சிவந்த நிலம் - Page 17
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6355
நூற்றாண்டுகளாக அடியும், உதையும், சுரண்டலும் மட்டுமே பார்த்த அடிமைகளும் விவசாயத் தொழிலாளர்களும், இடையர்களும், ஆதிவாசிகளும் கிராமத்தில் நிலத்தை இழந்த எல்லா மக்களும் ஒன்று சேர்ந்து பலம்மிக்கவர்களாக மாறியிருக்கிறார்கள். எல்லோரும் ஒரே அணியாக நிற்கிறார்கள். நாற்பது கிராமங்களுக்கு அதிபதியான ஜகன்னாத ரெட்டியிடம் தங்களின் நிலத்தைத் திருப்பித் தரும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சண்டையும், அடிதடியும் நடந்து கொண்டிருக்கிறது. அடிமைகள் கைது செய்யப்படுகிறார்கள். அவர்கள் மீது அசுரத்தனமான அடிகளும், அக்கிரமங்களும் நாளும் நடந்து கொண்டிருக்கின்றன. நூற்றாண்டுகளாக காலால் மிதித்து நசுக்கப்பட்ட அடிமைகள் இன்று சிங்கத்தைப் போல கம்பீரமாக எழுந்து நிற்கின்றனர். சில இடங்களில் ஜமீன்தாரின் கட்டளையைக் காற்றில் வீசி எறிந்து விட்டு, அவர்கள் பூமியில் விவசாயம் செய்ய இறங்கி விட்டனர். அந்தக் குற்றத்தைச் செய்ததற்குத்தான் நாகேஸ்வரனைக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.
எல்லா விவரங்களையும் கேட்ட ராகவராவ் ஆச்சரியப்பட்டான். அதற்காகச் சந்தோஷப்படவும் செய்தான். வாழ்க்கை முழுவதும் அக்கிரமங்களையும், அநீதியையும் சகித்துக் கொண்டு வாழ்ந்த கிராம மக்களின் இதயத்தில் இந்த அளவிற்குத் தைரியம் வந்திருக்கிறது என்பதை ராகவராவால் நம்பவே முடியவில்லை. ஆயிரக்கணக்கான வருடங்கள் பழக்கம் கொண்ட அடிமைச் சங்கிலியைத் தகர்த்தெறிந்து மனிதர்கள் இவ்வளவு வேகமாக யதார்த்த மனிதர்களாக மாறமுடியுமா என்று அவன் உண்மையாகவே ஆச்சரியப்பட்டான்.
"ஆதிவாசிகள்தான் இந்தப் போராட்டத்துல முன்னாடி நிக்கிறாங்க. அவங்களோட ஒற்றுமையைப் பார்த்தால் நீ ஆச்சரியப்பட்டு நின்னுடுவே. இடையர்களைப் பற்றி நீ என்ன நினைக்கிறே?"
நாகேஸ்வரன் சிரித்துக் கொண்டே தன் தலையைத் தடவினான். திடீரென்று அவன் முகம் சோகமாக மாறியது.
"என்ன ஆச்சு நாகேஸ்வரன்?” ராகவராவ் கேட்டான்.
நாகேஸ்வரன் தன் தலையிலிருந்த ஒரு காயத்தின் தழும்பைக் காட்டினான். நெற்றி முதல் முன் தலைவரை நீளமாக இருக்கும் காயம். இரும்பைப் பழுக்க வைத்து சூடுபோட்டது போல் இருந்தது அது. அந்த இடத்தில் சிறிது கூட முடி இல்லை.
"இது எப்படி வந்துச்சு?"- ராகவராவ் மீண்டும் கேட்டான்.
"ஜமீன்தாரோட அடியாட்கள் என்னைப் பிடிச்சுக் கொண்டு போய் குதிரை லாயத்துல கட்டி வச்சாங்க. ரெண்டு நாட்கள் எந்த உணவும் எனக்குத் தரல. தொடர்ந்து அடி, உதைகள், கொடுத்துக்கிட்டே இருந்தாங்க. அதுக்குப் பிறகும் என்கூட வேலை செய்யிறவங்க யாரோட பேரையும் நான் சொல்லல. அவங்க அப்போ என் தலையில பழுக்க வச்ச இரும்பை வச்சுட்டாங்க. தலையில இருந்த முடியெல்லாம் பொசுங்கிடுச்சு. மத்தவங்க சிரிச்சுக்கிட்டிருந்தாங்க. உன் தலையில நாங்க மாஸ்கோ சாலை வெட்டியிருக்கோம்னு உரத்த குரல்ல சொன்னாங்க. வேதனையைத் தாங்க முடியாம நான் மயங்கிக் கீழே விழுந்துட்டேன்."
நாகேஸ்வரன் சிறிது நேரத்திற்கு எதுவும் பேசவில்லை. ராகவராவும் எதுவும் பேசவில்லை. பிறகு நாகேஸ்வரன் தன் தலையைத் தடவியவாறு தீவிரமான குரலில் கேட்டான்: "மாஸ்கோ எங்கேயிருக்கு சகோதரா?"
"மாஸ்கோ எங்கேயிருக்குன்னு உனக்குத் தெரியாதா?"
"தெரியாது, சகோதரா!"
"மாஸ்கோன்றது ஒரு நகரத்தோட பேரு."- சிறிது நேரம் கழித்து அவன் மீண்டும் சொன்னான்: "மாஸ்கோன்றது ஒரு கொள்கையும் கூட."
நாகேஸ்வரனுக்கு எதுவும் புரியவில்லை. அவன் விரக்தியாகத் தலையை ஆட்டியவாறு சொன்னான்: "எனக்கு எழுதவும் படிக்கவும் தெரியாது. நான் காட்டுல இருக்குற இடையன். இவ்வளவுதான் எனக்குத் தெரியும். என் வாழ்க்கையில்... எதுக்கு அப்படிச் சொல்லணும்? என் தந்தையின், தாத்தாவின் அவர்களோட ஏழு தலைமுறையிலும் யாரும் பூமியைப் பார்த்தது இல்ல. இருந்தாலும் எங்களுக்கு இப்போ பூமி கிடைக்கும்ன்ற தீவிரமான எதிர்பார்ப்பு! அந்த எதிர்பார்ப்பு உயிர் இருக்கிற காலம் வரைக்கும் போகவே போகாது."
"இந்த எதிர்பார்ப்பு, ஆசை-இவற்றோட பேர்தான் மாஸ்கோ"- ராகவராவ் சொன்னான்.
"இந்த ஆசை, எதிர்பார்ப்பு ஆகியவற்றின் பேர்தான் மாஸ்கோன்னா என் தலையில இருக்குற இந்தக் காயத்தோட தழும்பும் அதாகவே இருக்கட்டும். அவங்க வேணும்னா என் தலையில மட்டுமில்ல; உடம்பு முழுவதும் கூட மாஸ்கோ சாலையை வெட்டட்டும். எவ்வளவு வேதனை தோணினாலும் நான் எதிர்பார்ப்பையும் ஆசையையும் இறுகப் பிடிச்சுக்குவேன்."
ராகவராவ் நாகேஸ்வரனின் கையை இறுகப் பிடித்துக்கொண்டு சொன்னான்:
"தண்டனை முடிஞ்சபிறகு நானும் உன் கூட கிராமத்துக்கு வர்றேன்."
ஆனால், ராகவராவிற்கு விடுதலை கிடைத்த நாளன்று நாகேஸ்வரனைச் சிறையிலிருந்து விடவில்லை. அவனுடைய தண்டனைக் காலம் முடிவடைய இன்னும் பதினைந்து நாட்கள் இருந்தன. அதனால் ராகவராவ் மட்டும் தனியாகத் தன்னுடைய கிராமத்திற்குத் திரும்ப வேண்டிய சூழ்நிலை உண்டானது. மக்புல்லும் மற்ற தோழர்களும் அவனை வரவேற்பதற்காகச் சிறை வாசலுக்கு வந்திருந்தார்கள். தன்னுடைய கிராமத்திற்குச் செல்ல தான் விரும்புவதாக மக்புல்லிடம் ராகவராவ் சொன்னான். அதைக் கேட்டு மக்புல் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். ராகவராவ் தன்னுடைய கிராமத்திற்குச் சென்று விவசாயப் போராட்டத்தில் பங்கெடுக்க வேண்டியது அவசியம் என்று அவனுக்குத் தோன்றியது! மக்புல் விளக்கிச் சொன்னார்: "விவசாயப் போராட்டத்தின் எழுச்சியைத் தங்களால் மட்டும் அடக்கி ஒடுக்க நிஸாம் ஆட்சியின் காவல் படையால் முடியல. அதனால் நிஸாம் காவல் துறையும் ரஸாக்கர் படையும் ஒரே நேரத்துல ஜகன்னாத ரெட்டியோட பகுதியில கொலைத்தாண்டவம் நடத்திக்கிட்டு இருக்காங்க."
"ஆனா, ஜகன்னாத ரெட்டி இந்து. ரஸாக்கர் படையில் இருப்பதோ முஸ்லிம்கள்! இந்த ரெண்டும் எப்படி ஒண்ணு சேர முடியும்."
"அமைப்புகளின் விருப்பங்களுக்கும் ஆக்கிரமிப்பு செய்பவர்களுக்கும் தனிப்பட்ட மதமோ, தர்மமோ கிடையாது. பிற்போக்குச் சக்திகள் தோல்வியைத் தழுவ ஆரம்பிக்கும்போது, வர்க்கபேதம் மறைந்துவிடும் என்பதுதான் நம் நாட்டோட நிலை."
மக்புல் ராகவராவிடம் சிலரின் முகவரிகளைக் கொடுத்துக் கொண்டு சொன்னார்: "வழியில இந்த முகவரியில இருக்கிறவங்களைப் பார்த்து பேசுங்க. அந்தப் பகுதியோட சூழ்நிலைகள் அவங்களுக்குத்தான் நல்லாத் தெரியும்."
ராகவராவ் மக்புலிடமும் மற்ற தோழர்களிடமும் கை குலுக்கிவிட்டு தன்னுடைய கிராமத்திற்குத் திரும்பினான்.