சிவந்த நிலம் - Page 3
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6352
அதே நேரத்தில் வயல்களுக்கு வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் தங்களின் குழந்தைகளை எப்படிக் கொஞ்சிக் குலாவி வளர்ப்பார்களோ அந்த மாதிரி வளர்க்கவும் வீரய்யாவால் முடியவில்லை.
பொழுது புலரும் நேரத்திலிருந்து மாலை மயங்கும் நேரம் வரை வீரய்யா மிகவும் கஷ்டப்பட்டு வேலை செய்வான். சொந்தத்தில் நிலம் எதுவும் அவனிடம் இல்லை. நிலம் ஜமீன்தாருக்குச் சொந்தமானது. வீரய்யாவும் அவனுடன் வேலை செய்யும் மற்றவர்களும் ஜமீன்தாரின் அடிமை வேலைக்காரர்களாக இருந்தார்கள். அவர்கள் ஜமீன்தாரின் வளர்ப்பு மிருகங்கள் என்று கூட கூறலாம். சிலநேரங்களில் அவர்கள் ஜமீன்தாரின் சவாரி குதிரையாகவோ அல்லது கோழியாகவோ அவர்கள் மாறவேண்டும். சிலவேளைகளில் அவர்களின் மனைவிமார்களின் அல்லது மகன்களின் எடுபிடிகளாக மாறவேண்டும். பசியை இல்லாமற் செய்வதற்காக இத்தனையையும் செய்ய வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிற ஒரு மனிதன் தன்னுடைய சொந்த மகனின் கஷ்டங்களைச் சகித்துக்கொள்ளவும் அவனுக்கு வேலை செய்யச் சொல்லித் தராமலும் இருந்தால் அவன் தன் சொந்த மகனுக்கு நம்பிக்கை மோசம் செய்கிறான் என்றுதான் எடுத்துக் கொள்ளவேண்டும்.
வீரய்யா எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். அவன் உண்மையில் நம்பிக்கை மோசம் செய்யக்கூடிய ஒரு தந்தை அல்ல. அதனால் சிறு வயதிலிருந்தே ராகவராவ் பட்டினியையும் பசியையும் சகித்துக்கொண்டு செருப்பு இல்லாத நிர்வாணக் கால்களுடன் வாழ்வதற்குக் கற்றுக் கொண்டிருந்தான். பட்டினியும் பசியும் செருப்பு இல்லாத கால்களும் அடங்கிய வாழ்க்கையின் காய்ந்து வறண்டு போன நிமிடங்களில் கூட அவன் சிறு சிறு சந்தோஷங்களைக் காண்பதற்குப் பழகிக் கொண்டான். அதற்கு மேலாக அவனுக்கு எந்தவொரு ஆசையும் மனதில் இருக்கவில்லை. அப்படியே இருந்திருந்தால் கூட சமுதாயச் சூழ்நிலை பலம் பொருந்தியதாகவும் கடுமையானதாகவும் இருந்ததால் மனதில் ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் வைத்துக்கொண்டு முன்னோக்கிச் செல்ல ராகவராவால் முடியவில்லை என்பதே உண்மை.
அவனுக்குச் சரியாக ஞாபகத்தில் இல்லை. எனினும் அவ்வப்போது தெளிவற்ற ஒரு ஓவியம் அவன் கண்ணுக்கு முன்னால் தோன்றுவதுண்டு. அப்போது ராகவராவ் மிகவும் சிறியவனாக இருந்தான். ஜனவரி மாதத்தின் குளிர் நிறைந்த காலம். இன்னும் சிறிது நேரம் பாயில் படுத்திருந்தால் நன்றாக இருக்கும் என்று அவன் நினைத்தான். ஆனால், அவனுடைய தந்தை அவனைத் துணிக்குள் போட்டு மூடி முதுகில் வைத்துக்கொண்டு ஜமீன்தாருக்குச் சொந்தமான பருத்தித் தோட்டத்திற்கு வேலை செய்வதற்காகப் புறப்படுவான். அப்போது ராகவராவ் அழுது கொண்டிருப்பான். வீரய்யா அழுது கொண்டிருக்கும் தன்னுடைய மகனை முதுகில் போட்டுக்கொண்டு தோட்டத்தில் பருத்தி சேகரித்துக் கொண்டிருப்பான். பிறகு ராகவராவ் அழுகையை மறந்து அமைதியாக இருக்கக் கற்றுக்கொண்டான். பாலுக்குப் பதிலாகச் சோறும் அரிசிக் கஞ்சியும் சாப்பிட அவன் கற்றுக் கொண்டான். சப்பாத்தி தயாரிப்பது எப்படி என்பதையும் ஒருநாள் தெரிந்து கொண்டான். வயலில் எப்படி வேலை செய்வது என்பதைக் கற்றுக்கொள்ளும் வரை அவன் தன் தந்தைக்காக சமையல் செய்தான். சப்பாத்தி தயாரித்து அவன் வயலுக்கு எடுத்துச் செல்வான்.
ராகவராவைப் பொறுத்தவரையில் சப்பாத்தி தயாரிப்பது என்பது அப்படி ஒன்றும் கஷ்டமான ஒரு விஷயமாக இருக்கவில்லை. முதன் முதலாக அவன் கோதுமையை அரிசியைப் போல நீரில் வேக வைப்பான். அப்போது கொஞ்சம் சட்னியும் அரைப்பான். பிறகு அதை வாழை இலையில் கட்டி தன் தந்தைக்கு வயலுக்கு எடுத்துச் சென்று கொடுப்பான். சில வேளைகளில் ஜமீன்தார் வீட்டிலிருந்து எல்லோருக்கும் மோர் வரும். மோர், சட்னி இரண்டையும் சேர்த்து கோதுமை சப்பாத்தி சாப்பிட்டு முடிக்கும்போது களைத்துப்போன கைகளுக்கு மீண்டும் பலம் கிடைத்தது மாதிரி இருக்கும். தொடர்ந்து வீரய்யா தன் வேலையில் தீவிரமாக மூழ்கி விடுவான். ராகவராவ் பருத்தியை ஒரு இடத்தில் குவித்து வைப்பான். அப்போது ராகவராவிற்கு ஒரு விஷயம் நன்கு புரிந்தது. விதைப்பதும் விளைச்சலை எடுப்பதும் தாங்களாக இருந்தாலும் தங்களுக்கு அதில் எந்த உரிமையும் இல்லை என்பதுதான் அது. அவன் முழுமையான விவசாயத் தொழிலாளியாக மாறிய நாளன்று அவனுக்கு அன்றுவரை கிடைத்திருந்த அரவணைப்பும் இல்லாமற் போனது.
சுமையைச் சுமக்கும் கழுதை கர்வத்துடனும் அன்புடனும் சுமையைச் சுமந்து கொண்டிருக்கும் தன் குட்டியைப் பார்ப்பது போல அடிமை வேலைக்காரனான வீரய்யாவும் அசாதாரணமான மதிப்புடன் அடிமை வேலைக்காரனான தன்னுடைய மகனைப் பார்த்தான். தன் மகனின் தலையில் வைக்கப்பட்டிருக்கும் பாரத்தைக் கொஞ்சம் குறைப்பதன் மூலம் தந்தை- பிள்ளைப் பாசத்தை வெளிப்படுத்தினான். அதே மாதிரி தன் தந்தையின் தலையில் இருக்கும் பாரத்தைத் தன் தலையில் ஏற்றிக் கொள்வதன் மூலம் மகன் தந்தையின் மீது தான் கொண்டிருக்கும் பாசத்தை வெளிப்படுத்தினான். அவர்கள் இரண்டு பேரின் தலையிலும் அதிகமான பாரத்தை ஏற்றிச் சுமக்கச் செய்வதில் ஆர்வமாக இருந்தார் ஜமீன்தார்.
ராகவராவ் அந்த நாணத்தை இப்படியும் அப்படியுமாகப் புரட்டிப் பார்த்தான். அவனுக்கும் அவனுடைய தந்தைக்கும் இடையில் ஒரு நல்ல ஒற்றுமை இருந்தது. தந்தையின் உடல்வாகு, தந்தையின் நிறம், தந்தையின் வறுமை எல்லாமே ஒரு தொடர் உரிமை என்பதைப் போல அவனுக்குக் கிடைத்திருந்தன. தன்னுடைய உடல் வாகையும் நிறத்தையும் மாற்றிக்கொள்ள ராகவராவால் முடியாது. அப்படிப்பட்ட ஒரு விருப்பமும் அவனுக்கு இல்லை. எனினும், வறுமையை இல்லாமற் செய்யவேண்டும் என்ற உறுதி மட்டும் அவனுக்கு இருந்தது. அப்படிப்பட்ட ஒரு வெறி வாலிபப் பருவத்தை நோக்கிக் கால் வைத்தபோது அவனுக்குத் தோன்றியது என்று கூற முடியாது. சிறுவனாக இருந்த காலத்திலேயே அப்படிப்பட்ட ஒரு சிந்தனை அவனை ஆட்கொண்டு விட்டது.
தன் வயதிலிருக்கும் சிறுவர்களும் சிறுமிகளும் பள்ளிக்கூடத்துக்குப் போய்க் கொண்டிருப்பதைப் பார்த்தபோதுதான் ராகவராவின் மனதில் இருந்த சிந்தனை தீவிரமாகத் தொடங்கியது. புத்தகத்திற்கும் சிலேட்டிற்கும் நல்ல ஆடைகளுக்கும், அவற்றைத் தொட்டுப் பார்ப்பதற்கும், அன்பிற்கும் அவனுடைய இதயம் ஏங்கியது. தங்களுடைய உண்மையான நிலைமையை வீரய்யா அவனுக்குச் சொல்லிப் புரியவைத்தான். அந்த ஆசை எந்தக் காலத்திலும் நிறைவேறப் போவதில்லை. அடிமையின் மகன் அடிமையாகித்தான் தீருவான். ஜமீன்தாரின் மகன் ஜமீன்தாராகவும் புரோகிதரின் மகன் புரோகிதராகவும் ஆவதைப்போலத்தான் அதுவும். அதனால் சில பிள்ளைகள் பள்ளிக்கூடத்திற்குப் போகிறார்கள். சில பிள்ளைகள் வயலில் வேலை செய்கிறார்கள். அதில் அநியாயம் ஒன்றுமில்லை. ஆயிரக்கணக்கான வருடங்களாக இதுதான் நடந்து வந்திருக்கிறது. இந்த விஷயங்களை வீரய்யா சொன்னதைக் கேட்ட பிறகு ராகவராவிற்குக் கூறுவதற்கு எதுவுமே இல்லை. அவன் அமைதியாக இருந்தான். மகன் தன்னைப் போலவே தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டான் என்பதை வீரய்யா புரிந்து கொண்டான். உண்மையில் நடந்தது அதுதானா?