வெள்ளம் - Page 3
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6375
செம்பேரி ஆற்றின் கரையில் அமர்ந்து, சுற்றிலும் தெரியும் பசுமையின் செழிப்பையும், அதனையும் தாண்டி கம்பீரமாக நின்றிருக்கும் மிகப் பெரிய மலைத் தொடர்ச்சியையும் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் நாங்கள் அந்தப் பழைய கதைகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அந்தக் கதைகளில் ஒரோதா வந்தாள்.
அதனால்தான் செம்பேரி ஆற்றின் கரையில் இருந்தவாறு ஒரோதாவை நினைத்துப் பார்த்து நாங்கள் அழுதோம்.
ஒரோதா துக்கமாக இருந்தாள். ஒரோதா தியாகமாக இருந்தாள். ஒரோதா சிந்திப்பவளாக இருந்தாள். வாழ்ந்த காலத்தில் ஒரோதா ஒரு சரித்திரமாக இருந்தாள்.
அவளை- ஒரோதாவை நினைக்கும்போது அழாமல் இருக்க முடியாது. நினைத்துப் பார்க்காமலும் நம்மால் இருக்க முடியாது.
2
வடக்கு திருவிதாங்கூரில் மீனச்சில் ஆற்றின் கரையில் பாலா என்ற ஊரைத் தாண்டிப்போனால் சேர்ப்புங்கல் என்றொரு கிராமம் இருக்கிறது.
அந்தக் கிராமத்தில்தான் எத்தனையோ நூறு வருடங்களுக்கு முன்பு வெள்ளம் பெருக்கெடுத்து வந்த வேளையில், ஒரோதா தன் முகத்தைக் காட்டினாள்.
மலையாள வருடம் தொண்ணூற்று ஒன்பதில் உண்டான அந்த வெள்ளப் பெருக்கு திருவிதாங்கூரின் சரித்திரத்திலேயே அதற்கு முன்பு எப்போதுமே உண்டானதில்லை என்று கூறக் கூடிய அளவிற்கு ஏகப்பட்ட பாதிப்புகளையும் சேதங்களையும் உண்டாக்கிவிட்டுச் சென்றது. அன்றைய கேரளம் ஒன்றுபட்டு இருக்கவில்லை. திருவிதாங்கூர், கொச்சி, பிரிட்டிஷ் மலபார் என்று மூன்றாகப் பிரிக்கப்பட்டிருந்தது. மலபார் தமிழகத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அந்தப் பகுதி கவர்னரின் ஆட்சியின் கீழ் இருந்தது. கொச்சியை பரீட்சித் தம்புராக்கன்மார்கள் ஆண்டு கொண்டிருந்தார்கள். திருவிதாங்கூர் பகுதியை மகாராஜாவும் திவானும் சேர்ந்து ஆண்டார்கள்.
கொல்ல வருடம் 1099-ல் கிழக்குப் பக்கம் இருந்த மலைப் பிரதேசங்கள் பயங்கரமான கர்ஜனையுடன் வெள்ளத்திற்கு இரையாகின. பெரியாறு முதல் தாமிரபரணி வரை உள்ள எல்லா நதிகளும் பயங்கர சத்தத்துடன் பாய்ந்தோடி வந்தன. ஆர்ப்பாட்டத்துடன் வந்து பூமியையே நடுங்கச் செய்தன. கரைகளில் மோதி அவற்றை ஒன்றுமில்லாமல் ஆக்கின. பைத்தியம் பிடித்ததைப் போல் அவை ஓடின. மணிமலயாறு, பம்பை, மீனச்சிலாறு, அச்சன் கோவிலாறு என்று எல்லா நதிகளின் கரையில் இருந்த இடங்களும் வெள்ளப் பெருக்கில் பயங்கர பாதிப்பிற்கு உள்ளாகின. பூமி அழியப் போகிறதோ என்று மனிதர்கள் நடுங்க ஆரம்பித்தார்கள். இந்த வெள்ளத்தின் கொடுமையிலிருந்து தங்களைக் காப்பாற்ற ஒரு புதிய வராகமூர்த்தியின் அவதாரத்திற்காக பக்தர்கள் சர்வசக்தி படைத்த கடவுளிடம் நித்தமும் வேண்டிக் கொண்டிருந்தார்கள்.
குடத்தூர், குடமுருட்டி ஆகிய மலைகளில் இருந்து வந்த வெள்ளம் பயங்கர வேகத்துடன் கீழ் நோக்கிப் பாய்ந்து வந்தது. அந்த நீர் மீனச்சிலாற்றில் கலந்து ஆர்ப்பரித்துக் கொண்டு ஓடியது. பூத்தார், ஈராற்றுப்பேட்டை, பாலா ஆகிய பகுதிகளை நடுநடுங்க வைத்து கரையில் இருந்த மரங்களையும், வீடுகளையும், கடைகளையும், சந்தைகளையும் நாசம் செய்து பயங்கர கோபத்துக்கு ஆளான தேவியைப் போல தலையை விரித்துப் போட்டுக்கொண்டு ஓடி வந்தது. வீடுகளும் மரங்களும் மட்டுமல்ல, மிருகங்களும் மனிதர்களும் கூட அந்த வெள்ளப் பெருக்குக்கு பல இடங்களிலும் இரையாகினர். பாலா சந்தையும், சுற்றியுள்ள பகுதிகளும் வெள்ளத்தில் முழுமையாக மூழ்கின. மொத்தத்தில் காடு, ஊர் எல்லாமே வெள்ளத்தில் சிக்கி நாசமாயின. காட்டில் இருந்த செடி- கொடிகளும், விலங்குகளும், ஊரிலிருந்த மனிதர்களும் தெய்வங்களும் மீனச்சில் ஆற்றின் பயங்கரமான வெள்ளப் பெருக்கில் மிதந்து வந்து கொண்டிருந்தன.
ஆற்றின் ஆர்ப்பரித்து ஓடிய வெள்ளப் பெருக்கில் சிக்கிய மனிதர்களுக்கு முழுமையாக சுயஉணர்வு என்ற ஒன்றே இல்லாமல் அவர்கள் பைத்தியம் பிடித்தவர்களைப் போல நடந்து கொண்டார்கள். மனிதர்களுக்கு மட்டுமல்ல- அவர்கள் வளர்த்த மிருகங்களுக்கும் கூட பைத்தியம் பிடித்தது. ஆற்றில் இழுத்துக் கொண்டு போகும்போது கரையைப் பார்த்த மனிதர்களும், மிருகங்களும் உரத்த குரலில் அலறினார்கள். எங்கு போகிறோம் என்பதே தெரியாமல் யார் யாரெல்லாம் அடித்துச் செல்லப்படுகிறார்கள் என்பதெல்லாம் தெரியாமல் ஒருவரையொருவர் மோதிக்கொண்டு, கீழே விழுந்துகொண்டு, மறுபடியும் எழுந்து, மீண்டும் மீண்டும் விழுந்து இங்குமங்குமாய் மோதி நதியின் ஓட்டத்தில் இழுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஆகாயத்தில் பறவைகள் மிதமிஞ்சிய பயத்தால் உள்ளுக்குள் உண்டான பைத்தியம் பிடித்த நிலையுடன், கூட்டம் கூட்டமாகச் சேர்ந்து, சத்தமிட்டு மற்ற பறவைகளை அழைத்து, எந்தவிதமான இலக்கும் இல்லாமல் பறந்து திரிந்தன. பறந்து பறந்து அதற்கு மேல் பறக்க முடியாமல் அவற்றின் சிறகுகள் ஓய்ந்து கீழே விழுந்து மடிந்தன. அந்தச் செத்துப்போன பறவைகளின் உடல்களையும் தாங்கிக் கொண்டு தெய்வ கோபம் என்பது மாதிரி நதி வெறி பிடித்து ஓடிக் கொண்டிருந்தது.
வெள்ளப்பெருக்கில் மூழ்கிப் போகாத சில கட்டிடங்களின் கூரைகளிலும் சில மரங்களின் உச்சிகளிலும் சில பாறைகளின் மேலும் அபயம் தேடிய சிலருக்கு அதிர்ஷ்டவசமாக கொஞ்சம் சுயநினைவு இருந்தது. அவர்கள் ஆகாயத்தை நோக்கி கைகளை உயர்த்தி அச்சத்தால் பயத்தால் தோன்றிய தீவிர பக்தியுடன், துடித்துக்கொண்டிருக்கும் இதயத்துடன் மனதை முழுமையாகத் திறந்து ஞாபகத்திற்கு வந்த எல்லா தெய்வங்களின் பெயர்களையும் சொல்லி உரத்த குரலில் அழைத்து மார்பில் கைகளால் அடித்துக் கொண்டு அழுதார்கள். அவர்கள் தங்களின் விவசாய நிலங்களையும் மிருகங்களையும், வீடுகளையும், சொத்துக்களையும், சொந்த பந்தங்களையும் முழுமையாக இழந்துவிட்டிருந்தார்கள். உலகின் அழிவையே நேரில் பார்ப்பது போல் இருந்தது அவர்களுக்கு. தங்களை இந்தத் தருணத்தில் ஓடி வந்து காப்பாற்றக் கூடிய நோஹாவை எதிர்பார்த்து அவர்கள் பேசுவதற்கே சக்தியில்லாமல் நின்றிருந்தார்கள். நோஹாவின் வருகைக்காக அவர்கள் கடவுளுக்கு நேர்த்திக்கடன்கள் செய்வதாகச் சொன்னார்கள். சபரிமலை சாஸ்தாவும் ஏற்றுமாதூரப்பனும் பகவதியும் எந்த நேரத்திலும் ஏதாவது அற்புதங்கள் செய்து தங்களைக் காப்பாற்றுவார்கள் என்று மனதிற்குள் உறுதியாக நம்பினார்கள். ஆனால் அவர்களின் நம்பிக்கைகளை முழுமையாகத் தகர்த்தெறிந்துவிட்டு நதி பயங்கர கொடூரத்தன்மையுடன் பெருக்கெடுத்து பாய்ந்து கொண்டிருந்தது.
அந்த வெள்ளப் பெருக்கில்தான் ஒரோதா மிதந்து வந்தாள்.
சேர்ப்புங்கல் என்ற கிராமத்தில் அந்தக் காலத்தில் வெட்டுக்காட்டு பாப்பன் என்றொரு நாற்பது வயது மதிக்கக்கூடிய மனிதன் வாழ்ந்து கொண்டிருந்தான். திருமணமாகாத மனிதன் அவன். படகு ஓட்டுவதுதான் பார்ப்பனுக்குத் தொழில். அவனுக்குப் பக்கத்து ஊர்களில் சொந்தக்காரர்கள் என்று பலரும் இருந்தாலும், அவர்களுடன் அவனுக்கு எந்தவிதமான உறவும் இல்லை. சொல்லப் போனால் அவர்கள் யாரையும் அவன் போய்ப் பார்ப்பதே கிடையாது. அவன் மட்டும் தனி மரமாக வாழ்ந்து கொண்டிருந்தான். காலையில் படுக்கையை விட்டு எழுந்தவுடன், படகுத் துறைக்குப் போய் அங்கு காத்துக் கொண்டிருக்கும் ஆட்களை மீனச்சில் ஆற்றின் அக்கரைக்கும், அக்கரையில் இருப்பவர்களை இக்கரைக்கும் கொண்டுவந்து சேர்ப்பதுதான் பாப்பனின் வேலை.