட்டான்: "அம்மா! இந்த வேலை முழுவதையும் தனியா செய்து முடிக்க உங்களால முடியுமா? இல்லாட்டி உதவிக்கு நானும் வரணுமா?"
"தனியா செய்து முடிக்க என்னால முடியும் ராகவா! நீ உன் வேலையைப் போய்ப் பார்!"- கண்ணம்மா சொன்னாள்.
ராகவராவ் சிறிது நடந்து சென்ற பிறகு பின்னால் திரும்பிப் பார்த்தான். கண்ணம்மா மலைச்சரிவில் உட்கார்ந்திருந்தாள். துப்பாக்கியை மடியில் வைத்தவாறு அவள் ராகவராவை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். ராகவராவ் அதைப் பற்றி அதற்கு மேல் சிந்திக்கவில்லை. அவன் மீண்டும் முன்னோக்கி வந்தான். திடீரென்று கண்ணம்மா அவனை அழைத்துச் சொன்னாள்:
"ராகவா! கேள்..."
ராகவராவ் மீண்டும் திரும்பி நின்றான். கண்ணம்மா அலட்சியமாக வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சிறிது நேரம் அதே நிலையில் உட்கார்ந்திருந்த பிறகு அவள் கேட்டாள்: "அவனோட கண்கள் இப்பவும் அதே மாதிரி திறந்துதான் இருக்கா?"
தன் தலை சுற்றுவதைப் போல் ராகவராவ் உணர்ந்தான். அவனுடைய நாவிலிருந்து ஒரு வார்த்தை கூட வெளியே வரவில்லை. ராகவராவ் வெறுமனே தலையைக் குனிந்தவாறு நின்றிருந்தான்.
கண்ணம்மா சிறிது நேரம் வானத்தை நோக்கிய பிறகு தன் முகத்தை முழங்கால் மீது வைத்தாள். அவளுடைய சூடான கண்ணீர் துப்பாக்கிக் குழாய்க்கு மேலே விழுந்து கொண்டிருந்தது.
மேற்கூரை நெருப்பில் எரிந்தபிறகு மீதமிருந்த மண்சுவர் ராகவராவின் மனதில் தோன்றியது. தலை உடலை விட்டுப் பிரிந்த நிலையில் வாசலில் கிடந்த பிணம், மூடாத கண்கள் தன்னிடம் ஏதோ கேட்பதைப் போல் ராகவராவிற்குத் தோன்றியது. ராகவராவ் மனதைச் சமநிலைப்படுத்திக் கொண்டு காரியங்களைச் செய்ய வேண்டும் என்பதற்காக அங்கிருந்து புறப்பட்டான். அவனிடம் சிறிது கூட சகிப்புத்தன்மை இல்லை என்று இதற்கு அர்த்தமில்லை. அவனுடைய இதயத்தில் அன்பும் தன்னுடைய சகபயணியான யெல்லரெட்டி மீது பரிவு உணர்ச்சியும் இல்லை என்று இதற்கு அர்த்தம் இல்லை. இவை எல்லாம் இருந்தும் ராகவராவ் தன்னுடைய லட்சிய இடத்தை நோக்கி நடந்தான். நடக்கும்போது இரண்டு விஷயங்கள் அவனுடைய மனதில் தோன்றின. மனிதனுடைய வளர்ச்சியை நோக்கிய பயணம் எப்போதும் சோதனைகளும் கஷ்டங்களும் நிறைந்ததே. அது கண்ணீரும் காயங்களும் கொண்டதே. எரிந்து கரிந்து சாம்பலாகிப் போன இதயத்தைக் காலால் மிதித்துக் கொண்டுதான் மனிதன் வளர்ச்சிப் பாதையில் ஒவ்வொரு அடியையும் வைத்து நடக்க வேண்டியதிருக்கிறது!