சிவந்த நிலம் - Page 4
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6352
ராகவராவ் தன்னுடைய வாழ்க்கையின் வேறொரு நிமிடத்தைத் தன் கையில் எடுத்தான். அப்போது அவனுக்குப் பதினோரு வயது நடந்து கொண்டிருந்தது. அவர்களுடைய கிராமமான ஸ்ரீபுரத்தில் அப்போது ஒரு திருவிழா நடந்தது. பத்து வருடங்களுக்கொரு முறை அங்கு இந்த திருவிழா நடக்கும். ஸ்ரீபுரத்தில் உள்ள ஒவ்வொரு குடிசையிலும அப்போது சந்தோஷத்தின், உற்சாகத்தின் அலை புரண்டு உயரும். வீரய்யா அன்று முதல் தடவையாகத் தன் மகனுக்குப் புதிய கதராடையும் கதர் வேட்டியும் கதரால் ஆன தலைப்பாகையும் அணிவித்தான். கழுத்தில் சந்நியாசியிடம் வாங்கிய ஒரு தாயத்தை அணிவித்தான். அன்று ராகவராவ் போகாவதி நதியில் குளித்து, புத்தாடைகள் அணிந்து அழகாக இருந்தான். அவன் வேகமாகச் சோற்றை உண்டுவிட்டு, தன் தந்தையுடன் சேர்ந்து திருவிழா நடக்கும் இடத்தை நோக்கி நடந்தான். போகும் வழியில் சிறுவர்கள் மர நிழல்களில் கபடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். பெரிய ஒரு ஆலமரத்திற்குக் கீழே சிறுமிகள் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தார்கள். திருவிழா நடக்கும் இடத்திற்குச் சற்றுத் தள்ளி இருக்கிறது அந்த மண்டபம். கருங்கல்லால் அமைக்கப்பட்ட ஒரு தரை. நரிக்குறவர்கள் விற்பனைக்காகப் பாத்திரங்களையும், வளையல்களையும், சீப்பையும், எண்ணெய் போன்ற பலவிதப்பட்ட பொருட்களையும் அங்கு பரப்பி வைத்திருந்தனர். புகையிலையும் சர்க்கரையும்கூட அங்கு இருந்தன. சிறுவர், சிறுமிகளுக்காக மண்ணால் ஆன விளையாட்டுப் பொருட்களும் ஓலையால் செய்யப்பட்ட கூடைகளும் கூட அங்கு இருந்தன. ஜப்பான் பட்டால் ஆன ஆடைகளை விற்கும் கடைகளும் அங்கு இருந்தன. ராகவராவ் சற்று அதிக நேரம் கடைக்கு முன்னால் நின்று கொண்டு அதையே பார்த்துக் கொண்டிருந்தான்.
ஆடைகள் இப்படியெல்லாம் அழகாக இருக்குமா என்ன? இந்த அளவிற்கு மென்மையாகவும், மின்னி ஒளி வீசக் கூடியதாகவும் இருக்குமா என்ன? ராகவராவ் இப்போதுகூட அதை நினைத்துப் பார்க்கிறான். அவன் கடைக்கு முன்னால் சென்று தன்னை மறந்து அங்கிருந்த ஜப்பான் பட்டுத்துணியை மெதுவாகத் தொட்டுப் பார்த்தான். ஆடைகள் மனிதனின் கனவைப் போல இந்த அளவுக்கு மென்மையாகவும் பளபளப்பு கொண்டதாகவும் இருக்குமா என்ன? அந்த ஒரு நிமிடநேரம் அவன் அந்தப் பட்டுத் துணியைத் தொட்டுப் பார்த்ததற்கு அதுதான் காரணம்! இவ்வளவு வருடங்களுக்குப் பிறகு கூட அந்தத் தொடலில் கிடைத்த ஆனந்தம் இருளடைந்து போய் கிடக்கும் இந்தச் சிறையறைக்குள் இருக்கும் அவனை மெய்சிலிர்க்கச் செய்வதென்னவோ உண்மை. ராகவராவின் காதுகளில் அதன் இசைமயமான அலைகள் இப்போதும் வேகமாக வந்து மோதிக் கொண்டிருக்கின்றன. அதோடு சேர்ந்து ராமய்யா செட்டியின் கோபக்குரலும் ஞாபகத்தில் வந்தது. "அடிமையோட மகனா இருக்குற ஒருத்தன் பட்டுத் துணியில கை வைக்கிறதா? சாத்தான்! அடிச்சு உன் முதுகுத் தோலை உரிக்கிறேன்..."
அப்போது வீரய்யா தன் மகனின் கையைப் பிடித்து இழுத்து அவனை முன்னோக்கிக் கொண்டு போனான். விஷயம் என்னவென்று புரியாமல் ராகவராவ் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டான். வாழ்க்கையில் இந்த நிர்வாணக் கோலம் தனக்கு மட்டுமே இருக்கக்கூடிய ஒன்று என்பது போல் அவனுக்குத் தோன்றியது. அந்தப் பட்டுத் துணியும் அதன் அழகும் மினுமினுப்பும் தனக்கு உண்டாக்கப்பட்டதல்ல என்பதை அவன் புரிந்துகொண்டான். ராகவராவ் இதுவரை எடுக்காத இன்னொரு நாணயத்தை எடுத்து உள்ளங்கையில் வைத்து அதைப் பரிசோதனை செய்தான். அந்த நாணயத்தை அவனுடைய ஆசையும் எதிர்பார்ப்பும் கொண்ட கடைவீதியில் செலவழிக்க முடியவில்லை. செலவழிக்கப்படாத அந்த நாணயத்தின் சொந்தக்காரர்கள் ராகவராவோ அவனுடைய தந்தையோ இல்லை. அந்த நாணயம் அவர்களின் உழைப்பின் விளைவும் அல்ல. அது அவர்களுக்கு லாபம் என்ற கணக்கில் சமுதாயத்திடமிருந்து கிடைத்தது. அந்தக் கணத்திலேயே ராகவராவின் இதயத்தில் ஒரு உதாசீன உணர்வு உண்டானது. அவனுடைய தந்தை அவனுக்கு என்னதான் தைரியம் சொன்னாலும், அந்தச் சம்பவத்தை அவனால் மறக்க முடியவில்லை. அதற்காக அவனை இராட்டினத்தில் உட்கார வைத்து வீரய்யா ஆட்டிக்கூட பார்த்தான். சர்க்கரை போட்ட சர்பத் வாங்கிக் கொடுத்தான். அதனால் ராகவராவின் தாகம் சற்று குறைந்தது என்று வேண்டுமானால் கூறலாமே தவிர, அவனுடைய மனம் அப்போதும் பட்டுத்துணி மீதுதான் பதிந்திருந்தது.
மாலையில் தந்தையும் மகனும் திருவிழா நடந்த இடத்திலிருந்து திரும்பி வந்தபோது வழியில் பட்டேலின் கணக்குப் பிள்ளையையும் துர்கய்யாவையும் பார்த்தார்கள். இரண்டு பேரின் கண்களும் மதுவின் போதையால் சிவந்து கிடந்தன. அவர்கள் இருவரின் கையிலும் 'பிஸ்டல்' இருந்தது. அவர்கள் வீரய்யாவையும் அவனுடைய மகனையும் தடுத்து நிறுத்தினார்கள்.
"நல்லா இருக்கீங்களா அய்யா?"- வீரய்யா அவர்களைப் பார்த்துக் கேட்டான்.
"நேரா போறதுதான் நல்லது. இல்லாட்டி..."- துர்கய்யா கர்ஜித்தான்.
"எங்கே போகச் சொல்றீங்க ஐயா?"
"அடிமை வேலை செய்யிறதுக்கு சூரியபேட்டைக்குப் போகணும். இப்பவே போகணும். ஜமீன்தார் அய்யா போகச்சொல்லி இருக்காரு."
ராகவராவ் தன் தந்தையின் இடுப்பை இறுகக் கட்டிப் பிடித்துக் கொண்டு சொன்னான்: "அப்பா, இன்னைக்குத் திருவிழா நாளாச்சே!"
கணக்குப் பிள்ளை பீமய்யா ராகவராவின் கழுத்தைப் பிடித்து அவனுடைய கன்னத்தில் ஓங்கி ஒரு அடிகொடுத்தான். பிறகு அவன் தலையிலிருந்த தலைப்பாகையைத் தட்டி கீழே விழ வைத்தான். அவனுடைய மேலாடையைப் பிடித்துக் கிழித்து தரையில் எறிந்தான். வேட்டியை அவிழ்த்து ராகவராவை நிர்வாணக் கோலத்தில் நிற்கவைத்தான்.
ராகவராவ் பீமய்யாவை எதிர்த்து நிற்க நினைத்தான். ஆனால், பீமய்யா மிகவும் பலசாலியாக இருந்தான். ராகவராவ் வெறும் பதினோரு வயதே ஆன சிறுவன்! பீமய்யா ராகவராவின் நெஞ்சுக்கு நேராக பிஸ்டலைக் காட்டியபோது வீரய்யா அவனுடைய கையைப் பிடித்து கெஞ்சினான்: "அய்யா! இவன் சின்னக் குழந்தை. நான் உங்க அடிமைன்ற விஷயம் இவனுக்குத் தெரியாது. ஜமீன்தார் அய்யா திருவிழா நடக்குற இடத்துல இருந்து கூப்பிட்டாலும் நான் வந்திடுவேன்."
"எதுக்குப் போகணும்?"- ராகவராவ் கோபத்துடன் கேட்டான்.
"பேசாம இருன்னு சொல்றேன்ல..."- வீரய்யா தன் மகனின் முகத்தில் ஒரு அடி கொடுத்தான்.
ராகவராவின் வாயிலிருந்து இரத்தம் ஒழுக ஆரம்பித்தது. வீரய்யா அதுவரை தன் மகனுக்கு நேராக ஒரு நாள் கூட கையை ஓங்கியது இல்லை. அதனால் ராகவராவ் ஆச்சரியத்துடன் தன் தந்தையைப் பார்த்தான். உதடு வழியாக வெளியே வந்து கொண்டிருந்த இரத்தத்தைத் துடைக்க வேண்டும் என்று அவன் நினைக்கவில்லை. அவன் மேலும் சிறிதுநேரம் அங்கு நின்றுவிட்டு தன் கையால் இரத்தத்தைத் துடைத்தான். மீதி எஞ்சியிருந்த இரத்தம் நின்றபிறகு, அதைத் தன் நாக்கை நீட்டி இல்லாமற் செய்தான்.