சிவந்த நிலம் - Page 10
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6352
சுந்தரி ராகவராவின் கேள்விகளுக்கு எந்தப் பதிலும் கூறவில்லை. காரணம் என்னவென்றால்- அவளுடைய சமுதாயத்தைச் சேர்ந்த எந்தவொரு பெண்ணுக்கும் இப்படிப்பட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தெரியாது. இப்படிப்பட்ட அக்கிரமங்களையும்- மானக்கேடான செயல்களையும் நிறுத்த தங்களால் முடியும் என்ற நம்பிக்கையும் அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு அழுவதைத் தவிர, வேறு வழியே இல்லை.
ராகவராவ் அமைதியாய் உட்கார்ந்து சுந்தரியின் கண்ணீரைப் பார்த்துக் கொண்டிருந்தான். சில நிமிடங்களுக்குப் பிறகு அவளுடைய கண்ணிலிருந்து வந்து கொண்டிருந்த நீர் நின்றது. வறண்டு போயிருந்த அந்த மண்ணில் அந்த அழுகைக்கான ஒரு அடையாளம் கூட எஞ்சியிருக்கவில்லை.
ராகவராவ் உட்கார்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்தான். திடீரென்று அவனுக்கு ஒரு உண்மை தோன்றியது. இப்படிப்பட்ட அவமானமான செயல்களும் கண்ணீரும் இனிமேல் ஆந்திராவின் மண்ணை நனைக்காமல் இருக்கவேண்டும். அதற்காக விவசாயிகள் கட்டாயம் மார்பில் இரத்தம் சிந்தியே ஆக வேண்டும்.
ராகவராவ் ஒரே நிமிடத்தில் தன்னுடைய காதலின் ஒவ்வொரு மணித்துளியையும் படுவேகமாகக் கடந்தான். அந்த நிமிடங்களுக்கு நடுவில் அவன் தன்னுடைய நினைவுகளின் சுவர்களைத் தாண்டினான். தான் முழுமையாகப் புதிய ஒரு சிந்தனையின் கையை இறுகப் பற்றியிருக்கிறோம் என்பதை அவன் புரிந்து கொண்டான்.
அன்று இரவு ராகவராவ் வீட்டிற்குத் திரும்பிச் செல்லவில்லை. கிராமத்தை விட்டு அதிர்ஷ்டத்தைத் தேடி வெளியேறினான். அப்படிப் போகும் வழியில் அவன் ஒருநாள் அடிமையான விஷயமும் நடந்தது. எனினும், அவன் இப்போது அடிமை அல்ல. முழுமையான சுதந்திரத்தைக் கொண்ட மனிதன் அவன். இப்போது ராகவராவின் கையில் இருப்பது ஒரு புதிய கண்ணாடி. அவன் கலை வேலைப்பாடுகள் செய்யப்பட்ட பல்லக்குடன் ஒரு புதிய இளம்பெண்ணைத் தேடிக் கொண்டிருக்கிறான்.
4
இன்று வரை தன்னுடைய வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களைக் கோர்வையாகச் சிறிதும் பிசிறின்றி நினைத்துப் பார்க்க ராகவராவால் முடியவில்லை. அந்தச் சம்பவங்களை ஒன்றோடொன்று இணைக்கக்கூடிய சங்கிலியின் கண்ணிகள் இடையில் ஆங்காங்கே விட்டுப்போயிருந்தன. அந்தக் கண்ணிகள்தான் ஒன்றோடு இன்னொன்றை இணைத்து வாழ்க்கையை ஒரு முனையிலிருந்து இறுதிக்குக் கொண்டு செல்கின்றன. அதே நேரத்தில் அந்தச் சங்கிலியைத் தாண்டி நடந்த சம்பவங்களை நாணயத்தைப் போல பரிசோதித்துப் பார்க்க ராகவராவால் முடியவில்லை. அவன் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும், இல்லாவிட்டால் சந்தர்ப்பத்தை எடுத்துப் பரிசோதனை செய்து பார்க்கும்போது அவனுடைய எதிர்பார்ப்புகளும் அவற்றோடு வந்து சேர்ந்து கொள்கின்றன. சம்பவங்கள் ஒவ்வொன்றும் சுவாரசியமானவையே. அந்தச் சுவாரசியம்தான் சம்பவங்களை ஒன்றோடொன்று கோர்த்து முன்னோக்கி அழைத்துச் செல்கின்றன. ராகவராவ் சில நேரங்களில் அளவுக்கு மீறி உண்டாகும் உற்சாகத்தில் துள்ளிக் குதித்து கீழே விழுந்து விடுவான். சில நேரங்களில் பாலைவனத்திற்கு நடுவில் மாட்டிக்கொண்டு வழிதெரியாமல் தவிப்பான். எனினும் எல்லா பிரச்சினைகளுக்கும், ஆபத்துகளுக்கும் நடுவில் அவன் ஒரு தீபத்தின் வெளிச்சத்தைப் பார்க்கவே செய்கிறான். அந்த தீபத்தின் வெளிச்சம் மட்டும் இல்லாமற் போயிருந்தால், ராகவராவ் ஆபத்துகளுக்கு மத்தியில் எப்படி முன்னோக்கிச் செல்ல முடியும்? கடந்த மூன்று வருடங்களாக அவன் அத்தகைய ஆபத்துகளைச் சந்தித்துக் கொண்டு தானிருக்கிறான்.
தான் எங்கு போகிறோம், என்ன செய்ய விரும்புகிறோம் போன்ற விஷயங்கள் ராகவராவிற்குத் தெரியாமலே இருந்தது. வாழ்க்கையைப் பற்றி தெளிவில்லாத ஒரு கொள்கையே அவனுக்கு இருந்தது. அக்கிரமம், அநீதி ஆகியவற்றுக்கு எதிராகப் பக்குவமற்ற கோபம், காதலைப் பற்றி ஒரு வெறுப்பான பார்வை... இவைதான் அவனிடமிருந்தது. நகரத்தில் ஒரு பணக்காரக் குடும்பத்தில் மூன்று, நான்கு வருடங்கள் பாத்திரங்கள் கழுவும் வேலை செய்த பிறகும் அந்தக் கோபத்தையும் வெறுப்பையும் இல்லாமற் செய்ய ராகவராவால் முடியவில்லை. அவன் வேலை செய்த பணக்கார வீட்டின் இல்லத்தரசி எலும்பே ஒடிந்து போகும் அளவிற்கு அவனிடம் வேலை வாங்கினாலும் அவனுக்குச் சாப்பிடத் தருவதென்னவோ சொற்பம்தான். அதைச் சாப்பிட்டு ஏதோவொரு விதத்தில் தன் உயிரைப் போகாமல் காப்பாற்றிக் கொண்டிருந்தான் என்பதுதான் உண்மை. ராகவராவின் சொந்த கிராமத்தைச் சேர்ந்த பிரதாப ரெட்டியும் அப்படித்தான் நடந்தார். பணக்காரனின் வீட்டில், நேரம் கெட்ட நேரத்தில் விருந்தாளிகள் வரும் நாட்களில் ராகவராவ் பட்டினி கிடக்க வேண்டிய நிலை கூட உண்டாகும். கிராமத்திலும் அவன் இதே போல எத்தனையோ நாட்கள் பட்டினி கிடந்திருக்கிறான்.
வேலை செய்வதற்கு மத்தியில் ராகவராவிற்கு ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது. அந்தப் பணக்காரருக்கு ஒரு கிராமத்தில் ஏராளமான நிலங்கள் இருந்தன. இனியும் நிலம் வாங்க அவர் முயன்று கொண்டிருந்தார். எச்சில் பாத்திரங்களைக் கழுவுவதற்கு மத்தியில் ராகவராவ் இன்னொரு ஜகன்னாதரெட்டி பிறந்திருப்பதைப் பார்த்தான். அந்தப் பணக்காரரின் வீடு மிகப்பெரிய மாளிகையாக இருக்கவில்லை என்பதென்னவோ உண்மைதான். வீட்டைச் சுற்றிலும் சுவர்களும், படிகளும் இல்லைதான்.
அவன் பாத்திரம் தேய்த்துக் கழுவும் வேலைக்காரனாக மாறிய தன்னுடைய பசியையும் கிராமத்திலிருக்கும் அடிமைகளின் பசியையும் ஒப்பிட்டுப் பார்த்தான். தன்னுடைய தொழிலையும் அதற்குத் தான் வாங்கும் கூலியையும், அடிமைகளின் தொழிலையும் அதற்கு அவர்கள் வாங்கக்கூடிய கூலியையும் ஒப்பிட்டுப் பார்க்க ராகவராவால் முடியும். அடிமைகள் கிராமங்களில் மட்டுமல்ல; நகரங்களிலும் இருக்கிறார்கள் என்பதை அவன் புரிந்து கொண்டான். கடவுள் தன் கைகளால் ரெட்டிமார்களை மட்டும் படைக்கவில்லை. இருட்டின் மறைவில் அடிமைகளையும் தான் அவன் படைத்திருக்கிறான்.
பணக்காரர் மூன்று நான்கு தடவைகள் கடத்தல் பொருட்களைப் பல இடங்களிலும் கொண்டு போய் சேர்க்கும் வேலையை ராகவராவிடம் ஒப்படைத்தான். அப்போதுதான் அந்த உண்மையைத் தெரிந்து கொள்ள அவனால் முடிந்தது. ஒவ்வொரு முறையும் பணக்காரரின் மடி பணத்தால் நிறைந்து காணப்படும். ராகவராவின் வயிறு எப்போதும் காலியாகவே இருக்கும். பணக்காரரின் மடியுடன் தன்னுடைய வயிறை ஒப்பிட்டுப் பார்க்காமல் இருந்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை அவன் உணர்ந்தான். ராகவராவ் ஒரு பொருளாதார நிலைமையையும் அதன் அசுரத்தனமான வடிவத்தையும் நேரில் பார்த்தான். குரூரமான ஒரு தமாஷான விஷயம் அவனுக்கு முன்னால் அரங்கேறிக் கொண்டிருந்தது. ஜகன்னாத ரெட்டியின் அரண்மனைக்குள் நுழையவோ அதைப் பார்ப்பதற்கான வாய்ப்போ ராகவராவிற்குக் கிடைக்கவில்லை. ஆனால், இப்போது அவன் எதிரியின் அந்தப்புரத்திலேயே வசித்துக் கொண்டிருக்கிறான். இரவும், பகலும் பணக்காரரும் அவருடைய மனைவியும் பேசிக் கொண்டிருப்பதை அவன் கேட்பான். அந்தப் பேச்சு பணம், நிலம் ஆகியவற்றைப் பற்றித்தான் பெரும்பாலும் இருக்கும். அவர்கள் ஒருமுறைகூட ராகவராவின் பசியைப் பற்றி பேசியதே இல்லை.