சிவந்த நிலம் - Page 7
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6352
அடிமைகள் சில நிமிடங்களுக்குத் தங்களுடைய எல்லாவித கவலைகளையும் மறந்து கதாகாலட்சேபத்தில் மூழ்கிப் போனார்கள்.
கதை இளைஞனான ஒரு யோகியைப் பற்றியும் ராஜகுமாரியைப் பற்றியும் இருந்தது. ராஜகுமாரியின் தந்தை வைணவன். யோகி சிவனை வழிபடக் கூடியவன். இந்த உலகத்தில் அநீதியும் அக்கிரமங்களும் இல்லாமற் செய்யவேண்டும் என்பதற்காகத்தான் அந்த யோகியே பிறப்பெடுத்தான். அவன் தன்னுடைய புதிய லட்சியங்களை வெளியே பரப்ப ஆரம்பித்தான். அப்போது ஒருநாள் தான் செல்லும் வழியில் அவன் ராஜகுமாரியைச் சந்தித்தான்.
ஒற்றைக் கம்பி வீணையின் நாதம் நீண்ட நேரம் காற்றில் கலந்து ஒலித்துக் கொண்டேயிருந்தது. இதயத்தை மயக்கக்கூடிய அந்த நாத வெளியில் அடிமைகள் ராஜகுமாரியின் முகம் தெரிவதைப் பார்த்தார்கள். விளக்கு வெளிச்சம் கிணற்று நீரில் தெறித்து ஒரு ஆவேச உணர்வை அங்கு உண்டாக்கியது. நீலநிற வானத்தில் எண்ணிக்கையில் அடங்காத நட்சத்திரங்கள் மின்னிப் பிரகாசித்துக் கொண்டிருந்தன.
தான் உறங்கிக் கொண்டிருக்கிறோமா? இல்லாவிட்டால் விழித்திருக்கிறோமா என்பதை ராகவராவால் புரிந்து கொள்ள முடியவில்லை. பொழுது புலரும் நேரத்தில் புதிய நாள் வந்து இரவின் கனவைத் தகர்த்து சாம்பலாக்கியபோதுதான், உதயசூரியனின் மெல்லிய கதிர்கள் வந்து கண் இமைகளைத் தழுவியபோதுதான், அவனுக்குச் சுய உணர்வே மீண்டும் வந்தது. அவனுடைய தந்தை அப்போதும் ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கிப் போயிருந்தான். குதிரைகள் சீ... சீ... என்று ஓசை உண்டாக்கி தரையில் அழுத்தமாக மிதித்துக் கொண்டிருந்தன. அதற்குப்பிறகு சில நிமிடங்கள் ராகவராவின் மனம் மிகவும் அலட்சியமாக இருந்தது. அவ்வப்போது அல்லது வாழ்க்கையின் சில குறிப்பிடத்தக்க நிமிடங்களில் ஒவ்வொரு கோபமும் குமிழிகளைப் போல மனதில் வடிவமெடுக்கத்தான் செய்கின்றன. அப்போது ஜகன்னாதரெட்டி, காவல்துறை அதிகாரி, கிராமத்தின் மற்ற ஜமீன்தார்கள் ஆகியோரின் முகங்கள் கண்களுக்கு முன்னால் தோன்றி மறையும். அந்த நேரங்களில் ராகவராவ் கோபத்தின் மீது தன் கவனத்தை அதிகமாகச் செலுத்துவதில்லை. அது எதற்காக என்றால் தன்னுடைய மனதில் முளைத்திருக்கும் முட்செடிக்குத் தன்னுடைய கோபமென்னும் உரத்தைத்தான் போட்டிருக்கிறோம் என்ற உண்மை அவனுக்கு நன்றாகவே தெரியும். கோபம் வரவேண்டும் என்பதற்காகக் கோபம் என்ற தத்துவத்தின் மீது ராகவராவிற்கு எப்போதும் நம்பிக்கையில்லை. அதனால் அவன் பல நிலைகளையும் வேகமாகக் குதித்துக் கடந்து முன்னோக்கிப் போய்க் கொண்டிருந்தான். ஆயிரம் வகைப்பட்ட சில்லரை நாணயங்களைப் பரிசோதித்துப் பார்த்த பிறகு அவை எல்லாவற்றையும் விட்டெறிந்துவிட்டு, அவன் சிறுவனாக இருந்த பருவத்திலிருந்து வாலிபப் பருவத்திற்கு வந்தான். திடீரென்று அவன் தன்னுடைய நண்பனான நாகேஸ்வரனைப் பற்றி நினைத்தான். நாகேஸ்வரன் இப்போது அவனுக்கு அருகிலிருக்கும் சிறை அறைக்குள் அடைப்பட்டுக் கிடக்கிறான்.
நாகேஸ்வரன் ராகவராவைப் போல மெலிந்து போய் உயரம் குறைவாக இருக்கும் மனிதனல்ல. அவன் ஆறடிக்கும் அதிகமான உயரத்தைக் கொண்டவன். அதற்கேற்ற உடல்வாகும் அவனுக்கு இருக்கிறது. பேசும்போது அடித்தொண்டையில் இருக்கும் அவனுடைய குரல். நாகேஸ்வரன் போகாவதி நதியின் இன்னொரு கரையிலிருக்கும் காட்டில் ஆடு, மாடுகளை மேய்த்துத் திரிந்து கொண்டிருந்தான். ராகவராவ் அவ்வப்போது அடிமை வேலைகளிலிருந்து ஒளிந்து ஓடி அலைந்து திரியும்போது அவனுக்கு இருக்க இடம் தந்தவன் நாகேஸ்வரன்.
ராகவராவிற்கும் நாகேஸ்வரனுக்கும் இடையில் ஒரு நெருங்கிய அன்பும் பிணைப்பும் பலமாக உண்டாவதற்குப் பின்னால் காரணமாக இருந்தது கோப உணர்வே. நாகேஸ்வரன் ஜமீன்தாரை வெறுத்தான். அந்த வெறுப்பு வந்ததற்குக் காரணம்- பணம் எதுவும் தராமல் ஜமீன்தார் மூன்று அல்லது நான்கு தடவைகள் அவனுடைய ஆடுகளை பலவந்தப்படுத்தி பிடித்துப் போய்க் கொண்டிருந்தார். ராகவராவிற்கும் ஜமீன்தார் மீது பயங்கர வெறுப்பு இருந்தது. அதற்கான காரணம்- அவன் அந்த ஆளின் அடிமையாக இருந்தான். அவனுடைய தந்தையும் அடிமை. வீரய்யா பல நேரங்களில் அவனிடம் கூறியிருக்கிறான். தாங்கள் அடிமைகளாக இல்லாமலிருந்த ஒரு காலம் முன்பு இருந்தது என்றும்; கலப்பையும் காளைகளும் விளைபொருட்களும் தங்களுக்குச் சொந்தமாக இருந்தன என்றும்; குழந்தைகளின் உதடுகளில் கொஞ்சலும், பெண்களின் தொண்டையில் பாட்டுகளும் இருந்தன என்றும் அவன் கூறியிருந்தான். கோபமும் வெறுப்பும் பொறுத்துக்கொள்ள முடியாத எல்லையைத் தாண்டுகிறபோது வீரய்யா விசிலடிக்க ஆரம்பிப்பான்.
"நமக்கு முன்னால் ஜமீன்தாரோட கம்பீரமான மணிமாளிகை நின்று கொண்டிருப்பதை நீ பார்க்குறேல்ல? அந்த மாளிகை எங்ககிட்ட இருந்த எல்லாத்தையும் தட்டிப் பறித்தது... மனிதர்களா இருந்த எங்களை மிருகங்களா ஆக்கியது அதுதான். என் தந்தை எனக்கு இந்தக் கோபத்தைத் தந்துட்டுப் போனாரு. நீ இப்போ வளர்ந்து பெரியவனா ஆயிட்டே. என்கிட்ட இருக்குற எல்லா கோபங்களையும் வெறுப்பையும் நான் உனக்குத் தர்றேன். மனிதன் தன்னோட பிள்ளைகளுக்குச் செல்வத்தைத் தர்றான். பூமியைத் தர்றான். என்கிட்ட செல்வமோ, பூமியோ இல்ல. கோபமும் பகையும் மட்டும்தான் என்கிட்ட இருக்கு. அதை வாரிசு உரிமைன்ற முறையில உனக்கு நான் தர்றேன். சுமையைத் தூக்கித் தூக்கி நான் கிழவனாஆயிட்டேன். என்கிட்டே இப்போ கொஞ்சமும் பலமே இல்ல. பலத்தை எப்படி சேகரிக்குறதுன்ற விஷயம் எனக்குத் தெரியாது. சொத்துன்னு சொல்லிக்கிறதுக்கு என்கிட்ட இந்தக் கோபம் மட்டும்தான் இருக்கு. நான் அதை உனக்கு விட்டுட்டுப் போறேன். ஏதாவது வழியைத் தேடிக் கண்டுபிடிக்க முடிஞ்சா பிடிச்சுக்கோ..."
அன்று முதல் ராகவராவ் தனக்குள் இருந்த கோபத்தைத் தன் தந்தையிடமிருந்து பெற்ற சொத்து என நினைத்து மனதில் பூட்டி வைத்திருந்தான். தன் வாழ்க்கை அனுபவத்தின் மூலமாக அவன் அந்தக் கோப உணர்வை நாளும் வளர்த்துக் கொண்டிருந்தான். வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும் ராகவராவை நினைவுபடுத்திக் கொண்டேயிருந்தது. "ஜமீன்தாரோட இந்தப் பிரம்மாண்டமான மாளிகை உன் குடும்பத்திற்கு அல்லது உன் வம்சத்திற்கு மட்டும் எதிரி இல்லை. ராமலு, அகந்து, சோமப்பா, வெங்கட்டராவ் போன்ற ஆயிரக்கணக்கான அடிமைகளுக்கும் அது எதிரிதான். அவர்களின் பொன்னென மின்னிக் கொண்டிருக்கும் தாவரங்கள், வயல், வீடு, பாட்டு, பருத்தியின் வெள்ளை நிறப் பூக்கள், மனைவிமார்களின் சிரிப்பு- இவை எல்லாவற்றையும் இந்தப் பிரம்மாண்டமான மாளிகை தட்டிப் பறித்துவிட்டது" என்ற குரல் அவனுக்குள் முழங்கிக் கொண்டேயிருந்தது.
அந்தக் கோபமும் வெறுப்பும் ராகவராவிற்கும் நாகேஸ்வரனுக்குமிடையே இருந்த நட்பை பலம் பொருந்தியதாக ஆக்கியது. அந்தக் கோபம் ராகவராவை உண்மைகளுக்கு முன்னால் கொண்டு வந்து அவனை நிறுத்தியது. இந்த உலகத்தில் ஜகன்னாதரெட்டி போன்றவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ராகவராவைப் போன்ற அடிமைகள் ஒன்று சேர்ந்தார்களென்றால் அந்தப் பிரம்மாண்ட மாளிகைகளும் அதன் சுவர்களும் அதிக நாட்கள் நிலைத்து நிற்க முடியாது.