சிவந்த நிலம் - Page 14
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6353
அந்த மனிதர் மீண்டும் அமைதியாகி ராகவராவுடன் சேர்ந்து நடந்தார். சிறிது தூரம் சென்றதும் அவர் ராகவராவிடம் தனிப்பட்ட முறையில் விசாரிக்க ஆரம்பித்தார். ராகவராவின் பெயர், கிராமம், இறக்கத்தில் எப்படி ரிக்ஷாவை இழுக்க வேண்டும், குறைந்த விலைக்கு உணவு எங்கு கிடைக்கும், உணவும் ஆடைகளும் தலைசாய்க்க இடமும் தரக்கூடிய முதலாளி ரிக்ஷா இழுப்பவர்களிடம் எவ்வளவு லாபத்தை அடைகிறான் போன்ற விஷயங்களே அவை. ராகவராவைப் பொறுத்தவரையில் அந்தத் தகவல்கள் உண்மையிலேயே விலை மதிப்பு கொண்டவையே. அவன் மிகவும் கவனமாக எல்லா விஷயங்களையும் கேட்டான். நடந்து கொண்டிருக்கும்பொழுது மேட்டை எப்போது கடந்தோம் என்பதே அவனுக்குத் தெரியாமற்போனது. பேசியவாறு ராகவராவ் அந்த மனிதரின் வீட்டிற்கு முன்னால் வந்துவிட்டான். அவ்வளவு தூரம் வந்தபிறகும் அந்த மனிதர் ரிக்ஷாவில் ஏறவே இல்லை.
வீட்டை அடைந்ததும் அவர் ராகவராவிற்குக் கூலியைக் கொடுத்து விட்டு சொன்னார்: "ஒரு கப் தேநீர் குடிச்சிட்டுப் போங்களேன்."
ராகவராவ் தேநீர் பருக விரும்பவில்லை.
"அப்படிச் சொல்லக்கூடாது. குளிர் காலத்துல தேநீர் குடிச்சா, உடம்புல சூடும் உற்சாகமும் உண்டாகும்!"- அந்த மனிதர் ராகவராவின் கையைப் பிடித்து வீட்டிற்குள் அழைத்துக் கொண்டு சென்றார்.
வீடு அப்படியொன்றும் பெரியது அல்ல. சிறியதாக இருந்தாலும் படு சுத்தமாக வைக்கப்பட்டிருந்தது. இரண்டு அறைகளே இருந்தன. ஒன்று ராகவராவ் நின்றிருந்தது. இன்னொன்று உள்ளே இருந்தது. இரண்டுக்கும் நடுவில் பூக்கள் பிணைக்கப்பட்ட திரைச்சீலை தொங்கிக் கொண்டிருந்தது. வெளியே இருந்த அறையில் மூன்று நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. எல்லாவற்றிலும் குஷன் வைக்கப்பட்டிருந்தது. தரையில் சிவப்பு நிறத்தில் உள்ள விரிப்பு விரிக்கப்பட்டிருந்தது. சுவர்களில் மரத்தால் ஆன அலமாரி இருந்தது. அலமாரி நிறைய புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ராகவராவ் ஆச்சரியத்துடன் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தபோது திரைச்சீலைக்கு அப்பாலிருந்து ஒரு பெண் அந்த அறைக்குள் வந்தாள். அவளுக்குப் பின்னால் ஓடிவந்த பெண் குழந்தை அந்த மனிதரின் காலை இறுகப் பிடித்துக் கொண்டது.
அந்த மனிதர் சிரித்துக்கொண்டே சொன்னார்: "என் பேரு மக்புல். இவள் என் மனைவி. இது என் மகள்- ஆமினா." தொடர்ந்து அவர் ஆமினாவைத் தூக்கியவாறு சொன்னார்: "இங்கே நிக்கிறது என்னோட தோழர் ராகவராவ். தோழருக்கு லால் சலாம் சொல்லு ஆமினா."
ராகவராவ் ஆச்சரியத்துடன் மக்புல்லையும், அவருடைய மனைவியையும் ஆமினாவையும் பார்த்தான். அவர்கள் ஒவ்வொருவரின் கண்களிலும், அன்பும் மரியாதையும் ததும்பிக் காணப்பட்டன. இந்த அளவிற்கு ஆழமான அன்பையும், மன நெருக்கத்தையும், இயல்பான சிரிப்பையும் இதற்கு முன்பு ராகவராவ் வேறெங்கும் பார்த்ததேயில்லை. ஆனால் 'லால் சலாம்' என்று சொன்னதன் அர்த்தம் அவனுக்குத் தெரியவில்லை. அவர்களின் பிரகாசமான முகங்களைப் பார்த்தபோது, 'லால் சலாம்' என்றால் ஏதோ விலை மதிப்புள்ள ஒரு பொருள் போலிருக்கிறது என்று ராகவராவ் நினைத்தான். அதனால் அவன் ஆமினாவைத் தழுவியவாறு சொன்னான்: "லால் சலாம்."
அதைக் கேட்டு ஆமினா விழுந்து விழுந்து சிரித்தாள். மக்புலின் மனைவியும் சிரித்தாள். மக்புல் ஒரு நாற்காலியில் உட்கார்ந்தவாறு சொன்னார்: "தோழர், இன்னைக்கு இரவு உணவை இங்கேதான் நீங்க சாப்பிடணும்."
ராகவராவ் வியப்புடன் மக்புல்லைப் பார்த்துக் கொண்டே இருந்தானே தவிர, பதிலெதுவும் கூறவில்லை.
தரையில் விரிக்கப்பட்டிருந்த விரிப்பிற்கு மேலே தட்டுகளை வைத்து, எல்லோரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணத் தொடங்கினார்கள். ஆமினா ராகவராவின் கையிலிருந்து உணவுக் கவளத்தை வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். ராகவராவிற்குத் தன்னுடைய சிறு பிள்ளைப் பருவம் அப்போது ஞாபகத்தில் வந்தது. அவன் இந்த மாதிரிதான் தன் தந்தையிடம் உணவுக் கவளம் வாங்கி குழந்தையாக இருக்கும்போது சாப்பிடுவான். மக்புல்லின் மனைவி சுரய்யா மீண்டும் மீண்டும் ராகவராவின் தட்டில் சாதத்தையும் குழம்பையும் பரிமாறிக் கொண்டேயிருந்தாள்.
ராகவராவ் மக்புல்லிடம் பல விஷயங்களைப் பற்றியும் கேள்விகள் கேட்க விரும்பினான். தோழர் என்று அழைப்பது யாரை? லால் சலாம் என்று சொல்வதன் அர்த்தம் என்ன? பிறகு... இந்த அன்பிற்கும் சகோதரத்துவத்திற்கும் நோக்கம் என்ன?- இவை போன்ற பல கேள்விகள்.
சாப்பிட்டு முடித்தபிறகு சுரய்யா ராகவராவிற்கு ஒரு கப் தேநீர் தயார் பண்ணிக்கொண்டு வந்தாள். தேநீர் குடித்துவிட்டு அவன் மக்புல்லையே ஆர்வத்துடன் பார்த்தான். அவன் எதுவும் கேட்பதற்கு முன்பு மக்புல் சொன்னார்: "இந்த இருமல் தீர்றது வரை நீங்க இரவு நேரத்துல வேலை செய்யாம இருக்குறதுதான் நல்லது."
அதற்கு ராகவராவ் கருத்து என்று எதுவும் கூறவில்லை.
"எங்க சங்கத்துல ஒரு டாக்டர் இருக்காரு. கட்டணம் எதுவும் இல்லாம அவர் உங்களுக்குச் சிகிச்சை செய்வாரு."
ராகவராவ் அப்போதும் மவுனத்தைக் கடைப்பிடித்தான்.
"இந்தக் குளிர்ல நீங்க வெளியே போயி என்ன பண்ணப் போறீங்க? இன்னைக்கு ராத்திரி இங்கேயே தங்கிருங்க."
"தோழர்னு சொல்றாங்களே... அப்படின்னா என்ன அர்த்தம்?"- ராகவராவ் திடீரென்று கேட்டான்.
மக்புல் நாற்காலியை விட்டு எழுந்து தன் மனைவியிடம் சொன்னார்:
"சுரய்யா! தோழர் இன்னைக்கு இங்கேயே தூங்குறாரு."
சுரய்யா ஒரு கோரைப் பாயையும் கம்பளியையும் தலையணையையும் தரை விரிப்பிற்கு மேலே கொண்டு வந்து போட்டு, பாயை விரித்துப் போட்டாள். மக்புல் அலமாரியிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து ராகவராவிற்கு அருகில் அமர்ந்தார்.
ராகவராவ் ஆர்வத்துடன் அந்தப் புத்தகத்தின் தாள்களைப் புரட்டிப் பார்த்தான். அவனுக்குப் படிக்கத் தெரியாது. மக்புல் அந்தப் புத்தகத்தின் முதல் பகுதியிலிருந்த ஒரு பூகோள படத்தை விரித்தான். அது- இந்தியா வரைபடம். மக்புல் அதற்கு மேல் தன் விரலை வைத்தவாறு சொன்னார்: "இது நம்ம நாடு இந்தியா." தொடர்ந்து அவர் இந்தியாவின் வடக்குப் பகுதியிலிருந்த ஒரு நாட்டின் வரைபடத்தில் விரலை வைத்தவாறு "முப்பது வருடங்களுக்கு முன்னாடி இந்த நாட்டிலும் நம்ம நாட்டுல இருக்கிறது மாதிரி அடிமைகள் இருந்தாங்க."
இரவு நீண்டு கொண்டிருந்தது. பேச்சும் நீண்டு கொண்டேயிருந்தது. அதே நேரத்தில் அன்றைய பேச்சின் ஒவ்வொரு வார்த்தையும் ராகவராவைப் பொறுத்தவரை ஒரு மிகப்பெரிய பொக்கிஷம் என்று தான் சொல்லவேண்டும். சுந்தரியின் புனிதமான மார்பகத்தில் புதிய வசந்தத்தை அவன் பார்த்தான். அந்த வார்த்தைகளில் அவற்றுக்கே உரிய ஒளிக் கீற்றுகளை அவனால் உணர முடிந்தது. தனக்குள் நூறு வருடங்களாகத் தெரியாமலிருந்த பல விஷயங்கள் தெரிய வந்திருப்பதைப் போல் அவன் உணர்ந்தான். ஜமீன்தார்களுடைய பிரம்மாண்டான மாளிகைகளின் அலங்காரங்கள் ராகவராவைத் தலைகுனியச் செய்தன.